1970களில் வெளிவந்து தமிழுக்கு ஒரு புதிய அழகியல் அனுபவமாக, தமிழில் பொன்னீலன் என்னும் நாவலாசிரியனின் பிரவேசமாக அமைந்த கரிசல் என்ற விவசாய காவியம் மலையாளத்தில் திருமதி. ஷைலஜா ரவீந்திரனின் கைவண்ணத்தில் “கரிமண்ணு'' என பரிணமித்துள்ளது.

12.04.2011 திருவனந்தபுரம் பிரஸ் கிளப் கட்டிடம், மழைச் சூழலைப் பொருட்டாக்காமல் மலையாள இலக்கிய ஆர்வலர்கள் அரங்கில் நிறைந்தார்கள். கரிமண்ணு வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறியது.

மலையாள இலக்கிய உலகுக்கு ஓர் உந்துசக்தியாக விளங்கும் சாகித்திய பிரவர்த்தக சஹகரண சங்கத்தின் தலைவர் ஏழாசேரி ராமச்சந்திரன் தலைமை தாங்க அஜித் பாவம்கோடு வரவேற்றுப் பேசினார்.

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட, முன்னாள் மத்திய அமைச்சரும் திருவனத்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் விழாவில் கலந்து கொண்டு கரிமண்ணு நாவல் மொழியாக்கத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மலையாள இலக்கிய உலகின் தன்மைகளை விளக்கி, மொழிபெயர்ப்பாளரின் சிறப்புக்களைச் சொல்லி, நாடறிந்த இலக்கியவாதியான பொன்னீலனுக்கு மலையாளத்தில் சிறப்பான ஒரு வாசகர் வட்டம் கிடைக்கப் போகிறது என்று வாழ்த்தினார்.

முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட பனாரஸ் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தரும், மிக பிரபலமான இடதுசாரி அறிஞருமான பாலமோகனன் தம்பி தன்னுடைய உரையில்,

பொன்னீலன் என் மாணவன், மொழிபெயர்ப்பாளர் ஷைலஜாவின் தந்தையும் என் மாணவன் எனத் தொடங்கி கரிசல் நாவலின் கருப்பொருளைப் பற்றி விரிவாகப் பேசினார் பெருமாள்புரத்தைப் பார்க்கும்போது 10 அல்லது 12ம் நூற்றாண்டின் கிராமம் போல இருக்கிறது என குறிப்பிட்டு, சுரண்டல் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் என நாவல் வளரும் விதத்தை கோடிட்டு வாழ்த்தினார்.

டாக்டர் சுனில் எஸ். பரியாரம் நாவலைப் பற்றிய விரிவான மதிப்புரையை வழங்கினார். நாவலில் புன்னப்புரா வயலார் போல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது சமூகப் புரட்சியின் வெளிப்பாடு என்றும், கரிசல் இனி தமிழுக்கு மட்டுமில்லை, மலையாளத்துக்கும் சொந்தம் என்றும் குறிப்பிட்டார்.

தகழி சிவசங்கரபிள்ளையின் கயிறு என்னும் மாபெரும் காவியத்தை வெளியிட்ட பேராசிரியர் தும்பமன் தோமஸ், திரு. ராஜீவ் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

நாவலை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தவர் எழுத்தாளர் ஷைலஜா ரவீந்திரன். புகழ்பெற்ற சந்திராயன் அணுவிஞ்ஞானி மாதவன் நாயரின் மருமகள். அவரின் வாழ்க்கை வரலாற்றை அம்புலி மாமன் என வார்த்தவர். வள்ளுவனின் திருக்குறளை மலையாளத்தில் ஆக்கம் செய்தவர். தமிழில் இலக்கிய கலகத்தை சிருஷ்டித்த பாமாவின் கருக்கு நாவலை மலையாளப்படுத்தியவர். விழாவில் அவர் பேசுகின்றபோது மொழியாக்கத்தில் நேர்ந்த பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி ஒத்துழைப்பு நல்கிய எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்.

இறுதியில் நாவலாசிரியர் பொன்னீலன் பேசுகையில் 1975ல் வெளிவந்து, 1978ல் பாடநூலாகி, 1983ல் தமிழக அரசின் விருதினைப் பெற்று, எட்டுப் பதிப்புக்களைக் கொண்ட கரிசல் நாவல் களியக்காவிளையைக் கடந்துவர சுமார் 35 ஆண்டுகள் பிடித்துள்ளன என்றார்.

கரிசல் கேரளத்துக்கு உரிய மண் அல்ல. இது மத்திய தமிழகத்துக்கு உரிய ஒரு குறிப்பிட்ட மண். அந்த மண்ணின் மக்களை, நான் பார்த்த சம்பவங்களை, என்னைச் சங்கடப்படுத்தியவை என, என்னை நெகிழவைத்த உணர்ச்சிகளை நான் கரிசலாக தீட்டினேன். இது பெருமாள்புரத்தின் கதையல்ல. இது உண்மையில் இந்தியாவின் கதை. இது மலையாளத்துக்கு ஒரு புதிய பண்பாட்டு அனுபவமாக இருக்கும் என்றார்.

மலையாள இலக்கியம் என் மனசுக்கு உகந்த இலக்கியம் எனவும், தகழி சிவசங்கரபிள்ளை, பொற்றகாட், கேசவதேவ் போன்ற எழுத்தாளர்கள் தன்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்கள். அவர்களைப் படித்ததால் நான் உத்வேகம் பெற்றேன் என்றார். நமக்குள் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனை குறைந்து போயிற்று. பரிவர்த்தனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றவர், எல்லோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

நாவலாசிரியரின் மூத்த மகள் மருத்துவர் அமுதா ஜெயராம் அவர்கள் மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா ரவீந்திரன் அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார்கள்.

Pin It