ஆகஸ்டு 25, நண்பகல்.

சேலம் இரயில்வே கோட்டம் அமைக்கப்படவும் அதற்கான தேதியை உடனே அறிவிக்கவும் நடந்த இரயில் மறியல் போராட்டச் செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த அதிர்ச்சியான செய்தி வந்து சேர்ந்தது.

“சி.பி.எம்.ஐ.த் தடை செய்து விட்டார்களாம்.”

சன் டிவி தொடங்கி அல்ஜசீரா வரை சானலை மாற்றிப் பார்த்து விட்டேன். எங்கேயும் அந்தச் செய்தி இல்லை.

செய்தி கொண்டு வந்த அழகிரி என் தலையில் அடித்துச் சத்தியம் செய்தான்.

“தகவல் உண்மையானது தோழா. இன்னும் கொஞ்ச நேரத்தில் அதிகாரப்பூர்வமான செய்தி வரும். பார்த்துக் கொண்டே இரு.”

குண்டைத் தூக்கிப் போட்ட அழகிரி போய்விட்டான்.

‘என்ன எளவு காரணத்துக்காகச் சி.பி.எம்.ஐ. தடை செய்திருப்பார்கள்?’

அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கா?

இருக்காதே...!

அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தாலும், கூடங்குளத்தில் அதை

ஆதரிப்பவர்களாயிற்றே...

முன்னது அமெரிக்கா; பின்னது ரஷ்யா! அவ்வளவுதானே வித்தியாசம்!

ஈழ விடுதலைப் போரிலிருந்து இந்திய இறையாண்மை வரை காங்கிரசுக்காரனுக்கே கிளாஸ் எடுக்கும் அளவுக்கு தேசபக்தி பொங்கிப் பாய்ந்து பிரவாகமெடுக்கும் நம்ம காம்ரேடுகள்மீது தடை விதிப்பது தற்கொலை முயற்சியில் அல்லவா முடியும்?

கம்யூனிச புரட்சியாளர்களை காங்கிரசுக்காரன் வேட்டையாடுவான், காம்ரேடுகளோ காட்டிக் கொடுப்பார்கள், அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.

அவர்களுக்கு அம்பானி என்றால் இவர்களுக்கு டாடா.

எதுக்குத் தடை?

ஒருகாலத்தில் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியையே கவிழ்த்து விடுவார்கள் என பயந்த நேரு இவங்களைத் தடை செய்தது வாஸ்தவம்தான், பாவம், காய்கறி நறுக்கக்கூடக் கத்தியைக் கையில் எடுக்காத அகிம்சாமூர்த்திகள் இவர்கள் என்ற உண்மை தெரிந்த நேரு வெட்கப்பட்டு, தடையை விலக்கிக் கொண்ட வரலாற்றை காங்கிரசுக்காரன் அதற்குக்குள்ளாகவா மறந்து போனான்?

எந்த நிமிடத்திலும் ‘சி.பி.எம்.முக்குத் தடை’ என்ற பிளாஷ் நியூஸ் மின்னும் என்று நடுக்கத்தோடு சன் டி.வி. முன்னால் மணிக்கணக்கில் ஆடாமல், அசையாமல் இருந்த வேளையில் “தோழா” என்ற குரல் மீண்டும் கேட்டது.

அவன்தான். அழகிரிதான்.

“என்ன தோழா... உன்னை கேணப்பயக் கணக்கா ஆக்கிப்புட்டேன்னு பீல் பண்றியா... சேலம் கோட்ட நியூஸ் இப்ப காட்டுவான்... அத நல்லா உத்துப் பாரு. அப்புறமா என்னைக் கேள்வி கேளு”

அழகிரிமேல் வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சேலம், ஈரோடு, கோவை ஊர்களில் இரயில்கள் ஆங்காங்கே நிற்க, ஆயிரக்கணக்கில் கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் ஆண்களும் பெண்களும் கட்சிக் கொடிகளுடன் தண்டவாளங்களில் உட்கார்ந்து ஆவேசமாக கோசம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

சில இடங்களில் ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’ போலத் தண்டவாளங்களின் குறுக்கே உயிரைப் பணயம் வைத்தபடி படுத்திருக்கும் பெண்கள்.

சிக்னல்களை முடக்கிப் போடும் இளைஞர்கள்.

இரயில் நகர முடியாதபடி தண்டவாளங்களில் கட்டைகளையும், மண்ணையும் அள்ளிப் போடும் சிறுவர்கள், முதியவர்கள்...

பார்க்கும் போதே என் தோள்கள் தினவெடுத்தன.

“ஆகா... இந்தி எதிர்ப்புப் போருக்குப் பிறகு இப்படியொரு வீரஞ்செறிந்த போராட்டத்தைத் தமிழ்நாட்டில் இப்பதானப்பா பார்க்கிறேன்.”

அழகிரி குறுக்கே புகுந்தான்.

“உன் புல்லரிப்பை அப்புறம் வச்சுக்க.. போராட்டத்துல கலந்துகிட்டவுங்ககிட்ட ஒண்ணு குறையுதே... அத கவனிச்சியா?”

“என்னப்பா குறையுது?”

“அட குறை மாசத்துல பொறந்தவனே... போராட்டத்துக்கு வந்தவனெல்லாம் அவனவன் கட்சிக் கொடிகளோட வந்தானே... அத நல்லா உட்துப் பாத்தியா?”

“பார்த்தேனப்பா.. அதுல என்ன பிரச்சனை?

எவனாவது கொடியை தலைகீழாவோ, இல்ல அரைக் கம்பத்துலயோ கட்டிக் கொண்டு வந்து மானத்தை வாங்கி விட்டானுங்களா?”

“போடா வெங்காயம்... தி.மு.க., காங்கிரசு, பா.ம.க., பா.ச.க., சி.பி.ஐ., பத்தாததுக்கு சில இடங்களில் எதிரணியிலுள்ள அ.தி.மு.க., ம.தி.மு.க. கொடிகூட இருந்துச்சு. அவ்வளவு ஏன் சந்திரலேகாவைத் தவிர வேற உறுப்பினரேயில்லாத சுப்பிரமணியசாமி கட்சிக் கொடியைக்கூட ஒருத்தன் தூக்கிப் பிடிச்சிட்டு போராட்டத்துக்கு வந்து ஆட்டம் போட்டிருக்கான். ஆனா பிறவிப் போராளிகளான சி.பி.எம். கொடிகளில் ஒண்ணைக்கூடக் காணோமே. எப்படி? சி.பி.எம். இல்லாம ஒரு போராட்டமா? ஒருவேளை கட்சியைத் தடை பண்ணிட்டாங்க போல... அதனாலதான் போராளிகள் பதுங்கிட்டாங்கன்னு நெனச்சேன். இது ஒரு தப்பா சொல்லு?”

“யோவ், வாயில என்னென்னமோ அசிங்கமா வருது... நீ நெனச்ச மாதிரியே ஒருவேளை சி.பி.எம்மைத் தடை பண்ணியிருந்தாலும் அவுங்க அதுக்கெல்லாம் அஞ்சக் கூடியவங்க கிடையாது. தலைமறைவா இருந்து ‘யு.ஜி.’ங்கிற அண்டர்கிரவுண்ட் பாலிடிக்ஸ் பண்ணியாவது போராடுவாங்க. ஞாபகம் வச்சுக்கோ.”

“தோழா... உணர்ச்சி வசப்படாத. அண்டர்கிரவுண்ட் பாலிடிக்ஸ் பத்தி சொன்னதெல்லாம் ரொம்பச் சரி. ஆனா, அதெல்லாம் நேரு காலத்தோட முடிஞ்சு போன கதையப்பா.... இப்ப அச்சுதானந்தனுக்கு எதிரா பினராயி விஜயன், பினராயிக்கு எதிரா அச்சு, ஜோதிபாசுக்கு எதிரா பட்டாச்சார்யா, பட்டாவுக்கு எதிரா ஜோதி இப்படி கட்சிக்குள்ளாற பண்ற உள்குத்து வேலைகள்தான் அவுங்களோட ஒரே ‘யு.ஜி.’ பாலிடிக்ஸ்.

கொஞ்சம் பொறு. போராட்டத்துல சி.பி.எம். ஏன் கலந்துக்கலைன்னு எதாவது சர்வதேச தத்துவ முலாம் பூசி அவுங்களே அறிவிப்பாங்க. அந்தச் செய்தியோட வந்து உன்னை அப்புறமாச் சந்திக்கிறேன்.”

27, ஆகஸ்டு.

“கடைசியில் பூனைக்குட்டி வெளியில் வந்தே விட்டது” என்றபடி சி.பி.ஐ. எம்மின் அதிகாரப்பூர்வ நாளிதழ் தீக்கதிரை எடுத்து என் முன்னால் போட்டான் அழகிரி.

“இன்னைக்கு எழுதியிருக்கிற தலையங்கத்தைப் படிக்கிறேன் கேட்டுக்க....” என்று தீக்கதிரின் தலையங்கத்தின் ஒரு பகுதியை படித்தான் அழகிரி.

கேரளத்தில் ஓணம் பண்டிகை என்பது மிக முக்கியமான கொண்டாட்டம் ஆகும். வெளிநாடுகளிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வசிக்கும் கேரள மாநிலத்தவர் இந்தப் பண்டிகையைக் கொண்டாடச் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இந்த நேரத்தில் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டிருந்தால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.

“பாத்தியா உங்க சி.பி.எம்மோட கொள்க விளக்கத்தை... மக்களைச் சிரமத்திற்கு ஆளாக்காத போராட்டம்னு ஏதாவது உண்டா? இல்ல, அப்படியொரு போராட்டத்தை சி.பி.எம். இதுவரைக்கும் நடத்தியிருக்குதா? இருபத்தஞ்சாம் தேதி மறியல் எடஞ்சல்னா மத்த நாள்ல நடத்தலாம்னுதானே அர்த்தம்? சரி, மத்த நாள்களில் மட்டும் என்னவாம்! வீட்டுக்குள்ள உக்காந்துருக்கப் பிடிக்காது, எங்காவது போய்த் தொலைவோம்னு கிளம்புறவங்கதான் இரயில்ல போறவங்களா? இன்டர்வியூ போறவன், சாகிறதுக்கு முந்தி கடைசியா ஒரு தடவை அப்பனையோ, ஆட்தாளையோ கண்ணால பாத்திடலாம்னு போறவன், அக்கா-தங்கச்சி கல்யாணத்துக்குக் காசு சேத்துக்கிட்டுப் போறவங்கதானே இரயில் பயணிங்க! மறியல் நடந்தா அவுங்க பாதிக்கப்பட மாட்டாங்களா? பாதிப்பில்லாம நடத்தணுமுன்னா கூட்ஸ் வண்டியைத்தான் போய் மறிக்கணும். ஆனா அதுலகூட உணவுப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள்னு இருக்குமே? என்ன செய்யறது? பேசாம இரயில்வே ஷெட்டுக்குள்ளாற கழுவுறதுக்கு கொண்டுபோய் நிறுத்தி வச்சிருக்கிற பெட்டிங்க முன்னால உளுந்து புரண்டு மறியல் செய்யலாமா? நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்களே... ‘நோகாம நோம்பு கும்பிடுறது’ன்னு... அது இதுதானோ...!

பாம்பும் சாகக்கூடாது; தடியும் ஒடியக்கூடாது! நல்ல போராட்டம்!

முதலாளிங்களுக்கெதிரா தொழிலாளிகளை மொட்டை அடிச்சு ரோட்டுல ஊர்வலம் வுடுறது, கையில் திருவோட்டுடன் தொழிற்சாலைகளை முற்றுகையிடுவதுன்னு ஒண்ணுக்கொண்ணு புரட்சிகர நடவடிக்கையில் முன்னோக்கிப் பாயும் சி.பி.எம்.மிடமிருந்து இப்படிப்பட்ட மொண்ணைத்தனமான அறிவுரைகள்தான் வரும்னு தப்பா நினைச்சிடக்கூடாது. அதுக்கு அவுங்க எழுதியிருக்குற அடுத்த பாராவையும் கொஞ்சம் படிக்கணும்.. இதோ படிக்கிறேன் பாரு.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் என் வரதராஜன், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து ரயில் மறியல் போராட்டம் குறித்து அவரது கவனத்திற்குக் கொண்டு சென்றார்கள்.

என். வரதராஜனும், டி.கே. ரங்கராஜனும் சி.பி.எம்மின் தலைவர்களா, அல்லது கேரள சமாஜத்தின் சிறப்புப் பிரதிநிதிகளா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்கட்டும். போராட்டம் குறித்து கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய காரணம் என்ன? அவருக்குத் தெரியாமலா, சொல்லாமலா வீரபாண்டி ஆறுமுகம் போராட்டத்தை அறிவித்தார்? சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு.

மறியல்னு சொன்னதும் அவுந்த வேட்டியைக் கட்டிக்கக்கூட நேரமில்லாது கோபாலபுரம் நோக்கி ஓடினவங்க, என்னிக்காவது திருவனந்தபுரம்போய் நல்லவரும் வல்லவருமான அச்சுதானந்தன்கிட்ட சேலம் கோட்டத்தை எதிர்க்காதீங்கன்னு சொன்னாங்களா?

அவ்வளவு தூரம்கூட போக வேணாம், சென்னையில் கேரள டூரிஸட்துக்கு அடிக்கல் நாட்ட வந்தாரே... அப்ப, கூட நின்னு போட்டோவுக்கு போஸ் குடுத்து, சிரிச்சிக்கிட்டு இருந்த நேரத்துல அந்தாளு புத்தியில் உறைக்கிற மாதிரி நாலு வார்த்தை சொல்லியிருக்கலாமே... ஏன் சொல்லலை?”

“எப்படியப்பா சொல்லுவாங்க? சேலம் கோட்டம் வர்றத அவரு எதிர்க்கவேயில்லைன்னு இதோ... தீக்கதிர்லேயே எழுதியிருக்காங்களே?”

“அது சரி, தலித் மக்கள் கண்டிப்பா கோயிலுக்குள்ளாற வரணும்னு சங்கராச்சாரி சொல்லியிருக்கிறாரே உனக்குத் தெரியுமா?”

“யோவ், சேலத்தைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கப்ப சம்பந்தமில்லாம ஏன் காஞ்சிபுரத்துக்குப் போயிட்ட...”

“சம்பந்தமிருக்குப்பா... நான் கேட்ட கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லு. தலித் மக்கள் கோயிலுக்கு வரணும்னு சங்கராச்சாரி சொன்னாரா, இல்லியா?”

“அட என்னப்பா நீ, அந்தாளு சொன்னதுல பாதியை விட்டுப்புட்டு மீதியைச் சொல்ற... குளிச்சு சுத்த பத்தமா இருந்தா தலித் மக்களும் தாராளமா கோயிலுக்கு வரலாம்னுதான் அவரு சொன்னாரு.”

“இப்ப சேலம் கோட்டத்தைப் பத்தி அச்சுதானந்தன் சொன்னதுக்கு வர்றேன். கோவை, திருப்பூரு, போத்தனூரு, மேட்டுப்பாளையம் பகுதிகளை தொடர்ந்து பாலக்காடு கோட்டத்துல வச்சிருக்கிறதாயிருந்தா அவரு சேலம் கோட்டம் வர்றத ஆதரிப்பாராம். இதுதான் அவரு டெல்லியில சொன்னது. இந்த முன்னாள் புரட்சியாளருங்க அந்தாளு பேச்சின் பின்பாதியைக் கிழிச்சு அவுங்க சூத்தாம்பட்டைக்கடியில வச்சுக்கிட்டு, முன்பகுதியை மட்டும் சொல்லி அச்சுதானந்தனுக்கு ஒளிவட்டம் சுத்துறாங்க...

ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்க, இந்த மாதிரி மொள்ளமாறித்தனமா வெட்டி, ஒட்டி எழுதினா சங்கராச்சாரியைப் புரட்சிக்காரனாவும், பெரியாரைக் கடைந்தெடுத்த மத அடிப்படைவாதியாகவும் ஒரே நொடியில் மாத்த முடியும்.

சுருக்கமாச் சொன்னால் இந்து என்.ராம், சோ, ரவிக்குமார் வகையறாக்களின் வரிசையில் இப்ப இவங்க...”

“எழுத்தாளனுங்க கதய வுடு. அப்படித்தான் இருப்பானுங்க. இவங்க கம்யூனிஸ்டுகளாச்சே. இருக்குற எடத்துக்குன்னு கொஞ்சமாவது விசுவாசம் காட்ட வேணாமா? இவங்க உண்டியல்ல போட்ட காசுக்கு நாலு பொறை வாங்கி நாய்க்குப் போட்டிருந்தா அது நமக்கு நன்றியோட வாலையாவது ஆட்டியிருக்குமே”

“உணர்ச்சி வசப்படாத தோழா. அவங்க கம்யூனிஸ்டுங்கதான்; சி.பி.ஐ. (எம்)தான். ஆனா, நீங்க எல்லோரும் நெனக்கிற மாதிரி ‘எம்’ன்னா ‘மார்க்சிஸ்ட்’ அப்படின்னு அர்த்தம் கெடையாது. ‘மலையாளீஸ்’னுதான் பொருள்.”

“ஏம்ப்பா... இந்தப் பட்டம் ரொம்ப ஓவருப்பா...”

“ஓவரா, இல்லியான்னு அப்புறம் சொல்லு. போன வருசம் மங்களூர் போற வெஸ்ட் கோஸ்ட் வண்டிய கோவைக்கு வராம ரூட்டை மாத்திக் கொண்டு போயிட்டானுங்க. உடனே கோவை ராமகிருஷ்ணன், பெரியார் திராவிடர் கழக ஆளுங்க எல்லாம் சேந்து தினமும் அபாயச் சங்கிலியைப் புடுச்சு இழுத்து நிப்பாட்டி இரயில்வே போலீசிடம் அடிபட்டு, மிதிபட்டு கடைசியா அந்த வண்டிய கோவைக்கு வர வச்சாங்க. அப்ப ‘மார்க்சிஸ்ட்’ என்ன பண்ணிச்சு தெரியுமா?”

“இப்ப பண்ணுன மாதிரி அப்பவும் அதுல கலந்துக்கலையா?”

“அதுகூட பரவாயில்லப்பா... ரூட்டை மாத்தி வண்டியை விட்டதால் அஞ்சு லட்ச ரூபாய் கலெக்ஷன் அதிகமாயிடுச்சுன்னு தீக்கதிர்ல ஒரு கள்ளக்கணக்கை செய்தியா எழுதிப் போட்டு நம்ம ஆளுங்க முதுகுல குத்துனாங்க. இப்ப சொல்லு இவங்க மார்க்சிஸ்டா, மலையாளிஸ்டா?”

“இப்ப இருக்குற பாலக்காடு கோட்டமே அப்ப நம்ம தமிழ்நாட்டுப் போத்தனூர்லதான் இருந்ததுன்னு சொல்றாங்க. அதை பாலக்காட்டுக்கு மாத்துறப்ப நம்ம ஆளுங்க காட்டுன பெருந்தன்மை ஏன் மலையாளிங்கக்கிட்ட இல்லாமப் போச்சு?”

“யோவ், சும்மா வாயைக் கிளறி வாங்கிக் கட்டிக்காத. நாமளா விருப்பப்பட்டு கொடுத்தாத்தான் அது பெருந்தன்மை. ராவோட ராவா அவன் கடத்திக்கொண்டு போயிருக்கானா அதுக்குப் பேரு களவாணித்தனம். அத ஏன்னு கேக்க வக்கத்துப் போய் இங்க இருந்தானுங்க பாரு நம்மாளுங்க... அது கையாலாகாத்தனம். பெருந்தன்மை அது, இதுன்னு சொல்லி நம்மாளுங்களுக்கு முதுகு சொறிஞ்சு விடுறத மொதல்ல நிப்பாட்டு. 1956 இல் தந்தை பெரியார் வச்ச கோரிக்கைதான் இந்தச் சேலம் கோட்டம். தமிழ்நாட்டுப் பகுதிகள் தமிழ்நாட்டுக் கோட்டத்துக்குள்தான் இருக்கணும்கற இனவாத சிந்தனையெல்லாம் இதுக்குக் காரணமில்லை. தமிழ்நாட்டைச் சுரண்டி அவன் மட்டும் அனுபவிக்கிற கொடுமை தாங்காமத்தான் இந்தச் சேலம் கோட்டத் திட்டமே உருவாச்சு.”

“ஜோலார்பேட்டை தொடங்கி கோவை வரையுள்ள ரெயில் நிலையங்களை கொஞ்சம் நினைச்சுப் பாரு. பல ரெயில் நிலையங்களில் குடிக்க மட்டுமில்ல, குண்டி கழுவக்கூட தண்ணி கிடையாது. திருப்பூரில் மழை வந்தா ஒதுங்கி நிக்க ஒழுங்கா ஒரு பிளாட்பாரம் கிடையாது. ஆனா, அதே கோட்டத்துல பாலக்காட்டிலிருந்து குட்டிபுரம்கிற துளியூண்டு ஊரு வரை தாஜ்மஹால் கணக்கா கட்டுமானம் பண்ணி, அழகுபடுத்தி வச்சிருக்காங்க. இனி அடுத்த தடவை உலக அதிசயங்களுக்கு பட்டியல் போட்டா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலோடு பாலக்காடு, குட்டிபுரம் நிலையங்களையும் லிஸ்டில் சேர்த்து விடலாம்.

சம்பாதனை இங்கிருந்து! சுகபோகம் அங்குள்ளவர்களுக்கு.

சாதாரண பாசஞ்சர் வண்டிகள் விடும் அதிகாரம் கோட்டத்திற்கு உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலக்காட்டை மையமாக வைத்து ஏகப்பட்ட பாசஞ்சர் வண்டிகள் ஓடுது. அதில் பட்தில் ஒரு பங்கு வண்டிகூட கோவைக்கு, திருப்பூருக்கு இல்லை. கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு அறிவிக்கப்பட்ட விரைவு வண்டி இன்னும் விடப்படவில்லை. கேட்டால் பெட்டிகள் கைவசம் இல்லையாம். ஆனா திருவனந்தபுரத்துக்கு ஒரு தினசரி வண்டி, வாரம் ஒருமுறை வண்டி, மங்களூருக்கு பாலக்காடு வழியாக வாரம் மூன்று முறை வண்டியெல்லாம்.... எப்போதோ ஆரம்பித்து ஓடிக் கொண்டிருக்கின்றன. அனேகமா லாலு பாராளுமன்றத்தில் இதை அறிவித்துக் கொண்டிருக்கும்போதே பிளாட்பாரங்களில் பெட்டிகளைக் கொண்டுபோய் நிப்பாட்டியிருப்பார்கள்.

பெங்களூரிலிருந்து கோவை வரை வந்து கொண்டிருந்த இன்டர்சிட்டியை எர்ணாகுளம் வரை நீடித்தார்கள். மீட்டர்கேஜ் காலட்தில் சென்னையிலிருந்து மதுரை வரை சென்று கொண்டிருந்த கூடல் விரைவு வண்டியை- அதைவிட இன்னொரு மடங்கு அதிக தூரம் நீடிட்து குருவாயூர் வரை கொண்டு போனார்கள். சென்னை எழும்பூரிலிருந்து கரூர் வழியாக ஈரோடு வரை சென்று கொண்டிருந்த வண்டியை கோவை வரை நீடிட்தவர்கள் கடைசியில் அதை மங்களூர் வரை இழுத்து விட்டார்கள்.”

“ஒரு வண்டி அதிகமான தூரம் வரை பயணிப்பது நல்லதுதானே?”

“நிச்சயம் நல்லதுதான்.

நமக்கல்ல, மலையாளிகளுக்கு.

சந்தேகமிருந்தா நான் இங்கே குறிப்பிட்ட வண்டிகளில் நல்ல வசதியாக உட்கார்ந்தும், படுத்துக் கிடந்தும் போகிறவர்கள் யார் என்று போய்ப் பாரு. மலையாளத்து சேச்சிகளும், சேட்டன்மார்களுமாகத்தான் இருக்கும்.”

“அப்ப நம்மாளுங்க?”

“ஜெயலலிதா வேனில் எஸ்.டி.எஸ். தொங்கிக் கொண்டு போனாரே... நினைவிருக்கிறதா? அதுபோல் பதிவு செய்யப்படாத பெட்டிகளில் தொங்கிக் கொண்டும், விழுந்து வாரிக்கொண்டும் போவார்கள் நம்மாளுகள்.

கோவைக்கும் - இருகூருக்குமிடையில் உள்ள 17 கிலோ மீட்டர் ரெயில்பாதை சேட்டன்களின் உதாசீனத்தால் இன்னமும் முடிக்கப்படாமல் இழுத்துக் கொண்டு கிடக்கிறது. ‘என்னய்யா காரணம்?’னு கேட்டா ‘பாறை உடைக்குறது கஷ்டமாயிருக்கு. லேட்டாதான் வேலை ஆவும்’னு மந்திரி வேலு வாயால சொல்ல வைக்கிறாங்க. இதைவிட கஷ்டமான பாம்பன் பால வேலையை ஒரே வருடத்தில் முடிச்சு வண்டியும் வுட்டாச்சு. இருகூரில் பாறையப் புடுங்கறது அவ்வளவு பெரிய கஷ்டமா?ன்னு கேக்க நம்ம ‘பாட்டாளி’ மந்திரிக்கு துப்பில்லை.”

“இதையெல்லாம் பேசிட் தீத்துக்கலாமுன்னு அச்சுவும், அவரோ தமிழ்நாட்டு சகபாடிகளும் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டேயிருக்கிறாங்களே...”

“என்னத்தப் பேசறது?

கோட்டம் வேணாமுன்னு அச்சு சொல்வார்.

வேணுமுன்னு கலைஞர் சொல்வார்.

அப்படின்னா கோவையும் திருப்பூரும் பழையபடி பாலக்காட்டிலேயே இருக்கட்டும்பார் அவர்.

அது ஆவுறதில்லை என்பார் இவர்.

ரெண்டு வருசம் இப்படியே பேசிக் கொண்டிருப்பார்கள். அப்புறம் அதிகாரிகள் மட்டட்தில் இதே திரைக்கதை - வசனங்களுடன் பேச்சு தொடரும்.

கொஞ்ச நாளில் அதுவும் சலித்துப்போய் லொக்கேஷனை மாற்றுவார்கள்.

திருவனந்தபுரம், சென்னை... அப்புறம் ரெண்டு பேருக்கும் பொதுவா டெல்லி. இதற்கிடையில் நம்ம ‘அச்சு’வுக்கு கேரள வாக்காளர்கள் ‘பிரிவு உபச்சார விழா’ நடத்திவிட்டால் புதிதாக வரும் அந்தோணியுடனோ, சாண்டியுடனோ பழையபடி ஆரம்பித்த இடத்திலிருந்து ஷூட்டிங் தொடங்கும்.

காவிரித் தண்ணிக்குப் பேசிப் பேசியே சங்கு ஊதியதை பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களல்லவா?

அதனால்தான் நாக்கை சப்பு கொட்டிக்கொண்டு இந்த உதவாக்கரை திட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு ‘பேசலாம் வா’ என ஜாடை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.”

திட்டமிட்டபடிச் சேலம் கோட்டம் ஆரம்பிக்கப்படுமா? படலாம்.

கூடவே ‘வெஸ்ட் கோஸ்ட் இரயில்வே’ என்ற பெயரில் அவர்களுக்கு ஒரு மண்டலம் ஆரம்பிக்க அறிவிப்பும் வரலாம்.

ஒரு மண்டலத்துக்கு நான்கு கோட்டங்கள் வேண்டுமாம். கர்நாடகத்திடம் போய் கேட்க முடியாது. காலில் போட்டிருப்பதைக் கையில் எடுத்து விடுவான்.

அப்புறம் கோட்டத்துக்கு வழி?

‘பெருந்தன்மை’ மிக்க நாமிருக்க, அவர்களுக்குப் பயமேன்?

கோட்டமாகப் பிரிந்த சேலம், மண்டலமாக பழையபடி மலையாளிகள் கையில் போய்விடும்.

வாழ்க ‘மார்க்சிஸ்டுகளின்’ தேசிய ஒருமைப்பாடு!