பூமி பாலகனின் தற்போதைய நாவல் போராட்ட வாழ்க்கை ஏற்கெனவே சிறுகதை நாவல் என நன்கு அறிமுகமானவர் எழுத்தாளர் பூமி பாலகன்.

வாழ்க்கையே ஒரு போராட்டம் தானே இங்கு போராட்டமே வாழ்க்கையாகிவிட்ட ஒரு போராட்டக்காரனின் போராட்ட நிகழ்வுகள் வெகு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு வகையில் இது பூமி பாலகனின் வரலாறாகவும் கொள்ள முடியும்.

ஆசிரியர் அரசு ஊழியர் போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஆணவத்தோடு செயல்பட்ட அரசாங்கத்தைப் புரியவைத்த சிறப்பு மிக்கது அந்தப் போராட்டம். போராடாமல் எந்த நன்மையும் வந்துவிடாது. தனிச் சொத்துடைமைச் சமூக அமைப்பில் மூலதனத்தை முதலாளிகளின் நலனைக் காப்பதிலேயே அரசுகள் முனைந்து நிற்பது நடைமுறை உண்மை. உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளை அடைவது அவ்வளவு எளிதல்ல. கிளியே கிளியே பழம் போடென்றால் போடப்போவதில்லை. நமது பிரச்சினைகளின் மீது போராடினால்தான் குறட்டைவிடும் நிர்வாகத்தை விழிக்க வைக்க முடியும். விவசாயிகள், தொழிலாளிகள் போலவே அரசு ஊழியர் ஆசிரியர்களும் உழைக்கும் வர்க்கத்தினரே. அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இவர்களின் ஒத்துழைப்பு இன்றி எதுவும் நடைபெறாது. இதை அரசும் அதிகாரிகளும் எளிதில் உணர்வதில்லை. போராடினால்தான் அவர்களின் கவனத்தை ஈர்க்க வைக்க முடியும். யாரும் வேண்டுமென்று போராடுவதில்லை. விண்ணப்பம் போட்டு, கெஞ்சி, வேண்டுகோள் விடுத்து கிடைக்காதபோதுதான் போராடவேண்டியச் சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதாவது அரசின் அலட்சியப் போக்கும் ஆணவமான அணுகுமுறையும் தான் போராட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதாவது போராட்டம் திணிக்கப்படுவது ஆளும் வர்க்கத்தினால்தான்.

போராடுபவர்களை அழைத்துவைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றினால் அவர்கள் போராடவேண்டிய அவசியமே இருக்காதே. நடைமுறையில் இதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு.

உலகமயச் சூழலில் வணிகமய, தாராளமயச் சூழலில் தொழிற்சங்கமே கூடாது என்கிற நிலையும் போராடினால் காவல்துறையை விட்டு அடக்குகிற சூழ்நிலையும் நடைபெற்று வருகிற இக்காலத்தில் இந்த போராட்ட வாழக்கை நாவல் மிகமிகத் தேவையாகிறது.

ஆசிரியராகப் பணியில் சேர்ந்த வேலுசாமி என்கிற இளைஞன் நேர்மையும் துணிவும் கடமை உணர்ச்சியும் மிக்கவன். இளம் ரத்தம் கொடுமையைச் சகிக்காது. ஊழல், கடமை தவறுதல் ஆகிய தன்மைகளை எங்கு கண்டாலும் துணிச்சலுடன் எதிர்த்து வந்ததால் பாராட்டும் புறக்கணிப்பும் ஒருசேரக் கிடைத்தது. ஆசிரியர் இயக்கத்தைக் கட்டி எழுப்புவதில் தீவிரமாக ஈடுபடும் போதே காதலும் கனிகிறது. காதல் போராட்ட வாழ்வைக் கூர்மைப்படுத்துவதாய் அமைவதுதான் சிறப்பு. இந்த அரிய செயலை வேல் விழி என்னும் பாத்திரப்படைப்பு அருமையாகச் செயல்படுத்துகிறது.

அரசுப்பள்ளிகளின் அவல நிலை நேர்மையான ஆசிரியர்களுக்கு நேரும் இக்கட்டான சூழ்நிலைகள் சந்தர்ப்பவாதிகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள். இறுதியில் நேர்மையான அர்ப்பணிப்பு மிக்க போராட்டம் வெற்றி பெறும் என்பதை இந்நாவல் வலியுறுத்துகிறது.

அதோடு சமூகப்பார்வையில் பளிச்சிடுகிறது இந்த நாவல். ஆசிரியர் அரசு ஊழியர் என்பவர்களும் இந்தச் சமூகத்தின் பிரதிநிதிகள்தானே. இந்தப்பார்வையை அழகாக முன்வைக்கிறார் பூமி பாலகன். சமூகத்தின் சிறந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் இவர்களை ஏனைய சமூகத்தின் இதரப் பகுதிகளிலிருந்து பிரித்துப் பார்ப்பது தவறு. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள் முதலிய உழைக்கும் மக்களிடமிருந்து பிரிக்கும் சூழ்நிலையை ஆளும் வர்க்கம் தவறாது செய்யும். அதற்கு நாம் இரையாகக்கூடாது என்ற எச்சரிக்கையை விடுக்கிறது. நாவல் மிகுந்த சமூக அக்கரையுடன் அதே சமயம் பிரச்சார வாடையில்லாமல் இலக்கியமாகப் பதிவாகி இருப்பதைப் பாராட்ட வேண்டும்.

இதன் நடைமுறையைப்பற்றிச் சொல்லியாக வேண்டும். இயற்கையை வர்ணிப்பது நிகழ்ச்சிகளை விளக்குவது இனிய மொழியில், அழகு தமிழில், பழகுதமிழில் கையாளப்படுவதுச் சிறப்பு. எழுத எழுத எழுத்து கனியும் என்பதை இந்நாவல் மூலம் பூமி பாலகன் நிறுவியிருக்கிறார்.

அரசு ஊழியம், ஆசிரியர்களின் பணிபாதுகாப்பு, ஊதிய உயர்வு முதலியவற்றிற்காக போராடி பக்குவம் பெற்றபின் சுற்றுச்சூழல், இயற்கை மலைவாழ்மக்களின் வாழக்கை, அவர்களது நிலத்தைப் பறிபோகாமல் பாதுகாப்பது முதலியவற்றில் கதையின் நாயகன் ஈடுபடுவது மிகமிக முற்போக்கான அம்சமாகும். 

நமது நீர், நமது மண் அந்நிய சக்திகளிடம் களவு போகாமல் தடுப்பதுதான் இப்போதைய உடனடிப் பணி. இதில் கவனம் செலுத்துவதுடன் நாவல் முடிவுப் பெறுகிறது. இது அடுத்தக்கட்ட உரிமைப்போருக்கான தொடக்கம். இந்தத் தொடக்கத்தை ஆரம்பித்து வைத்த பூமிபாலகனுக்கு பாராட்டுக்கள். மலைவாழ் மக்கள் அவர்களது மொழியில் உரையாட நாவல் கவனம் கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை இந்நாவல் கவரும் என்பதில் அய்யமில்லை.

Pin It