ஷன் மெடோரூமா

ஆங்கிலம் : மைக்கேல் மொலாஸ்கி

தமிழ் : யதி அதிசயா

மாலை 6 மணிச் செய்தியில் அதுதான் தலைப்புச் செய்தியாக இருந்தது. ஓர் அமெரிக்கப் படைவீரனின் காணாமல் போன பிஞ்சுக் குழந்தையின் சடலம் கோஜட நகரத்தின் எல்லைக்குட்பட்ட குற்றிக் காட்டுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த உணவு விடுதியில் அமர்ந்திருந்த வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்களின் கண்கள் எல்லாம் தொலைக்காட்சித் திரையிலேயே ஒட்டி இருந்தன. குழந்தையின் உடம்பில் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. தற்போது அந்த சடலத்திலிருந்து கொலையாளியின் தடயங்களை காவல்துறையினர் சேகரிக்கின்றனர். இந்த தகவல்களை வழக்கமான “திகில் கதை” பாணியில் சொல்லிவிட்டு, தெருவில் காணப்படும் மக்களிடம் பேட்டி காண்பதாக செய்தி மாறுகிறது. “தற்போது என்னுடைய குழந்தை வெளியே இறங்கி நடப்பதை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. ஓக்கினாவா கூட ஆபத்தான இடமாக மாறி விட்டது”.

 ஐம்பது வயது மதிக்கத்தக்க குண்டுப் பெண்மணி திரையில் தெரிவதைக் கண்ட பணிப்பெண் உற்சாகத்துடன் கத்தினாள்; “ஹே, அதோ பூமி! பாருங்கள், அவர்கள் டிவியில் தெரிகிறார்கள்.” ஒரு தடித்த பெண்மணி முகத்திலிருந்த வியர்வையைத் துடைத்தபடி அடுக்களையிலிருந்து அவசரமாக வெளியே வந்தாள். அதற்குள் திரையில் வேறு என்னவோ காட்சிப்பட்டது. இரண்டு பெண்களும் ஏமாற்றத்தில் முனங்கினர். தற்போது செய்தியாளர் உள்ளூர் பத்திரிக்கை அலுவலகத்துக்கு வந்திருந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததை விமர்சித்துக் கொண்டிருந்தார். உணவு விடுதியில் மேசையில் அவனுக்கு முன்னால் அந்த கடிதத்தின் ஒளிப்படமெடுக்கப்பட்ட செய்தி பிரசுரிக்கப்பட்ட மாலைப்பத்திரிக்கை கிடந்தது. ஆதில் ஒக்கினாவுக்குத் தற்போது தேவை, ஆயிரமாயிரம் மக்களின் ஆர்ப்பாட்டமோ, பல்லாயிரம் மக்களின் அணிவகுப்போ அல்ல ஓர் அமெரிக்கக் குழந்தையின் மரணம்தான் என்று துன்புறுத்தும் வகையில் கூரிய கோணங்களும் நேர்கோடுகளும் உள்ள சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது.

ஒரு கோப்பை ஒக்கினாவா நூடில்ஸ்ஸை விழுங்கியபடியே ஒரு வாடகைக் கார் ஓட்டுநர் சொன்னார்; “சீக்கிரமாய் அவனைக் கண்டுபிடித்து மரணதண்டனை வழங்க வேண்டும்” “ஆம், இந்தச்சம்பவம் வியாபாரத்தை மிகவும் பாதித்து விடும்” ஒத்துப் பேசினாள் பணிப்பெண். “இனிமேல் யாரும் சுற்றுலாவுக்கு வர மாட்டார்கள்.” தொலைக்காட்சியில் ஹெலிக்காப்டரில் இருந்தபடியே குற்றிக்காடுகளையும் கோஜட நகரத்தையும் காட்டினார்கள். அதனைத் தொடர்ந்து கவர்னரும், அமெரிக்கா மற்று ஜப்பானிய உயர் அதிகாரிகளும் கண்டனம் தெரிவிப்பதைக் காட்டினார்கள். அவர்கள் கள்ளம் கபடமறியாத குழந்தையைக்கொலை செய்தது படுபாதகச் செயல் எனவும் உணர்வுகளை கொந்தளிக்க வைக்கிறது என்றும் கூறினார்கள். இளக்காரமாக சிரித்தபடி நான் ஒரு கரண்டி சோற்றை வாய்க்குள் தள்ளினேன். அவர்கள் எவ்வளவுதான் வன்மையாகக் கண்டித்தாலும் அவர்களிடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தையும், திகிலையும் மறைக்க முடியவில்லை. ஓக்கினாவாக்காரர்கள் மிக்க பணிவும், பண்பும் மிக்கவர்கள் அப்படிப்பட்டவர்கள் கொடியவர்களே செய்யத் தயங்குகிற காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஓக்கினாவாக்காரர்கள் தங்கள் தலைவர்களின் சொல் கேட்டு நடப்பவர்கள். அதிகபட்சமாக “போர் எதிர்ப்பு” மற்று “இராணுவத்தள எதிர்ப்பு” போன்ற பேரணியை அமைதியான வழியில் மட்டும் நடத்துபவர்கள். அதிதீவிர இடதுசாரிகளும், கலகக் குழுக்களும் கூட “கெரில்லா” யுத்தம் என்று கூறினாலும் உண்மையில் எந்த சேதாரமும் ஏற்படுத்தாமல், பதவி வகிப்பவர்களுக்கு எதிராக பயங்கரவாதத்திலோ ஆள்கடத்தலிலோ ஈடுபடுவதில்லை. சொல்லப்போனால் ஒக்கினாவாக்காரர்கள் இராணுவத் தளங்கள் வாரி வழங்கும் மானியங்களையும் வீட்டு வாடகையையும் நுகர்ந்து கொண்டு மலத்தை மொய்க்கும் ஈக்கள் போலத் திகழ்கிறார்கள். ஓக்கினாவாவுக்கு “அமைதியின் அன்பினால் நலமான தீவு” என்ற பெயரும் உண்டு. இதை நினைத்ததும் எனக்கு ஓங்காளம் வந்தது. நான் உணவகத்தை விட்டு வெளியேறினேன். Nகாயா மூலையில் உள்ள பாதசாரிகளுக்கானப் பாலத்தைக் கடந்து விமானத்தாவளத் தெருவிநூடே நடந்து போனேன். எல்லா இராணுவ வீரர்களும் அவரவர் தளங்களில் இருக்கும்படியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தோன்றியது. சாதாரண உடையணிந்த இராணுவ வீரர் எவரும் தெருவில் நடமாட வில்லை. ஏமாற்று நிறம் பூசிய இராணுவ ஜீப் ஒன்று கடந்து சென்றது. கதீனா விமானப்படைத் தளத்தின் முன்னால் சுழலும் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட ரோந்து வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. வரிசையாக நடப்பட்டிருந்த பாயின்சியானா மரங்களுக்கு மேலே ஹாபு என்கிற நச்சுப்பாம்பின் விஷப்பல் போல பிறைநிலா தெரிந்தது. நான் ஒரு கணம் நடையை நிறுத்தி நின்றேன். மிகவும் மோசமான செயல்கள் தான் தீர்வுகளைத் தரும் என்று எனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டேன். தெருவின் மறுபக்கத்தில் ஒரு தொலைக்காட்சி ஒளிப்படக்கருவி சுழன்று கொண்டே இருக்கிறது. நான் பக்கத்து தெருவில் நுழைந்தேன். வீட்டை நோக்கிச் செல்லும் என்னுடைய நடை விரைவாக இருக்கக்கூடாது என்று கவனித்துக் கொண்டேன். குளிர்பதனப் பெட்டியிலிருந்து ஒரு குவளை குளிரூட்டப்பட்ட தேநீரை எடுத்து அருந்தினேன். பின்னர் மேசையின் முன் அமர்ந்து ஓர் உறையில் அந்தப் பத்திரிக்கையின் முகவரியை எழுதினேன். ஓர் இழுப்பறையைத் திறந்து சிறிய கண்ணாடி உறை ஒன்றை வெளியே எடுத்தேன். அதனுள் ஒரு கற்றை வைக்கோல் நிற தலைமுடி இருந்தது. அந்தக் குழந்தையின் முகம் என் கண்முன்னால் தோன்றியது.

அந்தக் குழந்தை பல்வகை அங்காடிக்கு வெளியே ஒரு காரின் பின்னிருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளைப் பெண்மணி பல தடவை கத்திய பிறகும் அந்தக் குழந்தை எழும்பவில்லை. பின்னர் அவள் தனியாக பொருட்களை அடுக்கி வைக்கும் தள்ளுவண்டியை உந்திக் கொண்டு அங்காடிக்குள் நுழைத்தாள். நான் தகரக்குவளையில் இருந்த குளிரூட்டப்பட்ட தேநீரை அருந்தி விட்டு டப்பாவைக் குப்பைக் கூடையில் விட்டெறிந்து விட்டு, வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தேன். குளிரூட்டில் ஓடிக் கொண்டிருந்த காரினுள் நுழைந்து அதனை நெடுஞ்சாலையில் மிக எளிதாக ஓட்டிக் கொண்டு வந்தேன். நான் வடக்குத் திசையில் பதினைந்து நிமிடங்கள் ஓட்டிய பின்னர், அங்கே தென்பட்ட வீட்டுவசதிக் குடியிருப்பின் வடக்குப் பக்கம் படர்ந்திருந்த குற்றிக்காட்டினுள் சென்று வண்டியை நிறுத்த முற்பட்டேன். அந்தக் கரடு முரடான சாலையில் கார் தாறுமாறகச் சென்றதனால் பின்னிருக்கையில் கிடந்த குழந்தை விழித்து விட்டது. பின்பக்கத்திலிருந்து அழுகைச் சத்தம் கேட்டவுடனே நான் காரை நிறுத்தி விட்டேன். திரும்பிப் பார்த்த பொழுது குழந்தை எழுந்து காரின் கதவை திறக்க முயற்சிப்பதைக் கண்டேன். அது ஒரு ஆண் குழந்தை. மூன்று வயது இருக்கலாம். நான் உடனே வண்டியை நிறுத்தி விட்டு அந்தக் குழந்தையை இறுக்கப் பிடித்தேன். பின்பக்கமாக நின்று குழந்தையின் கழுத்தை நெரித்தேன். அதனது தொண்டையிலிருந்து வெளியேறிய கழிவு என் கையில் தெறித்தது. நான் கையை குழந்தையின் சட்டையில் துடைத்தேன். பின்னர் ஒதுக்கப்பட்ட ஒரு பழைய பன்றித் தொழுவத்தின் நிழலில் காரை நிறுத்தினேன். பிறகு என்னுடைய கைக்குட்டை கொண்டு காரின் திக்கு வளையத்தையும், கதவுக் கைப்பிடிகளையும் துடைத்தேன். குழந்தையின் வைக்கோல் நிறத் தலைமுடியிலிருந்து ஒரு கற்றையைப் பிடுங்கி எனது கைக்குட்டையில் பொதிந்து கொண்டேன். என்னுடைய உடம்பு வியர்வையில் நனைந்து கூச்செறிந்தது. குற்றிக்காட்டிலிருந்து வெளியேறி கார்ச்சாவியை ஓரிடத்தில் புதைத்து வைத்தேன். பின்னர் தேசிய நெஞ்சாலை வரைக்கும் நடந்து சென்று, இரண்டு முறை வாடகைக் கார்களை மாற்றிப் பயணம் செய்து வீடு வந்தடைத்தேன்.

என்னுடைய காரில் குளிரூட்டல் இருந்த போதும் என் வியர்வை அடங்கவில்லை. எனவே காரின் சன்னல்களைத் திறந்து வைத்தேன். நாகா நகரம் வரைக்கும் காரை ஓட்டிச் சென்று, அங்கே இருந்த அஞ்சல் பெட்டி ஒன்றில் மயிர்க்கற்றை இருந்த உறையை அஞ்சல் செய்தேன். திரும்பும் வழியில் கினோவான் நகரில் இருந்த கடற்கரையோர பூங்காவில் காரை நிறுத்தினேன். இந்த இடத்தில் தான் மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் சேர்ந்து பனிரெண்டு வயதுச் சிறுமியை கற்பழித்தக் கொடுமைக்கு எதிராக 80000,, மக்கள் திரண்டு பேரணி நடத்தினார்கள். ஆனால் எந்த பயனும் ஏற்படவில்லை. தற்போது அது வெகுகாலத்துக்கு முன்னர் நடந்தது போல் தோன்றுகிறது. நான் அந்த மக்கள் திரளில் நிற்கும் போது என்ன செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்தேனோ அதை நிறைவேற்றி விட்டேன். எனக்கு குற்றவுணர்ச்சியோ பாவ உணர்வோ இல்லை. எவ்வாறு நிரந்தரமாக பய உணர்ச்சியில் வாழ நேரிடுகின்ற சிறிய உயிரினங்கள் தங்களது உடம்பில் ஓடும் திரவங்களை திடீரென விஷமாக மாற்றிக் கொள்கின்றனவோ அப்படியே நானும் இந்த தீர்வுக்கு தேவையானதை இயற்கையாகச் செய்திருக்கிறேன். நான் பேரணி நடந்த இடத்தின் மையப்பகுதிக்குச் சென்று காரிலிருந்து சேகரிக்கப்பட்ட பெட்ரோல் இருந்த குப்பியைத் திறந்து என்னுடைய உடைகளில் ஊற்றிக் கொண்டேன். பெட்ரோலியப்; புகை கண்களில் எரிச்சலூட்டியது. பிறகு சட்டைப்பையிலிருந்து ஒரு நூறு யென் மதிப்புள்ள சிகரெட் கொளுத்தியை எடுத்து விசையை உரசினேன். இருட்டில் தீப்பிளம்பு கொழுந்து விட்டெரிந்தது. நடந்து கொண்டெரியும் தீப்பிளம்பை நோக்கி இடைநிலைப்பள்ளி மாணவர்களின் குழுவொன்று ஓடி வந்தது. அவர்கள் புகைந்தபடி கிடந்த கரிக்கட்டைக் கசடைத் துள்ளிக் குதித்து மிதித்து ஆரவாரம் செய்தார்கள்.

ஷன் மெடோரூமா என்பது ரையூக்கியூவின் நகரில் பிறந்த எழுத்தாளர் ஒருவரின் புனைப்பெயர். அவர் மியா தீவில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஜப்பானிய மொழி கற்பிக்கிறார். அவர் பேட்டிகளின் போது தொலைக்காட்சியையும், ஒளிப்படம் எடுப்பதையும் தவிர்த்து விடுகிறார். அவரது இயற்பெயரை வெளியிடக்கூடாது என ஊடகத்திடம் வேண்டுகோளும் விடுத்துள்ளார். 1997ல் அகுட்டகாவா பரிசினை அவரது “துளிகள்”; நூல் பெற்ற பிறகுதான் ஜப்பானிய மையநிலைப்பரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த தீவு வாசியைப் பற்றி கவனம் கொண்டனர்.

Pin It