என்சிபிஎச் என்னும் புதுயுகப் புத்தக நிலையம் அறுபது ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. காலத்தின் திசையறிந்து இன்று வரை தனது புரட்சிகரமானப் பணியை நேர்த்தியுடன் செயல்படுத்தி வருவதும் மகிழ்ச்சியைத் தருகிறது. தாமரை இலக்கிய இதழுடன் சகோதர உறவைக் கொண்டது தான் புதுயுக புத்தக நிலையம். சமத்துவக் கருத்துக்களைப் பரப்பும் அறிவுப்பணியை புத்தக நிறுவனம் தொடங்கியது என்றால், இதே பணியை இலக்கியத்தின் மூலம் செய்வதற்கு மாத இதழாக தன்னை அறிவித்துக் கொண்டது தான் தாமரை. 1951 ஆம் ஆண்டில் என்.சி.பி.எச் புத்தக நிறுவனமும், 1959 ஆண்டில் தாமரை இலக்கிய இதழும் தொடங்கப்பட்டன. அறுபது ஆண்டு நிறைவு விழாவில், மேலும் அதன் பணி சிறக்க என்.சி.பி. எச். நிறுவனத்தை தாமரை வாழ்த்துகிறது.

பொதுவுடமை கருத்துக்களின் மீது, மிகுந்த வெறுப்பைக் கொண்டிருந்தது பிரிட்டிஷாரின் ஆட்சியதிகாரம் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். இதன் வலிமை பீரங்கிகளை விட கூடுதலானவை என்பதை பிரிட்டிஷார் அறிவார்கள். தங்கள் ஆட்சிக்கு முடிவுகட்டும் வலிமையைக் கம்யூனிசம் கொண்டுள்ளது என்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மிகவும் நன்றாக உணர்ந்திருந்தார்கள். இதனால் கட்சியின் மீது கொடிய அடக்கு முறையை ஏவுதல், பொதுவுடமை கருத்துகளுக்குத் தடை விதித்தல் முதலான செயல்பாடுகள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்திய பின்னணியின் தொடர்ச்சியிலிருந்து தான் என்.சி.பி.எச் பிறந்தது.

கம்யூனிஸ்டு இயக்கத்தைப் போலவே, அதன் கருத்துகளை வெளியிட்ட பத்திரிக்கைகளும், புத்தகங்களும் கடும் அடக்குமுறைகளைச் சந்தித்தன. அடக்குமுறைகளால் எந்த லட்சியத்தையும் அழித்துவிட முடியாது. தாக்குப்பிடித்து எதிர் கொள்ளும் வலிமையை இவை எப்படியும் தந்துவிடுகின்றன. என்.சி.பி. எச், அடக்குமுறை தாய்ப்பால் அருந்திய பிள்ளை என்பதால், அதன் வலிமையும் மக்கள் மீதான அக்கறையும் கூடுதலானது.

இன்று என்.சி.பி.எச். பரந்து விரிந்த ஆலமரம். இந்தக் கூட்டுச் செயல்பாட்டில் எண்ணற்ற செயல்பாடுகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. தமிழின் ஆழ அகலங்களை முழுமையாக அறிந்திருக்கிறது என்.சிபி.எச். அதனை வெளியிட்ட நூல் பட்டியல்களிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். உலகம் தழுவிய அளவில் அறியப்பட்ட, முற்போக்கு நூல்கள் அனைத்தும் இந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டவை என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இதில் சோவியத்து நூல்கள் முதலிடத்தைப் பெறுகின்றன.

இன்று தமிழகத்தில் 20 இடங்களில் இதன் சிறப்பு வாய்ந்த விற்பனை நிலையங்கள் இருக்கின்றன. பாரதியின் பெயரில், புத்தங்களை விற்பனை செய்யும் நடமாடும் ஊர்தியும் இயங்கி நகரங்கள், கிராமங்கள் என்று எல்லா இடங்களிலும் தங்களின் அறிவு வெளிச்சத்தைப் பரப்பி வருகின்றது. நுற்றுக்கணக்கான அர்ப்பணிப்பு மிக்கத் தோழர்களின் செயல்பாட்டில், உறுதியுடன் நிறுவனம் செயல்படுவது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

தமிழ் கூறும் நல்லுலகு இன்று புதிய தேவைகள் பலவற்றை எதிர் நோக்கி நிற்கிறது. புதிய அரசியலும் அதற்கான திசை வழியையும் தேர்வு செய்து கொள்ளுவது இதற்கான அவசியமாகிவிட்டது. இதற்கு தேவையான அறிவுபூர்வமான பாதை அமைப்பதில் என் சி.பி எச். நிறுவனம் உரிய உதவிகளை செய்யும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

Pin It