மசூதி வளாகத்தில் கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது அந்த ஒட்டகம்.

பாபர் மசூதி இல்லை. நம்ம ஊர் மசூதி.

"இதுக்கு அஞ்சு, இல்லாட்டி ஆறு வயசுக்குள்ளாற தான் இருக்கும் பாய்' என்றார் நண்பர்.

நண்பர் சொன்னால் சரியாய்த்தானிருக்கும். சவுதியில் வேலை பார்க்கிற நண்பர். பல சைஸ்களில் பல ஒட்டகங்களைப் பார்த்தவர்.

ஜித்தாவிலிருந்து மக்காவுக்குப் போகிற அப்பழுக்கில்லாத ஹைவேயில் தன்னுடைய டயோட்டா க்ரெஸிடாவில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த ராத்திரியில், சாவகாசமாய் சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒட்டகம் ஒன்றின் மேல் மோதி, மரண விபத்துக்குள்ளாகாமல் மயிரிழையில் தப்பித்து இப்போது விடுமுறையில் இந்தியாவுக்கு வந்திருக்கிறவர்.

"ஹை, எனக்கும் ஆறு வயசு தானே டாடி, எனக்கும் இந்தக் கேமலுக்கும் ஒரே வயசு தான்" என்று குதூகலித்தான் நம்மப் பையன், என்னுடைய இடுப்பை அணைத்தபடி.

நம்ம ஆறு வயசுப் பையனைப் போலப் பலப் பலப் பையன்கள், பல வயசுகளில் அங்கே குழுமியிருந்தார்கள், ஒட்டகத்தைச் சுற்றி.

அந்தச் சிறுவர்களுடைய குட்டிக் குட்டி சிநேகிதிகள் சிலரும் சிரிப்பும் கும்மாளமுமாயிருந்தார்கள்.

கிட்டத்தட்ட எல்லாக் குழந்தைகளின் கைகளிலும் ஒவ்வொரு கொத்து இலை தழைகள் இருந்தன.

ஒட்டகத்தினுடைய, எட்டாத உயரத்திலிருந்த வாயை நோக்கி இலை தழைகள் கொம்புகளை உயர்த்திப் பிடித்தவாறு குதூகலக் குழந்தைகளெல்லாம் அதற்கு உணவு கொடுப்பதில் சந்தோஷமடைந்து கொண்டிருந்தார்கள். அந்த ஒட்டகமும் குழந்தைகளை நோக்கிக் கழுத்தைத் தாழ்த்தி இரையைக் கவ்வி, அவர்களை மேலும் மேலும் சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தது.

"டாடி டாடி, நானும் இந்தக் கேமலுக்கு ஃபீட் பண்றேன் டாடி' என்று என் கையைப் பற்றி இழுத்த மகனின் கையில் ஒரு சின்ன மரக் கிளையை முறித்துக் கொடுத்தேன்.

இவனுடைய கையிலிருந்த கிளையைக் கவ்விக் கொண்டு நிமிர்ந்த ஒட்டகத்துக்கு உணவூட்டி விட்ட மகிழ்ச்சியில் நம்மப் பையன் கை கொட்டிக் குதூகலித்ததைப் பார்த்து மகிழ்ந்திருந்த எனக்கு, "இது தாம் பாய் நம்ம ஒட்டகம். எத்தன கிலோ தேறும்னு சொல்லுங்கப் பாப்பம்', என்று நண்பர் ஒரு கேள்வியை முன் வைத்தபோது அந்த அற்புதமான பிராணியின் மேலே ஓர் அனுதாபம் பிறந்தது.

ஒட்டகத்தோடு ஒன்றிப் போன நம்மப் பையனை அதனிடமிருந்து பிரித்தெடுத்துக் கூட்டிக் கொண்டு போக ரொம்ப ப்ரயத்தனம் வேண்டியிருந்தது.

"வூட்ல போய் ஹோம் ஒர்க் செய்ய வேண்டாமா ராஜா, மம்மி திட்டுவாங்கல்ல?' என்று அவனுடைய அம்மாவைக் குறித்த பயத்தை ஊட்டி அவனைக் கையைப் பிடித்துக் காருக்கு வழி நடத்திப் போகையில், ஒட்டகத்தைத் திரும்பித்திரும்பிப் பார்த்தபடியே அரை மனசோடு நடந்தான்.

“இந்தக் கேமல் எனக்கு ரொம்ம்ம்பப் புடிச்சிருக்கு டாடி, டாடி டாடி, நாளக்யும் இதப்பாக்க நாம வரலாமா டாடி?''

“ம். வரலாம் வரலாம்.''

“ஹை தாங்க்யூ டாடி. நாளக்கி ஸ்கூல்லயிருந்து வந்தவொடன நா ஹோம் ஒர்க் எல்லாம் செஞ்சிர்றேன். அப்புறம் நாம இங்க வரலாம். அப்பதான் இந்தக் கேமல ரொம்ப நேரம் பாத்துட்டே இருக்கலாம். மம்மியும் திட்ட மாட்டாங்க. ஒக்கே டாடி?''

“ஒக்கே ஸன்.''

காரில் போய்க் கொண்டிருக்கிற போதும் மகன் கேமல்க் கனவுகளோடேயே இருப்பது புரிந்தது.

“ஏ ஃபார் ஆப்பிள். பீ ஃபார் பிஸ்க்கட். ஸீ ஃபார் என்ன டாடி?''

“பீக்கு பிஸ்கட்டன்னா ஸீக்குச் சாக்லட்.''

“ராங். ஸீ ஃபார் கேமல்.''

மகனுடைய புத்திசாலித்தனத்தில் மனசு லயித்தாலும், என்னை அவன் தப்பு சொன்னதற்காக நம்ம ஈகோ இடிக்கப் பார்த்தது.

"சாக்லட்டச் சாப்பிடலாம். கேமலச் சாப்பிட முடியாதே' என்று வாயில் வந்து தொலைத்த பின்னால் தான் அப்படி ஒரு வாக்கியத்தைத் துப்பியிருக்க வேண்டாமே என்று உறுத்தியது.

ஆனால், பக்கத்து ஸீட்டிலிருந்த நண்பர் என்னுடைய உளறலுக்கு ஒரு மறுமொழி வைத்திருந்தார். “திரும்பவும் நீங்க ராங் பாய். கேமலச் சாப்புடலாம். பக்ரீதுக்கு இந்த ஒட்டகத்தக் கசாப்புப் போடத்தானே போறோம்.''

நண்பருடைய அராஜகமான சொற் பிரயோகத்தில் அதிர்ந்து போய், மகனுடைய முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று கார்க் கண்ணாடியில் பிம்பத்தைப் பார்த்தேன்.

நல்ல வேளை. பின் ஸீட்டிலிருந்த மகன், காருக்குள்ளே கவனமில்லாமல் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.

நிம்மதியாயிருந்தது.

அந்த நிம்மதியை நீடிக்க விடக் கூடாது என்று சபதமெடுத்துக் கொண்டிருக்கிற மாதிரி நண்பர் திரும்பவும் வாயைத் திறந்தார்.

“ஒட்டகக் கறி நீங்க சாப்ட்டிருக்கீங்களா பாய்? ஆஹா, பஞ்சு மாதிரி ஸக்ஷ்ஃப்ட்டா இருக்கும்!''

"இவன் முன்னால வச்சி இப்டியெல்லாம் பேசாதீங்க பிரதர்,' என்று நான் ஆட்சேபித்ததைக் கண்டுகொள்ளாமல் பாமரத்தனமாய் ஹாஸ்யம் பண்ணிக் கொண்டிருந்தார் நண்பர்.

“முன்னால இல்லியே, அவன் பின்னால தான பாய் இருக்கான்...''

எஸ்க்கேப் ஆவதற்கு வழி ஏதும் இல்லாததால் நண்பரின் சிரிப்புத் துணுக்கை சகித்துக் கொண்டேன்.

நண்பர் சொன்னால் சரியாய்த்தானிருக்கும் என்று முன்பு கொடுத்த ஸர்ட்டிஃபிக்கேட் வாபஸ்.

சொன்ன மாதிரியே அடுத்த நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உட்கார்ந்து மாங்கு மாங்கென்று வீட்டுப் பாடங்களை செய்து முடித்தான். அம்மா ஆச்சர்யப்பட்டுப் போனாள். சொல்லாமல் கொள்ளாமல் மழை கிழை வந்து விட்டதா என்று ஜன்னலுக்கு வெளியே வானத்தைப் பார்த்தாள். அப்புறம், புருவங்களைச் சுருக்கி என்னைப் பார்த்தாள்.

எல்லாம் விஷயமாத்தான் என்று அவளைக் கையமர்த்திய என்னைக் கையைப் பிடித்துக் காருக்கு அழைத்துப் போனான் நம்மப் பையன்.

வழியில் வாகனத்தை வழிமறித்து, நண்பரும் ஏறிக் கொண்டார்.

முதல் நாளை விட, ரெண்டாம் நாளில் ஒட்டகத்தோடு உறவாடக் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ள முடிந்தது என்பது மகனுக்குக் கூடுதல் சந்தோஷம் கொடுத்தது.

பிரியாவிடை பெற்றுக் கொண்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, "கேமல்க்குட் டாமில்ல என்ன பேர் டாடி?' என்று சந்தேகங் கேட்டான் மகன்.

"டாமில் இல்ல. தமிழ்' என்று அவனைத் திருத்தினேன்.

“சொல்லு, தமிழ்.''

“தமிழ். நா சொல்லிட்டேன். நீங்க சொல்லுங்க டாடி. கேமலுக்கு என்ன பேர்?''

“ஒட்டகம்''

கேமல்க் கனவுகளிலிருந்து அவன் ஒட்டகக் கனவுகளுக்குத் தாவி, கனவுகளில் ஆழ்ந்து போனான்.

நண்பரும் வாயைத் திறக்காத சூழலில் முன்பு எப்போதோ கேள்விப்பட்ட ஒரு ஒட்டகக்கதை என் நினைவில் உலா வந்தது.

குட்டி ஒட்டகம் ஒன்று தன்னுடைய தாய் ஒட்டகத்திடம் இப்படிக் கேட்டதாம்.

“அம்மா, நம்முடைய கால்கள் ஏன் இவ்வளவு நீளமாகவும், பாதங்கள் அகலமாகவும் இருக்கின்றன அம்மா?''

“நாம் பாலைவனத்தில் வாழவும், மணற்பாங்கான தரையில் நடமாடவும் பணிக்கப்பட்டிருக்கிறவர்கள் மகனே. நீளமான கால்களும், உறுதியான பாதங்களும் இருந்தால்தான் பாலை மணலில் நாம் நடப்பதும் ஜீவிப்பதும் சாத்தியம்.''

“மற்ற விலங்குகளுக்கு இல்லாத வகையில், நாசித்துவாரத்தை மூடித்திறக்கிற வசதி நம் இனத்துக்கு மட்டும் இருக்கிறதே, ஏன் அம்மா?''.

“பாலைவனத்தில் மணற்புயல் வீசுகிற போது, மூக்கை மூடிக் கொள்கிற வசதி இருந்தால்தான் மகனே நாம் மூக்குக்குள்ளே மணல் புகுந்து கொள்கிற அசம்பாவிதத்தைத் தடுக்க முடியும்''.

“தண்ணீர்த் தாகமே நமக்கு எடுப்பதில்லையே, ஏன் அம்மா?''

“தண்ணியில்லாக் காடான பாலைவனத்தில் வாழ விதிக்கப்பட்டிருக்கிற நம்முடைய உடற்கூறு, ஒரே நேரத்தில் நாற்பது நாட்களுக்குத் தேவையான தண்ணீரை உள்ளிழுத்து சேமித்து வைத்துக் கொள்கிற வசதியோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் அடிக்கடி தாகமெடுக்காத வரப்பிரசாதத்தை நாம் பெற்றிருக்கிறோம்''.

“அதெல்லாம் சரிதான் அம்மா, பாலைவனத்தில் வாழ்வதற்கான வசதிகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றிருக்கிற நாம், இந்த மிருகக்காட்சி சாலை வேலிகளுக்குள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறோம்?''.

நண்பரிடம் இந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளலாமா? வேண்டாம். சும்மா இருக்கிறவரின் வாயைக் கிளறி வைக்க வேண்டாம்.

மகனிடம் சொல்லலாம்.

அதற்கு சில வருஷங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

சில வருஷங்கள் பொறுத்திருக்க நான் ரெடி. ஆனால், அடுத்த நாள் வரை கூடக் காத்திருக்க நம்ம மகனுக்கு மனசாகவில்லை.

ராத்திரி தூங்குகிற வரைக்கும் ஒட்டகம் ஒட்டகம் என்றே அரற்றிக் கொண்டிருந்தான், அவனுடைய அம்மாவிடம்.

காலையில் எழுந்ததும், சாயங்காலம் பார்க்கப்போகிற அவனுடைய அபிமான ஒட்டகத்தைக் குறித்த கற்பனைகளோடேயே பள்ளிக் கூடத்துக்குப் புறப்பட்டான்.

ஒட்டகத்தை அவன் பிரஸ்தாபிக்கப் பிரஸ்தாபிக்க, இன்னும் நாலே நாளில், பக்ரீத் பெருநாளில், இவனுக்குப் பிரியமான, பரிதாபத்துக்குரிய இந்தப் பிராணி, பிரியாணியாகிவிடப் போகிற அவலம் என்னை சோகப்படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கொடுமை இவனுக்குத் தெரிந்தால் எப்படித் துடித்துப் போவான்! தெரிந்து விடவே கூடாது கடவுளே.

ஆறறிவு படைத்த மனிதனுடைய புலால்ப் பசிக்கு தினம் தினம் இரையாகிப் போகிற எல்லா உயிரினங்களுமே பரிதாபத்துக்குரியவை தானே!

கோழிகள், வாத்துகள், வான் கோழிகள், முயல்கள், ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள்....

கோழியிறைச்சிக் கடைகளும், ஆட்டிறைச்சிக் கடைகளும் வீதிக்கு மூன்று இருக்கின்றன. அரசாங்க மதுக் கடைகள் கூட வீதிக்கு ரெண்டு தான் இருக்கின்றன.

கிட்டத்தட்ட எல்லாக் கோழிக்கடைகளிலுமே பொதுவான ஒரு வார்த்தை பெயர்ப்பலகையில் காணப்படும்.

"ஹலால்'

அப்படியொரு ஹலால் கோழிக்கடைக்குள் பிரவேசித்து கோழிக்கறி கேட்டேன்.

"இந்தாப்பா கோழியொண்ணு போடு' என்று முதலாளி உத்தரவு போடவும், டீன் ஏஜ் ஊழியனொருவன் உள்ளேயிருந்து வெளிப்பட்டு, கூடைக்குள்ளே கையை விட்டுக் கோழியொன்றை அமுக்கிப் பிடித்தான். கோழியின் உடம்பைத் தன்னுடைய கக்கத்தில் இறுக்கி நெருக்கியபடி அதே கையால் அதனுடைய கழுத்தை வளைத்துப் பிடித்தான். மறு கையிலிருந்த கத்தியை கொண்டு கோழியின் கழுத்தில் ஒரு போடு போட்டான். தலை துண்டாய்ப் போனது.

திக்கு முக்காடிப் போய், "ஹலால்னு போர்டுல எழுதியிருக்கீங்களே....' என்று நான் இழுத்ததற்கு முதலாளியின் பதில் நறுக்கென்று வந்தது.

“அதுக்குத் தானே சார் ஒரு துலுக்கப் பையன வேலக்கி வச்சிருக்கேன்''.

கழுத்தை அறுப்பதில் கூட சில நியதிகள் உண்டு. கழுத்து துண்டாய்ப் போய் விடாதபடி லாவகமாய்க் கத்தி போட வேண்டும், அல்லா பெயரைச் சொல்லி அறுக்க வேண்டும், அப்படி அறுக்கப்பட்டது தான் ஹலால் ஆகும் என்று அறியத் தரப்பட்டிருந்த என்னுடைய டீன் ஏஜில் நானே பல கழுத்தறுப்புகளுக்கு உடந்தையாயிருந்திருக்கிறேன்.

ஆனால் இப்போதெல்லாம் கழுத்தறுப்புக் காட்சிகளைக் காண நேர்ந்தாலே மனசு பதை பதைக்கிறது. விசேஷ காலங்களில் ஆடுகள் அறுபடுகிற ஆடுகளத்தை அண்டவே மனசாவதில்லை.

எப்போதோ வாசித்த சிவசங்கரியுடைய புராதனச் சிறுகதையொன்றில் மாடறுக்கிற காட்சியை வாசித்தது இன்னும் மனசில் கருஞ்சிகப்பு ரத்தமாய் உறைந்து கிடக்கிறது.

ஆட முடியாதபடி அசைய முடியாதபடி கட்டிப்போட்டு விட்டு அடி மாட்டின் கொம்புகளுக்கிடையே கழி கொண்டு தாக்குவார்களாம். சித்ரவதை தாங்காமல், அம்மா அம்மா என்று அலறியபடி மாடு மூர்ச்சையாகிப் படுத்து விட்ட பின்னால் கழுத்தில் கத்தி போடுவார்களாம்.

தளவாய் அரியநாதர் என்றொரு அதி மேதாவி முன்னொரு காலத்தில் இருந்தாராம்.

இக்கட்டான சூழ்நிலைகளில் சமயோஜிதமாய் யோசனைகளை வாரி வழங்குவதில் கெட்டிக்காரராய் இருந்தவராம்.

முரட்டு எருமைக் கடா ஒன்றை பலி கொடுக்க வேண்டிய வைபவத்தில், கடாவின் பின் கழுத்தில் அரிவாள் கொண்டு ஒரே போடு போட்டு தலை தனியாய், உடல் தனியாய்ப் பிரிக்க வேண்டுமென்று ஏற்பாடு.

ஆனால், அரிவாளுக்குப் பாதை விடாமல் கொம்புகள் மறித்துக் கொண்டு நிற்க, சிக்கலை சீராக்க அரியநாதர் வரவழைக்கப்பட்டாராம்.

அரியநாதரின் ஆலோசனைப்படி தரையில் புல்லையும் தீவனத்தையும் பரப்பி வைக்க, அதை உண்ணுவதற்கு எருமை தலை தாழ்த்த, கொம்புகள் மேலெழும்பி கழுத்துக்கு வழி ஏற்படுத்தித்தர, தயாராயிருந்த கொலைகாரன் ஒரே வீச்சில் தலையைத் துண்டாக்கி சாதனை புரிந்தானாம்.

எட்டாங் கிளாஸ் தமிழ்த் துணை நூலில் கற்பிக்கப்பட்ட கதை. எட்டாங் கிளாஸ’க்கு இந்த திகில்க் கதையெல்லாம் தேவைதானா! பாடத்துக்குள்ளே இந்த பாதகத்தைப் புகுத்தின முகந்தெரியாத அந்தப் பாவியை அரியநாதரிடம் போடுக் கொடுத்தால் என்ன என்று அந்தச் சின்னப் பிராயத்திலேயே எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இறந்த கால எருமைக் கதையிலிருந்து திரும்பவும் இப்போது நிகழ்கால ஒட்டகக் கதை.

ஆக, இப்படியே ஒட்டகத்துக்கும் என் மகனுக்குமான பாசப் பிணைப்பு ஐந்து நாட்கள் நீடித்தது.

ஐயா ஸ்கூல் விட்டு வந்தவுடன் வீட்டுப் பாடத்தை முடித்து விட்டு ஒட்டக தரிசனத்துக்கு ஓடுவதும், உறவாடி விட்டு, பிரிய மனசில்லாமல் டாட்டா காட்டிவிட்டு டாடியோடு வீடு வந்து சேர்வதும் நாலு நாள் கோலாகலமாய் நடந்தது.

ஐந்தாவது நாள்.

இன்றே கடைசி.

விடிந்தால் பக்ரீத்.

விடிந்தால் பக்ரீத் என்பது இவனுக்குத் தெரியும். ஆனால், பக்ரீதுக்கு இவனுடைய ஒட்டகம் பரலோகம் போய்விடும் என்கிற விவரம் தெரியாது.

தெரியவும் கூடாது.

பக்ரீத் அன்றைக்கு, கூட்டம் வருவதற்கு முன் இடம் பிடிக்க வேண்டும் என்று கொஞ்சம் சீக்கிரமாகவே தொழுகைக்கு வந்து விட்டோம் நண்பரும், நானும், மகனும். மசூதி வளாகத்துக்குள்ளே நுழைந்ததுமே என்னிடமிருந்து தன்னுடைய கையை விடுவித்துக் கொண்டு ஓடினான் ஒட்டகத்தை நோக்கி.

“என்னோட ஃப்ரண்ட் பசியோடயிருப்பான் டாடி, கொஞ்சம் எல போட்டுட்டு ஓடி வந்திர்றேன்.''

இனி என்றைக்கு இதற்கு இவன் இலை போடப் போகிறான். போட்டு விட்டு வரட்டும் என்று காத்திருந்தேன்.

"பாய், அவனக் கூப்டுங்க. லேட்டானா நமக்கு எடம் போயிரும்' என்று துரிதப்படுத்திய நண்பரைக் கண்டு கொள்ளாமல் காத்திருந்தேன்.

கீழே கிடந்த ஒரு கொம்பை எடுத்து இவன் தன் நண்பனுக்கு உணவூட்டிவிட்டு, "இரு இரு, நமாஸ் படிச்சிட்டு வந்து ஒனக்கு நெறய்ய எல பறிச்சித் தர்றேன்' என்று என்னிடம் ஓடி வந்தான்.

“சரி சரின்னு அது தலையாட்டுது டாடி''.

ஒண்ணரை மணி நேரங் கழித்து, தொழுகை முடிந்து, வெளியே வந்த போது ஒட்டகம் கட்டப்பட்டிருந்த இடம் வெறுமையாயிருந்தது.

"என் ஃப்ரண்டக் காணல டாடி' என்று கலவரமானவனை எந்தப் பொய்யைச் சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை.

"அது இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சில்ல, அத ஊருக்கு அனுப்பி வச்சிருப்பாங்க கண்ணு' என்றேன்.

“எந்த ஊருக்கு டாடி?''

“அது எங்கயிருந்து வந்ததோ, அந்த ஊருக்குத் தான்''.

“என்ட்ட அது சொல்லவேயில்ல டாடி''.

“சொல்லிட்டுப் போற ஊர் இல்லடா அது''.

பக்கத்திலிருந்த நண்பர் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த போது என்னுடைய செல்ல மகன் சிநேகித சோகத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தான்.

காரில் போகிற போது தன்னுடைய சோகத்துக்கு மகன் சொல் வடிவம் கொடுத்தான்.

“என்னோட ஃப்ரண்ட் திரும்பி வரவே வராதா டாடி?''

இவனுடைய ஏக்கக் கேள்விக்கு நான் வாயடைததுப் போயிருந்த தருணத்தில் நண்பர் வாயைத் திறந்தார்.

“வேற ஒரு ஃப்ரண்ட் வரும். அடுத்த வருஷம் பக்ரீதுக்கு. அப்பறம் அதுவும் ஊருக்குப் போயிரும்''

"பிரதர் ப்ளீஸ், கொஞ்சம் சும்மா இருங்க' என்று நான் அவருடைய வாயை அடைக்கப் பார்த்தேன்.

சரியாய் அடைபடவில்லை.

என் காதருகே நெருங்கிக் கிசுகிசுத்தார்.

“ஒட்டகக் கறிக்கி இன்னும் ஒரு ஷேர்க்கு ஆள் தேவப்படுதாம் பாய். ஒங்க பேரச் சொல்லிரட்டுமா?''

எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

"வாயப் பொத்திக்கிட்டு சும்மா வாங்களேன்யா' என்று நான் எரிந்து விழுவேன் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவருடைய மனசு புண்பட்டுப் போனது புரிந்தது

பரவாயில்லை என்னுடையவும் என் மகனுடையவும் மனங்கள் ரணப்பட்டுக் கிடப்பதை விட அவருடைய புண் பரவாயில்லை.

அமைதியாய் வண்டி போய்க் கொண்டிருந்த போது இருந்தாற் போல நம்மப் பையன் குதூகலித்துக் கூவினான்.

“டாடி, ஸ்டாப் ஸ்டாப். பாருங்க இந்தப் போஸ்டர்ல என் ஃப்ரண்டோட படம் போட்டிருக்கு.''

அவனுடைய கட்டளைக்குப் பணிந்து வண்டியைப் பக்கவாட்டில் ஒதுக்கி நிறுத்திப் பார்த்தால், அவன் சுட்டிக் காட்டிய திக்கில், ஒட்டகத்தின் படத்தோடு கூடிய கூட்டுக் குர்பானிப் போஸ்டர்.

“அந்தப் போஸ்டர்ல என்ன எழுதியிருக்கு டாடி?''

“அது.... வந்து.... ஒன்னோட ஃப்ரண்ட ஊர்லயிருந்து வந்ததில்லியா, அப்ப அத வெல்க்கம் பண்ணி எழுதியிருக்காங்க. பழைய போஸ்டர். இப்பத்தான் ஒங்கண்ல பட்டிருக்கு''.

ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் படிக்கிற பையனுக்கு, கூட்டுக் குர்பானியை எழுத்துக் கூட்டிக் கூட வாசிக்க இயலாமலிருப்பது இப்போதைக்கு அப்பாடா என்றிருந்து.

நண்பர் இப்போது நமட்டுச் சிரிப்பு சிரிக்கவில்லை. கம்மென்றிருந்தார். பையன் தான் பேசினான்.

“இல்ல டாடி. இது என்னோட ஃப்ரண்ட் இல்ல. என்னோட ஃப்ரண்ட் அழகா ஸ்மார்ட்டா இருக்கும். இந்தப் படம் நல்லாவேயில்ல. இது வேற ஒட்டகம்''.

அது வேறே ஒட்டகமாகவே இருந்திருக்கக் கூடாதா என்றிருந்தது எனக்கு. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை.

இது முடிந்து போன கதை.

இன்னேரம் ஒட்டகத்தைக் கூறு போட்டுக் கொண்டிருப்பார்கள்.

செய்யக் கூடியது இனி ஒன்றுமில்லை.

இறைவனிடம் ஒரு பிரார்த்தனை வைக்கலாம்.

மிருகங்களுக்கும் மோட்சம் இருக்கிறது என்றிருந்தால், என் மகனுடைய நண்பனாயிருந்த அந்த ஒட்டகத்துக்கு மோட்சத்தை அருள் ஆண்டவனே என்று பிரார்த்தனை வைக்கலாம்.

Pin It