இரவு நேரம் ஆசினிப்பலாவின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள பரணில் அமர்ந்து தினைப்புலத்தைக் காவல் செய்கிறான் கானவன். அவனுடையச் செவிகளில் ஆண் யானை ஒன்று தன் இணையுடன் தினைப்புலம் நோக்கி இரையுண்ண நடந்து வரும் ஓசை விழுகிறது. மழைக்கால இரவும்கூட; சுற்றிலும் இருள் அடர்ந்து நிற்கிறது. இடியும், மின்னலும் ஒருசேர வினைபுரியும் அந்தப் பொழுதில் பார்வையில் எதுவும் தெரியவில்லை. யானைகள் வரும் ஓசைவந்தத் திசைநோக்கி கவணிலிருந்து கல் வீசுகிறான் கானவன்.

வீசப்பட்ட கல் மலைமேல் வளர்ந்து நிற்கும் வேங்கை மரத்தின் பூக்களைச் சிதறடித்து ஆசினிப்பாலாவின் பழங்களை உரித்து உள்ளிருக்கும் தேனைச்சிதைக்கிறது. பிறகு மணமிக்க வடுக்களைச் சுமந்துநிற்கிற மாமரத்தின் கொம்புகளைச் சிதைத்து, அதன் கீழே வளர்ந்து நிற்கிற வாழை மடலைக்கிழித்து அதன் கீழ் வளர்ந்து நிற்கிற பலாப்பழத்தில் வந்துத் தங்குகிறது.

குறிஞ்சி என்றும் நிலவியல் பின்புலம், அந்த நிலத்தின் அடிப்படையானத் தொழில் நடவடிக்கையான தினை விவசாயம், தினையை இரவு நேரம் காவல்காக்கும் ஆண், காவலுக்காக பரண், தினையை உண்ண வரும் யானை, யானையை விரட்ட கவண், கவணில் பொருத்திட கல், ஆசினி, மா, பலா, வாழை என குறிஞ்சி நிலத் தாவரங்கள், பாறையில் அமைந்த உரல், யானைக்கொம்பில் செய்யப்பட்ட உலக்கை, சோம்பில் செய்யப்பட்ட சொளகு வள்ளைப்பாட்டு என்று குறிஞ்சி நிலம் குறித்த பல நுட்பமானத் தகவல்களைக் கபிலர் இக்கவிதையில் பதிவுச் செய்கிறார்.

இக்கவிதை அகத்தினை மரபு சார்ந்த கவிதை, தோழியின் கூற்றாகவும், தலைவியின் கேள்வியாகவும் கவிதை பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களுக்குள் இது போன்ற நுட்பமான பண்பாட்டு பதிவுகளைக்கொண்ட நூற்றுக்கணக்கான கவிதைகளை நாம் கண்டடைய முடியும். இத்தகையப் பண்பாட்டுத் தரவுகளைச் சேகரித்து வைத்துள்ள கவிதைகளை பண்பாட்டு கவிதைகள் அல்லது இனவரைவியல் கவிதைகள் என்கின்றார் ஞா.ஸ்டாலின்.

அவரின் கருத்துப்படி கவிதை என்பது கவிஞனின் அகமும், அவனுக்கு வெளியிலிருக்கும் புறமும் இணைந்த முறையில் உருவாவது.

இனவரைவியல் கவிதை என்னும் கருத்தமைவினை ஸ்டீபன் தொல்காப்பியத்தின் துணை கொண்டு விளக்குகிறார்.

எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது தொல்காப்பியம். இதில் பொருளதிகாரத்தில் விவாதிக்கப்படுகின்ற பகுதிகள் கவிதையியலுடன் தொடர்புடையன என்றார் ஸ்டீபன். பொருளதிகாரமானது, அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்யப்பாட்டியல், உவமயியல், மரபியல் என்னும் ஒன்பது பகுதிகளைக் கொண்டிருக்கிறது. இதில் செய்யுளியல் தவிர்த்த பிற அனைத்தும் கவிதையின் உள்ளீடு குறித்த தொல்காப்பியக் குறிப்புகள் என்பதும், செய்யுளியல் என்பது கவிதையின் புறவயமான வெளிப்பாடு பற்றி பேசுகிறது என்பதும் ஸ்டீபனின் கருத்து. தொல்காப்பிய பொருளதிகாரத்தைத் தனியாக துண்டித்துப்பார்க்கின்ற பார்வை இங்கு விவாதப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. மொழியால் கட்டப்படுகிற கவிதையில் எழுத்தும் சொல்லும் மிகமுக்கியமானக்கூறுகள். எழுத்திலும் கூட தொல்காப்பியர் உச்சரிப்பின் பேச்சொலியின் பிறப்பிடங்களைத் தொட்டுக்காட்டுகிறார். வாய்மொழி மரபிலான கவிதை அனுபவத்தில் உச்சரிப்பின் இடம் முக்கியமானது. பொருளதிகாரத்தில் இருக்கின்ற பலவற்றின் மாதிரி வடிவங்களை எழுத்திலும் சொல்லிலும் பேசுகிறார்.

உயர்தினை என்பது மக்களைக்குறிப்பது என்பது சொல்லதிகாரப்பதிவு தொல்காப்பியத்தினை முழுமையாக அணுகவேண்டிய தேவையும் உள்ளது. நிலமும் பொழுதுமான முதற்பொருளும், தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் ஆகிய கருப்பொருளில் தெய்வம் தவிர்த்த பிறவும், புனர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்கிற உரிபொருளுமான பின்புலத்தில் நிலைத்தன்மையுடைய நிலவியல் பின்புலத்தில் மாறியும், மயங்கியும் வருகின்ற, பரிவர்த்தனை தன்மை கொண்ட இயங்குகின்ற என அனைத்தும் இணைந்து இனவரைவியியல் கவிதையை உருவாக்குகிறது. இதுவே கவிதை குறித்த தொல்காப்பியம் முன்வைக்கும் கவிதையியல் மரபுக்கான தினைக்கோட்பாடு என்கிறார் ஸ்டீபன். தொல்காப்பியம் முன் வைக்கும் கவிதையியல் மரபுகள் இனவரைவியல் கவிதையியலைப் படைப்பாக்கம் செய்யும் வழிமுறைகளைக் கற்பிக்கிறது என்கிறார் ஸ்டீபன். இன்னும் கூடுதலாக கவிதை இனவரைவியல் தரவுகள் மீது கட்டப்பட வேண்டும் என்பதே தொல்காப்பியர் வகுத்தளிக்கும் கவிதையியல் மரபு என்கிறார் ஸ்டீபன்.

தொல்காப்பியம் தமிழின் மிக முக்கியமான பிரதி. பிற இலக்கணப்பிரதிகள் எல்லாம் வழக்கிழந்த வழக்கிழந்து கொண்டிருக்கின்ற மொழிகளுக்கான இலக்கணச் சூத்திரங்களை வடிவமைக்கும் போது உயிர்த்துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தின் அதன் மொழியின் இலக்கணத்தை தொல்காப்பியம் வரையறைச்செய்கிறது. பிற இலக்கண நூல்கள் எழுத்து, சொல் என்ற அளவில் நிற்க தொல்காப்பியம் பொருள்பற்றியும் பேசுகிறது. தொல்காப்பியத்தின் உருவாக்கம் பற்றி கா. சிவதம்பி குறிப்பிடும் போது மருத நிலையின் ஒரு விசேட வளர்ச்சியாகவும், உடற்தொழிலிலிருந்து விடுபட்ட ஒரு புலமைக்குழுமமும் இதற்கு அவசியம் என்கிறார்.

தொல்காப்பியம் தமிழ்சமூகத்தின் மொத்தத்தையும் மறுவரையறைச்செய்கிது. கணங்களின் கூட்டுக்கதகதப்பில் தங்களை உள்ளிளுத்துக் கொண்ட இனக்குழு மனிதர்களல்ல தொல்காப்பிய மனிதர்கள். அது பல அடுக்குகளை மனிதர்களிடையில் பேசுகிறது. அந்தணர், அரசர், வைசிகர், வேளார் என்று ஓர் அடுக்கினை அடையாளப்படுத்துகிறது. அடியவர், வினைவலர், ஏவலர், என்று மூன்றாவது ஒரு குழுவைக் குறிப்பிடுகிறது. உளர், அயல், சேரி என்று சொற்களால் குடியிருப்பைக் கட்டமைக்கிறது. கூத்தர், பாணர், பொருநர், விறலி, ஆகியோர்கள் ஆற்றுப்படுத்தும் கலைஞர்கள் எனக் குறிப்பிடுகிறது.

நிலம் என்கிற ஒன்றை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவற்றை முதன்மைப் படுத்தியக் கூட்டுச் சேர்க்கையாகப் பார்க்காமல் மொத்த வரையறைக்குள் இவற்றுக்கான இடங்களை வரையறுக்கிறது.

கவிதை என்பது மொழியிலானது எனும் போது தொல்காப்பியம் வரையறுக்கும் கவிதை மொழி என்பது மேலோர் மொழியாக இருக்கிறது. நாடக, உலகியல் வழக்குகள் இரண்டும் மேலவர்களுக்குரியது என்கிறது. மொழியை, வாழ்க்கையை, இல்லறத்தை, பண்பாட்டை, பொருளை மேனிலைகளுக்குரியதாக மட்டுமே பார்க்கிறது. அடியவருக்கும், வினைவலர்க்கும், ஏவலர்களுக்கும் அகவாழ்க்கை என்பதே இல்லையென்கிறது. அந்தணர், அரசர், வைசிகர், வேளாளரிலும் முதல் மூன்று பிரிவினரையும் ஒருநிலையிலும், வேளாளரை அடுத்த கீழ் நிலையிலும் வைத்து அணுகுகிறது. ஒவ்வொருவருடையவும் தனித்தனி கடமைகளை தகுதிகளை வரையறுக்கிறது. நேரடியாக நிலத்தில் கால்பாவாதவர்கள் இவர்கள். உரிமையைப் பெறுபவர்கள் தொல்காப்பியம், இனவரைவியல் கவிதையியலை முன்வைக்கிறது எனும்போது தமிழ் என்கிற, தமிழ் நிலம் என்கிற பேரடையாளம் சார்ந்த இனவரையியலைத் தான் முன்வைக்கிறது. என்பதையும் கணக்கிலெடுக்க வேண்டிருக்கிறது. தமிழ் என்கிற பேரடையாளப் பெருமிதத்தை நிலைநிறுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. தொல்காப்பியமற்ற நிலையில் சங்க இலக்கியப் பிரதிகளின் ஊடாக இனவரைவியியல் கவிதைகளை அடையாளம் காணமுற்படும்போது இன்னும் பல வெளிச்சங்களையும் அது நமக்கு தரும் "நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று அன்னை கூறினாள் புன்னையது சிறப்பே' என்ற நற்றிணையின் பதிவு தாவரத்தை உயர்திணை நோக்கி நகர்த்திக் கொண்டு வருகிறது. இயற்கையினை தன்வசப்படுத்திப்பார்க்கும் இக்குரல் தொல்காப்பியத்தில் இல்லை. அறிவு வழிப்பட்ட தொல்காப்பிய மரபில் புல்லும், மரமும் ஓரறிவு கொண்டவை. நான்கு கட்டுரைகள் கொண்ட நூலில் இடம் பெற்றுள்ள இரண்டாவது கட்டுரை. சமனில் சமூகச்சூழல்களும் மணஉறவு நெகிழ்களும் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

தொல்காப்பிய இலக்கண மரபு தமிழர்களின் அகவாழ்க்கையை புணர்தல், பிரித்தல், இருத்தல், இரங்கல், ஊடல், என்பதுடன் கைக்கிளை, பெருந்திணை என்பதையும் சேர்த்து ஏழு என வகைப்படுத்தும்.

முதல் ஐந்தும் அன்பின் ஐந்தினை என்று பின்வந்தோர் குறிப்பிட்டார்கள். கைக்கிளையும் பெருந்திணையும் விலக்கப்பட்ட பாலியல் நடவடிக்ககைளாக அமைக்கப்பட்டன. தொல்காப்பியர் குறிப்பிடும் கைக்கிளையும், பெருந்தினையும் பின்னர் மிகப்பெரிய பங்காற்றின என்பது இவர்கருத்து.

இக்கட்டுரையில் ஸ்டீபன் பெருந்திணை என்னும் பாலியல் வாழ்க்ககையின் சமூக பண்பாட்டுக் காரணங்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார். புறநானூற்றின் பாடல்களைக் கொண்டு இவற்றை விளக்க முற்படுகிறார்.

தொடர்ச்சியாக நடைபெற்ற போர்கள் அந்தச் சமூகத்தை சமநிலை தவரவைத்தன. போர்கள் நேரடியாக ஆண்களுக்குரியதாக இருந்தன. அந்நிலையில் உயிர் இழப்பு என்பதும் ஆண்கள் அளவிலேயே அதிக அளவில் இருந்தது. இது ஆண்களைவிடவும் மிகுதியான எண்ணிக்கையில் குழந்தைகளும், பெண்களும் இருக்கிறச் சூழ்நிலை ஏற்படுத்தியது. மனித ஆற்றலை மையமிட்ட சமூக அமைப்பில் இனப்பெருக்கம் நடைபெறவும், தங்கள் இனக்குழுவினர் இருப்பையும் தக்கவைக்கவும் அச்சமூகமானது வரன்முறையற்ற பாலுறவுகளை அனுமதிக்கும். இது தற்காலிகமான இனப்பெருக்க நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் ஸ்டீபன். இதன் தொடர்ச்சியாக உருவானதே பெருந்திணை என்னும் பாலியல் வாழ்க்கை என்பது ஸ்டீபன் கருத்து. தன்னுடைய இந்த குறிக்கோளுக்கு சங்க இலக்கியங்களில் பதிவுச்செய்யப்பட்டுள்ள போர், வீரம், நடுகல், வழிபாடு, சொர்க்கம், காதல் குறித்த பல்வேறு தரவுகளைக் எடுத்தாள்கிறார். 

ஏற்கெனவே நம் பண்பாட்டு புத்தியில் காதலின் உன்னத அடையாளமாகப் பதிவாகியுள்ள யாயும் ஞாயும் என்னும் குறுந்தொகைப்பாடலில் தன் தலையீட்டை நிழ்த்துகிறார்.

இப்பாடலின் பொருள் பின்வருமாறு அமைகிறது. உன்னுடைய தாயும் என்னுடைய தாயும் என்ன உறவினர்? உன் தந்தையும், என் தந்தையும் எம்முறையில் உறவு? நானும் நீயும் எக்குடியைச் சார்ந்தவர்கள்? எதுவும் தெரியாது ஆனாலும் செம்புலமும் மழைநீரும் ஒன்றிணைவதுபோல நம் அன்பு நெஞ்சங்கள் ஒன்று கலந்தன. இக்கவிதையின் ஒலிப்பது ஆண்குரலா? பெண்குரலா அறிய இயலவில்லை. இதில் யார் நிலம்? யார் நீர் ? எல்லாமே மறை பொருளாக இருக்கின்றன. இவற்றுள் எந்தத் திணைக்கு எவ்வகை ஒழுக்கம் என்று தொல்காப்பியம் வரையறுக்கவில்லை. குறிஞ்சிக்கு புணர்தல், முல்லைக்கு இருத்தல், மருதத்திற்கு ஊடல், நெய்தலுக்கு இரங்கல், பாலைக்குப்பிரிதல் என்ற வரையறையெல்லாம் பின்வந்தோர் ஏற்படுத்தியது.

ஸ்டீபன் இந்தப்பாடலுக்கான விளக்கத்தில் உறவு முறைகளை மீறிய திருமணங்களுக்கு இப்பாடல் பலம் சேர்க்கிறது என்கிறார்.

ஏன் குடிகளும், உறவுகள் இந்தக்காதல்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கேள்வி எழுப்பும் ஸ்டீபன் நெகிழ்வு மண உறவுகளால் அந்த குடிவழித் தொடர்ச்சிகள் அற்றும் போயிருக்கலாம் என்கிறார்.

“மணஉறவுக்கூட்டம் போரின் இழப்புகளின் காரணமாகச் சுருங்கிப்போனமையால் மண உறவுக்கு விலக்கப்பட்ட உறவுக்கூட்டம் மட்டுமே அடையாளப்படுத்தப் பெற்றனர்'' என்கிறார் ஸ்டீபன்.

சங்க இலக்கியத்தின் அகப்பாடல்கள் பலவும் களவு நிலைப்பட்ட வாழ்க்கையில் தலைவியைச் சந்திக்க தலைவன் கடந்துவரும் வனங்களின், வழிகளின் கடின நிலையை எடுத்துக் கூறுகின்றன. ஒரே குடிகளுக்குள் திருமணம் என்பது சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட ஒரே நிலையாகத்தான் இருந்திருக்க வாயப்ப்பிருக்கிறது. தலைவிக்கு ஏற்பட்ட நோய்தீர்ப்புச் சடங்கு செய்த பெண்ணிடம் தலைவனின் மலைநாட்டை புகழ்ந்து பாடிய பாடலை மறுபடியும் மறுபடியும் பாடச்சொல்வது போன்ற செய்திகளும், தலைவனின் நிலம் பற்றிய அகப்பாடல்களில் வருகின்ற வர்ணிப்புகளும் இதனை உறுதி செய்கின்றன. எனவே குடிஅறியா திருமண உறவுகளை பெருந்திணையில் பொருத்துவது சாத்தியமானதுதானா என்பது கேள்விக்குரிய ஒன்று. குடி அறியும் திருமணங்கள் மகட்பாற்காஞ்சியில் இருந்தும் உடமை தன்மையிலிருந்தும் தொடங்கிவிடுகின்றன..

காலம் கலைத்து போடப்பட்டிருக்கிற சங்க இலக்கியப்பிரதிகளில் காலத்தை அடையாளப்படுத்துவதும், காலத்தை வரிசைப்படுத்துவதும் முக்கியமான ஒன்று நடுகல் வழிபாடும், ஈன்று புறந்தருதலும் வேறு வேறு பொருளியல் வாழ்வியல்களுடன் தொடர்புடையன. கால்நடைகளுக்கான, கால்நடைகளுடனான போரில் இறந்துபட்ட வீரனுக்கு நடுகல் வைக்கும் சமூகத்திலேயே எல்லோரும் இறந்துபட குழந்தையைப் போருக்கனுப்பும் தாயினையும், புலியிருந்த குகையென்று தன்மகனிருந்த வயிற்றைக்காட்டும் தாயையும் காண முடியும்.

ஈன்று புறந்தருதலில் தொடங்கி ஒவ்வொருவருமான வேலைப்பங்கீட்டில் பெண்ணின் வேலை பெற்றுத்தருவதுடன் நின்றுவிடுகிறது. இப்பொழுது அவள் மனையுறைபவள். அவளின் உயிர் ஆண். கால்நடைகள் அல்ல இந்தப்போரில் முக்கியம். அரசனுக்கும் வீரனுக்கும் நன்று விளைகின்ற நிலங்களான நன்னடைகள் தான் முக்கியம். மொத்தத்துவமாக போரினை அணுகுவதைவிடவும் இந்த மாற்றங்களின் ஊடாகவே போர் குறித்து வரைபடத்தை உருவாக்குதல் அவசியமானது.

கைக்கிளையும், பெருந்திணையும், பின்வந்தோரால் கைவிடப்பட்டன. கைக்கிளை என்பதை ஒருதலை காமம் என்றும், பெருந்திணை என்பதை பொருந்தா காமம் என்றும் தமிழ் அறிவுலகம் குறிப்பிட்டது. பருவமடையாத இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதையே தொல்காப்பியக் கைக்கிளை என்று சாமி சிதம்பரனார் குறிப்பிடுகிறார்.

பெண்ணை அடைய மடல் ஏறுவதும், இளமை தீர்ந்த பின்பும் திருமணம் செய்து கொள்வதும், காமத்தை அடக்க முடியாமல் ஆண், பெண் இருவரும் அணைத்துக் கொள்வதும், காமத்தின் மிகுதியால் ஒருவரையொருவர் பலவந்தப்படுத்துவதும் பெருந்தினை என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். (அகத்தினையில்54)

ஆய்வாளர் சுப்புரெட்டியார் பெருந்திணையில் என்று குறிப்பிடுவது வித்தியாசமான ஒன்று. அவரின் கருத்தின்படி பெருந்திணை என்பதன் பொருள் ஏனையதிணைகளைவிடவும் இது பெரியது என்பதாகும். எண்வகை திருமணங்கள் இந்திய மரபில் பேசப்படுகின்றன. பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்று அவை குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள் முதல் நான்குமான பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்கும் பெருந்திணை என்கிறார் சுப்புரெட்டியார். பிரமம் என்பது 48 ஆண்டுகள் பிரம்மச்சரியம் முடித்தவனுக்கு பன்னிரெண்டு வயதான பெண்ணை மணமுடிப்பது, பிரசாபத்தியம் என்பது. பெண் கொள்ள வேண்டிய கோத்திரத்தில் உள்ளவர்கள் பெண் வந்து கேட்டால் மறுக்காமல் மணமுடித்து கொடுப்பது. ஆரிடம் என்பது பொன் கொம்பும், பொன்காம்பும் கொண்ட பசு, காளை இவற்றைச் செய்து அவற்றினிடையில் பெண்ணை நிறுத்தி நீர்வாத்துக் கொடுப்பது. வேள்வித் தலைமை ஏற்று நின்றவருள் ஒருவருகு வேள்வித்த முன்னர் காணிக்கையாக ஒரு பெண்ணைக்கொடுப்பது இவையாவும் காதல், உண்மை, இன்மையை ஆராயாது பிறர் கருத்துபடி நடக்கும் மணங்கள். இவை தமிழ் நாட்டுக்கும் உரியதல்ல. எனவேதான் இவற்றை தொல்காப்பிய சிறப்பிக்கவும் இல்லை. உரையாசிரியர்கள் தான் இந்நான்கையும் சிறப்பிக்கின்றனர்.

அப்படியெனில் பெருந்திணைஎன்பது எதுவாக இருந்திருக்கமுடியும். வரையறுக்கப்பட்ட அகவாழ்க்கையின் முந்திய நிலையாக பெண்ணை முதன்மைபடுத்திய நிலையிலேயே சமூகம் இருந்தது. பொய் தோன்றுவதற்கு முந்திய காலத்தில் பெண்வழியாக அறியப்பட்ட உறவு அடையாளங்கள் பெண்ணின் வழியாகவே பெறப்பட்டன. தந்தை யார் என்பது குழந்தையை வைத்தே குறிப்பிடப்பட்டன

சிறுவனின் தந்தை அல்ல சிறுவனின் தாயே முன்னிலைப்படுத்தப்பட்டாள். முதியோர் சிறுவன் அல்ல முதியோன் சிறுவன் என்றே குழந்தை அடையாளப்பட்டது. என்மகள் ஒருத்தி பிறள்மகள் ஒருவன் என்கிற தாய் ஒருத்தியின் குறிப்பு ஒன்றும் பதிவாகியுள்ளது.

பெண்ணிலைப்பட்ட சமூதாய அமைப்பில் கற்பெனப்படுவது எதனைக்குறிப்பிட்டிருக்கும் என்பதும், கொடுப்பவர்கள் என்பதும். திருமணம் என்பதும் எதனைக்குறிப்பிட்டிருக்கும் என்பதும், மறையோர் தேஎத்து மன்றல் என்பதும், ஒத்தப்பருவம் என்பதும் பெண் முதனிலைப்பட்ட சமூக அமைப்பில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இவையெல்லாம் சமூகத்தின் தொடர்நிகழ்வியல் ஏற்படுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டவை.

வரையறுக்கப்பட்ட வயதுகளற்ற பாலியல் வாழ்க்கை என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் உதிர்ந்துபோக வேண்டிய தேவை வந்தபோது பெருந்திணை என்று வரையறை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. போரினையும், உயிரிழப்பினையும் கொண்டு தொடர்ந்து இயங்கிய சமூக அமைப்பில் அதன் வழக்கிழந்த பாலியல் உறவு சார்ந்த வடிவம் என்பது சமூகத்தின் பாலியியல் இனப்பெருக்கத் தேவைகளை பூர்த்திசெய்ய பயன்பட்டிருக்கலாம் என்பது தெரிகிறது.

தொல்காப்பியமும் இனவரைவியலும்

ஞா.ஸ்டீபன்

Pin It