தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எட்டயபுரம் கிளையின் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டு பாரதி விழாவாக செப்டம்பர் 1718 தேதிகளில் எட்டயபுரத்தில் சிறப்பாக நடந்தேறியது.

உலக மகாகவி பாரதியின் இல்லத்திலிருந்து பெருந்திரளாக மணிமண்டபம் வரை ஊர்வலமாக வந்தடைந்து, திருமதி டி.எஸ். ராஜேஸ்வரி பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து அன்றைய நிகழ்ச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோ.இராஜேந்திரன் தலைமையில், கோவில்பட்டி டி.பி.ஆர். மாரியப்பன் குழுவினரின் நாதஸ்வர ஓசையுடன் தொடங்கியது. தோழர் பொன்னீலனின் சீரிய தலைமையில் கு.வேங்கடேஷ்ராஜாவின் வரவேற்புரையுடன் தவத்திரு. பொன்னம்பல அடிகளார் அவர்களின் தொடக்கவுரையுடன் இனிதே விழாத்தொடக்கம் நிகழ்ந்தது. மனசாட்சியின் குரல் பாரதி (நகுநாதன் கட்டுரைகள்), சிறையிலிருந்து ஒரு இசை (நல்லக்கண்ணு கட்டுரைகள்) நூல்கள், தோழர் ச.ரகுஅந்தோணி வெளியிட தோழர் ந.சேகரன் பெற்றுக்கொள்ள, தோழர் இளசைமணியன் ஏற்புரையுடன் அரங்கேறியது. இலங்கைத்தமிழ் அறிஞர் அமரர் கா.சிவத்தம்பியின் படத்தை தோழர் வீ.அரசு திறந்து வைத்து உரையாற்றினார். விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்தார். தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் வழங்கிய பாவைக்கூத்து கலை நிகழ்ச்சி, மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் காட்சி ஊடகத்தின் பேரிரைச்சலில் இருந்து மீளத்தக்க வகையில் அமைந்தது. பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் செயலாளர் தோழர் க.முருகேŒன் நன்றியுரையுடன் அன்றை நிகழ்வு நிறைவு பெற்றது.

இரண்டாவது நாளில் கருத்தரங்கம், பாரதி மணிமண்டபத்தில் தொடங்கியது. பாரதி பாடல்களுக்கு தடையும், நீக்கலும் குறித்து தோழர் பா.ஆனந்தகுமார் உரை நிகழ்த்தினார். சுதந்திரப்போரின் நீரோட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட பாரதி தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, முழு வீச்சுடன் செயல்பட்ட காலகட்டத்தில் அவருடைய பாடல்கள் எந்த வகையில் சுதந்திர உணர்வுகளை ஊட்டியது, தீயை மூட்டியது என்பது குறித்தும். போராட்டத்தை முன்னெடுக்க எந்த வகையில் பிரயாசனப்பட்டார் என்பதையும் வரலாற்று ஆதாரங்களுடன் நீண்ட நெடிய உரையாய் அமைந்தது.

தலித் எழுச்சி என்ற நோக்கில் தோழர் ந.முத்துமோகன் மிக அழுத்தமான பதிவை முன்வைத்தார். ஒரு கனமான பொழுதை கடந்து போக வேண்டிய வரலாற்றுப் பதிவை தனது வார்த்தை பிரயோகங்களால் அரங்கம் சிறிதும் சலனமின்றி உள்வாங்கியது. எழுச்சி மிகு உரை இதுதானே? என்று சொல்லத்தக்க வகையில் அந்த உரைவீச்சு அமைந்தது என்பதில் துளியும் ஐயமில்லை.

மாற்றுச்சினிமா குறித்த உரையை தோழர் ஹாமீம் முஸ்தபா தொடங்கினார். உலக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு பிரதேசத்திலும் அரங்கேறாத வண்ணம் திரைப்படம் சார்ந்து அரசியல் களம் புகுந்து ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொண்டது தமிழகத்தில் மட்டுமே என்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த வாதத்தை முன் வைத்தார். கடந்த 50 ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் சினிமாவின் தாக்கம் அரசியலை புரட்டிப்போடும் வகையில் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்ற கருத்துருவாக்கம் கவனிக்கத்தக்கது. சினிமாதானே என்று எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அதன் அசுரபோக்கு அரசாங்கத்தை கட்டமைக்கிற ஒரு மோக வலை இனி என்னவெல்லாம் செய்யும்? என்ற கேள்விகளோடு சிந்திக்க வைத்தது. தற்போதைய சினிமா, உலக சினிமா குறிப்பாக மாற்றுச்சினிமா குறித்து பதிவு செய்தார் தனது நீண்ட உரையில்.

இன்றைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையாகவும், நாளைக்கு இதன் போக்கு என்னவாகுமோ என்ற பெரிய கேள்வியோடும் கூடிய விவசாயம் குறித்த நிலைமைகளை முன்வைத்து விவசாயிகளின் எழுச்சி என்ற தலைப்பில் தோழர் ஆர். நல்லகண்ணு தனது கருத்துக்களை மிக நிதானமான போக்கில் கவலைதோய்ந்த வார்த்தைகளில் தொடங்கினார். அந்த உரையின் ஒரு வார்த்தையையும் கூட உதாசீனப்படுத்திவிடமுடியாது என்பதை உணர முடிந்தது. விவசாயத்தின் பின்னடைவு, நிலங்கள் கட்டிடங்களாக மாறிவரும் அவலம், உணவுப்பற்றாக்குறை குறித்த கவலை, விவசாயிகளின் நசிந்து போன வாழ்க்கை, மீள முடியாத வறுமையில் சிக்கித்தவிக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார நிலை என பல்வேறு முனைகளிலிருந்தும் தனது 50 ஆண்டு கால விவசாயிகள் வாழ்க்கையோடு உடன்பட்ட நிகழ்வுகளையும், ஏக்கங்களையும் எழுச்சியோடும் வலிமையோடும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அன்றைய உரை இந்த தேசமே எதிர்கொண்டிருக்கும் ஒரு கேள்விக்கான பதிலாகவும், நாளைய சமூகம் எதிர்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பிரச்சினையை தோழமையோடு எடுத்துரைத்தார். விவசாயிகளின் அவலநிலையை உள்ளக்குமுறலை எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும் முன் வைத்தார்.

விழாவின் தொடர்ச்சியாக கிராமிய இசையும், கலைமாமணி கைலாசமூர்த்தியின் குரலோடும் மாலை நிகழ்வும் முன்நகர்ந்தது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் இரா. காமராசுவின் கவிதாஞ்சலி பாரதியின் கவிதாதேவியை காண வைத்தது. கவிதை நமது தொழில் என்று முழங்கிய பாரதி பிறந்த மண்ணில் கவிதை இல்லாமலா? உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் என்று பாரதியின் முழக்கத்தின் தொடர்ச்சியாய் வார்த்தைகளின் நீட்சியாய் கவிதை பாரதியின் மண்ணில் காற்றோடு கலந்து வியாபித்தது மனதோடு.

விழாவின் மற்றொரு முகாந்தரமாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசளிப்பு விழாவும் முக்கியத்துவம் பெற்றது. முன்னதாக காலையிலிருந்து ஒவ்வொரு படைப்பாளிகளாக வந்து சேர்ந்தனர். வெவ்வேறு ஊர்களிலிருந்தும், வெவ்வேறு முகங்களோடும், தங்களது படைப்பின் அங்கீகாரத்தை மேலும் உறுதி செய்துகொள்ளும் மன நெகிழ்வோடும் வந்து சேர்ந்தனர். படைப்பாளிகள் ஒவ்வொருவரையும் அவர்களின் முகவரிகளோடு, அவர்களின் வருகையை எதிர்நோக்கி வரவேற்று ஒரு சங்கமத்தை ஏற்படுத்தியிருந்தார் தோழர் செந்தீ நடராஜன். தோழர் இரா. காமராசு, தோழர் ஹாமீம் முஸ்தபா, தோழர் இளசை மணியன் ஆகியோர் உடனிருந்து ஒவ்வொரு செயல்பாடுகளிலும் நிறைந்த தோழமையுடனும் அன்புடனும் வழி நடத்தினர். படைப்பாளிகளின் கலந்துரையாடல் பாரதி மணிமண்டப வராந்தாவில் நிகழ்ந்தது. ஒவ்வொரு படைப்பாளிகளும் தங்களின் அறிமுகங்களோடு எதிர்கால படைப்பிலக்கியம் குறித்த கேள்விகளோடு தொடங்கினர். எழுத்தாளர் பொன்னீலனின் முன்னிலையில் பாரதியே உடனிருந்து சபாஷ் என்று உரக்க ஆமோதிப்பதுபோல் அவருடைய சிலைக்கருகில் வட்டமாக அமர்ந்து தொடங்கிய பேச்சு நீண்டுகொண்டேயிருந்தது கருக்கல் வந்து இரவு கசியும் நேரம்வரை.

ஒலிபெருக்கியில் பாரதி தனது ஆளுமையை செலுத்திக்கொண்டிருந்தார். எப்பொழுதும் தவிர்க்க முடியாத படைப்பாசான் பாரதியின் எட்டயபுர மண் மனதுக்குள் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியது. காற்றோடு நிற்பதுவே...நடப்பதுவே.. பாடல் செவிகளில் வந்து சேர்ந்தது. எங்கும் பாரதி...பாரதி...பாரதி...என்று நிறைந்துகிடப்பதை உணர முடிந்தது. மணிமண்டபத்தின் இடதுபுறம் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர் தங்களது உலகத்திற்குள். அவ்வப்போது அவர்களுடைய ஓ...என்ற குதூகல குரல் நம்மையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கவைத்தது. தோழர் பெ. அன்பு திருவண்ணாமலை திரையிடலின்போது குறிப்பிட்டதுபோல அவர்களின் ஆட்டத்தை நம்மால் ஆட முடியாது? என்ற வார்த்தைதான் நினைவுக்கு வந்தது. ஒரு வேளை தோழர் குறிப்பிட்டதுபோல தம் இயல்பிலிருந்து மாற்றிக்கொள்ளாத பெருங்கூத்துக்காரனாய் இருந்ததாலோ பாரதி நம்மையெல்லாம் எட்டயபுரம் நோக்கி நகர வைத்திருப்பானோ?!

இந்த மண்ணில்தான் பாரதி தனது பால்யத்தையும், இளமையையும் கழித்திருக்கிறான். இந்தப் படிக்கட்டுகளில் பாடத்தொடங்கி, இந்த அக்ரஹாரத் தெருக்களில் எழுச்சியோடு புறப்பட்டு, தனது கிளைகளை வான்வெளியயங்கும் கிளைபரப்பி, உலக மகா கவிஞனாய் ஆனது வரலாற்றின் நீண்ட நெடிய தொலைவுகளால் நிறைந்து என்ற எண்ணத்தினூடே யாவருக்கும் எட்டயபுரத்தைவிட்டு விடைபெற முடியாமல் மனசு தவித்தது. பாரதியையும், தோழமையும் மனசோடு சுமந்தபடி பரிசுகளோடு விடைபெற்றனர் படைப்பாளிகள்.

Pin It