தமிழ்நாட்டில் நாம் கலை இலக்கிய பெருமன்றத்தின் 50ஆம் ஆண்டுவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் தமிழக கலை இலக்கிய வரலாற்றில் நாம் பதித்த தடத்தையும் மறு மதிப்பீடு செய்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் தமிழக பொதுவுடமைகாரர்களை நசிவு இலக்கியத்தை தவிர்த்து நல்ல இலக்கியத்தை அறிந்து கொள்ளவும், கலை கலைக்காகவே என்பதை மாற்றி கலை மக்களுக்காகவே என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி பல அற்புதக் கலைகளை திறமைமிக்க படைப்பாளர்களை கொண்ட படையை தமிழகத்தில் உருவாக்கிய இலக்கியப் பேராசான் ஜீவாவை நாம் சரியாகவே பதிவு செய்திருக்கிறோம்.

இதே போன்று தேசிய அளவில் கலை இலக்கிய ஆளுமைகளை இந்திய பொதுவுடமை இயக்கத்தின்பால் அணிதிரட்டி வலிமைமிக்கதொரு அமைப்பாக இந்திய மக்கள் நாடக மன்றம் (இப்டா) அமைத்து கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு முன்னால் ஒரு முன்னோடி அமைப்பை தோற்றுவித்த பெருமை தோழர் பி.சி. ஜோஷியை சேரும்.

கம்யூனிஸ்டுகளின் கலை இலக்கியப் பார்வையை விசாலப்படுத்தியவர், கலையை மக்களின் துயரைப் போக்கும் ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பதையும் நிரூபித்தவர் ஜோசி.

1943 ஆம் ஆண்டு வங்கத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு அநாதைகளாக செத்து மடிந்தனர். இந்தச் செய்தி அறிந்த கட்சியின் அன்றைய பொதுச்செயலாளரான பி.சி ஜோசி தன்னுடன் சுனில் ஜனா என்கிற ஒரு புகைப்படக் கலைஞரை அழைத்துக் கொண்டு கல்கத்தா சென்றார்.

கல்கத்தா சென்றடைந்த ஜோசி நிவாரணப் பணிகளை பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்துவிட்டு பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் உணவு இன்றி பரிதவிக்கும் குழந்தைகளையும் செத்து மடிந்த பிணங்களைக்கூட அடக்கம் செய்ய இயலாது பரிதவிக்கும் நிலமைகளையும் புகைப்படம் எடுக்கச் செய்தார்.

பின்னர் பம்பாய் கட்சி தலைமையகம் திரும்பிய ஜோசி இந்தக் கோர காட்சிகளை பத்திரிகைகளில் பிரசுரித்து உருக்கமான பல கட்டுரைகளை எழுதி வங்கத்தோழர்களுக்கு உதவிடச் செய்தார்.

வங்கம் அழிந்தால் வாழ்வேது என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரைகளைப் பிரசுர வடிவில் வெளியிட்டு கட்சி அணிகள் முழுவீச்சில் நிவாரணப் பணிகளில் ஈடுபடச் செய்தார்.

வங்கம் பாரடா தோழா, வங்கம் பாரடா வங்காளநாடு துடித்துச் சாகுதே என்ற கோவை கிராமத்தாரின் பாடல்களும், வங்கம் பஞ்சம் என்ற கே.டி ஜானகியம்மாள் நாடகங்கள் உருவாகவும் ஜோசியின் உருக்கமான பாடல்களே காரணம் எனலாம்.

ஆடல் பாடல், நாடகம் போன்றவை வசதி மிக்கவர்களின் மன களிப்பிற்கானவை என்பதை மாற்றி கலை என்பது ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கானது. அதை சமுதாய மாற்றத்திற்கென பயன்படுத்த முடியும் என்பதை ஜோசி நிலைநாட்டினார்.

கல்கத்தாவிற்கும் இதர பஞ்சம் பாதித்த இடங்களுக்கும் கட்சியின் கலாச்சாரக் குழுவை அழைத்துச் சென்று ஜப்பானிய ஆக்ரமிப்புகளுக்கு எதிராகவும், உணவு பதுக்கல்காரர்கள், மற்றும் கள்ளச்சந்தை காரர்களுக்கு எதிராகவும் பல கலாச்சார நிகழ்வுகள் நடைபெறவும், தாமே விடுதலைக்காகவும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் காங்கிரஸ் தலைவர்கள் விடுதலைகோரியும் தனது பிரச்சார மற்றும் கலை நிகழ்ச்சிகளின் வழியாக மக்களைத் திரட்டினார்.

வங்க பஞ்ச நிவாரண வேலையென்பது ஏதோவொரு மனிதாபிமான மற்றும் நிவாரண சேவை என்றில்லாமல் அவரது அன்றைய பிரச்சாரமானது ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் பாசிச எதிர்ப்பு என்ற ஒரு கூர்மையான செய்தியை அன்றைய அரசியல் மற்றும் தேசிய கடமையுடன் இணைத்தது.

இதோடு புகழ்பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகளான பால்ராஜ் சஹானி, அவரது துணைவியார் தமயந்தி, சாந்தி பரதன், சச்சின் சங்கர், பீஷ்ம சஹானி, கைபி ஆஸ்மி, அலிசர்தார் ஜாப்ரி, மனாய்ராய், பெஜ்ஜாத் ஜாகீர், நடனக்கலைஞர் உதய சங்கர் குழுவிலிருந்து பல கலைஞர்கள் பிரித்திவிராஜ் கபூர், கே.ஏ. அப்பாஸ், பிரபலகேலி சித்திர கலைஞர் சித்தோ பிரசாத், மனிதவாழ்வையும், சமூகத்தையும், தத்ரூபமாக படம் பிடித்த சுனில் ஜனா போன்ற எண்ணற்ற கலைஞர்களைக் கொண்டு இப்டா என்றழைக்கப்படும் இந்திய மக்கள் நாடகமன்றம் ஜோசியின் தொடர் முயற்சியின் உருவாக்கமே.

இதுமட்டுமல்லாது இந்தியாவின் மாபெரும் வரலாற்றியல் அறிஞர்களான ராகுல் சாங்கிருத்தியாயன், மக்தூம் மொஹிதீன், டாக்டர் டி.டி கோசம்பி, மகாகவி வள்ளத்தோள் பேராசிரியர் சுசோடன் சர்க்கார், விஷ்னுடே போன்றோரையும் கட்சியில் ஈர்க்கின்ற ஆற்றல் ஜோஷிக்கு இருந்தது.

அதே சமயம் யாராக இருந்தாலும் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்பதில் கறாராக இருந்தார். பல மொழிகள் பேசக்கூடிய இந்தியா போன்ற நாட்டில் பொது மொழி என ஒன்றைத் திணிக்க கூடாது போன்ற கட்சியின் கருத்தை யாரும் மீறக்கூடாது என ஜோசி உறுதியோடு இருந்தார்.

புகழ்பெற்ற அறிஞர் ராகுல் சாங்கிருத்தியாயன் இந்தியாவின் பொது மொழியாக இந்துஸ்தானி இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். கட்சியின் கருத்திற்கு மாறாக இந்துஸ்தானி பாஷா சுமதி என்ற அமைப்பு நடத்திய மாநாட்டிற்கு தலைமை வகித்து தனது கருத்தை பகிங்கரமாக அறிவித்தார்.

இதைக் கண்ட ஜோஷி ராகுல்ஜி தலைசிறந்த அறிவுஜீவி, மாபெரும் வரலாற்று அறிஞர் என்றெல்லாம் பார்க்கவில்லை. கட்சி உறுப்பினர் கட்சி முடிவை மீறக்கூடாது. என்பதில் உறுதியாக இருந்து ராகுல்ஜியை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலக்கி வைத்தார்.

கட்சியில் இருந்து விலக்கப்பட்ட சிறிது காலத்தில் தனது கருத்து தவறானது கட்சியின் கருத்தே சரியானது என்பதை உணர்ந்த ராகுல் ஜோஷியை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்தார். இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தையும் பன்மொழிகளையும் பாதுகாப்பதில் கட்சி ஒரு தெளிவான முடிவெடுக்க ஜோஷி தயவு தாட்சண்யமின்றி உரிய பங்களிப்பை ஆற்றினார்.

கம்யூனிஸ்டுகள் பத்திரிகைத் துறையில் ஈடுபட முதன் முதலில் முன் முயற்சி எடுத்தவர் ஜோஷி என்றால் மிகை அல்ல! கட்சி பத்திரிகைகளில் கட்சியின் பிரச்சாரர்கள், கிளர்ச்சியாளர்கள், மற்றும் அமைப்பாளர்கள் என்ற லெனினுடைய சொற்களை உள்வாங்கிகொண்டு கட்சியின் ஆரம்பகட்ட நிதி நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து “பீப்பிள்ஸ் வார் “நேஷ்னல் பிரண்ட்'' “கம்யூனிஸ்ட்'' போன்ற பத்திரிகைகளை தோழர்களுடன் இணைந்து கொண்டுவந்தார்.

கட்சி மையத்தின் சார்பில் ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய மொழிகளில் வார ஏடுகளை கொண்டு வந்தார். அவர் கொடுத்த ஊக்கத்தினாலேயே கட்சியின் பல மாகாண குழுக்கள் தங்கள் தாய்மொழிகளிலேயே பத்திரிகைகளைக் கொண்டு வந்தன.

ஜோஷியும் அவருடைய சகாக்கள் சிலரும் இணைந்து அன்றைய கிராமியக் கலைகளை பாதுகாக்கும் நோக்கோடு அந்த காலகட்டத்தில் வழக்கத்தில் இருந்த கிராமியப்பாடல்களை சேகரித்தனர்.

அதே போன்று 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்களின் போராட்டத்தை “சிப்பாய் கலகம்'' என கொச்சை படுத்துவதைக் கண்டித்து, அது கலகம் அல்ல! அது சிப்பாய்களின் தாயக விடுதலைப் போராட்ட எழுச்சி என்பதை வலியுறுத்தி நூறுபக்கம் கொண்ட கட்டுரையையும் ஜோஷி கவனப்படுத்தினார்.

கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி முற்போக்குக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல “பீப்ள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்'' என்கிற புத்தக வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். இதுதான் பின் நாட்களில் இந்தியாவின் மிகபெரும் இடதுசாரி புத்தக நிறுவனமாக மலர்ந்தது.

காந்தி ஜோஷியின் கடிதங்களும் மிகச்சிறந்த கடித இலக்கியமாகும். அதே போன்று மலபாரின் கையூர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு இளம் தோழர்களை சிறையில் சந்தித்தது. கோவை சின்னியம் பாளையம் தோழர்களின் குடும்பத்தினரை சந்தித்தது குறித்தெல்லாம் மனதை உருக்கும் கட்டுரைகளாக வடித்துள்ளார்.

தான் சேகரித்த புத்தகங்கள் ஆவணங்கள், குறிப்புகள் அனைத்தையும் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கு அளித்து கம்யூனிஸ்ட் ஆராய்ச்சி பிரிவை தொடங்கச் செய்தார். அதை அவரே பல வருடங்கள் நேரடியாக கவனித்து விரிவாக்கினார். “பி.சி. ஜோஷி மையம்'' என்றழைக்கப்படும் அந்த ஆய்வுமையம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்து ஆராய விரும்பும் எவரொருவருக்கும் அரிய பெட்டகமாக இன்றும் விளங்கிவருகிறது.

இது போன்ற வேறெந்த அரசியல் கட்சி தலைவர்களும் செய்யாத பல அரிய கலை இலக்கிய முயற்சிகளை ஜோஷி மேற்கொண்டார். இந்தியா முழுவதும் இருந்த அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைத்துறையினர், கவிஞர்கள் பத்திரிகையாளர்கள் என அனைவரையும் இப்டா என்ற குடையின் கீழ் அற்புதமாக ஓன்று திரட்டினார். அந்தத் துளியின் தடத்தை பின்பற்றியே நமது இலக்கியப் பேராசான் ஜீவா தொடங்கிய கலை இலக்கியப் பெருமன்றமும் தனது பயணத்தை பொன்விழாவை கடந்து தொடர்ந்து செல்கிறது.