ஆஜானுபாகுவாக வளர்ந்து, அண்ணாந்து பார்த்துப் பேசுகிற மாதிரி நெடிய உருவம். தலை ஆங்கில யூ மாதிரி வழுக்கை யூ வடிவத்தின் வாய்க்காலும் போலத்தான் அவரது தலையும், அதில் விழுந்த வழுக்கையும்.

ஆனால், மீசை மாத்திரம் மேலுதடு பூராவும், அடர்த்தியாக, தடித் தடியான முடியா, இரும்பு பிரஷ் மாதிரி உறுதியா நிறைந்திருக்கும். அவரது கண்கள், தூங்கியும் தூங்காமலும், இரவு நேர வேலைக்காரன். அரைத் தூக்கத்தில் உலவுவதைப் போல் தோன்றும்.

பகற்பொழுது உழைப்பு, இரவு நேரப் பணியென ஒரு தனியார் நிறுவனத்தின் முப்பத்தைந்து வருட ஒட்டுனராய் உழைத்து, ஒய்வு பெற்று விட்டவர்தான் அவரும்.

அதனால் மட்டும் விழிகள் சோர்ந்து, களையிழந்து, தனது சோபையை இழந்து விடவில்லை. மான இழப்பால். அவமானக் கொள்முதலால் அவரது நெஞ்சுக்குள்ளே நடக்கும் தர்க்க யுத்தம். அலட்சியம், புறக்கணிப்பு, உதாசீனம். அதனால் உள் மனதின் குமைச்சல், கொந்தளிப்பு. முதுமை, இயலாமை, அதனால் விளைகிற ஆதங்கம், ஆயாசம். உள்ளம் உற்சாகம் இழந்து, உறங்குகிற மாதிரி விழிகள் சாம்பிக் கூம்பி, ஒளி மங்கி தனது இயல்பினை இழந்து விட்டது.

கூட்டுக் குடும்பம் தான். ஆறு குழந்தைகளுக்கு அப்பன்தான். எல்லோருமே எல்லாமும் பெற்று சமூகத்தின் மதிப்பும், மரியாதையும் உடைய தொழில் புரிந்து, பொருளீட்டுபவர்கள் தான்.

நகைக் கடை முதலாளி, அரசு அச்சக ஊழியர், விமான ஓட்டுனர், ஒர்ஷாப் முதலாளி இப்படியான அந்தஸ்த்தில் இருப்பவர்கள்தான்.

ஆனால், யாரோடும் மனரீதியான எந்த ஒட்டுறவும் இல்லை. அந்நியோன்ய மற்ற, அந்நியத்தனமான உறவு அந்த உறவுகள் என்பதும், வெளியுலக மேல்பூச்சுத் தோற்றம் தான். உள்ளுணர்வில் இல்லை, இல்லாமல் ஆகி வெகு நாளாகி விட்டது.

மனைவியென்கின்ற ஒரு ஜீவன் இருந்திருந்தா, ஆத்மார்த்தமான உறவும், உரிமையும் இருந்திருக்கும். உரிமையற்ற ஒரு உறவு, உறவாகி விடுமா? அந்த அம்மா காலமாகி அஞ்சாறு வருசமாச்சு.

அந்த அம்மாளோடு உறவு, உரிமை அன்பு நிறைந்த அதிகாரம், இந்த வீட்டு அங்கத்தினர்களோடு, தனக்குள்ள பாசப் பிணைப்பு, எல்லாமே கெடு முடிந்த பத்திரமாக, காலாவதி ஆகிவிட்டது. எல்லாவற்றையும் அந்த அம்மாள் தன்னோடு வாரிச் சுருட்டிக் கொண்டு போய் விட்டது, மாதிரி தோன்றுகிறது. உரிமையற்ற உறவு பிணம் நடந்து திரிந்து உலாவுகிற மாதிரிதான்.

சாப்பாடு நேரங்களில், எல்லோரும் கூடி உண்ணுகையில், தன்னையும் சாப்பிடுங்க மாமான்னு மதிப்புக் கலந்த அன்புடன் அழைத்ததில்லை, ஏதோ வேண்டா வெறுப்பாகப் போட்டு வைப்பதை, இவரும் வேறு வழி இல்லாது, உயிர் காக்க உண்டு தொலைக்க வேண்டி இருக்கிறது. குழம்பு பத்தலை, வெஞ்சனம் இல்லை, மறுசோறு வேணும் எதுவும் கேட்பது இல்லை, அவர்கள் இவரைக் கவனித்து பரிமாறுவதும் இல்லை. ஏதோ உருட்டிப் புறட்டி உள்ளே தள்ள வேண்டியது தான். நாக்கை இழுத்துப் புடுச்சிக்கிட்டு, மாட்டுக்கு மருந்துருண்டை தள்ற கத தான்.

உண்ணும் வேளைகளில், முன்னங்கால் நீட்டிப் படுத்துக் கொண்டு, ஏக்கப் பார்வை பார்க்குமே நாய்கள் இந்தக் கவளத்தைத் தான் தனக்கு வைக்க மாட்டார்களோ? அடுத்த கவளமாவது கிட்டுமா? ஏறத்தாழ அதே நிலைமைதான் அவருக்கும். இன்னும் ஒரு கை சாப்பிட்டால், நிறைவாகும் என்று அவருடைய வயிறு, அவருக்கு உள்ளுணர்வால் உணர்த்துகிற போது, சற்று தலை நிமிர்ந்து நோட்டமிடுவார். ஊஹூம் யாரும் கவனிக்க மாட்டார்கள். அவர்களது உறவில், சகஜநிலையற்ற ஒரு புழுக்கம் நிலை கொண்டு விட்டது. எனவே, தரவோ, பெறவோ இயலாது போய்விட்டது. அடுத்து தண்ணீரை உள்ளே அனுப்பி, வயிறை சமாதானப்படுத்த வேண்டியது தான்.

அவுங்க தகுதிக்கு ஏத்த மாதிரி, எல்லா வசதியும் படைத்த பணக்கார மனைவிகள். அவரோ, விவசாயியாக வாழ்க்கையைத் துவஙகி தொழிலாளியாய் வளர்ச்சியடைந்து, அதிலேயே உழன்று உழன்று அதுவாகவே உணர்வும், உணர்ச்சியும் பெற்று, உறைந்து போன உணர்வுகளோடு வாழ்பவர்.

வளர்ச்சியும் வந்தது, வசதியும் மிகுந்தது வர்க்கமும் மாறிப் போச்சு. ஆனால் அவரால் மாற முடியவில்லை மாறத்தான் முடியுமா? அவருக்கு அது சாத்தியந்தானா?

அவரளவில், உணர்வு பூர்வமாகவோ, புத்தி பூர்வமாகவோ சாத்தியப்படாமலேயே போய்விட்டது. அவர்களது மேனா மினுக்கித்தனமான, பொய்யான சிரிப்பில் உள்ளம் மறைக்கிற, கபடம், ஆணவம் கமழுகிற டாம்பீகத்தனம் பல சமயங்களில் அவருக்கு அருவருப்பாகவே தோன்றும், இயல்பு நிலையற்ற செயற்கைத் தனம் அவரது மனம் ஒட்டுறவு கொள்ள இசையவில்லை.

அவருக்கு சோறு கிடைக்கிறதோ இல்லையோ, பீடியும் தீப்பெட்டியும் கண்டிப்பாக வேண்டும். பாக்கெட்டில், சில்லரைப் புழக்கம் தென்பட்டால் சிகரெட்டும் வேண்டும். படுக்கைக்குப் போகும் போது, தன்மையறியாமலேயே கைகள் தடவிப் பார்த்து, இருக்கிறது என்ற நிம்மதி பிறந்தால்தான் தூக்கம் உண்டு.

ஒரு நாள் மகனிடம் செலவுக்குக் காசு இருந்தாக் குடுப்பான்னு ரொம்பவும் தாழ்ந்த தொனியில் தான் கேட்டார். ஏன்? எதுக்கு? என்ன செலவு ஒனக்கு? அதுதான் மூணு வேளையும் ருசிருசியாக் கொட்டிக்கிர்றீல்ல.? அப்புறம் என்ன செலவு இருக்கு ஒனக்கு...?

ஆத்திரம் கொப்பளிக்கும் முகம், அலட்சியம், வசதித்திமிரால் விளைந்த செருக்கு, மகனின் தொனியில் வெளிப்பட்ட வேகம், எரிச்சல், கண்களில் வீசிய அனல். ஓயாமல் வெளிப்படும் ஒருமை விளிப்பு, இப்படி ஒவ்வொருவரிடமும், வெவ்வேறு தருணத்தில் இதே போலத்தான் அவருக்கு அனுபவம் ஏற்பட்டது.

அவரது மனம் கொதிக்கும், குமுறும், குமையும்

தனது இரத்தத்தை வியர்வையாய் முறிச்சுப் பாடுபட்டுக் கொணர்ந்த பணத்தை, தாய் முதல் பிள்ளை வரை, ஒவ்வொருவராக எண்ணச் சொல்லி அழகு பார்த்தவர். 12 மணி நேர உழைப்பிற்கு, 75 காசு கூலி பெறும் காலத்தில் வாழ்க்கையைத் தொடங்கியவர். அவருக்கு வாழ்க்கையே வேலை வேலையே வாழ்க்கை.

நாளைக்கு 18 ரூபாய் சம்பளம் பெறும் உயர்வு வந்த காலத்தில், காலை டிபன் 15 காசு , மதியம் 1 ரூபாய், இரவு 2.50 என இப்படியாக மிச்சப்படுத்தி மாதச் சம்பளத்தன்று, குழந்தைகளுக்கு நூறிலிருந்து நூற்றி இருபது வரை தின்பண்டங்களை விதவிதமாக வாங்கிக் கொணர்ந்து குவித்து, எல்லோருக்கும் பங்கு வைத்து, தின்னப் பார்த்து அதில் அழகு கண்டு, பெருமிதம் கொண்டு, கண்களில் ஆனந்தம் பொங்கப் பார்த்து ரசித்தவர்.

வாழைப்பழம் வாங்க மனம் நினைக்குமாயின், தாரோடு தூக்கி வந்து, சீப்புக் சீப்பாகக் கொடுத்து உண்ண வைத்து மகிழ்ந்தவர்.

பலாப் பழச் சீசன் வந்தாலும் அப்படித்தான், இரண்டு, மூன்றைக் கொண்டு வந்து இரண்டு மூன்று நாளைக்கு வீடே, பலா மணந்தான்.

அவர் மனதால் ஒரு குழந்தை, மனதால் மட்டுமே வாழ்ந்தவர், வாழத் தெரிந்தவர் வாழ முடிந்தவர் ‹து, ‹ட்சுமம், மர்மம் யாராவது வர்ம இரகசியமாய் கிசு கிசுத்தால், இவரது மனம் உதறல் எடுக்கும் புரிபடவே மாட்டாது.

அவரால் நல்லவராக வாழ முடிந்ததே தவிர, வல்லவராக வாழ முடிந்ததும் இல்லை, முயற்சித்ததும் இல்லை ஏமாற்றுவதே வாழ்க்கை நெறியாகக் கைக்கொண்டுவிட்ட சமூகத்தில் இவர், பிறருக்கு ஒரு துன்பமெனில் இவரால் உதவ இயலவில்லையாயினும், மனம் குற்ற உணர்வு கொள்ளும். அவரது இயல்பே அப்படி.

நாளைக்கு நமக்கு என்ன நேரும் தனக்கென ஒரு தனிச்சேமிப்பு வேணும், தன்னைக் காத்துக் கொள்ளவும் வேண்டும்., பிறரை நம்பக்கூடாது என்ற புரிதலும். அறிவும் அவருக்குத் தட்டுப்படவே இல்லை. அவரால் யாரையும் பிறராக எண்ணவோ, சுய நலத்தின் பொருட்டு வெறுக்கவோ முடிந்ததில்லை.

அவருக்கு அன்பைப் பொழியத் தெரியும், தன்னையும் தனது வாழ்நாளையும் அர்ப்பணிக்கத் தெரியும், அதிகாரம் பண்ண தெரியாது முயன்று முயன்று பார்த்தும் முடியாமலேயே போய்விட்டது.

எல்லோருக்குமே அவரது வயதும், உருவமும் தெரிந்ததே தவிர, உள்ளம் புரியவே இல்லை என்னைப் புரிந்து கொள் என வகுப்பா நடத்த முடியும்? அவரது இதயத்தின் அடி ஆழத்தில், அந்தரங்கமாக ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது. யாருக்குத் தெரியும்? தெரிந்து கொள்ள யார் முயற்சித்தார்கள்? அந்த அமைதியற்ற இயந்திர உலகத்தில்?

இளமையிலிருந்து 40, 45 வரை குறிபோட்டு, முன்னங்கால் தூக்கி, நாலுகால் பாய்ச்சலில் பறந்து கொண்டிருந்த அவரது மனக்குதிரை இப்பொழுதுதெல்லாம் கமலைத் தண்ணீர் இறைக்கும் மாடுகளைப் போல், இதே மாதிரியான அனுபவங்களும், ஏற்பட பின்னோக்கியே பாய்ந்து நடந்து வந்த, கடந்து வந்த அப்பாவித்தனமான வாழ்க்கையை அசைபோட்டுக் கொண்டே இருக்கிறது. நீண்ட அசை போடுதலுக்குப் பிறகு நெஞ்சு ஏற இறங்க ஒரு பெருமூச்சு.

ச்சே! அறிவே இல்லாமேப் போச்சே நமக்கு என்று தன்னையே நொந்து கொள்வார். அவரது வாழ்க்கைப் புத்தகத்தின் எந்தப் பக்கத்தைப் படித்தாலும் ஏமாற்றம்... ஏமாற்றம்... என்றே அச்சிடப்பட்டிருக்கும். 

இதைப்பற்றிய அங்கலாய்ப்பு, ஆத்திரமாக உருவெடுக்கும் போது, தன்ணைத்தானே அறைந்து கொள்வார். மனம் திடீரென விழிப்புற்று, யாரும் பார்த்துவிட்டார்களோ எனப் பதைப்புற்று, சுற்று முற்றும் பார்த்துக் கொள்வார். தனக்கென ஏதாவது சேமித்து வைத்திருந்தால், இன்று கையேந்தி வசவு வாங்கும் நிலை நேர்ந்திருக்காது அல்லவா?

உடம்புக்கு முடியலை மாத்திரை வாங்கணும் ஆஸ்பத்திரிக்கிப் போகனும் என்கிற நிலை நேர்ந்த போது, அனுகூலமற்ற அனுபவங்கள் ஏற்பட்ட பிறகு, தயங்கி, அங்கம் குறுகி, மனம் ஒடுங்கி கையேந்தி இவர்கள் முன்னிலையில் நிற்பதில்லையென உறுதி பூண்டார்.

அதன் பிறகு பல உத்திகளையும், பல அவதாரங்களையும் மேற்கொண்டார். பழசுபட்டுப்போன அரிக்கன் விளக்குகளை சேமித்து பழுது நீக்கி, வர்ணம் பூசி விற்பது, சிமெண்டுப் பையை சேகரித்து விற்பது, ஊர் உராய்ச் சென்று, பழைய பிளாஸ்ட்டிக், இரும்புக் கழிவுகளை சேகரித்து விற்பதுமாய் வாழ்க்கை வண்டியை உருட்டினார்.

அப்படித்தான் ஒரு நாள், தெருவில் கூவி அரிக்கன் விளக்கு விற்றுக் கொண்டு வந்தார். தனது இளைய மகனின் மோட்டார் பைக் மின்னலாய் பாய்ந்து, எதிரில் வந்து ஒதுங்கி விரைந்தது. இவர் கண்டும் காணாதது போல் ஒதுங்கி வழி நடந்தார்.

அன்றுமாலை, அவருக்கு வீட்டில் நல்ல பாட்டுக் கிடத்தது. எங்களைக் கேவலப்படுத்துக்குத்தான் நீ இப்படி தெருத்தெருவா அலையிறியா? குமறினான் மகன்.

இதிலே என் கேவலம்? அடுத்தவன் பொருளைத் திருடிக்கிட்டு வந்திட்டேனா? இல்லை எவன்கிட்டேயும் கட்டுப்பட்டு நின்னுட்டேனா?

இதிலே என்ன கேவலமா? வாயெ மூடுய்யா பாய்ந்து முன்னேறினான் மகன் வந்த வேகத்தில் நாலு சாத்து சாத்தி இருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் ஒதுங்கிக் கொண்டார். இது போன்ற பல்வேறு அனுபவஙகள் ஏற்பட்ட போதிலும், சிறிது நேர மனக் கொதிப்பிற்கு பிறகு சரி, சரி விடு நீர் அடித்து நீர் விலகி விடுமா என்ன? பாம்பும் பாம்பும் கடித்துக் கொண்டால் விஷமேறிக் கொன்று விடும்? அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான். நாம வாழ்க்கையைத் தொடங்கிய இடமும் வேறு, காலச் ‹ழ்நிலையும் வேறு. இப்ப ரொம்பவுந்தான் காலம் மாறி போச்சு. இந்த காலம், இவர்களை இப்படிதான் உருவாக்கும் போலருக்கு… என்று தனக்கு தானே சமாதானம் கூறிக்கொண்டு அமைதி அடைந்து விடுவார்.

விமான ஒட்டுனராய் இருக்கும் தனது நடுமகன் அன்று வந்திருந்தான். அப்பா நல்லாருக்கியா? கண்கள் ஒளிதுலங்க நெஞ்சுபுடைத்து பெருமிதம் கொள்ள வாயெல்லாம் பல்லாகத்தான் கேட்டான்.

மகன், அப்பனைப் போல பெயர் சொல்லி அழைத்தது, இருதயத்தில் யாரோ எதிர்பாராது ஈட்டியால் பாய்ச்சிய ரணம் அத்தோடு பேச்சை நிறுத்திக் கொண்டார்.

பிறகொரு நாள், குடும்ப அங்கத்தினர்களின் ஆலோசனையும், ஆராய்ச்சியும் நடந்தது. தங்களது தற்காலிக தகுதிக்கு ஏற்றவாறு, வீடு ஒன்று எழுப்பவும், அதற்குரிய வரைபடம் தயாரிக்கவும் நகரத்தில் சிறந்த பொறியாளர், என்று தேர்வு செய்யவும், பல வீடுகளுக்கும் போய்க் கவனித்து, தேர்ந்து முடிவெடுக்கும் வேலையில் குடும்பத்தார் அனைவருமே முனைந்திருந்தார்கள்.

ஒரு நாள், வரைபடங்களைப் பார்த்து, ஒவ்வொருவர் அபிப்பிராயங்களையும், விருப்பங்களையும், மருமகள்கள் உட்பட பகிர்ந்து கொண்டிருந்தார்கள், அவர்களது அபிப்பிராயங்களுக்கு ஊடே தனது மனதிலும் ஏதோ தோன்ற, ஒன்றைச் சொன்னார். தனது மூத்த மகன் யோவ் சின்னத்தம்பி ரிட்டையர்டு கேஸ் நீ சும்மா இருய்யா, ஒன்னக்கிட்ட இப்ப யோசனை கேட்டாகளா? நீ இன்னும் சின்னத்தம்தம்பியாவே இருக்கியே இது கம்யூட்டர் காலமுய்யா, உன்னுடைய கால்நடைக் காலமில்லே, புரிஞ்சிக்கோ என்ன? பெரிய இஞ்சினியர் மாதிரி யோசனெ சொல்ல வந்திட்டே.

மகன் முகத்தை ஏறிட்டுப் பார்த்து, தலை கவிழ்ந்து அறையை விட்டு வெளியேறினார்.

இப்படியான, அவமானச் சுருக்கலில், நெஞ்சு துடிக்கும் போது அவசர அவசரமாக ஒரு பீடியைப் பற்ற வைத்து வெறியோடு இழுத்து, உள்வாங்கி, புகையினை வெளியேற்றுவதே போல் உள் ரணங்களையும் வெளியேற்றி விடுவது சமீபகால வழக்கமாகி விட்டது.

சரி சரி விடு ஊரும் ஒலகமும், இவனுக வளர்ச்சி யெப் பார்த்து, வெளிலே மதிப்பாவும் உள்ளுக்குள்ளே பொறாமையும் கொள்ளுத, இது மாதிரி நமக்கு நேர்கிற, அவமான அசிங்கங்கள் வெளிலே தெரியுமா? வெளி ஒலகத்துக்குப் பெருமையாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஏப்படி இருந்தாலும் இன்னார் புள்ளெகன்னு தானே ஒலகம் சொல்லும்….?

விட்டுத் தொலையீடா சின்னத்தம்பி உச்சி வெய்யில்லே, கலங்கின சேத்துக்குள்ளே, மாட்டிக்கிட்ட தவளை மாதிரி இதுக்குள்ளேயே கொமஞ்சிக்கிட்டு மனசெப் போட்டு அமுத்திக்கிட்டு புள்ளே தொடையிலே பேண்டுட்டா, தொடெயெ அறுத்தா ஏறிஞ்சிர்றம்? தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டும், புத்தி புகட்டிக் கொண்டும் அமைதி அடைந்து விடுவார்.

சிறு இடைவெளிக்குப் பிறகு, நல்ல ஆர்க்கிடெட், டைத் தேர்வு செய்தது. அந்த நகரத்தில் இல்லாத புது மாடலில், வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது.

அவருக்கும் பல பொறுப்புகள் சுமத்தப்பட்டது, நிர்மாணப் பொருட்டுகளைத் தருவிப்பது, அதனைக் காவல் காப்பது, வேலை ஆட்களைக் கவனிக்கும் மேஸ்திரி காலை மாலை கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்றுவது, அவ்வப் போது தொழிலுக்குத் தேவைப்படும் பொருட்களை வாங்கி வந்து தருவது, சாரம் கட்ட உதவுவது, மணல் சலிப்பது, வருகிற பொருள்களுக்கு கணக்கு வைத்துக் கொள்வது இப்படியாகப் பல்வேறு அவதாரங்கள்….ஸ

வீட்டு வேலை தொடங்கியதிலிருந்து, வீட்டுச் சாப்பாடும் நின்று போனது, வீடு கட்டும் இடத்திற்கும் குடி இருக்கும் இடத்திற்கும் சற்றுத் தொலைவு தான். இவருக்கு யார் சோற்று மூட்டை தூக்குவது? பக்கத்திலிருக்கும் ஒரு நாலாந்தரக் கடையில், சாப்பிட்டுக் கொள்வது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அன்று முதல், இவர் ஒவ்வொரு வேளையும் உணவு தேடி அலைவதும், விரும்பியது கிடைக்காது, கிடைத்ததை உண்பதும், கிடைக்காத போது விரதம் மேற் கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

வீட்டுக்கு முக்கிய விருந்தாளிகள் வரும் போதும், வெளியிலிருந்து ஆர்க்கிடெட், போன்ற பிரதானப் பிரமுகர்கள் வரும் போதும் கறியென்றும், மீனென்றும் விருந்து உபச்சாரங்களில் வீடே அமளிதுமளிப்பட்டது. முதுமையினாலோ என்னவோ அதையெல்லாம் கேள்விபடும் பொழுது, அந்த உணவுகளின் மேல் விருப்பம் விஸ்வரூபம் எடுக்கிறது.

விமான ஒட்டுனராய் இருக்கும் மகன், வெளியூரில் தங்கிப் படிக்கும் போது, சில வேளைகளில் வீட்டில் கவிச்சி, புழங்கும் போது அந்த மகனின் நினைவு வரவே, தட்டில் இருக்கும் சோற்றை வெகு நேரம் பிசைந்து கொண்டே இருப்பார். நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒரு உணர்வு மேலேறி வரவே.. கண்களில் இருந்து சில சொட்டு உப்புத் துளிகள் சோற்றுக்குள் குதித்து விடும்.

“என்னங்க, சோத்துத் தட்டெ முன்னாடி வச்சிக்கிட்டு, சாப்பிடாமே குத்துக் கல்லாட்டம் இருக்கிறிய'' அப்படி என்ன யோசனை? என்று மனைவி கேட்டதும், சுய உணர்வு பெற்றவராய் “ஒண்ணுமில்லே, என்று சமாளித்துக் கொண்டு, மடியில் கிடக்கும் துண்டை, இடது கையால் எடுத்துக ஒற்றிக் கொள்வார்.

இன்று நம்மை ஒதுக்கிவிட்டு, அவர்களால் எப்படி உண்ண முடிகிறது.'' நம்மளெ மாதிரியே அவங்களும் நடக்கணும், அப்படீன்னு எதிர் பார்க்கிறது சரியா? தப்பா…? இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் இவனும், என்கிற நினைப்பே மறந்து போச்சா.. அங்கே இருந்து கொண்டு வந்து குடுக்காட்டியும், கடையிலேயாவது ஏற்பாடு செய்யலாமில்லையா? அந்த நெனப்புக் கூட வரல்லே. தோணவே இல்லையா இனி மேலும் தோணவே தோணாதா?

இருபது வயசிலேயும், மகன்களை மடியில் இருத்தி, கொஞ்சிக் கூத்தாடி இருக்கிறோமே. அவ்வளவு பெரியவன்களாக ஆனபோதும் சனி, புதன்களில் எண்ணெய் தேய்த்து விட்டு அவங்க மேனியெல்லாம் தடவித் தடவி இவர் மேனி சிலிர்த்து பூரித்துப் போன நாட்கள்.

மனசிலே பாசம் கொறஞ்சிக்கிட்டே வர்ற மாதிரி தோறது. முதுமையினாலே, ரோசமும், வீரமும் மழுங்கிக் கிட்டே வர்ற மாதிரியும் தோணுது.

மிதி கொப்பும் இழந்து, புடி கொப்பும் இல்லாமே நிராதரவா ஆயிட்டோம?

அவருக்கு நாலைந்து நாட்களாக வயிற்றுப் போக்கு மாத்திரை வாத்தியாருக்கு அது கட்டுப்பட மறுக்கிறது. அன்று ரொம்பவுந்தான் தளர்ந்து, சடசடத்துப் போய் விட்டார். கட்டிடத்தில் கிடக்கும் நார்க் கட்டிலில், முள்ளெலியைப் போர் சுருண்டு கிடந்தார். வலது புற புஜத்தோடு சேர்த்து, வலது கரமும், கழுத்தும் கடுத்து, இற்று விழுவது போல அப்படி ஒரு வலியை தாங்க முடியவில்லை. ஒருக்களித்துக் கொண்டு கையை தொங்கவிட்டவாறே படுத்துக் கிடந்தார்.

“என்ன இப்படிப் படுத்து கிடக்கறே?'' மூத்த மகன் தான் கட்டிடத்தைப் பார்க்க வந்தவர் கேட்டார்.

ஓண்ணுமில்லேப்பா, ஒடம்புக்குச் சரியாயில்லே வலது பசிற கழுத்தோடு சேத்து, கையெல்லாம் இத்து விழுகிற மாதிரி கடுக்குது. கடெச் சாப்பாடு ஒத்துக்கலெ போலருக்கு, வயித்துப் போக்கு வேறே.

வயித்தாலே பாம்பு தானேய்யா போகும்? வயித்துப் போக்குலேயே போனா, நெஞ்செல்லாம் ஒறஞ்சி காயமா ஆயிறுமேய்யா? முறிஞ்சுப் பொடிப் பொடியா ஆக்கிட்டியாக்கும்? பெரிய கொறச்சாலமெல்லாம் போடுறியே.

முடியலேங்கிறேன், நீ என்னமோ மூக்குப்போன செவக்கிப் பேசிக்கிட்டே போறே இந்த வெந்த தண்ணீ குடிக்கிறதுக்கு இந்தப் பாடா? நா ஒண்ணும் பாடு படலே?

ஆமா, என்னய்யா அப்படி பெரிசா பாடுபட்டுக் கிழிச்சுப்புட்டே. “ஆத்துப் போக்குலெ அம்பது வேலி நெலம், தோப்புத் தொரவு, தெருவுக்கு நாலு வீடும் வாங்கி ஓரேதா நிமித்துப்புட்டே''

குடி இருக்க வீடு வச்சிருந்தேன்ல்ல? ஒங்களையெல்லாம் படிக்க வச்சிருக்கேன்ல்ல. ஒங்க பாட்டனும், பூட்டனும் கையையும் காலையுந்தானே வச்சிருந்தாக? குடி இருக்க வீடுண்டா? குண்டியிலே கட்டதுணியுண்டா? குடிக்க கூழுண்டா? கீரையுங் கொழையும் அவிச்சுத் தின்னுல்ல உசிரெக் காப்பாத்துனா ஒங்களுக்கெல்லாம், இருவது, இருவத்தஞசு வருசம் சோறு போட்டிருப்பேன்ல.

ஆமா, இது ஒரு பல்லவி இந்த ஒப்பாரியெக் கேட்டுக் கேட்டுகாதே புளிச்சுப் போச்சுய்யா நீதான் அதிசயமா சோறுந் துணியும் போட்டிட்டியாக்கும், ஊர்லே எவனும் செய்யலே?

எங்க காலத்திலே இந்த அளவுக்குச் செய்ததே பெரிய காரியம். ஆமா, பெரிய பெரிய காரியமெல்லாம் செஞ்சு, அப்படியே தாளிச்சுப்புட்டே பெரிய பெரிய காரியத்தை, பெரியவங்களுக்கு கால காலத்திலே செய்யணுமுய்யா.

எனக்குப் பெரிய காரியம் நடந்தா என் சடலத்தைக் கூட நீ பார்க்க முடியாது.

இந்த டயலாக்குத்தானே வேண்டாங்கிறேன்.

நா பேசுறது ஒனக்கு டயலாக்காத், தோணுதா? அட, நன்றிக் கெட்ட நாறப் பயலே இந்தாக் கெடக்குடா ஒன்னோட செட்டுச் சாவி பீத்தப்பயலே.

ஆவேசத்தில் வீசிய சாவிக் கொத்து, செட்டின் மூங்கில் படகில் பட்டு, ஒலியெழுப்பி எங்கோ விழுந்தது.

“சும்மா அலட்டிக்காமெப் படுத்துக்கய்யா'' நா வர்றேன்.

யமாகாவை ஸ்டார்ட், பண்ணிக் கொண்டு பறந்தே போய் விட்டார் மூத்த மகன்.

தனது ஆவேசமெல்லாம் அடங்கி ஒடுங்க, நிலை குத்திய பார்வையோடு, தன் சுய நினைவற்று

இத்தனை நன்றிக் கெட்ட கொடுமைகளுக்கெல்லாம், மூலக் காரணம் எது? என்று தனக்குள்ளேயே எத்தனையோ முறை யோசித்திருந்தாலும், இன்று ஒரு புதிய பிரச்சனையே போல் மீண்டும் யோசிக்கலானார்.

தனது ஒரே சகோதரன், மிக நலிந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, அவன்பட்ட கடனுக்காக, சிறைக்குள் தள்ள போகிற ஒரு இக்கட்டான நிலை நேர்ந்த தருணத்தில் தான் வாங்கியிருந்த கொஞ்சம் நஞ்சை நிலத்தை இவர்களது சம்மதத்தைப் பெறாமல் விற்று, தனது தம்பியை மீட்டுஅவனது குடும்பமும், பெண் பிள்ளைகளும், நிர்க்கதியாகி விடக்கூடாதெனத் தடுத்து அவர்களையெல்லாம் வாழ வைத்தார்.

அந்த நாளிலிருந்து தான் இவர்கள் இந்த மனநிலைக்கு ஆளாகி, அந்த மனநிலையும், பகைமை உணர்வும், இந்த வீட்டிற்கு வந்த மருமக்களுக்குள்ளும் என்பது புரிந்தாலும், இவரது மனக் கணக்கு நாம் வாங்கிய நிலம், பூர்விக நிலமல்ல, எனவே இவர்களது சம்மதம் நிச்சயமாகக் கிடைக்காது. தனது சகோதரனைக் காப்பாற்ற, இவர்களது அனுமதியும் தேவையில்லை, அதை விற்பதை தவிர வேறு வழியும் இல்லை எனக் கருதினார். எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும், தான் அன்று செய்த காரியம், அவருக்கு முற்றிலும் மிக மிகச் சரி என்றேபட்டது.

தனக்கே தெரியாமல், உள் மனதின் அடி ஆழ்த்தில், உறைந்து கிடந்த பாச உணர்வு வதைத்துக் கொண்டிருப்பதையும் அவர் உணரத்தான் செய்தார்.

எனினும், இனி மேலும் இங்கு இருப்பது, எவ்விதத்திலும் தனது மன நிலையில் சாத்தியமில்லை, என்பதையும் தீர்க்கமாகவே உணர்ந்தார்.

அன்பு பிரதி பலன் கருதாது, எதையும் ஏற்கும் சகிக்கும், பொறுக்கும். எருமையிலும் கேவலமாக ரணச் சேற்றில் கிடக்கும். ஆனால், அந்த மனம் தனது விளிம்பு நிலையை எய்துகிற போது சகலத்தையும் போட்டு நொறுக்கும்.

மறுநாளை கட்டிட வேலைக்கு வந்த, தொழிலாளர்களில் ஒருவர், தொலைபேசியில் வீட்டு முதலாளியிடம் செட்டில் வாச்சுமேன் இல்லையென்றும், செட்டைத் திறந்தால் தான் வேலை செய்ய முடியுமென்றும் தகவல் சொன்னார்.

சின்னத்தம்பி எங்க போனார்? என்ன ஆனார்? என்ற நல்ல தகவல், இதுநாள் வரை அவர்களில் யாருக்கும் கிடைக்கவில்லை.

Pin It