இந்தியப் பேராதிக்கத்தின் இரத்த வெறி இன்னும் அடங்கவில்லை. ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்ததின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அதற்குள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களையும் தூக்கில் போட துடித்துக் கொண்டிருக்கிறது இந்தியா.

செய்யாத குற்றத்திற்காக 21 ஆண்டுகள் தனிமைச் சிறைக் கடுங்காவலில் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது போதாது இவர்களை தூக்கில் போட்டு கொன்றால் தான் எங்கள் வெறி அடங்கும் என்பது காங்கிரஸ் காரர்கள் வேறு வெறிக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தமிழர்கள். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்பதை தவிர இம் மூவரும் வேறு என்ன குற்றம் செய்தார்கள்?

ராஜீவ்காந்தி கொலைக்கும் இம்மூவருக்கும் நேரடியான எந்த சம்பந்தமும் இல்லை. ராஜீவ் காந்தி படுகொலைத் திட்டம் சிவராசன், தனு, சுபா ஆகிய மூன்று பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அந்தளவிற்கு கொலைத் திட்டம் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனைக் கொடுத்த நடுவர்களே தங்களின் தீர்ப்புரையில் மாறி மாறி குறிப்பிட்டுள்ளனர். ஆக வழக்குப்படி ராஜீவ் காந்தி கொலை இம்மூவருக்கும் தெரியாத ஒரு நிகழ்வு. இந்நிலையில் இவர்கள் எப்படி குற்றவாளியாக இருக்க முடியும்?

அடுத்து தடா சட்டத்தின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது தவறு என்று உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையிலும், அன்றைய அரசு தடா சட்டத்தையே திரும்பப் பெற்று விட்ட சூழலிலும், தடா சட்டிடத்தின்அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலத்தை வைத்தும், இதன் வழி ஜோடிக்கப்பட்ட சாட்சிகளை வைத்தும் அதே நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியிருப்பது நீதியா?

குறிப்பாக பேரறிவாளன் மீது சுமத்தப்பட்ட வழக்கு என்பது சட்ட அறிவு இல்லாத சாதாரண மக்களால் கூட ஏற்க முடியாதது. இராஜீவ் காந்தியை கொலை செய்ததற்கான "பெல்ட் பாம்' செய்வதற்கு பேரறிவாளன் உதவியாக இருந்தாராம். இதற்கு ஆதாரம் பெட்டிக் கடையில் 9 வோல்ட் பேட்டரி வாங்கினார் என்பதும் இவர் மின்னனுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் பட்டயப் படிப்பு படித்தவர் என்பதும்தான் இதற்கு ஆதாரம். இதற்காகத்தான் இவருக்குத் தூக்குத் தண்டனை.

இதில் கொடுமை என்னவென்றால், இராஜீவ் கொலை வழக்கை விசாரித்த தலைமைப் புலனாய்வு அதிகாரியான இராகோத்தமன், பணிஓய்வு பெற்ற பிறகு அவர் எழுதிய நூலிலும், அவர் கொடுத்த பேட்டியிலும், அவர் சொன்னஉண்மைஎன்னவென்றால், “இராஜீவ் கொலை வழக்கில் எங்களால் (சிபிஐ) கண்டு பிடிக்க முடியாதது எதுவென்றால் இராஜீவ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட "பெல்ட் பாம்மை யார் செய்தார்கள் என்று இறுதிவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை' என்று கூறியிருக்கிறார்.

ஆக "பெல்ட் பாம்பை' யார் செய்தார்கள்? யாரிடமிருந்து வாங்கப்பட்டது? அதில் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று எதுவுமே தெரியாத நிலையில் நீதிமன்றத்திலும் இதுகுறித்து ஆவணப்படுத்தாத நிலையில், பேரறிவாளன் பெல்ட் பாம் செய்வதற்கு உதவினார் என்று கொட்டடையில் அடைத்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய கொடுஞ் செயல்.

இராஜீவ் கொலையில் உள்நாட்டு வெளிநாட்டுச் சதி இருக்கிறது. குறிப்பாக சந்திராசாமிக்கும், சோனியாகாந்திக்கும் மற்றும் அமெரிக்காவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அழுத்தமான வாதங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டது. இதை மூடி மறைக்க அன்றைய நரசிம்மராவ் அரசு ஜெயின் ஆணையம் ஒன்றையும் உருவாக்கியது. விசாரணை நடத்திய ஜெயின் ஆணையம், இவ்வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அதன்படி இந்திய அரசு பல் நோக்கு விசாரணை அமைப்பை ஒன்றை நிறுவி விசாரிக்கப்பட்டு தடா நீதிமன்றத்தில் மூடி சீலிடப்பட்டு அறிக்கை முன்வைக்கப்பட்டது. இன்றுவரை சீல் திறக்கப்படவும் இல்லை, பல் நோக்கில் ஒரு நோக்கும் தெரியவில்லை.

மேலும் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜெயின் கமிசன் பிரதமர் அலுவலகத்திலும் கோரியது. ஆனால் பிரதமர் அலுவலகம் தர மறுத்ததோடு நில்லாமல், ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போய் விட்டது என்று மடல் வேறு கொடுத்திருக்கிறது. இறுதியாக வைத்த வர்மா கமிசன் அறிக்கையும் காணவில்லை. இதன் போக்கு ராஜீவ் கொலை விசாரணை முழுமையாக இல்லை என்பதும், பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படை.

சிபிஐ 26 பேர்களை பொய்யாக இராஜீவ் கொலையில் இணைத்தது. 28.1.1998 ஆம் ஆண்டு தடா சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றதில் 22 பேர்களுக்கு தூக்கை இரத்து செய்தது. இதில் 19 பேர்களை எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் என்று தீர்ப்புக் கூறி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இராபட் பயாஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனையும், நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கும் தூக்கு என்றும் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில் மூன்று நீதிபதிகள் பங்கேற்றனர். இம்மூவரும் ஏகமனதாக தீர்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நளினிக்கு தூக்கு தண்டனை கூடாது என்று நீதிபதி கே.டி. தாமசும், இராபட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய மூவரும் குற்றமற்றவர்கள், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என நீதிபதி வாத்வா அவர்களும் தங்களின் தீர்ப்புரையில் கூறியுள்ளனர். இருந்த போதிலும் பெரும்பான்மை அடிப்படையில் அனைவருக்கும் தண்டனை உறுதி செய்யப் பட்டது. ஆக 26 பேருக்கான தூக்கை 4 பேராக குறைத்ததும், அதிலும் மாறுபட்ட தீர்ப்புரைகளும் எதைக் காட்டுகிறது என்றால் வழக்கில் சிறிதளவும் உண்மை தன்மை இல்லை என்பதையும் கொல்லப்பட்டவர் இந்தியாவின் பிரதமர் என்பதால் யாருக்காவது தண்டனை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

வாதத்திற்காக ஒருவேளை இம்மூவரும் இராஜீவ் கொலைக்கு மறைமுகமாக உதவினார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இதற்கான தண்டனையாக இவர்கள்இதுவரை சிறையில் இருந்த 21 ஆண்டுகள் அதாவது இரண்டு ஆயுள் தண்டனை போதாதா? இவர்கள் கணக்குப்படி குற்றவாளிகளான இம்மூவரும் 21 ஆண்டுகள் சிறையில் இருந்தும் இன்னும் திருந்தவே இல்லையா? அல்லது இவர்கள் திருந்தவே மாட்டார்களா? அப்படியானால் உங்கள் சிறை குற்றவாளிகளை திருந்துவதற்கு வாய்ப்பளிக்காதா?

இந்தியாவின் தேச பிதாவாக அழைக்கப்பட்ட காந்தியின் கொலை வழக்கில் நாதுராம் கோட்சேவுடன் இணைந்து காந்தி கொலையில் பங்கு கொண்ட கோபால் கோட்சே என்பார் ஆயுள் தண்டனைப் பெற்று 16 ஆண்டுகளில் விடுதலையாகி விட்டார். வெளியில் வந்த கோபால் கோட்சே ஆங்கில டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், "காந்தியைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவுமில்லை. இதற்காக யாரிடமும் நான் மன்னிப்புக் கேட்கவுமில்லை' என்று கூறியுள்ளார். ஆக காந்தியைநான் கொன்றதற்காக வருத்தப்படவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்த கோபால் கோட்சே 16 ஆண்டுகளில் விடுதலை. நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை, நாங்கள் நிரபராதிகள் என்று கூறுபவர்களுக்கு 21 ஆண்டுகள் தண்டனை முடிந்தபிறகு இப்போது தூசு தட்டி எடுத்து தூக்கில் போட துடிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தமிழின விரோத போக்குதானே?

சிறிதளவும் உண்மையில்லாத குற்றத்திற்காக சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கில் போட வேண்டும் என்பதின் நோக்கம் மிகவும் கேடானது. இது இந்தியப் பார்ப்பனிய ஆதிக்க வெறியின் வெளிப்படையான செயல். சிங்கள வெறியன் இராஜபக்சேவின் விருப்பமும் இதுதான்.

எனவே இந்தியாவின் இத்தகைய போக்கு தமிழ்த் தேசிய இனத்தின் மீது நடத்தப்படும் ஒடுக்கு முறையே! மூன்று தமிழர்களைப் பாதுகாப்பதுஎன்பது மூன்று உயிர்களை பாதுகாப்பது என்ற பொருள் மட்டுமல்ல. தமிழ்த் தேசியத்தின் உரிமையை மீட்பதற்கான நடவடிக்கையாகவே நாம் கருதவேண்டும். இதுதமிழ்த் தேசிய இனத்திற்கு விடப்பட்ட சவால். எனவே மூன்று தமிழர்களை பார்ப்பதுமுதன்மை வேலையாக்குவோம்!

Pin It