கழுதையை குதிரை என்று கூறி விற்பது பண்டைய காலத்து வணிக விதி. இதனை நீ குதிரை என்று ஒத்துக்கொள்ளாவிட்டால் உன்னை மனிதனாகவே ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று மிரட்டுவதுதான் உலக மயமாக்கலின் வணிகச் சூத்திரம்.

சமீபகாலங்களில், திரைப்படங்களின் வெற்றி திரையரங்கத்திற்கு வெளியேதான் தீர்மானிக்கப்படுகின்றது. சிவாஜி முதல் ஏழாம் அறிவு வரை பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். பிரசவ மருத்துவமனையில் மருத்துவர் நாள் குறிப்பது போல இன்னும் நாலுநாள், மூணுநாள். இரண்டு நாள் என்று நம்மை திரையரங்கம் நோக்கி ஆயத்தப்படுத்துகிறார்கள். சூர்யாவின் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் நடந்ததைப் பார்த்த ஒரு நண்பர் இது தமிழனின் வெற்றி என்று பறைசாற்றினார். பிறமொழி பேசுகிற நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த இந்த மரியாதை ஒரு தமிழனுக்குக் கிடைப்பதைப் பாராட்டுவதே பின் நவீனத்துவப் பார்வை என்று மிரட்டினார். அவரது விளக்கத்தைக் கேட்டு மாடுகளுக்கே புல்லரித்திருக்கும். வேறொரு நண்பர் தீபாவளியன்று காலை, படத்தைப் பார்த்து விட்டு தமிழ்க்கலாச்சாரம் மீட்கப்பட்டு விட்டதாக குறுஞ்செய்தியில் அறிவித்தார். உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள் என்று நான் அனுப்பிய பதிலில் அநேகமாக அவர் பண்டிகை மகிழ்ச்சியைத் தொலைத்திருக்கலாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் எல்லோரையும் போல தீனா என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். ரமணா வெளிவந்த உடன் எல்லோரும் அவரை கவனிக்க ஆரம்பித்தார்கள். பிறகு எல்லோரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே கஜினியை உருவாக்கினார். மனநோயாளிகளைப் பற்றி படமெடுத்தால் தமிழ்நாட்டில் பெரிய இயக்குநராகி விடலாமே) உம் சேது, அந்நியன், நந்தலாலா, அஞ்சலி) மேடைக்கு மேடை நிறம் மாறும் நம் அரசியல்வாதிகளின் வேஷங்களை நன்கு அறிந்த தமிழ்மக்களுக்கு சஞ்சய் ராமசாமியை பிடித்துப் போனதில் வியப்பில்லை.

அமீர்கானை நடிக்க வைத்து அந்தப் படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்த பிறகு அவர் இந்திய இயக்குநராக பதவி உயர்வு பெற்றார்.

இப்போது உலக இயக்குநராக மாறியே தீருவேன் என்று அவர் ஏதோ ஒரு குலதெய்வக் கோவிலில் சபதம் பூண்டிருப்பதை உணரமுடிகிறது.

ரஜினியின் உடல்நிலை சரியானதிலிருந்து தமிழர்களின் அடுத்த பிரச்சினையாக போதி தர்மர் உருவெடுத்து விட்டார். எங்கள் ஊரில் போதி தர்மர் டெய்லரிங் ஷாப் என்ற பெயரில் ஒரு புதிய கடையே உருவாகி விட்டது. ஆனால், ஏழாம் அறிவைப் பார்த்த பிறகு எனக்கு ஆறுதலளித்த ஒரே விஷயம், ஒரு சீனப்பெண்ணின் கனவிலோ அல்லது பல்லவ குல மங்கையொருத்தியின் சயனநினைவிலோ போதிதர்மரை டூயட்டுக்கு ஆட வைக்காமல் இருந்ததுதான்.

போதி தர்மர் மருத்துவக் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை பல்லவ வாரிசுகளிடம் ஒப்படைத்து விட்டு சீனா செல்வதாக படம் துவங்குகிறது. சீனாவின், குக்கிராமம் ஒன்றில் கொடூரமான விஷக்காய்ச்சல் பரவுகிறது. இறந்து போனதாக நினைத்து மலைக்குகையில் வைக்கப்பட்ட குழந்தையைக் காப்பாற்றிக் அழைத்து வருகிறார். மக்களின் முன்னிலையில் தோள் துண்டை விலக்கி ஒரு மந்திரவாதியைப் போல குழந்தையைக் காட்டுகிறார். எல்லோரும் பரவசத்தோடு அவரை வணங்குகின்றனர். முகமூடிக் கொள்ளைக்காரர்களை அவர் விரட்டியடிக்கும் சாகச‌ங்கள் நம் திரைப்பட கர்னல்கள் விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன் ஆகியோரது வீரத்திற்கு சவால் விடுபவை. தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் அவர் தாய்நாடு செல்ல ஆசைப்படுகிறார். அவர் உடல் தங்கள் மண்ணிலே புதைக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் உணவில் விஷம் வைத்து விடுகின்றனர். விஷம் என்று அறிந்தும் போதிதர்மர் அந்த உணவை உண்டு இறக்கிறார்.

உயிர் தொழில் நுட்ப மாணவியான ஸ்ருதி போதி தர்மரைப் பற்றி அறிந்து அவரது முடியிலிருந்து கிடைத்த மரபணுவை அவரது வாரிசுகளில் ஒருவர் உடலில் செலுத்தி அவரை அதிமனிதனாக மாற்றி நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த நினைக்கிறார். இந்த ஆய்வு பற்றி அறிந்த சீனஅரசு விஞ்ஞானி சுருதியை அழிக்கவும், போதி தர்மர் காலத்தில் பரவிய விஷக் காய்ச்சல் கிருமியை ஒரு நாய் மூலம் இந்தியாவில் பரப்பவும் போதிதர்மரின் வழிவந்த சீடர்களிடம் எல்லா கலைகளையும் கற்றுக் கொண்ட இன்னொரு அதிமனிதனை தமிழ்நாட்டிற்கு அனுப்புகிறது. அதற்குப் பிறகு தொடரும் எம்.ஜி.ஆர் நம்பியார் மோதல்தான் மீதித்திரைப்படம். சரோஜா தேவிக்குப் பதிலாக ஸ்ருதி. ஆனால் இவர் க்கோப்பால் என்றெல்லாம் வாய்கொப்பளிப்பது போல் நாயகன் பெயரைச் சொல்வதில்லை. மாறாக, விஞ்ஞானியாக இருந்தாலும் யானை மீது ஏறி மவுன்ட் ரோடில் வலம் வருகிறார். எந்த பயமுமின்றி பேருந்து நிறுத்த நாற்காலியில் தூங்குகிறார். (வாழ்க ராத்திரி ரவுடிகள்). சர்க்கஸ்காரனோடு எந்த மனத்தடையுமின்றி காதல் புரிகிறார். தமிழ்ப்புலியாக மாறி பாஸ்டர்ட் என்று மொழித்துரோகிகளான பேராசிரியர்களைத் திட்டுகிறார். ஒரு கண்ணாடி நீச்சல் குளத்தையும், கம்யூட்டரையும் வைத்துக் கொண்டு சீனாவிற்கே சவால் விடுகிறார். இறுதியாக இயேசு நாதர் மலைப்பிரசங்கம் செய்வது போல் சூர்யா பேசிக்கொண்டிருக்கும் போது, தமிழ்ப்பண்பாடே பெண்ணுருவெடுத்து சேலை கட்டிக் கொண்டதைப் போல அவரை ஆச்சர்யத்தோடு பார்க்கிறார். வர்ம நோக்கு (ஹிப்னாடிசம்) என்ற பெயரில் சைனாக்கார வில்லன் படம் முழுவதும் பலரை வசியம் செய்தும் எண்ணிக்கை நாற்பதைத் தொடவில்லை (ஒரு வார்டு கவுன்சிலரே 400 பேரை வசியம் செய்து விடுகிற போது இது எனக்கு சாதனையாகத் தெரியவில்லை).

தேர்ந்த தொழில் நுட்பத்திறனும், நடிகர்களின் பாத்திரத்திற்கேற்ற நடிப்பாற்றலும், முன்பாதியில் வேகம் அறுபடாத திரைக்கதையும் இந்தப்படத்தை எல்லோரையும் ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், படம் எடுப்பதற்கு முன்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் உட்கார்ந்து உதயநிதி ஸ்டாலின் செக் புத்தகத்தில் கையெழுத்திட்ட போதே இப்படத்தின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது வேறு விஷயம். இந்தப்படம் என்னுள் உருவாக்கிய அதிர்வலைகள் வேறுமாதிரியானவை. படம் நெடுக தமிழ் உணர்வு பேசப்படுகிறது. ஆஸ்திரேலியாவிலும், இலங்கையிலும் அடிவாங்கினோம் இனி திருப்பி அடிக்கணும்  

இந்தியனா இருப்பதால உலகத்துல மரியாதையில்ல. தமிழனா இருந்தா இந்தியாவுல மரியாதையில்ல என்ற பல்வேறு இடங்களைச் சுட்டலாம். இறுதிக் காட்சியில் சூர்யா தமிழ் மருத்துவ, கலாச்சார வரலாறு குறித்து சிறப்பு வகுப்பெடுக்கிறார். ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து வசனங்களுக்கும் கெட்ட வார்த்தைகளோடு கூடிய அரங்கம். அதிரும் கைதட்டல்களைக் கேட்டேன். அரங்கில் ஏறத்தாழ 60% பேர் போதையிலிருந்தனர். இந்தத் தமிழ் ஆதரவு மனோநிலை எனக்கு ஆச்சர்யமளித்தது. பனைமரத்துல வவ்வாலா, .... க்கே சவாலா? என்று எழுப்பப்படுகிற கோஷங்களுக்கும், போதைக்கும், கெட்ட வார்த்தைகளுக்கும் நடுவே பீறிட்டுக் கிளம்பி வரும் இது போன்ற தமிழ் உணர்வுக்கும் அதிக வித்தியாசமில்லை. சமீப காலங்களில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பிறகு இளைஞர்களிடத்தில் உருவாகியிருக்கிற ரசிகர் மன்ற மனோபாவம் சார்ந்த தமிழ் உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும் என்பதை பல தமிழ் உணர்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் படத்தில் அதற்கான ஒரு வாய்ப்பு இருந்தது. ஏர்.ஆர். முருகதாஸ் அதனைப் பயன்படுத்தவில்லை என்பதையும் தாண்டி தம்மளவில் ஒரு பொதுவெடியைக் கொளுத்திப் போட்டிருக்கிறடர் என்றே அவதானிக்க வேண்டியிருக்கிறது.

இந்தப் படத்தில் தமிழர்களுக்கான எதிர்நிலையாக பௌத்தமும், சீனதேசமும் வலிந்து கட்டமைக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர். முருகதாஸின் ஹாலிவுட் கனவுக்கு அபூர்வமான பௌத்தம் சார்ந்த தமிழ் தொன்மம் ஒன்று காவு கொடுக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களில் கீழைதேச விஞ்ஞானிகள் கைகளில் கிருமிகளோடு அலைவார்கள். ஐரோப்பிய நாடுகளில் அவற்றைப் பரப்பி உலகத்தை அழிக்க முனைவார்கள் (அம்மையப்பன்தான் உலகம் என்பதைப் போல, அவர்களைப் பொறுத்த வரையில் ஐரோப்பா அழிந்தால் உலகம் அழிந்ததாகத்தான் பொருள்) ஒரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய சூப்பர்மேன் இந்தக் கிருமிகளை வாரிச் சுருட்டி கடலில் போட்டு விடுவார். இதைச் செய்து முடிப்பதற்கான அவரது தகுதி எவளாவது ஒருத்திக்கோ, பலருக்கோ அடிக்கடி உதட்டு முத்தம் தருவதாக மட்டுமே இருக்கும். இதற்கும், காஷ்மீரத்துப்பனிமலையில், நமது தென்னாட்டுக் கர்னல்கள் மீட்புப்பணி முடிந்து ஜெய்ஹிந்த் சொல்வதற்கும் தூரம் அதிகமில்லை. சீனாவையோ, பாகிஸ்தானையோ எதிரியாகக் கட்டமைப்பதற்குப் பதிலாக தமிழர்களை அழிக்கும் இலங்கையை அப்படிக் காட்டுவதற்கு இயக்குநர் ஏன் தயாராக இல்லை? வரலாற்று ரீதியாக இந்திய அரசு தமிழர்களுக்கான எதிரியாகத் திகழ்வதை அவர் விவாதிக்க தயாரா? சென்சார் சான்றிதழ் சுலபமாகக் கிடைக்கும் என்பதற்காகவே அவர் சீனாவை தீயசக்தியாகக் காட்டியிருக்கிறார். ஹாலிவுட் கருத்தாக்கத்தை அப்படியே நகலெடுப்பது, அதுவும் இந்தியா போன்ற பன்மைத்தன்மை கொண்ட மூன்றாம் உலக நாட்டிலிருந்து உருவாகி வரும் படைப்பாளி நகலாளியாக மாறுவது நிச்சயம் உலக இயக்குநராவற்கான பயணமாகாது.

போதிதர்மர் குறித்த சில வரலாற்றுத் திரிபுகளையும் இப்படம் முன்வைக்கிறது.

போதிதர்மர் தான் சார்ந்த பௌத்த சமயத்தைப் பரப்புவதற்காகவே சீனா சென்றார் என்ற வரலாற்று உண்மை இப்படத்தில் மறைக்கப்பட்டுள்ளது. பௌத்த அடையாளங்களும், புத்தமதம் சார்ந்த சொல்லாடல்களும் இப்படத்தில் இடம் பெறாமலிருப்பது தற்செயல் அன்று. அவரை அகிம்சையை போதிக்கும் புத்த மதத் துறவியாகக் காட்சிப்படுத்துவதற்குப் பதிலாக காவி உடுத்திய சாகச நாயகனாகவே இயக்குநர் சித்தரிக்கிறார். ஓர் இடத்தில் அவர் புத்தருக்கு நிகரானவர் என்ற வசனம் இடம் பெறுகிறது. ஒரு விதத்தில், போதிதர்மர் இந்தப்படத்தில் புத்தரை விட்டு அன்னியப்படுத்தப்பட்டிருக்கிறார். இப்பிறழ்வை சிங்களர்கள் மீதான வெறுப்பை பௌத்தத்திற்கு எதிரானதாக இயக்குநர் உள்வாங்கிக் கொண்டதன் தொடர்ச்சியாகவே பார்க்க முடியும். போதிதர்மரைப் பற்றிப்படிக்காமல் இந்தப் படத்தைப் பார்த்து முடித்த பலரும் கங்கை கொண்ட சோழனைப்போல போதிதர்மரை தமிழ்நாட்டைச் சே‌ர்ந்த ஒரு சாகச‌ நாயகநாக உள்வங்கி கொள்வரே அன்றி, அவரை பௌத்த துறவியாக தன் மனப்படிமங்களுக்குள் இட்டு நிரப்ப மாட்டார்கள்.

போதிதர்மருக்கு விஷம் கொடுத்தது கூட சீடர்களுக்குள் நிகழ்ந்த வாரிசுரிமைப் போட்டியால்தான் என்று ஓஷோ குறிப்பிடுகிறார். ஆனால், சைனாவே திட்டம் போட்டு விஷம் வைத்து அவரை தங்கள் மண்ணில் புதைத்து விட்டதான தொனியில் இயக்குநர் அவர் மரணத்தைக் கையாண்டிருக்கிறார்.

தமிழ் மரபிலிருந்து பௌத்தத்தை அன்னியப்படுத்தி உணர்வதால் நிகழும் கோளாறாக இதனை நான் பார்க்கிறேன். அயோத்திதாசர் பல்லாண்டு காலம் வலியுறுத்திய தமிழ் பௌத்தம் குறித்த தெளிவோ, வாசிப்போ இன்றி ஒருவர் இறந்து போன போதிதர்மரின் உடலை எடுத்து போஸ்ட்மார்ட்ட அறிக்கை கொடுத்திருப்பதாகவே இப்படத்தை நான் உணர்கிறேன்.

Pin It