நேர்காணல் - புலான் லாகிரி

தமிழில் : ஆர்.பிரேம்குமார்

? நீங்கள் உலகம் முழுவதும் சேலை அணிந்தே சுற்றி வருகிறீர்கள். அது தங்களது தனித்துவத்தைச் சுட்டுவதற்காகவா?  

அப்படி இல்லை. நான் சேலை அணிகிறேன். நான் எப்போதுமே சேலை மட்டும்தான் அணிந்து வந்திருக்கிறேன். உங்களுக்கு தெரியுமே எனக்கு 68 வயது. இதுதான் எனக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது. இதிலிருந்து மாற வேண்டும் ஒன்று எனக்கு ஒருபோதும் தோன்றியது இல்லை. நான் ஒரு “அடையாளவாதி'' (identitarian) அல்ல. சில வேளைகளில் மேற்கத்திய உடைகளை அணிவேன். ஆனால் பெரும்பாலான வேளைகளில் சேலைதான். அவை மலிவானதாக இருக்கின்றன. மேலும், சேலையை மாற்றி அமைக்க முயல்கிற நாகரிக வேலைப்பாடுகள் எல்லாம் சுதந்தரமாக இழைகின்ற சேலையின் பண்புக்கு எதிரானதாகும். நான் பாரம்பரியமாக இதை அணிகிறேன் என்று கூற மாட்டேன். இந்த முறையில் சேலையை அணிவதை நான் தாகூர் குடும்பப் பெண்களிடமிருந்தும், மும்பையில் உள்ள பெண்களிடமிருந்தும் உரையாடிய போது கற்றுக் கொண்டேன். இந்த முறையில் அணிவது சைக்கிள் ஓட்டுவது போன்ற செயல்பாடுகளுக்கு ”தந்திரம் வழங்குவதாக உள்ளது. மட்டுமல்ல, மக்கள் எனக்கு சேலையைப் பரிசளிக்கிறார்கள். எனவே இலாபகரமானதாகவும் இருக்கிறது. எனக்கெனத் தனித்துவம் இருக்கிறதா என்பது பற்றித் தெரியாது. சேலை சமகாலப் புழக்கத்தில் உள்ள உடை. நான் மேற்கத்திய உடைகளை அணிந்தாலும் 57 சதவீதம் சேலையைத்தான் அணிகிறேன்.

? நீங்கள் அமெரிக்காவுக்கு வந்தபோது சிறு வயது உடையவர்களாக இருந்தீர்கள்...?

19 வயது.

? பிறரிடமிருந்து தனித்து நிற்பது தங்களுக்குச் சங்கடமாக இருக்கவில்லையா?

நான் எப்போதுமே தனிப்பட்டே நின்றிருக்கிறேன்.. (சிரிக்கிறார்) நான் மிக்க உயரம் உடையவள். ஒரு வித்தியாசமான மனிதன். தனியே நிமிர்ந்து நிற்பதே என் பழக்கம். அப்படிச் சொல்வது சில்லறைத்தனமானது. ஆனால் அதுதான் உண்மை. ஒருவர் நல்ல செயலுக்காக அப்படி நிற்கிறாரா இல்லையா என்பது வேறு விஷயம். அப்படி நிற்பது என்னை ஒருபோதும் அலட்டவில்லை. நான் 19 வயதாக இருந்தாலும், சொந்த ஊரில் ஏற்கனவே எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். இங்கே வந்தது பட்ட மேற்படிப்புக்காக. நான்கு வருடத்தில் நான் இணைப் பேராசிரியர் ஆகி விட்டேன். எனவே கண்களில் நட்சத்திரம் ஒளிர்கின்ற விடலையாக இல்லாமல் பிஞ்சிலேயே பழுத்து விட்டேன். அந்தக் காலத்தில், 1961ல், லிண்டன் ஜாண்சன் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முன்னர், அமெரிக்காவில் ஆங்கிலத்துறையில் சேர்ந்து பயில குறைந்த அளவில்தான் இந்தியர்கள் வந்தனர். எனக்கு அமெரிக்காவைப் பற்றி எல்லாம் தெரியும் என்றுதான் தோன்றியது. நான் ஒரு கல்கத்தா பெண். நான் டைம் இதழ் போன்றவற்றை வாசிப்பவள். வந்தேறிகளைப் பற்றி அந்தக் காலத்தில் நாவல்கள் எதுவும் கிடையாது. எனவே பண்பாடு சம்பந்தமாக எப்படி புரிந்து கொள்ளப்படுவேன் என்பது பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. நான் வந்து நேரடியாக வகுப்புக்குச் சென்றேன். சேலை அணிந்து செல்வது வித்தியாசமாக இருக்கும் என்பது பற்றியெல்லாம் எண்ணிப்பார்க்கவில்லை. என்னுடைய இந்தியக் குடியுரிமையும் அப்படியே இருந்தது. அதனை மாற்றவேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை.

? நீங்கள் பெருமளவு வாழ்க்கையை அமெரிக்காவில் கழித்து விட்டீர்கள்...?

49 வருடங்கள்

? நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள்? ஒரு இந்தியராகவா அல்ல அமெரிக்கராகவா?

எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஒருவர் ஓர் அடையாளத்தைப் பற்றி எப்படி எண்ணுகிறார் என்று தெரியவில்லை. நான் நினைக்கிறேன், இதெல்லாம் தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது உருக்கொண்டிருக்கலாம். நீங்கள் இந்த தேசத்துக்குச் சொந்தக்காரன் எனவே சுதந்தரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். நான் உண்மையிலேயே என்னைப்பற்றியும், என்னுடைய அடையாளம் பற்றியும் கலைப்படவில்லை. எனவே இந்தக் கேள்விக்கு என்னால் முழுமையான பதிலைத் தர முடியவில்லை. ஒருவர் தனக்கென ஒரு வகைமாதிரியை தயாரித்துக் கொள்கிறார். அது குறித்து அக்கறை காட்ட வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே நான் அது குறித்து சிந்திக்க அதிக நேரம் செலவிடவில்லை.

? தங்களை அமெரிக்காவுக்கு வரவழைத்தது எது. அந்த நகர்தலைத் தூண்டியது என்ன?

எனக்கு என்னுடைய பல்கலைக்கழகத்தைப் பற்றி சந்தேகம் இருந்தது. என்னுடைய பேராசிரியர்களில் ஒருவர் எனக்கு முதல் வகுப்புத்தேர்ச்சி கிடைக்க வாய்ப்பில்லை என்றார்;. நான் தந்தையில்லாத பெண். நான் பி.ஏ.வில் முதல் வகுப்பில் முதலாவதாக வெற்றி பெற நிறையச் சிரமப்பட வேண்டி இருந்தது. அந்தக் காலத்தில் வெளிநாட்டில் மேற்படிப்புக்காக அதுவும் கலைப்புலத்தில் படிக்கச் செல்லும் பெண்ணுக்கு யார் பணம் செலவு செய்வார்கள். நான் இதைப் பற்றிக் கவனம் கொள்ளவில்லை. அப்போது எனக்கு 18 வயது. முதல் வகுப்பில் தேர்ச்சி (எம்.ஏயில்) பெறவில்லை என்றால் கடவுச்சீட்டு கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும். எனவே இதுதான் தக்க தருணம் என்று தோன்றியது. அதனால்தான் நான் புறப்பட்டேன். நான் பிரிட்டனுக்குச் செல்ல விரும்பவில்லை. நான் துணிச்சல் மிக்க ஆன்மா. பிரிட்டானியப் பல்கலைக்கழகங்களில் இந்தியாவில் கிடைத்த அனுபவத்தின் தொடர்ச்சிதான் கிடைக்கும் மட்டுமல்ல, நான் மீண்டும் பி.ஏ தேர்வு எழுத வேண்டும். எனவே நான் (அமெரிக்காவுக்கு) புறப்பட்டேன்.

பணம் கடன் வாங்கினேன். எனக்குப் பணம் கடன் கொடுத்தவரை எனக்குத் தெரியாது, அவரது பெயரை மட்டுமே கேட்டிருக்கிறேன். அவர் பணத்துக்குப் பிணையமாக வேறெதுவும் இல்லாததால் என்னுடைய வாழ்வையே பிணயமாகக் கருதுவதாகக் கூறினார். எனக்கு பிணையம் என்றால் என்னவென்றே தெரியாது, அந்தக் காலத்தில் அப்படி வாழ்வைப் பிணையம் வைப்பதெல்லாம் கிடையாது என்றே நினைக்கிறேன். நான் எவ்வளவு அப்பாவி பாருங்கள். நான் மதிப்பெண்கள் பெறுவதிலும், இலக்கியம் படிப்பதிலும் மிகவும் புத்திசாலி. ஆனால் வாழ்க்கை அனுபவங்கள் கிடையாது. என்னை என்னுடைய அற்புதமான தாயும் தந்தையும் பாதுகாப்புடன் வளர்த்தனர். என்னுடைய தந்தை ஆறு வருடங்களுக்கு முன்புதான் இறந்து போயிருந்தார். நான் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சுதந்திரத்துடன் இருந்தேன். அதனால் தான் இங்கே வந்தேன். நான் பணத்தை 5 வருடங்களுக்குள் திரும்பச் செலுத்தாவிடில் அந்த மனிதர் சொல்கிற ஏதேனும் வேலையில் சேர்ந்து பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும் என்று ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டேன். நான் 5 ஆண்டுகளில் பணம் சேமித்து அவருக்குத் திரும்ப அளித்தேன். ஆனால் அவர் அந்தக் கடனை நான் ஏற்கனவே மீட்டிவிட்டேன் என்று கூறி பணத்தை திரும்ப அளித்தார். அதுதான் என்னுடைய முதல் சேமிப்பாக அமைந்து போனது. (சிரிக்கிறார்)..

? உங்களுடைய அறிவு நுட்பப் பரிணாமம் பற்றி சிறிது கூற முடியுமா? இன்றைக்கு உலகில் உள்ள சிந்தனையாளர்களில் முக்கியமானவராக உங்களைக் கருதுகிறார்கள். தாங்கள் எவ்வளவு தூரத்துக்கு செல்லவிருக்கிறீர்கள் என்பதைக் கூற முடியுமா?

இல்லை, உண்மையாகவே இல்லை (சிரிக்கிறார்) நான் என்னை ஒருபோதும் ஒரு பெரிய மனிதராகக் கருதியது இல்லை. வெறுமனே ஒரு பிதற்றல் பேசாத மனிதன் அவ்வளவுதான். நான் ஒரு அறிவாளி அல்ல. நான் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது சொந்தக் கால்களில் நின்று சிந்திக்கப் பயிற்சி பெற்றேன். நான் ஓர் அறிவாளி அல்லாததால் பெரும்பாலும் என்னுடைய சிந்தனை, சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிப்பதாகவே அமைந்தது. என் சக்கரத்தை நான் மீண்டும் கண்டுபிடிப்பது மோசமானது அல்ல என்று என்னை நானே தேற்றிக் கொள்வேன். அதனால்தான் நான் துணிச்சல்வாதி ஆனேன். நான் மற்ற பாடப்பிரிவுகளுக்கும் செல்வேன். அங்கே உள்ளவர்கள் மிகவும் அருமையானவரகள்;. அவர்கள் உதவினார்கள். அவர்கள் என்னை வேறு துறையிலிருந்து வந்து ஏதோ கற்றுக்கொள்ள முயற்சி செய்பவளாகப் பார்த்தார்கள். எனவே எனக்கு வழிகாட்டினார்கள். நான் பிமல் கிருஷ்ண மாடிலால் போன்றவர்களை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு உயர்நிலைப்பள்ளியிலேயே சமஸ்கிருதம் நன்கு தெரியும். என்னால் வரலாற்றுக் கதையாடல்களான ராஜதரங்கிணியையும் மகாபாரதத்தையும் அகராதியின் துணையில்லாமல் வாசிக்க முடியும். என்னால் தத்துவம் சார்ந்த அல்லது மொழியியல் சார்ந்த சமஸ்கிருதத்தை வாசிக்க முடியாது. யாராவது விளக்கம் சொல்லித் தர வேண்டும். இப்படி சமஸ்கிருதம் கைவசப்பட்டிருந்ததால் எனக்கு ஆங்காங்கே வாசிப்பு நிகழ்த்த வாய்ப்புகள் கிடைத்தன.

பிமல் அல்லது பீட்டர் வான் டெர்வீர் போன்றவர்கள், துறைக்கு வெளியிருந்து ஒருவர் வந்து கடினமாக முயற்சி செய்வதைப் பாராட்டினார்கள். பிமல் அன்போடு இது புதிய வாசிப்பு என்று அவர்களிடம் கூறி விட்டு வாசிக்கச் சொன்னார். எல்லோரும் அவருடைய வாக்குக்கு செவி சாய்த்தார்கள். ஆனால் பிற துறையில் உள்ள சிலருக்கு என்னைப் பிடிக்கவில்லை. வரலாறு, சமஸ்கிருதம் மற்றும் அரசியல் தத்துவம் போன்ற துறைகளில் உள்ள என்னுடைய சகப்பேராசிரியர் அவர்களுடைய பெயரைச் சொல்ல விரும்பவில்லை. நான் “விளிம்புநிலையாளி பேச முடியுமா?'' என்ற நூலில் “தர்மசாஸ்திரம''; பற்றிப் பேசுவதற்கு உரிய தகுதி இல்லாதவர் என்று எழுதி இருக்கிறார். நான் என்ன சொன்னேனென்றால், “தற்போது உலகம் முழுவதும் உள்ள பெண்ணியவாதிகள் இடிப்பஸை வாசிக்கிறார்கள் என்றால் அதன் பொருள் அவர்கள் எல்லோரும் செவ்விலக்கியவாதியாக இருக்கிறார்கள் என்பதல்ல. என்னைப் பண்பாட்டுக்குள் இருத்தி வைத்திருக்கும் பிரதிகளை நிச்சயமாக நான் வாசிப்பதோடு அவற்றைப் பற்றி இந்து மதத்திலிருக்கும் பரம ஏழையான பெண் வாசகரிடம் பகிர்ந்து கொள்ளவும் முடியும். எனக்கு அடிப்படையிலேயே உரிமை இருக்கிறது. அதோடு எனக்கு சமஸ்கிருதமும் சற்றுத் தெரியும். நான் பொருத்தமான வாசிப்பாளர் இல்லை என்று சொல்ல நீ யார்? அவ்வளவுதான் நான் என்னோடு சொல்லிக் கொள்ள முடியும்.

நான் கடினமாக உழைப்பேன்; உளற மாட்டேன். நான் பெரிய அறிவாளி அல்ல. ஆனால் என்னால் முடிந்த அளவுக்கு முன் தயாரிப்பில் ஈடுபடுவேன். என்னுடைய முயற்சியைப் பாராட்டுகிற துறை வல்லுநர்களான அறிஞர்கள் மற்றும் நண்பர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வேன். இப்படித்தான் என்னை நான் பார்க்கிறேன். நான் என்னை உண்மையிலேயே பெரிய சிந்தனாவாதியாக எண்ணிக் கொள்வதே இல்லை. மக்கள் நான் எழுதிய எதையோ வாசித்ததாகவும், என்னுடைய பெயரைத் தெரிந்து வைத்திருப்பதாகவும் சொல்லும்போது ஆச்சரியம் கொள்கிறேன். நான் வேறொன்றையும் கூற விரும்புகிறேன். மேத்யூ அர்னால்டு வகையறாவைப் போன்று என் மனசைத் தொட்ட நிகழ்வு அது. ஒரு முறை ஒரு கூட்டத்தின் போது எனது அம்மா என்னுடன் இருந்தார்கள். கூட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் இருப்பார்கள். நான் பேசிவிட்டு வந்த போது பெருங் கைதட்டல். சிலர் கேள்விகளும் கேட்டார்கள். என் அம்மாவுடனும் சகோதரனுடனும் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். வரும் வழியில் சகோதரன் கேட்டான் “இவள் எப்படிப் பேசினாள்?'' என்னுடைய அம்மா என்னை முழு இருதயத்தோடும் நேசித்தார்கள். ஆனால் கேள்விக்குட்படுத்தப்படாத தலைக்கனம் என்பது ஒருவருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பது அவர்களுக்குத் தெரியும். அது உருவானால் நுண்ணறிவு செய்படாமல் நின்றுவிடும். எனவே அவர்கள் புன் சிரிப்புடன் “ஸ்டார் தியேட்டர்''; தயாரித்த “பங்கிம் சந்திரா'' நாடகத்துக்கான விளம்பரத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். கோபிந்தலால் பெங்கால் விளக்குகள் பொருத்தப்பட்ட குதிரையின் மேலேறி வருவது ஞாபகத்துக்கு வந்தது. அம்மா சகோதரனிடம் சொன்னார்கள் “ஹேய் ஹேய் காண்டோ, ரேய் ரேய் பாப்பார், அஸ்தோ பிரிஸ்தோ போபிந்திலால்;'' இதனை அம்மா மிக்க வாஞ்சையோடு கூறினார்கள். ஆனால் இத்தகையப் பாராட்டுக்களை பெரிய சாதனையாக எடுத்துக் கொண்டால் அது முட்டாள்தனம் என்பது புரிந்து விட்டது. அதனை ஒரு போதும் நான் மறக்கவில்லை. அதுதான் என்னைக் காப்பாற்றுகிறது.

? தாங்கள் நிறைய மொழிகளில் பணியாற்றி இருக்கிறீர்களா?

வேறொரு கதை இருக்கிறது. வேடிக்கையான கதை. நான் பணம் கடன் வாங்கினேன் என்று சொன்னேன் அல்லவா? அடுத்த வருடமே எனக்கு படிப்புக்கான உதவித்தொகை கிடைக்கவில்லை. ஏனெனில் நான் மண்ணின் மொழியைப் பேசவில்லை. இப்போதெல்லாம் நிலைமை மாறிவிட்டது. ஆனால் அப்படி மாறக்காரணம் எங்களுடைய பணிதான். எனக்கு வேலை செய்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அப்படி என்றால் அடுத்த வருடம் நான் என்னதான் செய்ய முடியும்? இந்தக் குழப்பமான ‹ழ்நிலையில் பால் டிமேனின் கருத்தரங்கில் நான் ஒரு கட்டுரையைச் சமர்ப்பித்தேன். அவர் அப்போதுதான் ஒப்பிலக்கியத் துறையின் தலைவராக நியமனம் பெற்றிருந்தார். என்னுடைய கட்டுரை கவனத்தை ஈர்த்தது. அவர் அப்போதுதான் மாணவர்களுக்கான நிதி உதவிக்கான விண்ணப்பங்களை பரிசீலித்து முடித்திருந்தார். அவற்றில் ஒன்று நிரப்பப்படாமல் இருந்தது. எனக்கு இது பின்னர்தான் தெரிய வந்தது. அப்போது நான் ஒப்பிலக்கியத்தில் ஒரு திட்டத்தை தயாரித்துக் கொண்டிருந்தேன். எனவே நான் அறிவுக்கூர்மை மிக்கவள் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் டிமேன் என்னிடம் ஒப்பிலக்கியத்துறையில் உதவித் தொகை வேண்டுமா என்று கேட்டவுடன் நான் “ஆம்''; என்றேன். “காலியிடங்களை சமயத்தில் நிரப்பாவிடில் அவை காணாமல் போய்விடும்'' என்று சொன்னவர் என்னிடம் “உன்னுடைய அயல் மொழி என்ன?'' என்று கேட்டார், நான் “ஆங்கிலம்''; என்றேன், “அது சரி வராது. வேறு என்ன?'' என்று கேட்டார். வேறொன்றுமில்லை என்றேன்.

நான் கல்கத்தாவில் உள்ள அலையன்ஸ் பிரான்கைசில் ஆறு மாதங்கள் பிரெஞ்ச் படித்திருந்தேன். நாங்கள் பாலிகுங்கேயில் வசித்த போது அங்கேயிருந்த வங்காள விடுதலைப் போராட்ட வீரரின் ஜெர்மானிய விதவை மனைவி திருமதி. பாதுரியிடம் மூன்று மாத காலம் ஜெர்மன் படித்திருந்தேன். எனவே நான் அவரிடம் கேட்டேன். “வாசிக்க வேண்டியவை எல்லாம் அந்த மொழியில்தான் அமையுமா?'' “ஆம்'' என்றார். “விரிவுரைகளும் அதே மொழியில்தான் நிகழ்த்த வேண்டுமா?'' சிலவேளைகளில் என்றார். “என்னுடைய கட்டுரைகளையும் அதே மொழியில்தான் எழுத வேண்டுமா?'' “தேவை இல்லை'' என்றார். நான் சொன்னேன் “அப்படி என்றால் சரி. ஏனெனில் என்னிடம் பணம் இல்லை'' என்றேன். “நீ மொழிப்பாடம் எதிலும் சேர முடியாது. நீ ஏதேனும் ஐவி லீக் துறையில் ஒப்பிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற விரும்பினால் அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும்'' நான் முயற்சிக்கிறேன் என்று சொன்னேன். எனக்குத் தெரிந்த பிரெஞ்சும், ஜெர்மனும் கொடுத்த தைரியம் அது. நான் துணிச்சலான பேர்வழி. சில வருடங்களுக்கு முன்னர் கார்னெல்லில் வைத்து நடைபெற்ற ஒப்பிலக்கியத்துறையின் 40வது ஆண்டு விழாவுக்கு என்னை அன்புடன் அழைத்து ஒப்பிலக்கியம் உருவாக்கிய சிறந்த மாணவர் என்று என்னைப் பாராட்டிய போது நான் மிக்க பெருமை கொண்டேன்... அப்போது தனக்குத்தானே சொல்லிக் கொண்டேன் “அய்யகோ... ஒரு மொழியும் சரியாகத் தெரியாமல் உள்ளே நுழைந்தேன்.'' பின்னர் நான் தெரிதாவை பிரெஞ்சில் மொழி பெயர்த்த போது, எப்படி என்றே தெரியவில்லை, ஆனால் முடித்து விட்டேன்.

? தெரிதா போன்ற பன்மைத்துவம் மிக்க சிந்தனையாளரை மொழிபெயர்க்க எவ்வளவு காலம் ஆனது?

உடனடியாக, ஏனெனில் எனக்கு தெரிதா யார் என்று தெரியாது. நான் ஐயோவாவில் உதவிப் பேராசிரியராக இருந்தேன். இளம் வயது. 24, 25 வயதிருக்கலாம். கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து முதல் வகுப்பில் தேறிவிட்டு கார்னெல்லிலிருந்து பி.எச்.டி பட்டம் பெற்று விட்டு ஐயோவாவில் வேலை பார்ப்பது முட்டாள் தனம் என்னுடைய அறிவுஜீவி வாழ்க்கையை துலக்க வேண்டும் என்று தோன்றியது. நான் நூற்பட்டியலிலிருந்து புத்தகங்களை வரவழைப்பேன், அப்படி தற்செயலாக வாங்கின புத்தகம்தான் “கிராம ட்டாலஜி'' நான் அந்த புத்தகத்தை வாங்கவில்லை என்றால் தெரிதாவைப் பற்றித் தெரிந்திருக்கவே மாட்டேன். நான் மிக மிகத் தூரத்தில் இருந்தேன். அப்போது மின் அஞ்சல் போன்ற எந்த வசதியும் இல்லை. பின்னர் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? நான் அந்த நூலை வாங்கியிராவிட்டால் வாழ்க்கையே முற்றிலுமாக வித்தியாசப்பட்டிருக்கும். அந்த விபத்து போன்ற நிகழ்வை எண்ணும் போதே என்னுள்ளே ஒருவித திகில் பரவுகிறது. 25 வயதில் சிறிய அளவில் மட்டுமே பிரெஞ்ச் தெரிந்த எனக்கு அது ஒரு சிக்கலான நூல்தான். நான் என் வாழ்வில் செய்த ஒரு புத்திசாலித்தனமான செயல் அது என்று நினைக்கிறேன்.

நான் அந்த நூலை வாசித்தேன். அது நல்ல நூல் என எனக்குத் தெரிந்தது. நான் ஓர் இளம்வயது உதவிப் பேராசிரியர். இந்த நூலின் ஆசிரியர் அதிகம் அறியப்படாத ஒர் இளைஞர் என்று எனக்குள்ளே எண்ணிக் கொண்டேன். இந்த நூலைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று ஆவல் கொண்டேன். ஆனால் அது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை… ஒரு விருந்தில் வைத்து மாஸ்டர்‹செட்ஸ் பல்கலைக்கழகப் பதிப்பகம் மொழிபெயர்ப்புகளை வெளியிடுகிறது என்பதைக் கேள்விப்பட்டேன். ஆனால் அப்போது என்னால் எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. நான் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர் ஆனால் இதுவரை எதையும் மொழி பெயர்த்ததில்லை. எனக்கு ஒரு பக்கத்தை மொழியாக்கம் செய்ய ஒரு வாரம் ஆனது. நான் சிறந்த மொழி பெயர்ப்பாளர், இது சிறந்த நூல் என்றாலும் என்னை ஒரு சிறிய முகவுரை எழுத அனுமதிக்கவில்லை என்றால் மொழிபெயர்ப்பு செய்யவியலாது என்று யோசித்துக் கொண்டே ஒரு கடிதம் அனுப்பினேன். அந்தக் கடிதம் மிகவும் அப்பாவித்தனமாகவும், யாருடைய பரிந்துரையும் இல்லாமலும் இருந்தது. இப்போது என்னுடைய மாணவர்களின் கைப்பிரதிகளை அச்சாக்கம் செய்ய நான் பரிந்துரைக்கும் போது, எனக்கு யாருமே பரிந்துரைக்கவில்லை என்பது நினைவுக்கு வருகிறது.

நான் ஒரு விசாரிப்புக் கடிதம் மட்டுமே அனுப்பினேன். நான் பணம் கடன் வாங்கியது போல, என் கால்களால் துணிவோடு நிற்கிற ஆள். எனவே அவர்கள் என்னைப் புரிந்து கொண்டு எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தார்கள். நான் வெளிச்சத்துக்கு வந்தேன். இப்படித்தான் எல்லாம் நடந்தது. நான் அதனைப் பற்றி இரண்டு முறை யோசிக்கவில்லை. என்னுடைய துறைத் தலைவர், நான் எனக்குத் தெரியாத விஷயத்தில் ஈடுபடுவது முட்டாள்த்தனம் என்று கூறினார். அவருக்கும் தெரியாத விஷயம்தான். நான் ஏன் பிரிட்டானிய இலக்கியத்திலிருந்து விலகி இதனைச் செய்ய வேண்டும்? ஆனால் இந்த நிகழ்வு உண்மையிலேயே எனக்கு ஒரு நடுத்தர நட்சத்திர அந்தஸ்து உருவாக்கி விட்டது அல்லவா? பிறகு நான் ஒரு வருடம் விடுப்பு எடுத்துக் கொண்டேன். ஏனெனில் எனக்கு தத்துவத்துறையில் எந்தப் பரிச்சயமோ பட்டமோ கிடையாது. ஆனால் நான் டி மேனின் மாணவராக இருக்கும் போது, அவர் தெரிதாவைச் சந்தித்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. எனவே நான் ஒரு வருடம் விடுப்பு எடுத்து விட்டு ஐயோவா பல்கலைக்கழகத்தில் தத்துவம் படிக்கப் புகுந்தேன். அவர்கள் மிகவும் கருணையோடு அணுகினார்கள். நான் அந்த தத்துவப் புத்தகத்தை (தெரிதாவினுடையது) தானாகவே படித்து விட்டு, என்னுடைய முகவுரையை எழுதினேன். நான் அதனைப் பற்றி நினைவு கூரும்போது கடவுளே, எப்படி என்னால் இதெல்லாம் செய்ய முடிந்தது? என்று தோன்றுகிறது.

? “எப்படி விளிம்பு நிலையாள் குரல் எழுப்ப முடியுமா?'' உருவானது?

1981ல் யேல் பிரெஞ்ச் புலத்திலிருந்து என்னிடம் பிரெஞ்ச் பெண்ணியம் பற்றியும் “விமர்சன விசாரணையிலிருந்து'' (critical enquiry) கட்டுடைப்பு பற்றியும் எழுதக் கேட்டிருந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் அடையாளம் (identity) பற்றிய பேச்சு காற்றில் உலா வந்தது. எட்வர்ட் செய்த் என்னுடைய இனிய நண்பர். அவரை நான் 1974ல் சந்தித்தேன். அவருடைய மரணத்துக்குப் பின்னர்தான் நான் அவரது “ஓரியண்டலிசம்'' நூலைப் படித்தேன். ஆனால் அப்போதே அந்தச் சிந்தனைகளைப் பற்றிய சிறகடிப்பு இருந்தது. நான் பிரெஞ்ச் பெண்ணியத்தைப் பற்றி பன்னாட்டுச் சட்டகத்துக்குள் வைத்து கட்டுரை எழுதி யேல் பிரெஞ்ச் புலத்துக்கு அனுப்பி வைத்தன். அதோடு ஜூலியா கிறிஸ்டீவா நட்பை என்றென்றைக்குமாய் இழந்தேன். ஏனெனில் அந்தக் கட்டுரையில் அவர் சீனப் பெண்களைப் பற்றி எழுதி இருந்த அபத்தமான நூலைக் கடுமையாக விமர்சித்து இருந்தேன். விமர்சன விசாரணைக்கு திரௌபதியை மொழியாக்கம் செய்து ஒரு முன்னுரையுடன் அனுப்பி வைத்தேன். அப்போது தான் என் மனதில் பிரெஞ்ச் கோட்பாடுகளுக்குள் முழுமையாக மூழ்கி விடக்கூடாது என்ற சிந்தனைப் பொறி பறந்தது. இப்படித்தான் நுண்ணறிவின் பரிணாமம் ஏற்படுகிறது.

இது என்னுடைய கதையாடலின் வடிவம், சரியா? நான், பூக்கோவுக்கும் டெலூசுக்கும் இடையே நடக்கும் உரையாடலைப் பார்க்கிறேன். இவர்கள் இருவரும் மிகவும் சிக்கலான கோட்பாடுகளைப் பற்றி எழுதி உள்ளார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடும் போது அவர்கள் தங்களது எழுத்தில் கேள்வி கேட்க இல்லாத பல கோட்பாடுகளின் திறனாய்வுக்கு முந்தைய நிலைமையைப் பற்றிப் பேசுகிறார்கள். எனவே முன் கூட்டியே ஊகம் செய்து கொள்வது இருக்கத்தான் செய்கிறது. என்னுடைய எளிமையான எடுத்துக்காட்டாகக் கூறுகிறேன். நான் ஒரு அமெரிக்கர் குடிமகள் அல்ல. ஆனால் என்னுடைய அம்மா என் சகோதரரின் குடும்பத்துடன் இருந்ததனால் அமெரிக்கக் குடிமகள். அவர்கள் என் சகோதரரைச் சார்ந்து இருந்தார்கள். என் அம்மா ஒரு துணிச்சலான பெண்மணி. இந்தியாவில், கல்கத்தாவில் அவரை ஒரு சமூகசேவகி என்பார்கள். அவர்களுக்கு 80 வயது ஆகும் வரைக்கும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணிக்கூர்களை, அமெரிக்காவில் வசிக்கும் வியட்நாம் போர்வீரர்களின் பெருந்துயரின் பின் விளைவு அழுத்தத்தை (Post dramatic stress syndrome) சமாளிப்பதற்கு செலவிட்டு இருக்கிறார். அவர்கள் ஒரு குடிமகளின் கடமை என்பது எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதில் இருக்கிறது என எண்ணினார்கள். ஆனால் அரசியல் ரீதியாக சரியாகச் செயல்படக் கூடிய சிலர் கூட தங்கள் உள்மனதில் அமெரிக்கனாக இருப்பது என்பது வெள்ளையாக இருப்பதுதான் என எண்ணிக்கொள்கிறார்கள். நான் இதனைக் கவனித்தேன். 

உரையாடலின் போது வெளிப்படக்கூடிய, உறுதி செய்யப்படாத முன்கூர் ஊகங்கள் பற்றி, பின்னர் எழுதப்படும் கோட்பாடுகளில் எவ்விதக் குறிப்பும் இருப்பது இல்லை. இந்த நிலையிலிருந்து நான் தப்பிக்க வேண்டும். இது சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், இருக்கத்தான் செய்கிறதே. இதிலிருந்து தப்பிக்க நான் எங்கே செல்வது? அந்தப் பெண் அதாவது “விளிம்பு நிலையாள்; குரலெழுப்ப முடியுமாவில்?'' தனக்குத் தானே தூக்கிட்டு மரிக்கிற பெண் உண்மையிலேயே என் பாட்டியின் சகோதரி. எனவே அவர்கள் என் குடும்பத்தில் ஒருவர். நான் அதனைக் குறிப்பிடவில்லை. முதலாவதாக அது தேவையென்று எனக்கு தோன்றவில்லை. இரண்டாவதாக, மக்கள் பரிவோடு மறுவினை ஆற்றுவதை நான் விரும்பவில்லை. எடுத்துக்காட்டாக, பாட்ரீசியா வில்லியம்ஸ் மற்றும் ஸைபியா ஹார்ட்மேன் போன்றோர் தங்களுடைய பழைய குடும்ப உறவுகளைப் பற்றியே பேசுகின்றனர். நான் எடுத்த முடிவு நன்று. எனக்கு அதனை எழுத எனக்கு மிகச் சிரமமாகவே இருந்தது.

ஒரு கட்டத்தில் என்னால் இனிமேல் முடியாது என்றும் தோன்றியது. ஏனெனில் அவர்களுடைய (பாட்டியின் தங்கை) செயல்பாடுகள் மூலம், ஒரு பெண் ஒரு ஆணுக்கு உடமைப்பட்டவள் என்ற கருத்தாக்கத்தையேக் கேள்வி கேட்டார்கள் இதனை தெளிவுபடுத்துவதற்காகவே தனக்குத் தானே தூக்கிட்டு இறந்து போனார்கள் என்பதை குடும்பத்தில் உள்ள மற்ற பெண்கள் மறந்து விட்டார்கள். அதனால்தான் ஓர் ஆணுக்கு மட்டுமே ஒரு பெண் பரிபூரண உடமை என்ற கருத்தாக்கத்தின் உச்சகட்டம்தான் ஸதி (உடன்கட்டை ஏறல்) என்பதை என்னுடைய எழுத்தில் சொன்னேன். இதனோடு பொருளாதார நிகழ்வும் இணைந்திருக்கிறது என்பதையும் உணர்ந்திருக்கிறேன். இது ஒரு யதார்த்தமான கருத்தோட்டம். எனவேதான் அவளால் பேசமுடியாது, என்று நான் சொன்னேன். அவளால் பேச முடியவில்லை, ஏனெனில் அவள் பேசியது யாருக்கும் கேட்கவில்லை. அதுதான் பேச முடியவில்லை என்பதன் பொருள். நான் இதனைச் சொன்னதினால் நிறைய அறிவீனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. எங்களது நண்பர் மேகன் மோரீஸ் என்பவர் “காயத்திரியை கேள்வி கேட்பவர்கள், அவர் விளிம்பு நிலையாளின் பேசும் சக்தியை பறித்து விட்டீர்கள் என்று சொல்வதற்கு, அவரது கட்டுரையின் தலைப்பு விளிம்பு நிலையாள் பேச முடியுமா? (Can b subanturn talk) என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது'' என்று சொல்லி சிரித்ததாக தீபேஷ் சக்ரவர்த்தி என்னிடம் கூறினார்கள். இது பேசுவது பற்றி அல்ல. ஒரு விளிம்பு நிலையாள் குரலெழுப்பும் போது அது ஒரு கலகக்குரல் என்பதனை புரிந்து கொள்வதற்கான உள்கட்டமைப்பு இந்த சமூகத்தில் இல்லை என்பதுதான் அதன் பொருள். எனவே என்னால் இனியும் எழுத முடியாது என்று தோன்றியபோது, நான் தொகுப்பாசிரியருக்கு இதை வெட்டவோ, வேறு ஏதேனும் செய்யவோ நீங்களே முடிவெடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன். அவர் அதனை அப்படியே பிரசுரித்தார்.

Pin It