ஞாயிற்றின் மகள் நான்
என் உடலில் இருந்து
வெப்பத் திவலைகள் வெளியேறுகின்றன
நிலவின் மகனை
அருகழைத்து அணைக்கிறேன்
குளிர்தரு நிழல் அடைய

என் வெப்பம் அவனைப் பற்ற
நட்சத்திரங்களை அரவணைக்கிறான்
என் உடலுதிர்க்கும் கங்குகளே
நட்சத்திரங்களாகும்
என உணராமல்

சிறு சிறு கங்குகளாய்
எனை உதிர்த்துச்
சேர்கிறேன் உன் நிழலில்
வெப்பம் சற்றே தணிந்ததொரு தருணத்தில்
மீண்டும் கங்குகள் சேர்த்து
உருப்பெறுவேன்.


நினைவின் சுளிப்பு

சிறு வயதில் கட்டி உருண்டு
சண்டையிட்ட தோழன்

பள்ளிப் பருவத்தில் முதல் கடிதம் தந்து
இடம் பிடித்தவன்

பின்னால் அலைந்து
பொழுதுகள் தொலைத்த
கல்லூரி நண்பன்
இன்னமும் ஈரமாய் இதயத்தில்

இப்போது கணவனும்
முட்டி மோதுகையில்
முகம் சுளிக்கையில்
பத்திரமின்றி அலைகிறது மனசு

பின் சென்று முன் திரும்பும்
ஊசலாட்டத்தில் கழிகிறது வாழ்க்கை.

சங்கிலியில் திரியும் சுதந்திரம்

ஏமாற்றி அணிவிக்கப்பட்ட
சங்கிலியுடன்
வறட்டு ஓலமிடும் நாய்
எப்போதேனும் எலும்புத் துண்டுகள்
அவ்வப்போது மிச்ச சோறும்
சில அடிகளும்.
ஏமாந்த வெறியுடன்
பகைத்துக் குரைக்கும் நாய்
 
சுதந்திரமாய் விடப்படும்
சில நாழிகையில்
மூளைச் சலவையில்
எஜமானனுக்கு வாலாட்டியபடி
அவனது பின்புறம் பம்மிப் பதுங்கும்.
சங்கிலி மாட்டிய தருணத்தில்
இழந்த சுதந்திரம் எண்ணி
வெற்றாய் முனகும்,
மீண்டும்
அடுத்த எலும்புத் துண்டுக்காய்க்
காத்திருக்கும் வாலாட்டி.

இதயத்தின் சவப்பெட்டி

பின் மாலைப் பொழுதொன்றில்
நான் இறந்து போனேன்
அறையெங்கும் பரவியது குருதி
இற்றுப் போயிருந்த எலும்புகள்
சொற்களின் வீரியம் தாங்காமல்
பொடிந்து விழுந்தன

நீர்க்கோடுகள் பாதை அமைத்ததில்
அழுகிப் போயிற்று சதைக் கோளம்
எதுவுமற்ற நான்
சவப்பெட்டிக்குள் படுத்து
ஆணி அறைந்தேன்

இறந்து போனதாய்
நினைத்த என் இதயம்
பெட்டிக்குப் பக்கத்தில்
ஒப்பாரி வைத்து அழுகிறது.

தூக்குமேடைக் குறிப்புகள்

பலிபீடத்திற்கான காத்திருப்பில்
நகர்ந்து கொண்டிருக்கும் நாட்களை
கடித்துத் தின்று கொண்டிருக்கிறான் அவன்
இனியெப்போதும் கிடைக்காத
அந்த ஆழ்ந்த முத்தத்தைக்
கைகளால் தாவிப் பிடித்துப் பரிதவிக்கிறான்
துயரத்தின் திசையிலிருந்து பொங்கும் இசை
மூழ்கடிக்கிறது அந்த இடத்தை
கற்பனையில் தன் அந்தரங்க ஆசைகளுக்கு
உருவங் கொடுத்து உலவ விடுபவனை
இரக்கம், கோபம், ஆற்றாமை, வெறுப்பினை
உமிழும் கண்கள்
வெறித்துப் பார்க்கின்றன
அவனுடைய வார்த்தைகள்
மெல்லப் புதைகிறது மௌனக் கல்லறையில்
காலத்தின் மாய வீச்சுக்குள்
கரைந்து கொண்டிருக்கிறது நிகழ்காலம்
கனவில் பெருகும் குருதித் துளிகளால்
தன் கடைசிக் கவிதையை
அவன் எழுதத் தொடங்குகிறான்

உள்ளங்கைக் குருவி

உள்ளங்கைகளில்
குருவி போன்றதொரு சிறிய பறவை
அமர்ந்திருக்கும் அந்தப் படம்
வெகுவாகக் கவர்ந்தது என்னை
இப்படியும் அப்படியுமாய் அசைக்கையில்
எழும்பும் அதன் சிறகுகள்தான்
அதை வாங்கத் தூண்டியதோ என்னவோ?
நீண்ட நேரம் விலை பேசி
கையிருப்பு முழுவதையும் செலவழித்து
வாங்கிய அந்தப் படத்துடன்
நடந்தே வீடு சேர்ந்தேன்
வாங்கிய நாளிலிருந்தே
அறைக்குள் நுழையும் போதெல்லாம்
அசைத்து அசைத்து அதன் பறத்தலுக்கான
யத்தனிப்பை ரசித்த எனக்கு
இப்போது அது அலைக்கழிப்பாக மாறியிருந்தது
இதோ இந்தக் கணத்தில்
நான் அதன் பறத்தலுக்காய்க் காத்திருக்கிறேன்

(இரவீந்திரநாத் தாகூரின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நவம்பர் 17,18,19 ஆகிய தேதிகளில் இந்தியாவின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த படைப்பாளர் சந்திப்பு ஒன்றை சாகித்ய அகாதெமி ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்நாட்டின் சார்பாக கவிஞர் தி. பரமேசுவரி (மாநிலச் செயலாளர், கலை, இலக்கியப் பெரு மன்றம்) கலந்து கொண்டார். கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்த தாகூர்பாரி இல்லம், சாந்தி நிகேதன், ஸ்ரீ நிகேதன் போன்ற இடங்களுக்குப் படைப்பாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய அளவில் கலை, இலக்கியம், சமூகம் குறித்த கருத்துப் பரிமாற்றத்துக்கும், விவாதத்துக்கும் வழி வகுத்த இந்நிகழ்வின் இறுதியில், அந்தந்த மாநில மொழிப் படைப்புகளும் அதன் ஆங்கில / இந்தி மொழிபெயர்ப்புகளும் படைப்பாளர்களால் வாசிக்கப்பட்டன.)

Pin It