“எப்பவும் போல.. பஸ்ஸைப் பிடிஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும். டாண்ணு ஒன்பதுக்கு சிவகெங்கயில போய் நிறுத்தி இருப்பான்... ஒன்பது மணிக்கு சிவகெங்கையில இருந்து கிளம்பும் பரமக்குடி வண்டியில ஏறினா... ஒன்பதரைக்கு மானாமதுரை ஆபீ”க்குப் போயிருக்கலாம்... ஒரு அரை மணி நேரம்  அசந்ததால  லேட்டாப் போச்சு. இப்பவே மணி ஏழாச்சு. சிவகெங்கைக்கு  ஏழரை மணிக்குத்தான்  வண்டியாம். இங்க இருந்து ஏழரைக்கு பஸ் கிளம்பினா. சிவகெங்க போயிச் சேர. பத்தரை மணி ஆகிப்போயிடும்.''

கவலை கவ்வி  எண்ணங்கள்  ஆக்கிரமிக்க.. சிவகெங்கை பேருந்து வருகையை எதிர்பார்த்துக் காந்திருந்தார்  சந்திரமோகன்.

சந்திரமோகன்.. இந்தப் பகுதிக்குப் புதியவர். பதவி உயர்வைக் காரணம் காட்டி புதுக்கோட்டை கிளைக்கு மாற்றி விட்டார்கள். புதுக்கோட்டை வந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இங்கு மாற்றியதோடு. மானாமதுரை அலுவலகப்  பொறுப்பையும் கூடுதலாக் கொடுத்துவிட்டார்கள். வாரம் இரண்டு தினங்கள் மானாமதுரை ஆபீசுக்குப் போய்;  வர வேண்டும்.

சந்திரமோகன் வித்யாசமானவர். “கால்குலேடிவ்'' மனநிலைக்குச் சொந்தக்காரர். வார்த்தைகளைச் சிக்கனமானச் செலவளிப்பவர். அலுவலகத்தில் இவருக்கு  அடுத்த நிலையில் இருக்கும் அலுவலர்களிடந்தான்  அளவுடன் உரையாடுவார். அதற்கு கீழ்நிலை ஊழியர்களிடம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டார். வெளியிலும்  அப்படித்தான்.. பஸ் நிலையங்களில்.. பஸ் ரூட்  பற்றிக் கேட்பது... தெரியாத இடங்களில் விலாசம்  விசாரிப்பது இத்தியாதிகள்  கூட.. ஒயிட்கலர்; வாசிகளிடந்தான்  சுருக்கமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார். அழுக்கு மனிதர்களின் தொடர்பை அவமானமாகக் கருதுபவர்.

ஏழு நாற்பதுக்கு சிவகெங்கைப் பேருந்து வந்தது. கும்பல் அதிகமாக இருந்தாலும் முண்டியடித்து  ஏறி உட்க்கார இடம் பிடித்து விட்டார் சந்திரமோகன். பத்து நிமிடங்கள்  பஸ் தாமதமாக வந்ததால்  பஸ்  உடனே  கிளம்பிற்று.

எப்படியும் சிவகெங்கை  போய்ச் சேர பதினோரு மணியாகிவிடும். உடனே மானாமதுரைக்குப் போக பஸ் இருக்குமான்னு தெரியல. எல்லாருக்கும் புரமோசன் வரும்போது சென்னை ஆபிசிலேயே வேகன்ஸி இருந்திச்சு. நம்ம நேரம். அங்க காலி இடம் இல்லாமப் போச்சு.. இங்க தள்ளி விட்டுட்டாங்க.. இன்னம் எத்தன நாளைக்கி.. இப்படி அலஞ்சு.. அவஸ்தப்படனுமோ.. தெரியல..''

பேருந்து வேகத்திற்கு ஈடு கொடுத்து. சந்திரமோகனின் மனப் பறவை பறந்தது.  ஒரு வழியாக. பதினொரு மணி சுமாருக்குபேருந்து சிவகெங்கை பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து விட்டது.

பேருந்தை விட்டு இறங்கினார்  சந்திரமோகன். மானாமதுரைக்குப் போகும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் வந்து நின்றார். அடுத்து எத்தனை மணிக்கு மானாமதுரை பஸ் வரும் என்று விசாரிக்க அவரது ஈகோ இடந்தரவில்லை. அப்போது வயதான பெரியவர் ஒருவர். ''மானாமதுரை போகனுப்பா. எந்தக் கார் போகும்னு சொல்லு எனக்குப் படிக்கத் தெரியாது.'' அருகில் இருந்த வாலிபரிடம் கேட்டார்.

“மானாமதுரக்கிப் பஸ் வர இன்னும் அரைமணி நேரமாகும் அங்க. இங்க போய் அடிபட்டிடாத அப்படிப் போய் ஒக்காரு. பெருசு.''  என்றான் அந்த வாலிபன்.

“என்ன அரமணி நேரத்துக்கு  பஸ் கிடையாதுங்கிறான்..''  மனதுக்குள்  சந்திரமோகன் முணுமுணுக்க. அப்போது பரமக்குடி பஸ் வந்து நின்றது. வேகமாக போய் வண்டியில் ஏறி ஜன்னல் ஓர இருக்கையில் இடம் பிடித்தார் சந்திரமோகன். சற்று முன்  வாலிபனிடம் விசாரித்த பெரியவர். இவர் பக்கம் வந்து பேருந்திற்கு வெளியில் நின்றபடி. “அய்யா.. இந்த கார் மானாமதுரைக்குப் போகுமா?''  என்று கேட்க..  சந்திரமோகன்  அவரைப் புழுவைப் பார்ப்பது  போல் பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பி விட்டார்.

பரமக்குடி பேருந்து சிவகெங்கை பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிற்று. பேருந்தில் ஏகக் கூட்டம். நடத்துநர் டிக்கெட் தந்து சில்லறை பெறுவதற்குள் படாத பாடு பட்டார். அவர் சந்திரமோகன்  இருக்கைக்கு வந்திட பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று.

பத்து ரூபாயைக் கொடுத்து'' ஒரு மானாமதுரை..'' என்று சந்திரமோகன் கேட்க.''சார் இது மானாமதுரை போகாது'' என்றார் நடத்துநர்.

“பரமக்குடி வண்டிதானே. இதுல மானாமதுரைக்கிப் போயி இருக்கேனே.''

“பரமக்குடி வண்டிதான். மானாமதுரை போகாது. இளையாங்குடி வழியா.. பரமக்குடி   போகிது கேட்டு ஏறி இருக்கப்பிடாதா. படிச்சவன் பாட்ட கெடுத்தான் எழுதினவன் ஏட்டக் கெடுத்தான்கிற கதையா இருக்கு தாயமங்கலத்தில இறங்கிடுங்க.அங்க மானாமதுரைக்கி பஸ் வரும் அதுல ஏறி மானாமதுரை போங்க.''

சந்திரமோகன் எதுவும் பேசவில்லை. தாயமங்கலத்திற்கு டிக்கெட் வாங்கி.. அங்கு இறங்கினார். சிறிது நேரத்தில் மானாமதுரை  பேருந்து வர அதில் ஏறி. பனிரெண்டரை மணி வாக்கில். மானாமதுரை பேருந்து நிலையத்தில் களைப்புடன் இறங்கினார்.   அதே நேரத்தில் சிவகெங்கையில் இருந்து..  ஒரு பேருந்து அங்கு வர. ''மானாமதுரைக்கு இந்த கார் போகுமா'' என்று இவரிடம் கேட்ட அந்தப் பெரியவரும்  அந்த வண்டியில் வந்து இறங்கினார்.

சந்திரமோகனுக்கு ஒரே அவமானமாகப் போய்விட்டது.  படிக்காத பட்டிக் காட்டுக் கிழவர் கேட்டுக் கேட்டு…கரெக்டாக  வந்து விட்டார். கேட்பதைக் கௌரவக் குறைவாக நினைத்த நாம் இப்படி அவஸ்தைப் பட்டுப் போயிட்டோமே. என்கிற எரிச்சல் அவர் மனதைப் பிசைந்து எடுத்தது.. தன்னைப் பார்த்து ஊரே சிரிப்பது போல் தோன்றியது..

பிறரிடம் பேசுவதைக் கௌரவக் குறைவாக நினைத்த மனிதரிடம் இப்போது….கலகலப்பு பூ  மலரத் தொடங்கி விட்டது. உரையாடல்கள்  புதுப்புது உறவுகளை உருவாக்கும். உருவான   உறவுகளை பலமாக்கும்.. இந்த யதார்த்தங்களை சந்திரமோகன் உணர அவர் பேருந்து  மாறிப் பயணப் பட வேண்டி இருந்தது.