“யப்பாடி
நாலுநாளா வூடு
இருட்டிங்கெடக்குது
எவ யவனயோ
கூப்புட்டு பார்த்துட்டேன்
யாரும் வரலசாமி
ரெவ வெந்து
அந்த லைட்ட பார்த்துட்டு வந்துடு”

கடுக்கலூர் முகத்தில் தெரிய
இடுப்பில் கை வைத்தபடி பேசுவாள்
கன்னியம்மாள் பெரியம்மாள்
மின்கம்பம் ஏறி இறங்கி
பழுது நீங்கி
வீட்டு விளக்குகள் எரியும்

மகிழ்ச்சி பொங்க
“யப்பா இந்தா” வென
புடவையிலிருந்து அவிழ்த்துதந்த
கசங்கிய பத்து ரூபாய் தாள்களை
ஒரு நாள்கூட வாங்கியதில்லை

கல்வீட்டுத் தெருவில்
கசங்கு கூடையுடன்
எதிர்படும் போதெல்லாம்
“வா, யப்பா சாப்பிட்டுட்டுபோ
அம்மா எப்படி இருக்குது,
அய்யனாரு அண்ணன் வந்து இருக்கான்
பாத்தியா”
வெள்ளை நாயை அதட்டிக் கொண்டே
விடை தருவாள்

மாடு அவிழ்க்க போனவள்
சாயங்காலம்
சவுக்கு தோப்போரம்
செத்துக்கிடந்தாளென
சேதிவர அதிர்கிறேன்
தேனாம்பேட்டை
மூன்றாவது மாடியில்

மடியிலிருந்து அதிரசமும் வாழைப்பழமும்
அவிழ்த்துக்கொடுத்துவிட்டு
கடைசியாய் கேட்டது
திரும்பவும் கேட்கிறது
“எப்பத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போற”