நரி
ஷிஞ்சிரு குராஹரா
தமிழில்: ஆர்.அபிலாஷ்

நரிக்கு புரிய வருகிறது
சூரியன் பிரகாசிக்கும் அந்த ஆளரவமற்ற வயலில்
தான் மட்டுமே என்று.
அதனால் தானும் அவ்வயலின் ஒரு பகுதி என்று.
தான் அவ்வயலின் முழுமையும் என்று.
இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது போல,
அந்த நரிநிறமான ஆளரவமற்ற வயலில்
ஒரு புயலாக மாறுவதோ, காயந்த புற்களாவதோ
குறைந்தது ஒரு ஒளிக்கீற்று ஆவதோ கூட
ஒரு நிழலாக இருப்பதை போன்றது,
அதுவும் அதற்குப் புரிய வருகிறது.
கிட்டத்தட்ட ஒரு புயலைப் போல்
வெறிகொண்டு எப்படி ஓடுவது,
ஒளியை விட வேகமாய்
எப்படி ஓடுவது என்பதும் கூட அதற்குத் தெரிய வருகிறது.
இதனால் தன் உருவம் யாருக்கும் புலனாகாது என்று நினைக்கிறது.
புலனாகாத ஒன்று யோசிக்கையில் ஓடியவாறு இருக்கிறது.
ஒரு எண்ணம் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது.
யார் கவனத்திலும் படாதவகையில்
ஆளரவமற்ற அவ்வயலுக்கு
மேலாக நடுப்பகல் நிலா எழுந்து விட்டது

ஒரு சிறுவன்
தட்சுஜி மியோஷி

மாலையில்
ஒரு குறிப்பிட்ட கோயில் வாயிலில் இருந்து
ஒரு அழகான சின்னப் பையன்
திரும்ப வருகிறான்

இருட்டி வரும் ஓர் பகலின் போது
ஒரு கைப்பந்தை தூக்கிப் போட்டு
வானம் வரை தூக்கிப் போட்டு
இன்னும் விளையாடியபடி, திரும்ப வருகிறான்

அமைதியான தெருவில்
மனிதர்களும் மரங்களுமாக காற்றை
சாந்தப்படுத்துகிறார்கள்
வானம் ஒழுகுகிறது ஒரு கனவைப் போல்

Pin It