தமிழனை முற்றாக ஒழித்து விட வேண்டும் என்று ராஜபக்சேவை ஒரு கருவியாகக் கொண்டு தமிழீழ மக்களையும், விடுதலைப் புலிகளையும் முழுவதுமாக அழித்து விட தமிழீழத்தில் படு பயங்கர படுகொலைகள் நடத்திய சோனியா, மன்மோகன் அரசு ராசபக்சேவை அடிக்கடி அழைத்துக் கூடிக் களித்து தாங்கள் யார் என்று தமிழர்களுக்குக் காட்டினர். தங்களது எதிரிகளில் மிச்சமிருப்பவர்கள் தமிழக மக்களும், ராஜீவ்காந்தி கொலையாளிகளும்தான் என்பதைக் காங்கிரசுக் கட்சி நன்கு உணர்ந்திருந்தது.

ராஜீவ் கொலைக்கு பழி தீர்க்கவே ஆட்சிக்கு வந்த காங்கிரசு, முதல் ஐந்து ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கி அழித்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் மீதமிருக்கும் தமிழர் களையும் கொன்று குவிக்க அணியமாகி விட்டது. இலங்கையின் மீது பொருளாதாரத் தடை வேண்டும் என்ற தீர்மானம் தமிழக அவையில் நிறைவேற்றப் பட்டவுடன், தமிழக மக்களையும், தமிழக சட்டப்பேரவையையும் சற்றும் மதிக்காத காங்கிரசு அரசு பதினொரு ஆண்டுகளாக நிராகரிக்கப்படாமல் இருந்த கருணை மனுக்களை உடனடியாக நிராகரித்து மூவருக்கும் செப்டம்பர் 9 ஆம் தேதி தூக்கு என்று அறிவிக்கச் செய்தது. ஒகேனக்கலில் தொடங்கப்பட்ட போராட்டம் தமிழ்நாடெங்கும் பரவியது.

தூக்குத் தண்டனையை ரத்து செய், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிருந்து விடுவி என முழக்கங்கள் அதிர்ந்தன. ராமகோபாலன், தங்கபாலு, இளங்கோவன் இவர்களைப் போன்ற கருங்காளிகளின் எதிர்க் குரல்களைத் தவிர தமிழகம் முழுவதும் எழுச்சி நிலவியது.

மூவரின் மரண தண்டனையை, ரத்து செய்யக் கோரி மனிதச் சங்கிலி, கண்டன ஆர்ப்பாட்டம், சட்டக் கல்லூரி மாணவர்கள், வகுப்புகள் புறக்கணிப்பு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலகம் முற்றுகை, சாலை மறியல், இரயில் மறியல், கடவுச் சீட்டு அலுவலகம் முற்றுகை, மத்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை, தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரியவரின் உருவ பொம்மைகள் எரிப்பு, வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம், உண்ணாவிரதம் என்று தமிழகம் முழுவதும் எழுச்சி மிகுந்த போராட்டங்கள்.

ஆனால் இந்த அத்துனைப் போராட்டங்களும் ஒரே ஒருவரைத்தான் தங்களின் கடைசி நம்பிக்கையாக வைத்து நடத்தப்பட்டன. அவர்தான் தமிழக முதல்வர். தமிழக முதல்வரே உங்களுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. தமிழக அரசே தூக்குத் தண்டனையை ரத்து செய் என்று அனைத்துக் குரல்களும் ஓங்கி ஒலித்தன. ஆனால் தமிழக அரசு எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காமல், தூக்கிற்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஒரு வாரம் ஆகியும் தனது முடிவை அறிவிக்காமல் இருந்தது.

இந்தப் போராட்டங்களின் உச்ச நிலையாய் 28.8.2011 மாலை 4.30 மணியளவில் காஞ்சிபுரம் தோழர் செங்கொடி மூவரின் உயிரைக் காக்கக் கோரி தீக்குளித்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். தன்னுடைய தீக்குளிப்பு தமிழக மக்களை தட்டி எழுப்பும் எழுச்சி பெறச் செய்யும். அதன் மூலம் அவர்களின் தூக்குத் தண்டனை தூக்கி எறியப்படும் என்று தீக்குளிப்பு செய்தார். உயிர் நீத்தார். செங்கொடி யின் தீக்குளிப்பானது வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவல்ல, மூவரின் தண்டனையை ரத்து செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களில் செங்கொடி ஈடுபட்டாள், பதாகை ஏந்தி தெருவில் நின்று முழக்க மிட்டாள்.

மத்திய அரசு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. தமிழக அரசோ இதுகுறித்துப் பேச வாய் திறக்க மறுத்தது. கள்ள மவுனம் சாதித்த அரசுகளைக் கண்டித்து தமிழர்களின் தலையாய பிரச்சனைக்கு செவிமடுக்க மறுத்த அரசுகளை செவிமடுக்கச் செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்ற தன் உயிரை ஆயுதமாக ஏந்திப் போராட முடிவெடுத்தாள். முத்துக்குமரனைப் போல் தன் உடலை துருப்புச் சீட்டாகக் கொண்டு தமிழக மக்கள் போராட வேண்டும். மூவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் செங்கொடி.

காஞ்சிபுரத்தின் செங்கல் சூளைகளிலும், அரிசி ஆலைகளிலும் கொத்தடிமைகளாக நசுக்கப்படும் உழைக்கும் மக்களில் பழங்குடிகளின் இனத்தில் பிறந்தவள் செங்கொடி. தனது தாயாரும், சிற்றன்னையும் தொடர்ந்து இறந்ததினால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட செங்கொடி காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் தனது எட்டாவது வயதில் இணைந்தார்.

அங்கே அவர் சமூக அரசியல் பார்வை பெற்றுப் பணியாற்றினார். சிறந்த பறை இசைக் கலைஞராகவும் போர்க்குணம் மிகுந்த புரட்சியாளராகவும் வளர்ந்தார். மூவரின் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு தேதி அறிவித்த பின்னர் அதைக் கண்டு பொறுத்து நிலை கொள்ள முடியாமல் தவித்த செங்கொடி பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு இறுதியாக தனது தோழர்களுடன் விவாதித்து முத்துக்குமரனைப் போல் உயிராயுதம் ஏந்தியாவது பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறியதற்கு அவரது தோழர்கள் அதை மறுத்துள்ளனர். இருப்பினும் தன்னை மாய்த்துக் கொண்டு அவர்களைக் காப்பாற்றியுள்ளார்.

முத்துக்குமரன் தமிழின துரோகி கருணாநிதியை தோலுரித்துக் காட்டினான். செங்கொடி தூக்கு தண்டனை குறித்து வாய்திறக்காமல் மௌனித்துக் கிடந்த செயலலிதாவை வாய்திறக்கச் செய்தார். சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றச் செய்தார். முத்துக் குமரன் வழியில் இவள் ஏந்தியது உயிராயுதம்.

ஏழரை கோடி மக்களின் தீர்மானமாகிய தமிழக சட்டசபைத் தீர்மானம், யாரையும் கட்டுப்படுத் தாதென மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சித் திமிராகக் கூறியதிலிருந்து செங்கொடியின் மரணம் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதோடு நில்லாமல் அது தேசிய விடுதலைக்கான போராட்டத்தின் அடித்தளமாக மாறியிருக்கிறது. தேசிய விடுதலையை, தமிழ்த் தேசத்தின் தேவையை உணர்ந்ததினால் ஏற்பட்ட பெரு நெருப்பாக செங்கொடியின் தீக்குளிப்பு மாற்றப்பட வேண்டும்.

செங்கொடி ஏந்திய இந்த ஆயுதம் தேசிய விடுதலைப் போரின் எல்லா நலன்களையும் கூர்ப்படுத்தும், எல்லா படைகளையும் சீர்படுத்தும். தீக்குளிப்பு என்பது விடுதலைப் போராட்டத்தின் ஒரு வடிவம்தான். ஆனால் அதுவே இறுதி வடிவமல்ல, இறுதி முடிவுமல்ல. தீர்மானிப்போம் தேவைப் பட்டால் இன்னும் எத்தனை பேர் வேண்டுமானாலும் உயிராயுதம் ஏந்தத் தயாராகவே இருக்கிறோம் எனும் பறையறிவிப்பாகவே செங்கொடியின் தீக்குளிப்பு அமைகிறது.

ஈழப் போரில், எத்தனையோ, உயிர்களை இழந்தோம், உடைமைகளை பறிகொடுத்தோம். நம்பிக்கையால் கெட்டழிந்தோம், ஓட்டுப் பொறுக்கிகளால் ஏமாற்றப்பட்டோம்!

அதுதான் இந்த மூன்று தமிழர்களின் உயிர் போராட்டத்திற்குக் கிடைக்கும் என்று அஞ்சி தன் உயிரை செங்கொடி மாய்த்துக் கொண்டாளோ? தமிழரின் வரலாறு இரத்தத்தால் மட்டும் எழுதப்பட வில்லை. துரோகத்தாலும் எழுதப்படுகிறது என்பதை புரிந்துக் கொண்டுதான் தன் வாழ்வின் வசந்த காலத்தை தன் இனத்திற்காக தன் உயிரை இழந்து நமக்கு இன்று வரலாறாய் மாறியுள்ளார் நம் செங்கொடி.

அந்தப் பெயருக்கு ஏற்றாற்போல் இந்த தமிழ் நிலம் செந்நிறமாய் மாறட்டும்! இந்தியம் என்ற ஆதிக்கப் பார்ப்பனியம் செங்கொடியின் பாதையின் பதாகை யின் கீழ் வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை.

செங்கொடியின் ஈகம் தமிழ், தமிழர், தமிழ் நிலம் உள்ளவரை அவரின் உணர்வும் ஈகமும் நம்மை சுற்றியே... இருக்கும். செங்கொடிக்கு நமதின் வீர வணக்கம்!

Pin It