கவிதை மொழியின் அரசு!
கவிஞனின் சரசி!

நடமிடுவாள் கலைமகள்
காதலுடன்
கவிஞனின் நாவரங்கில்!

அவத்தை அகற்றும்
கவிதைத் தவமோ
பிரபஞ்சத்தையே அணைக்கும்!

வெற்றிக்கும் தோல்விக்கும்
சம்பந்தமே இல்லாத
விளையாட்டு & கவிதை!
கவிஞன் விளையாடிக் களித்திடுவான்!

விதைப்பவனுமல்ல
கவிஞன்
அறுப்பவனுமல்ல
விளைச்சல் விளைச்சல்
விளைச்சல் அவன்!
தகர்ப்பவனல்ல கவிஞன்
கட்டுமானம்
சபிப்பவன் அல்ல கவிஞன்
வாழ்த்துப் பாடல்!

அறிமுகமற்றோர்
சோகத்துக்காகவும்
அழுது துடிப்பவன்!

நிராகரிக்கவே
முடியாதவன் கவிஞன்!
அப்புறம் ஏனவன்
நிராகரிப்பவரை
நிராகரிக்க வேண்டும்

சிறைப் பட்டாருக்கும்
குற்றவாளிகளை விடவும்
பெருங் குற்றவாளிகள்
சிறைக்குவெளியே
திரிவதைப் பார்ப்பவன்!

அரசாசனத்தை விடவும்
கவிஞன்
சிரசாசன் விரும்புவான்!

அலங்காரங்களை விடவும்
கவிஞன்
நிருவாணங்கள் ரசிப்பவன்!

கூவுவதில்லை குயில்கள்
வருமானத்திற்காக!
காய்ப்பதில்லை மரங்கள்
சன்மானத்திற்காக!
கவிஞனும் அப்படித்தான்!

மதமும் இல்லை
மத
மாற்றமும் இல்லை!
மொழிமாற்றமுண்டு கவிஞனுக்கு!

தீண்டத் தகுந்தோரை
தீண்டுவதைவிடத்
தீண்டத் தகாதோரைத்
தீண்ட விரும்புவான்!

புறாக்களின் கூடு & கவிஞன்
நிராதரவின் வீடு!
அகதிகளின் நாடு&கவிஞன்
ஆதிக்கத்தின் கேடு!

வேரிலிருந்து மரம்!
பூவிலிருந்து பழம்!
மரபை மீறுபவன் அல்ல!
கவிஞன்
மரபை மாற்றுபவன்!
ஆற்றுப்படுத்தும் இலக்கியத்தை
மாற்றிப்படைத்தவன்
அழிபசி தீர்த்திட வடலூரின்
அணையாத நெருப்பும் அவன்!

பரதேசிபோலிருக்கும்
சுகவாசி&கவிஞன்
மூட்டை முடிச்சற்ற
யாத்திரிகன் கவிஞன்!

ஆதிபத்திய முள் முடிகளை
இறக்கி வைத்து
ரத்தம் துடைத்து
இளைப்பாறல் தருபவன்!

எதேச்சாதிகாரம்
விழுங்கி
ஜீரணிக்க முடியாத
வைரத் தகடு கவிஞன்!