நாட்டுத்திறம் என்னே நாற்கவியும் முத்தமிழும்

நல்கும் பயன் என்னே நாவூறிப்போனேன் நான்

என்று பாவேந்தரால் அடையாளப்படுத்தப்பட்டவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். மரபில் காலூன்றி புதுமையில் சாதனைகள் படைத்தவர். சிற்பி நவீனத் தமிழ்க்கவிதையுலகில் முன்னத்தி ஏர்; சிறந்த கல்வியாளர்; தமிழ்ப் பேராசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; இதழாளர்; பேச்சாளர்; திறனாய்வாளர்; தமக்குப் பின்னே பல படைப்பாளிகளை, கல்வியாளர்களை உருவாக்கியவர்; முற்போக்கு இயக்கங்களுடன் இடையறாத உறவினைப் பேணுபவர்; எல்லாவற்றுக்கும் மேலாக மனிதம் ததும்பும் மனிதர்.

கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சிக்கு அருகே ஆத்துப் பொள்ளாச்சி எனும் கிராமத்தில் 29.07.1936 இல் கவிஞர் சிற்பி பிறந்தார். கேரளத்தில் தொடக்கக்கல்விப் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் (பி.ஏ., ஆனர்ஸ், எம்.ஏ.,) பயின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.

பொள்ளாச்சி, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் முப்பது ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகவும், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் எட்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். பதினைந்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆய்வு நெறியாளராக இருந்தார். இவரின் ஆய்வாளர்கள் பலரும் இன்று சிறந்த கல்வியாளர்களாகப் பல்வேறு நிலைகளில் உள்ளனர்.

இவரின் படைப்புலகம் பன்மைத் தன்மைக் கொண்டது. இதுவரை அறுபத்தி இரண்டு நூல்களைத் தமிழுலகிற்கு வழங்கி உள்ளார். கவிதை நூல்கள்15, கவிதை நாடகம்1, சிறுவர் நூல்கள்2, உரைநடை நூல்கள் 14, வாழக்கை வரலாறு5, மொழிபெயர்ப்பு7, ஆங்கில நூல்1, பதிப்பித்த நூல்கள் 9... என விரிகிறது சிற்பியின் படைப்புலகம். இவரின் பவள விழாப் பரிசாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சிற்பியின் ஒட்டு மொத்தக் கவிதைகளையும் சுமார் 2000 பக்கங்களில் வெளியிடுகிறது.

படைப்புக்கு ஒருமுறையும், மொழிபெயர்ப்புக்கு ஒருமுறையும் என இருமுறைகள் சாகித்ய அகாதமி பரிசு வென்றவர். தமிழ்நாடு அரசின் பாவேந்தர் விருது, கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர். தற்போது சாகித்ய அகாதமியின் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளர்.

படைப்பின் பல தளங்களில் இயங்கினாலும் இவரின் மையம் கவிதை. தமிழின் நவீனக் கவிதையை "எழுத்துக்' குழுவினர் இருண்மை நிரம்பியதும் புரிபடாததும், மக்களுக்குப் புலப்படாததும், புறமொதுக்கியதுமாக உன்னதமாக்கினர். கவிதையைப் புனிதம் என்றனர். கவிஞன் மேலோன் என்றும் உணர்த்தினர். இத்தருணத்தில் தான் நவீனத்துக்குள்ளும் யதார்த்த வாழ்வை முன்வைக்கும் வசந்தப் பறவைகளாக வானம்பாடிகள் முகிழ்த்தார்கள். இவர்கள்தான் பாரதியின், பாரதிதாசனின் மரபில் மண்ணையும், மக்களையும் பாடினார்கள். மக்களின் சிக்கல் பாடுகளை முன்வைத்தார்கள். இடிமுழக்கமென மாற்றத்துக்கு குரல் கொடுத்தார்கள். வானில் இருண்ட பகுதியில் சஞ்சரித்த கவிதைகளை பூமிக்கு இறக்கி புழுதியில் நடக்க விட்டார்கள். பொதுவுடமையும், திராவிடமும், தமிழியமும் இவர்களுக்குள் ளேயிருந்து கருத்தியலாய் வெளிப்பட்டன.

அதுவரை நவீனக்கவிதையில் இருந்த அவநம்பிக்கைக் குரலைப் புரட்டிப் போட்டு நம்பிக்கைக் கவிதைகளைப் படைத்தார்கள். இது இன்று சாதாரணமாகப் பார்க்கப்படலாம். ஆனால் ஒரு கருத்தியல் போராட்டமாக, கலை அழகியல் பண்பாட்டுப் போராட்டமாக அதனை வரலாறு பதிவு செய்கிறது.

இத்தகைய வானம்பாடி இயக்கத்தில் முன்னணியில் நிற்கும் கவிஞர் சிற்பி இன்றுவரை மனிதநேய, ஜனநாயக, முற்போக்குக் கலைஞனாகவேத் திகழ்கிறார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில தலைமைக்குழுவில் இருந்து செயலாற்றுகிறார்.

“கவிதை என்பது மறைந்து கிடக்கும் மனித நேய ஊற்றுக்களைக் கண்டடைகிற முயற்சிதான். இதைத்தான் ஒவ்வொரு கவிதையிலும் நான் செய்து வருகிறேன்'' எனக் கூறும் சிற்பி தம் ஆயிரக்கணக்கான கவிதைகளில் (1953 இல் எழுதத் தொடங்கியவர்) தமிழ் மரபையும் அதே நேரத்தில் புதுமையின் தேவைகளையும் பாடுகின்றார். எனவே தான் மரபின் பிள்ளை / புதுமையின் தோழன் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

“எங்கள் கிராமத்தில் செல்லச் சிணுங்கலாய் ஓடும் ஆழியாறு என்னைத் தத்தெடுத்துக் கொள்கிறது. ஆனைக்கல் சரிவிலும், சந்தனக்கல் உச்சியிலும் இருந்து சலசலக்கும் ஆற்றின் ஓசையோடு என் மனத்தறி அசைகிறது. கவிதைகள் பிறக்கின்றன'' எனத் தன் கவிமூலம் சொல்லும் சிற்பி, நதி மூலத்தை ஆய்வு செய்கிறார்.

இந்த நதி எங்கிருந்து வருகிறது என வினா எழுப்பி,

       “என்னை முழுக்காட்டி

       என்னையேக்

       கரைத்துக் கொண்டு''

என்று விடைகூறி

       “தானும் உணவாகி

       மீனும் உணவாகும்

       இந்த நதிக்கு

       நானும் உணவாவேன்''

என முடிகின்ற போது வாழ்வியல் உணர்வலையாய்ப் பீறிடுகிறது.

இவர் வசதியும் வளமும்மிக்கவர். எனினும் இவரின் கவிதைகள் பாட்டாளிகளின் படைக்கலனாகும். "கூலிக்காரி' என்றொரு கவிதையில்,

       “இழுத்துக் கட்டிய முக்காட்டின் மேல்

       தெருப்புழுதியின் பூச்சுகொஞ்சம்

       இங்கும் அங்கும் பார்த்து நின்றால்

       கொத்தனாரின் ஏச்சு

       துணுக்குத் தங்கத்தை இணுக்கி வைத்த

       தோட்டில் வறுமை சிரிக்கும்அவள்

       முணுமுணுத்திடும் தெம்மாங்கிசைக்கு

       முத்தமிழ் முந்தி விரிக்கும்''

என்கிறார். இன்னொரு கவிதையில்

       “அழலும் பசி நெருப்பை

       அணைக்கும் வழி இல்லையேல்

       சுழன்று புறவெளியில்

       சுற்றுவதால் ஏது பயன்?''

என வினா எழுப்பி நிகழ் அதிகாரச் சமூகத்தை தோலுரிக்கிறார்.

அவள் என்ற கவிதையில்

       “அம்மா நகைகளை விற்றாள்

       அப்புறம் காய்கறி விற்றாள்

       தலையில் சுமந்து விறகு விற்றாள்

       பிறகு

       கற்பை விற்றாள்

       எங்களுக்குக்

       கால் வயிறு நிரம்பியது''

என்று அபலைப் பெண்ணின் வாழ்வியலைப் பதிவு செய்கிறார்.

மண்ணும், மலையும், நதியும், பயிர்களும், உயிர்களும், வானும், நட்சத்திரங்களும், நிலவும், கதிரவனும் சிற்பியின் கவிதை மனதில் பாய் விரித்து இவரின் தாலாட்டில் கண்ணுறங்குகின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், இளையோர், முதியோர், குழந்தைகள், பெண்கள்... எனச் சமூகம் இவருள் கீதம் இசைக்கிறது. ஈழம் தொடங்கி வியத்நாம் வரை விடுதலை வேட்கை இவரின் விரல்களில் வீரியமாகிறது. நவீனத்துவ அழகு குறைந்தும் யதார்த்த அழகியல் விரிந்தும் இவரின் படைப்பாக்கத்திறன் மிளிர்கிறது.

       “உயரம் குறைந்தவன் நான்

       ஆயினும் எனது

       எழுத்துக்கள் குள்ளமானவை அல்ல,

       கூலிக்கு அவைகள் பிறந்ததுமில்லை

       வேலிக்குள் முடங்கிக் கிடந்ததுமில்லை''

எனத் தன் படைப்புகள் குறித்து கம்பீரமாகப் பிரகடனப்படுத்த இவரைப் போன்ற நேர்மையாளர்களால் மட்டுமே முடியும். இவர் வாழைமரம், இவரின் வித்தாய் படைப்புலகில் விதவிதமாய் பல வாழைக்கன்றுகள். இதுதான் இவரின் வெற்றி.

       “இனி எனக்கு

       மரணம் ஒருபோதுமில்லை

       நான்...நான்...

       காலமாகி விட்டதால்''

என ஒரு கவிதையில் கவிஞர் சிற்பி குறிப்பிடுகிறார். தன்னைத்துறத்தல் பொதுமையின் குறியீடு. சிற்பி பின்பற்றத்தக்க மனித ஆளுமை!

நீடூழி வாழ்க!