தார்ச்சாலையில் அடர்த்தியாக அடையப்பட்ட
மூட்டைகள் நிறைந்த
வண்டியை இழுத்துச் செல்கிறது மாடு

சிறகுகள் வெட்டப்பட்டு
சிறைப்படுத்தப்பட்ட கிளி
கூண்டிலிருந்து வெளிவந்து
சீட்டை எடுத்துத் தருகிறது

குரங்காட்டி சொல்வதையெல்லாம்
ஒன்றுவிடாமல் கேட்டுக்கொள்கிறது குரங்கு

வயிற்றுக்காக வாழ்வு இருக்கிறது
ஐந்தறிவுகளுக்கு
வாழ்வுக்காக வயிறு இருக்கிறது
ஆறறிவுகளுக்கு


வலி

சொந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு மாறுவது
சொந்த ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு புலம்பெயர்தல்
சொந்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு துரத்தப்படுதல்
வாடகை வீட்டிலிருந்து மற்றொரு வாடகை வீட்டிற்கு இடம் பெயர்தல்
இவைகளனைத்திலும் ஒவ்வொரு வலி இருக்கிறது
இவையனைத்தும் ஒருங்கிணைந்த வலியைத் தருகின்றன

Pin It