kuthoosi gurusamy 268வெள்ளைக்காரன் எதையும் குறித்த நேரத்தில் செய்வான்; நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டான்; உண்மையோடும் உணர்ச்சியோடும் எடுத்த காரியத்தைச் செய்வான்; கைக் கூலிவாங்கிக் கொண்டு காட்டிக் கொடுக்க மாட்டான்; எதையும் இழிவான தொழிலாகக் கருத மாட்டான்; பெண் இனத்தைச் சமஉரிமையுடன் நடத்துவான்.

இந்த மாதிரியாகப் பல நற்குணங்கள் வெள்ளைக்காரரிடம்,-குறிப்பாக பிரிட்டிஷாரிடம்-இருப்பதாகக் கூறுவார்கள்!

இப்படிக் கூறியவர்களை யெல்லாம் "வெள்ளைக்காரனின் குலாம்கள்,” “தேசத் துரோகிகள்,” “பிரிட்டிஷ் ஆட்சியின் அடிமைகள்” “மேல் நாட்டு நாகரீகப் பித்தர்கள்,” - என்றெல்லாம் கூறி வந்தனர், தியாகமே உருவாகியவர்களும், சுதந்தரமே மூச்சாக உடையவர்களுமான தோழர்கள்!

வெள்ளையர் உடையை மேற்கொண்டவர்களைக் கண்டால், “இதுகள் இங்கிலீஷ் நாகரீகத்தைப் பூசிக் கொண்ட இமிடேஷன்கள்,” என்று கூறிக் கேலி செய்தனர்.

பிறரைக் கேலி செய்வதும் தூற்றுவதும் ரொம்பச்சுளுவு. ஆனால் அதே பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு நாம் எப்படி நடப்போம் என்பதைப் பற்றி குத்தூசி முனையளவேனும் ஆலோசிக்க வேண்டாமா?

“அந்த நடிகனை மேடையிலிருந் கீழே இறக்குங்கள்! அவன் பத்தாம் பசலி நடிகன்! தாடியைச் சரியாகக் கட்டிக் கொள்ளக் கூடத் தெரியவில்லை! நான் அவனுக்குப் பதிலாக நடிக்கப் போகிறேன்!” என்று படபடப்பாகப் பேசிவிட்டால் போதுமா? நம் நடிப்பிலும் குற்றங்காணுபவர்கள் இருப்பார்களே! தற்செயலாகத் தாடி அவிழ்ந்து போனதற்காக ஒரு நடிகரை நாடக மேடையைவிட்டு இறக்கி வீட்டுக்கு அனுப்பி விடுவது என்றால், நமக்கும் ஒரு நாளைக்குத் தாடி கழன்று போகாதா? உடனே நாமும் மேடையை விட்டு இறங்கித்தானே போக வேண்டியிருக்கும், நாடக ரசிகர்கள் எல்லோருமே இம்மாதிரி காரணங்களுக்காக, மாற்றி மாற்றி நாடக மேடைமீது ஏறிக் கொண்டிருப்பதென்றால், நாடகம் “ஜனநாயக பீடமாக” இருக்கலாமே யொழிய பிறர் பார்க்கக் கூடியதாக இருக்க முடியுமா?

காங்கிரஸ் தலைவர்கள் இதையெல்லாம் யோசித்ததில்லை. ஒரு ஏ. ராமசாமியும் ஒரு ஆர். கே. ஷண்முகமும் மேல்நாட்டு உடையில் தோன்றியதற்காகக் கிண்டல் செய்து தூற்றிய பரப்பிரம்மங்களெல்லாம், கடந்த ஒரு வாரமாக, நேருவின் அமெரிக்க உடையைப் படத்தில் பார்த்துப் பார்த்து, “உப்புக் கண்டம் திருட்டுக் கொடுத்த அம்மாமி” மாதிரி, மெல்லவும் முடியாமல் (உப்புக் கண்டத்தை யல்ல; அது பற்றிய திருட்டை!) விழுங்கவும் முடியாமல், ஒரு தினுசான புதுப் பார்வை பார்ப்பதாகக் கேள்விப்படுகிறோம்.

இது மட்டுமா? இதையும் படித்துப் பாருங்கள்!

“யுத்த காலத்தில் இங்கிலாந்தில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட சர்க்கரையைத் திடீரென்று சர்க்கார் திருப்பிக் கேட்டபோது அங்கு எல்லோரும் ‘க்யூ’ வரிசையில் நின்று கொண்டு சர்க்கரையைத் திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால் நம்மவர்களோ, சர்க்கார் ஏதாவது இம்மாதிரி அறிக்கை விடுவார்களேயானால் வைத்திருப்பவர்கள் பதுக்கி விடுவார்கள்.”

இது யாரோ “வெள்ளைக்காரர் குலாம்” ஒருவர் வாயிலிருந்து வரும் கருத்துப்போல் இருக்கிறதல்லவா? உண்மையான தேச பக்தராயிருந்தால் நம் நாட்டு பாரதப் புதல்வர்களைத் தாழ்த்தியும், “வெள்ளைக் குஷ்டரோகி, சுரண்டல்காரக் கொள்கைக்காரனை” உயர்த்தியும் பேசுவார்களா? அதுவும் சுதந்தரம் பெற்ற பிறகு?

ஆதலால் யாரோ மாஜி ஜஸ்டிஸ் கட்சிக்காரன், அல்லது சுயமரியாதைக்காரன் தான் இப்படிப் பேசியிருக்க வேண்டும்! இதுதானே உங்கள் எண்ணம்?

கேளுங்கள், சங்கதியை! அக்டோபர் 24-ந் தேதியன்று மாலை, கும்பகோணம் காந்தி பார்க்கில் - யார் பேசியது இப்படி? தோழர் காமராஜர்! ஆமாம்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்தான்!

“என் அப்பனைப் பாடும் வாயால், பழனி ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ?” - பாரத மாதாவின் அருந்தவப் புதல்வர்களைப் பாடும் வாயால் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வெறியர்களைப் பாடுகிறார், தமிழ் நாட்டுத் தனிப் பெருந் தலைவர்!

இந்த மாதிரி வீரப்பிரதாபம் பயனளிக்காது, சுவாமி! பயனளிக்காது! யாரையும் தூற்றுவதும் கிண்டல் செய்வதும் எளிது! அவரிடமிருக்கின்ற நல்ல குணங்களை உணர்ந்து நடப்பது ரொம்பக் கஷ்டம்!

பொதுவாகவே சொல்கிறேன்; காங்கிரஸ் தோழர்களுக்கு மட்டுமல்ல. எனக்கே சொல்லிக் கொள்கிறேன் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! “கடல் முழுதும் ஒரே உப்பு நீர்; அதை அடியோடு ஒழித்துவிட்டு எல்லோரும் என்னிடம் வாருங்கள்,” என்று குடிநீரையுடைய கிணறு கூறினால், புத்திசாலிகள் அதற்காக அடியோடு கடலை பகிஷ்கரிப்பார்களா? குடிப்பதை மட்டுந்தானா கவனிக்க வேண்டியது? மற்றக் காரியங்கள் எத்தனையோ இருக்கின்றனவே!

- குத்தூசி குருசாமி (29-10-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It