தமிழ்நாட்டில் கட்டிடத் தொழில் பெருந்தொழிலாகி விட்டது. கட்டுமானப் பொருள்களின் விலை முன் எப்போதையும் விட பண்மடங்கு பெருகி விட்டது. உயிர் வாழ்வுக்கு ஆதாரமான வேளாண் தொழில் சுருங்கி வருகின்றது. இலவச அரிசித் திட்டம், நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவை விவசாயக் கூலிகளை விளை நிலங்களுக்கு வெளியே நிறுத்தி விட்டது. நஞ்சையும், புன்செயும் விளைந்த வயல்வெளிகள் சதுரங்களாக்கப்பட்டு காங்கிரீட் வனங்களாகின்றன. கிராமங்களின் தொன்மை விழுங்கப்பட்டு புதிய புதிய பெயர்களில் நகர்கள், குடியிருப்புகள் ஒவ்வொரு கணத்திலும் தோன்றி வருகின்றன. "ரியல் எஸ்டேட்' எனப்படும் வீட்டுமனை விற்பனை கொள்ளை லாபம் தரும் தொழிலாகி விட்டது. இதன் பின்னே தரகர்கள், தாதாக்கள், அரசியல் புள்ளிகள், கறுப்பு பணம், கொலை, கொள்ளை, சட்ட விரோதச் செயல்கள்... என நடப்பு சமூக அவலங்கள் அரங்கேறுகின்றன.

சமகாலச் சிக்கல்களை கலைப் படைப்பாக்கப் படைப்பாளிகள் பெரும்பாலும் முன் வருவதில்லை. கருத்தியல் தெளிவும், சமூகச் சார்பும், வாழ்வியல் அறமும், படைப்பு நேர்மையும் மிக்க ஒருசிலரே கண்முன் நிகழும் கொடுமைகளுக்கு எதிராக எழுதுகோலை ஆயுதமாக்குகின்றனர். இது ஒரு வகையில் அச்சம் தரும், அபாயம் விளைவிக்கும் செயல்தான் என்ற போதிலும் மிக்கத் துணிவோடு படைப்பு வெளியில் பயணிக்கும் இவர்களை சமூக வெளி பாதுகாக்கவே செய்யும். அத்தகைய படைப்பாளியாக எஸ். அர்ஷியா "பொய்கைக்கரைப் பட்டி' நாவல் வழி தமிழ்ச் சூழலில் கவனப்படுகிறார்.

உருது முஸ்லிம்கள் பற்றிய வாழ்வியல் கூறுகளை "ஏழரைப் பங்காளி வகையறா' நாவல் மூலம் தமிழுக்கு வழங்கிய எஸ்.அர்ஷியா "பொய்கைக் கரைப்பட்டி' நாவல் மூலம் தன் சமூகச் சார்பையும் படைப்பு மூலத்தையும் வெளிப்படுத்துகின்றார்.

எத்தனங்கள் மிக்க, சூட்சுமங்கள் நிறைந்த, ஈரைப் பேனாக்கும் வித்தைகள் கற்ற "ரியல் எஸ்டேட்'காரர் கஜேந்திரகுமார். சொற்ப முதலீட்டில், ஓட்டை ஸ்கூட்டரில் வாழ்வைத் தொடங்கும் இவர் கொள்ளை லாபம் கண்டு மிகப் பெரிய வளர்ச்சியடைந்து மனைவி, துணைவி, மக்கள், வசதிகள்... என உல்லாச வாழ்வுக்குத் தயாராகிறார். வசதிகள் பெருகியதும் எடுபிடிகள், தொழில் விரிவாக்கம் செய்ய தரகர்கள், பாதுகாப்புக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள்... எனச் சுற்றம் பெருகுகிறது.

முதலில் கஜேந்திரகுமார் நிலம் வாங்கவும், விற்கவும் உள்ளூர் மக்களோடு தொடர்புள்ளவர்களைத் தரகர்களாக்க முயலும் போது சமுத்திரக்கனி எனும் வாளாவிருந்த மனிதன் சிக்குகிறான். கிராமத்து டீக்கடையில் வெட்டிப் பேச்சுப் பேசி காலம் கடத்தும் இவன் தொடக்கத்தில் "நிலம் வாங்கித் தந்தால் கமிஷன் கிடைக்கும்' என கஜேந்திரகுமார் கூற புரோக்கர் வேலையா?... என சீறி ஒதுங்கும் சமுத்திரக்கனி. மீடியேட்டர்ன்னு சொல்லிப்பாருங்க. கம்பீரமாக... கௌரவமாக இருக்கலாம்ல்ல'! கஜேந்திரகுமாரின் சாதுர்யத்தால்' சமுத்திரக்கனி மீடியேட்டராகி நிலங்களை வாங்கித் தருவதில் படு சூரனாகி தன் வாழ்நிலையையும் உயர்த்திக் கொள்கிறார்!

முன்னர் சொன்னது போல் தமிழ் நாட்டின் நடப்பு பெருந்தொழிலான "ரியல் எஸ்டேட்' வணிகம் பற்றிய பரவலான முதல் இலக்கியப் பதிவு என இந்நாவலைக் கூறலாம்.

எழில்மிக்க தூங்கா நகரமான மதுரையின் புறநகர் பகுதியே நாவலின் களம். அழகர்மலை அடிவாரத்தின் இயற்கை வனப்பும் சூழலும் அழகுற "பொய்கைக்கரைப்பட்டி' விளங்குகிறது. விதவிதமான மரங்கள், ரகரகமானப் பறவைகள், நீர் நிலைகள், ரீங்கார ஒலிகள்... என இயற்கையின் மடியில் தாலாட்டப் பெறும் கிராமம் மெல்ல மெல்ல நிலவணிகக் கொள்ளையர்களால் சின்னாபின்னாக்கப்படுவதே நாவலாக விரிகின்றது. நாவலின் தொடக்கத்தில் அதிகாலை வேளையில் வேங்கை மரத்தில் தனித்து குரல் எழுப்பி பின் அடங்கும் செம்போத்து ஒரு குறியீடாகவே உள்ளது.

“அம்புட்டுப் பயலும் வீம்பு புடிச்சவனுக. கஞ்சிக்குச் செத்துக் கெடந்தாலும் மண்ணை விட்டுத்தர மாட்டானுக. வித்தும் தொலைக்க மாட்டானுக''! எனப் பிடிவாதமாக இருக்கும் சம்சாரிகளிடமிருந்து சாம பேத தான தண்டம் செய்து சமுத்திரக்கனி நிலங்களை கஜேந்திரகுமாருக்கு மலிவாக வாங்கிக்குவிக்கிறார். கமிஷனும் பெற்று வசதியாகிறார். திடீரென ஒரு அதிகாலையில் கொலையாகிறார். "கள்ளத் தொடர்பு. பெண் விவகாரத்தில் நில புரோக்கர் படுகொலை' என காவல்துறை வழக்கை முடிக்கிறது. இக்கொலையைக் கூட தனது வணிகத்துக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார் கஜேந்திரகுமார். "அவுட்லாண்ட் பிராப்பர்டி புரோமோட்டர்ஸ்' எனும் தனது நிறுவனத்தின் தூணாக விளங்கிய சமுத்திரக்கனியை தொழில் விரோதத்தில் கொன்று தனது வளர்ச்சியைத் தடுக்கிறார்கள் எனச் செய்தியைப் பத்திரிகைகளில் உருவாக்கி அதன் மூலமும் விளம்பரம் செய்து கொள்கிறார்.

கஜேந்திரக்குமாரின் எல்லை விரிகிறது. மலைக்கள்ளன் எனும் புதிய "மீடியேட்டர்' சமுத்திரக்கனி இடத்துக்கு வருகிறார். நிலம் வாங்கிக் குவிக்கிறார்கள். அழகர் மலை அடிவாரத்தில் நூற்றைம்பது ஏக்கர் நிலப்பரப்பில் "லிவின்ஸ்கி கார்டன்' எனும் பெரும் திட்டம் உருவாகிறது. ஃபார்ம் ஹவுஸ் பிராஜக்ட்டான இதில் கிளப், நீச்சல் குளம், ஷாப்பிங்மால், மாமரங்கள் சூழ்ந்த இயற்கை அரண் என விளம்பரம் செய்யப்படுகிறது. ரத்தீஸ்குமார் என்பவர் பார்ட்னராகிறார். அன்பு முகம் என்பவர் பொறியாளராகிறார். ராஜலெட்சுமி தோட்ட மேற்பார்வை செய்கிறார். நிறுவன அதிபராகிறார் கஜேந்திரகுமார். நீதிபதிகள், டாக்டர்கள், வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள், பேராசிரியர்கள்... என "எலைட் பீபிள்ஸ்' அனைவரும் போட்டி போட்டு இடம் வாங்குகிறார்கள். விளம்பரப்படுத்தியபடி திட்டத்தை நிறைவேற்ற அருகில் இருக்கும் சிலரின் துண்டு நிலங்களை வாங்க வேண்டி உள்ளது. மலைக்கள்ளனும், கஜேந்திரகுமாரும் இராப்பகலாக முயல்கிறார்கள். இடையே சுற்றுவழிச் சாலையருகே இடம் வாங்கி அதைப் பெருந்தொகைக்கு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கிறார்கள். "லெவின்ஸ்கி கார்டன்' திட்டம் நிறைவேறாததால் மனை வாங்கியவர்களின் தொந்தரவு பெருகுகிறது. "லிவின்ஸ்கி கார்டன்' அமைய இடையூறாய் இருந்த வழி விட்டானின் நிலத்தை அவரது மகன் கடம்பவனன் மூலம் அபகரிக்கிறார்கள். பெத்த மகனே கல்வியறிவற்ற தாய் தந்தையரை "ரேஷன் கார்டு' வாங்கித் தருவதாய் அழைத்து வந்து தந்தை வழிவிட்டானுக்கு சீமைச் சரக்கும், தாய்க்கு தின்பண்டமும் வாங்கித் தந்து நயவஞ்சகமாக நிலத்தை எழுதி வாங்கி கஜேந்திரகுமாரிடம் பணம் பெறுகிறான். திட்டானும் இன்னும் பலரும் நிலத்தை விற்றுவிடுகிறார்கள். விவசாயக் கூலிகள் குடும்பம் குடும்பமாக திருப்பூருக்குப் பிழைக்கப் போகிறார்கள்.

இதற்கு நேர் எதிர் திசையில் மலைநாட்டான் எனும் விவசாயி கடைசிவரை போராடுகிறார். மலைக்கள்ளனும், கஜேந்திரகுமாரும் நயந்து பேசுகிறார்கள். பணத்தாசைக் காட்டுகிறார்கள். மிரட்டுகிறார்கள். எதற்கும் பணியவில்லை. கடைசியாக அவரது வயலுக்கு வரும் வாய்க்கால் குறுக்கே கட்டிடம் கட்டி தண்ணீர் வராமல் தடுக்கிறார்கள். ஆழ்குழாய் கிணறு தோண்டி நீர் பாய்ச்சி விவசாயம் செய்கிறார். உடனே வயலருகே ராட்சஷ ஃபோர் போட்டு தண்ணீரை இழுத்து மலை நாட்டானின் ஃபோரில் தண்ணீர் வராமல் தடுக்கிறார்கள். அங்கே கட்டிடங்கள் உயர இங்கே வாழைத் தோட்டம் கருகுகிறது.

கஜேந்திரகுமார் சுறுக்காக பல கோடி அதிபதியானதை அறிந்த உள்ளூர் அரசியல் பிரமுகர் அவர் ஏறக்குறைய ஒருகுட்டி அரசாங்கம் நடத்துகிறார். ஒரு கோடி பணம் கேட்டு மிரட்ட வேறு வழியின்றி தருகின்றார். கூடவே மும்பை தாதாக்களின் கடத்தல்/மிரட்டல் வேறு. அவர்களுக்கு சொந்தப் பிம்பத்தை, தொழிலைக் காத்துக் கொள்ள ஒரு கோடி தருகிறார். இப்படி கோடிகளில் புரளும் கஜேந்திரகுமார் மீண்டும் "லெவின்ஸ்கி கார்டன்' பணிகளைத் தொடர்கிறார். நிலம் வாங்கியவர்கள் மகிழ்கிறார்கள்.

“பேசாம நாமலும் இதை வித்துப்புடலாம்ப்பா. தண்ணியுமில்லாம, மழையுமில்லாம எத்தனை நாளைக்கு இப்படியே பாத்துக்கிட்டிருக்க முடியும்? கடவுளும் நம்மளக் கைவிட்டுட்டாரு. வேற வழியில்லப்பா!'' என மலைநாட்டானின் மகள் செண்பகம் சொல்வதோடு நாவல் முடிகிறது.

இது ஆதிகுடிகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் நவீன முதலாளிகளைப் பற்றிய நாவலாகவும், வேளாண்மையை வெளியேற்றி நிலத்தைக் கூறு போட்டு லாபம் குவிக்கும் தரகர்களைப் பற்றிய நாவலாகவும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு துணை போய் குருட்டுத்தனமாக அதிகாரம் செலுத்திப் பணம் குவிக்கும் பிழைப்பு அரசியல்வாதிகளைப் பற்றிய நாவலாகவும் விரிகிறது. கிராமிய வாழ்வியல் பதிவுகள் அர்ஷியாவுக்கு அற்புதமாக கை வருகின்றது. எலி வலை குறித்து இவர் அளவுக்கு யாரும் எழுதியதில்லை. மகாபாரத மயன் போல நுட்பமாக ஒரு பொறியாளருக்குரிய நுட்பம் அதில் தெரிகிறது. மாமரங்கள், மாம்பழங்கள், மாம்பழங்கள் பறிப்பது, பிரிப்பது மிகவும் ரசித்து எழுதப்பட்டப் பகுதிகள்.

வேட்டைக்குப் போகும் எழிலன், கடுக்கா, கலியன் குறித்த காட்சிப்பகுதிகள் தொல்குடி வாழ்வின் எச்சம். பிரம்மாண்டமாக விலங்குகளை வேட்டையாடும் துடிப்புமிக்க வேங்கையன் தன் மனைவியின் பாலியல் மீறல் முன்னே தற்கொலையாவது யதார்த்தச் சித்திரிப்பு. ஊர் மேயும் மாலைக்கோனார் மகனை மிரட்டி கட்டிக் கொள்ளும் அழகியின் வீரியம் பெண் வீச்சு.. நாயக்கன்பட்டி முத்தாலம்மன் திருவிழாக் காட்சிகள், கரட்டாண்டி (ஓணான்) பிடித்து விளையாடும் சிறுவர்கள், தரிசு நிலத்தை கரடு முரடு நீக்கி புதர்கள், காடுகள் களைந்து ஜேசிபி, பொக்லீன் வேலை செய்பவர்களின் உழைப்பு... என நாவலில் மக்களின் வாழ்வியல் பதிவாகின்றது.

கஜேந்திரகுமாரின் "ரியல் எஸ்டேட்' வணிகத்துக்கு துணையாக அரசுக்குச் சொந்தமான கால்வாய்க்கரையை ஒரே நாளில் எழுதித்தரும் பொதுப்பணித்துறை ஆள் (செல்வம்) அதே வேளை சாகுபடிக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை பொய்யாக "இங்கு சாகுபடி இல்லை' எனச் சான்று வழங்கி குறுக்கே கட்டிடம் கட்ட அனுமதித்து மலை நாட்டானின் வயிற்றில் அடிக்கும் அரசு வருவாய்த்துறை ஆள் என்ற முரண் ஒன்றே நிகழ் அதிகாரத்தனத்தின் சாட்சியாய் நம்மை கலங்க வைக்கிறது.

மிகத் துணிச்சலோடு எழுதப்பட்டுள்ளது இந்நாவல். நிலம் காக்க, இயற்கை காக்கத் துடிப்பவர்களின் கவனத்துக்குரியது. சீரழிவு நில வணிக மோசடிகள், தரகு வியாபாரம், அதிகார அரசியல் ஆகியவற்றுக்கு எதிராக சமகால சாமான்யனின் எளிய குரலாக அதே சமயம் தீவிர எதிர்ப்புணர்வாக இந்நாவலைக் கொண்டாட முடியும். வாய்பிளந்தபடி தலை தூக்கி நிற்கும் ஜேசிபியின் கோரப்பற்களும்... மண்ணை நம்பி மதித்து மண்ணோடு மண்ணாகிக் கிடக்கும் மலை நாட்டானும். என்ன செய்யப் போகிறோம் நாம்?

பொய்கைக்கரைப்பட்டி (நாவல்) / எஸ். அர்ஷியா / காலம் வெளியீடு / 25, மருதுபாண்டியர் நாலாவது தெரு, கருமாரியம்மன் கோவில் எதிர் வீதி, மதுரை 625 002. விலை ரூ. 100/