சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும் பூமியின்மேலுள்ள ஜனங்களுக்கு தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். (லூக்கா 21 அத் 25ம் வசனம் பரிசுத்த வேதாகமம்)

இந்த உலகம் பூராவும் கூடிய சீக்கிரத்தில் அழிந்தொழியப் போகிறது எனும் ஒரு குரூரவாக்கு எத்தனை மனிதர்களின் வாய்களிலிருந்து இன்று வெளியே ஓசையிட்டுக்கொண்டிருக்கிறது. உலகம் அழியப்போகிறது என்று சொல்லி தங்கள் பெயரை மக்களிடம் மறவாமல் கவனம் பெறச் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த உலகம் அழியும் கதையானது மக்களிடம் பயத்தை அளித்ததை விட நல்லதொரு சுவாரசியத்தைத்தான் ஏற்படுத்தி விட்டது. எல்லாரசனைகளிலுமிருந்தும் தங்களை வெட்டிக் கொண்டதாய் வைத்துக்கொண்டு இந்த உலக அழிவை நோக்கியே அவர்கள் திரும்பி நின்று கொண்டதாய்த் தங்களுக்குள் இப்போதெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வகையில் அவர்களைப் போல இல்லாது முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை எழுதுவதற்கு கதாசிரியனான என்னாலும் கூட இயலாதிருக்கிறது. எனது கதைகளை அவர்கள் படிக்கும்போது கதைச் சுவாரசியத்தை அவர்கள் விட்டு விடாமலிருக்க நானும் இப்படியான உலக அழிவைப் பற்றிச் சொல்லவே பெரும்பாலும் என் பொழுதுகளில் சிந்தனையைக் கூட்டி யத்தனித்துக் கொண்டிருக்கிறேன். கதைகளின் முதல் தகுதியை என் மனதைப் போட்டு எலியாய்ப் பிராண்டிக் கொண்டிருக்கும் இந்த விதமான விடயங்களுக்குக் கொடுத்தே என் பேனாவும் இப்பொழுது பழக்கப்பட்டதாய் விட்டது. என் கதைப்பாணியை ஒரு மொழிக்கூர்மையுடன் இந்த விதமான அழிவைச் சொல்லவே பிரயோகித்துக்கொண்டு அதனுடன் சார்ந்ததாகிவிட்டேனோ? என்ற கேள்வியும் என் மனத்திலிருந்து சில வேளைகளில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. பூமியோடு வெகுவிரைவில் இணையவிருக்கும் இன்றோ நாளையோ என்கிற அதன் அழிவுக் கதையுடன், நித்திய வாழ்வு இந்த உலகில் ஒரு சமூகத்து மக்களுக்குக் கிடைக்கப் போகிறது என்ற அந்த வினோதமாக வாழ்வை பற்றிச் சொல்லும் ஒரு சமயத்தைச் சார்ந்தவர்களும் இப்போது போதனை செய்து கொண்டுதிரிகிறார்கள்தான்.

எது எப்படியோ இருந்துகொள்ளட்டும். ஆனால் இன்று சமயங்களிடமிருந்து மக்களுக்குக் கொடுக்கப்படும் கருத்துக்களால் அவர்களின் வாழ்வு ஆழமாக வேரோடியபயத்தோடு மென்மேலும் சீரழிந்தே வருகிறது. கலாசாரம் சீரழிந்து ஒழக்கக்கேடுகள் நிறைகின்றன. எச்சரிக்கைக் காரணங்களால் ஆயிரத்திலொருவன் உண்மைக் கடவுள் வணக்கத்தாருடன் சேர்ந்து புனிதராயானாலும், தீவிரமான அகங்காரத்தின் வலிமையால் நல்ல சமூகமனத்தின் அக்கறையெல்லாம் இழந்து அனேகர் குறுகிய தங்கள் வாழ்க்கைக் காலத்துக்குள்ளே எல்லாக் கேடு கெட்ட ஆசைகளையும் வைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளவே பித்தம் பிடித்துக் கொண்டதாய் இன்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உலகில் ஒரு நிரந்தரத்தன்மையில்லாத தம் வாழ்வை நினைத்து உல்லாசசல்லாப வாழ்கைக்குள் சென்று அவர்கள் குலுங்கிச் சிரிக்கிறார்கள். அதன்பின்பு அவைகளால் உண்டான முழுவதுமான வேதனைகளின் சுமையால் இறுகின முகத்துடனிருந்து தாங்கள் பட்டுப் போய்விட்டதை நினைத்து உடலுறுப்புக்கள் தளர்ந்து போய் அவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

நிறம் மங்கிப்போன இந்த உலகத்திலிருந்து அது சாகப் போகும் பறையொலி எனக்கு இப்போது கேட்டபடியே இருக்கின்றது மாதிரியான ஒரு நிலைமை. பூமியின் கண்கள் பேசுவதுமாதிரி, சிரிப்பது மாதிரியானதொரு நல்ல நிலைமையெல்லாம் போய், இயங்குவதற்கு இயலாது திகைத்த கண்களுடன் தடதடத்துக் கொண்டு இப்போதிருப்பதாக மைக்கல் ஜக்ஷனின் மிகச்சிறப்பான அருமையான கருத்துள்ள பாட்டிலும் காட்சியிலும் நான் கண்டேன். அவருடைய ஆல்பத்தில் உள்ள அந்தப்பாடல் என் தவிப்பை பலமடங்குக்கு அதிகப்படுத்தியது மரம் வெட்டப்பட்டு அழிந்து கிடக்கின்ற அந்தச் சூழல்தான்! கண்ணெட்டும் தூரம் வரை மரங்களே இல்லாது அறுத்து விடப்பட்டதாய் நிலத்தோடு ஒட்டிக்கிடக்கின்ற அடிக்குற்றிகள்... பச்சைவெளி இல்லாமல் பாலைவனம் போல அலை அலையாக விரிந்து கிடக்கின்ற பூமிப்பரப்போ அது என்றதாகவே வெறுமையுடன் எனக்கு அவைகள் காட்சியளிக்கின்றன. வானிலோவென்றால் அங்கே பிரகாசமே இல்லாத உறைந்த அந்தகார இருள்.

நாசமும் நசிப்பும் கொடுக்கும் இந்த அழிவெல்லாம் பூமிக்கு யாராலே ஏற்படுகின்றது. மனிதராலேயா? அல்லது கடவுளாலேயா? கடவுள் தான்படைத்ததை முழுவதும் தானே பிறகு அப்படியாக அழிப்பாரா? இதற்கான பதிலை என்மன அமைதிக்காகத் தேடும் ஒரு தேடலில் என்மிகப் பெரிய அலுமாரியிலுள்ள மிகப் பழமையானதோல் அட்டை போட்ட புத்தகங்களையெல்லாம் எடுத்து நான் இப்போது வாசிக்கத் தொடங்கிவிட்டேன். இத்தகைய புத்தகப்படிப்பில் அலைந்து ஆராய்வது, லட்சக்கணக்கான டண் மண்ணை வெளியே தோண்டி எடுப்பதைப்போலவே எனக்குக் கடும் உழைப்பாக, உடலையும் மூளையையும் சேர்த்து வாட்டிக்கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சியில் தெய்வத்துக்கும் கோபமூட்டாத வகையில் என் இறுதி முடிவை எடுக்க வேண்டுமென்றும் நான் கவனமாயிருக்கிறேன். என்றாலும் நான் சில நாள் இரவுகளில் நித்திரை கொள்ளும் போது எகிப்திய பழமையான தெய்வமாகிய "அம்மோன்' என்ற தெய்வம் தன் கரத்தில் அரிவாள் வடிவபட்டயத்தை பிடித்திருப்பது போல காட்சியளித்து விட்டு என் கழுத்தை வெட்ட வருவது போல பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. எகிப்திய "அம்மோன்' தெய்வம், இந்துக் கடவுள் அம்மன் மாதிரியாகத்தான் தோற்றத்தில் ஒன்றானதாக கனவில் எனக்குக் காணத்தெரிகிறது. அந்தக் கனவுகளிலே நான் கண்ட காட்சிகளினால் ஏற்பட்ட ஆன்மாவை கரைத்து கொண்ட பீதி என் மனத்தைவிட்டு இலகுவில் விலகுவதாயில்லை.

நான் படித்த அனேகமான புத்தகங்களிலே, போலியான பக்தி ததும்பும் வார்த்தைகளேயல்லாமல் என்கேள்விக்குத் தெளிவான உண்மை வார்த்தைகள் ஏதும்கிடைக்கப்பெறவில்லை. கடவுளின் நோக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தரிசனத்தை எந்தப் புத்தகத்தைப் படித்து நான் பெறலாம்? அதன் மூலமாகத்தானே தண்ணீரின் அடியில் மறைந்ததாய்க்கிடக்கும் உலகஅழிவு என்ற பாறையின் அச்சுறுத்தல்களை நான் அறிந்து கொள்ளலாம்.

கோடான கோடி படைப்புகளைக் கொண்ட இந்தப்பூமியின் அழிவானது ஓரிரண்டு பக்கங்களிலே எழுதுவதற்கும், சிறிய நேரத்திற்குள்ளே வாயாலே சொல்லி விளங்க வைப்பதற்குமுரிய சர்வசாதாரணமான ஒரு விடயமா?

மனிதன் ஏன்மரிக்கிறான்? என்பதையும், அவனுடைய தற்போதைய துன்பநிலைக்கு காரணத்தையும் ஒழுங்காக கண்டு பிடித்துக் கொள்ளமுடியாத இந்த மனிதனினாலே உலக அழிவை மட்டும் சரியாகச் சொல்லிவிடுவதற்கென்று அவனுக்கு என்னதான் ஒரு தகுதியிருக்கிறது? உலகம் அழியப் போகிறது! அழிந்தொழியப் போகின்றது... என்று கொடிய குரல் கொடுத்துக்கொண்டு திரிகிறார்களே அவர்கள் கூறுவதில் அழியப் போகின்றதாயிருப்பது இந்தப்பூவுலகமா, அல்லது இந்த உலக அமைப்புக்களா?

உலக அமைப்புக்கள் என்று சொன்னால் அழிந்தொழியப்போவது அரசியல் ரீதியான நிர்வாகம் என்றும் உள்ளதான ஒரு கருத்தைக் கொள்ளலாம். அடுத்து அரசியலிலே அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிற சமயங்கள், அதன் குருமார்கள் என்றும் புரிந்துகொள்ளலாம். இப்படியாக இவைகளுடன் சேர்ந்து எவை எவையெல்லாம் அந்த உண்மையான ஒரே ஒரு கடவுளால் விரைவில் அழிக்கப்படப் போகின்றன? என் மனதுக்குள் தைரியத்தையும் நம்பிக்கையையும் வெளிச்சம் பாய்ச்சிவிட்ட இந்த விதமான கருத்துக்களை புத்தகத்திலிருந்து படித்து மனத்தில் வைத்துக்கொண்டு, இறுதி விடைகளை நோக்கி இன்னும் என் மனத்திலுள்ள இருள் திரைவிலகிப்போக நான் தேடலிலே காலத்தைச் செலவழித்துக்கொண்டு தான் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறேன்.

இந்த அதிகப்படிப்பு இருக்கிறதே பாருங்கள், அதுவும் கூட மனிதனின் உடம்புக்கு ஒரு விதமான இளைப்புதான்!

படித்துப் படித்துத்தான் எந்த விடயத்தை இதிலே நான் சரியாக கண்டுபிடித்துக் கொண்டது? இன்றுஇரவு வேளையானதும் ஒரு ஆங்கிலப் படத்தையாவது பார்த்து சிறிது நேரம் பொழுதைப் போக்கிக் கொள்வோம் என்று நினைத்து ஏலவே நான் வாங்கி வைத்திருந்த 2012என்ற ஆங்கிலப்படத்தை மேசைலாச்சியிலிருந்து வெளியே எடுத்து அதை டெக்கில் பதியப்போட்டு றிமோட்டின் உதவியால் உள்ளே தள்ளிவிட்டேன். டி.வி.யில் அந்தப் படம் ஆரம்பமாகியது. வர இருக்கும் உலக அழிவை முன்னறிவிக்கும் ஒரு குறிப்பேடு மாதிரியாகத்தான் அந்த ஆங்கிலப்படத்தில் காண்பிக்கப்படும் காட்சியெல்லாம் காண்பிக்கப்படுகிறது. சுழற்காற்று வீசுவதுபோல அச்சம்தரும் விதத்தில் கடல்பொங்கி அடித்துப்பெரும் திவலைகள் சுவர்களாய் எழும்பி தேசங்களை அழிப்பதைப் பார்க்க ஒரு விதத்தில் மனத்தைப் போட்டு ஆட்டிவைக்கிறது. கொடிய அந்தக் தரிசனத்திலே ஒரு கருத்தும் வலியுறுத்தப்படுவது அதி புத்திசாலித்தனம்தான். இந்தப் படத்திலே மரண இருளின் தேசத்திலே குடியிருப்பவர்கள் போல, நிலம் பிளக்க மனிதர்களெல்லாம் உயிரைத் தப்புவிக்க ஓடித்திரிவது எங்களுக்கும் இனிமேல் நடக்கப் போகிறது என்ற மாதிரியாக பெரிய வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதாயிருக்கிறது. எதையும் காலத்தோடு செய்வதில் ஹாலிவூட் சினிமா எடுப்பவர்கள் நிகரற்றவர்கள் என்று இந்தப் படத்தைப் பார்த்து முடித்தவுடன் நான் நினைத்தேன்.

இந்தப்படத்தைப் பார்த்த பிறகு சாவைத்திடீரெனப்பார்த்து சந்தித்த தொரு பயத்துடன் இன்னும் பல நூல்களை நூல் நிலையத்துக்குச் சென்று கருத்தூன்றிப் படிப்பது எனக்கு வழக்கமாகிவிட்டது. இருண்ட உலகெனும் குன்றின் மேலிட்ட சத்திய விளக்காய்ச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் உலக அழிவு என்கிற இந்த விடயத்தைப்பற்றி பைபிள் புத்தகத்திலுள்ள கருத்தாழம்மிக்க தீர்க்கதரிசன வார்த்தைகள், எல்லாப் புத்தகத்திலிருந்தும் மிகுந்த அர்த்தமுள்ளவையாக இருக்கிறதை நான் கண்டேன்.

உலக அமைப்புக்களாயிருந்து பொய்மை ஒன்றையே தமக்குள் வைத்துக் கொண்டு ஆட்சி செய்யும் இந்த அதிகார வர்க்கங்களையெல்லாம் கடவுள் அழிப்பது பற்றிய அதிலே உள்ள செய்தி, எனக்கு மிகவும் மன ஆறுதலையே தருகிறது. இந்த விதமான உலக அழிவை புரியாத ஒரு புதிராக மூடிவைப்பதற்கான காரியங்கள் அந்தப் புத்தகத்திலே இல்லாதிருப்பதை நான் கண்டது, இன்னும் பல முறை நான் பைபிளை படிக்க வேண்டும் என்ற ஆவலையே மனத்தில் எனக்கு உண்டாக்கிவிட்டது.

"கடவுள் முதல் மனிதர்களை பூமியில் என்றுமாக வாழக்கூடிய எதிர்பார்ப்புடன் படைத்தார்' என்ற வாக்கியம் என் மனதில் நிலை நிற்க அதையே நான் திருப்பித்திருப்பி பைபிள் புத்தகத்தில் படித்துக் கொண்டிருக்க ஆரம்பித்தேன். ஏதேன் தோட்டத்திலிருந்து "ஏவாள்' மறுபடியும் மறுபடியும் கனிகொடுக்கும், காய்த்துக் குலுங்கும் அந்த விரூட்சத்தைப் பார்த்ததைப் போல நானும் இந்த வார்த்தைகளை படித்துப் படித்துப் பார்த்தேன். படிக்கப் படிக்க மனப்பாரம் எனக்கு விடுப்பட்ட தாய் இருந்தது. அந்த வார்தைகளில் உள்ள அர்த்தத்துடன் நான் மனமுவந்து சேர்ந்து கொண்டேன். இதனாலே தைரியமாக மதத் தலைவர்களின் மாய்மாலத்தை நான் அம்பலப்படுத்த வேண்டும் என்ற கோப உணர்வு எனக்கு வந்தது.

நிலையான சமாதானத்திலும் மகிழ்ச்சியிலுமாக வாழ்ந்து கடவுளின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருப்பவர்களை கடவுளின் நீதி என்றும் காப்பாற்றி அவர்களைப் இப்பூவுலகிலே மரணமின்றி நெடுகவும் வாழவைக்கும் என்ற வார்த்தைகள் இந்தப் பூவுலக அமைப்புகள் அழிக்கப்படும் போது கடவுளின் பக்கம் உள்ளவர்கள் காப்பற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையை என் மனதில் ஏற்படுத்தியது. என்றாலும் இந்த அபத்தமான அழிவு எப்போது சம்பவிக்கும்? என்ற செய்தியை பைபிள் புத்தகத்தின் பக்கங்களை புரட்டிப் புரட்டி வாசித்து நான் தேடத் தொடங்கினேன்.

பைபிளின் 66 புத்தகங்களையும் வரிசை முறைப்படி ஆராய்ந்ததில் அவைகளிலே தெய்வீக சத்தியத்தை வெளிப்படுத்தியவர்களிலே "மத்தேயு' என்ற சீடர் கூறியவை என் மனதுக்கு மிகவும் பிடித்துக் கொண்டதாய்விட்டது. வரிவசூலிக்கும் அதிகாரியாகவிருந்து இயேசுவின் வழி காட்டலில் அவருக்குப் பின்னாலே சென்று அவரின் சீடனாக மாறியவர் அப்போஸ்தலர் மத்தேயு. தன் பதிவை அவர் எழுதி முடித்திருந்த அந்த அத்தியாயத்தில் இன்று எம்மைப் போன்றவர்களின் மனதில் உள்ள ஆவலைப் போல அன்றைய கிறிஸ்துவினது சீடர்கள் கூட இந்த உலக அழிவு எப்போது சம்பவிக்கும் என இயேசுவை அவர்கள் கேட்டதாக அங்கே எனக்கு வாசிக்கக் கூடியதாக இருந்தது.

அவர்கள் அப்படியாக அவரைக் கேட்டதற்கு இயேசு என்ன சொல்கிறார்? மத்தேயு இருபத்தி நான்காம் அதிகாரம் 36வது வசனம் அதனை எவ்வளவு துல்லியமாக விளங்க வைத்து விடுகிறது. அவர், அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு முன்னாலே கூறியதும் தீர்க்கதரிசனமான சத்திய வசனம் தான். “எது தான் ஒழிந்து போனாலும் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.....'' என்று சொல்லி விட்டுத் தானே தன் பதிலை அவர், அவர்களுக்குக் கூறத் தொடங்குகிறார்.;

அந்த நாளையும் அந்த நாழிகையையும் என்பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

இதைப் படித்ததும் தலையை நிமிர்த்தி வைத்துக் கொண்டவாறு அசையாமல் இருந்தபடி நான் வான சரிவுவரை செல்கிற அளவுக்கு யோசித்தேன். இயேசு கடவுளல்ல அவர் கடவுளின் நேச குமாரன். அவருக்குத் தெரியாமல் கூட சகல வல்லமைகளும் பொருந்திய அந்த ஒரே ஒரு கடவுளானவர் சில காரியங்களை வெளியிடாமல் தன்னிடத்திலேயே தக்கவைத்தபடி வைத்துக் கொண்டிருக்கிறாரா?

அப்படிப் பார்ககப் போனால் இனி இந்த உலகத்தை இராஜாவாக ஆழ்வதற்கு கடவுளாலே நிச்சயிக்கப்பட்ட இயேசுவுக்குத் தெரியாதது முற்றிலுமாக அழிக்கப்படப் போகின்ற பிசாசானவனுக்கும் கூடத்தான் தெரியாத தொன்றாயிருக்கும். பிசாசானவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் இந்த அழிவின் பிறகு அழித்தொழிப்பது தானே கடவுளின் முதல் இலக்கு.

ஆகவே அவனுக்கும் கூட தெரியாமல் காப்பாற்றப்பட்டதாய் அந்த இரகசியத்தை கடவுள் வைத்திருக்கிறார் போலும் என்றதாய் நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன். இப்படியாக நான் என் சிந்தனையை முன்பு என் பார்வை படாத மூலைகளில் செலுத்தியது மாதிரியாய் செலவிட்டுக் கொண்டிருந்த நேரம் நான் இருந்து கொண்டிருந்த அந்த விசாலமான அறை முழுக்கக் காற்றின் குளிர் அதிகரித்தது. அந்த குளிர் என் சதையில் உறைக்க ஆரம்பித்ததும் பின்னாலிருந்து ஓங்கி உயர யாரோ ஒருவர் விட்ட வெளி மூச்சு வெப்பமாய் என் தோளைத் தொட்டது போல இருந்தது. உடன் உடல் வெடவெடக்க முழங்கால்கள் மீது கைகளை வைத்துக்கொண்டு நான் பயத்தில் திரும்பி உற்றுப் பார்த்தேன். ஒன்றுமே காணப்படவில்லை.

கேற் வாசலில் மணி அடித்த சத்தம் கேட்டது. கதவைத் திறந்து வெளியில் போனேன். “தபால் பெட்டியில் கடிதம் போட்டுக் கிடக்கிறதோ?'' என்று நினைத்து பெட்டிக்கதவைத் திறந்து பார்த்தேன். ஒரு துண்டுப் பிரசுரம்மட்டும் அதிலே கிடந்தது.

அதன் தலையங்கம் "உலக அழிவு' என்றது தான்! அந்தப் பளபள காகிதத்தில் மின்னிக்கொண்டிருந்த எழுத்துக்களைப் படிப்பது எனக்கு மிகவும் இனிமை பரவிய ஆர்வமாயிருந்தது. அப்படியே பறப்பதைப் போன்ற ஒரு மகிழ்ச்சியோடு அதைத் தொடர்ந்து கண்களை எடுக்காமல் படித்தபடி வீட்டுவாசல் படியேறினேன். படிப்பதிலே உள்ள பரபரப்பு ஓங்கியடிக்கும் அலைகள் போல என்னிடத்தில் பரவிநிற்க படியேறுவது உறுதியில்லாத மாதிரி இருந்தது.

அதை யோசிக்க முதல் தடால் என கீழே என் மண்டை உடைய அதிலே நிலத்தில் என்னை விழுத்திவிட்டது. என்னை விழுத்திவிட்டது என்று எதைத்தான் நான் நொந்து கொள்வது. நானாகத் தானே ஒழுங்காக ஏறிக்கொள்ளாததில் தடுக்கி விழுந்து விட்டேன். பிறகு எதன்மேல் தான் எனக்கு நோவு. நிலத்தில் விழுந்த பிறகு மண்டையில் இருந்து எனக்கு இரத்தம் குபுகுபு வென்று பாய்ந்து கொண்டிருப்பதைப் போல இருந்தது. அதன் பிறகு சில நிமிடங்களுக்குள்ளாக அம்புலன்ஸ் வண்டிக்குள்ளே நான்.! அம்புலன்சின் உள்ளே உள்ள படுக்கை என்னை ஊஞ்சல் மாதிரி ஆட்டிக் கொண்டிருந்தது. அந்த ஆட்டத்துக்குத் தோதாக "நித்திய...... ஜீவன் நித்திய ஜீவன்' என நான் செபம் சொல்வது போல தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.