நம் அணுசக்தித்துறை விஞ்ஞானிகளுக்கு கனவில்கூட அணுகுண்டுகள்தான் வரும்போலிருக்கிறது. அவர்கள் அணுக்கனவில் புரியும் அழிம்புகள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இவர்கள் உண்மையில் விஞ்ஞானிகள்தானா அல்லது அந்தப் போர்வையில் கோடிகோடியாய் பணம் விழுங்கும் கொள்ளைக் கும்பலா என்றே நாம் ஐயப்பட வேண்டியிருக்கிறது.

கொஞ்சம் ஏமாந்தால் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு ஆற்றல் தரும், வேறு எதுவும் சாப்பிடவே வேண்டாம் என்று சொல்லி நம் வயிற்றுக்குள்கூட ஒரு அணு உலையை கட்டினாலும் கட்டிவிடுவார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தளவில் கல்பாக்கத்தில் ஒரு உலை வயதான நோயாளி பேருந்து போல முக்கி முனகி ஓடிக்கொண்டிருக்கிறது. கூடவே சோதனை உலைவேறு.

இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் மின் தட்டுப்பாட்டிலிருந்து நம்மை மீட்க இரட்சகர் அவதாரம் எடுத்தார் முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி. அப்போது இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமாக இருந்ததால் உதவி செய்ய(!?) அது ஒப்புக் கொண்டது.

1988இல் இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்திக்கும் சோவியத் அதிபர் மீகயீல் கோர்பசேவுக்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தான வேகத்தில் தமிழகத்தில் போராட்டமும் வெடித்தது.

இளைஞர்கள், முற்போக்கு அமைப்பினர், புரட்சிகர அமைப்பினர், தொண்டமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சியினர், உழவர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நெருப்பாய் கிளர்ந்தனர்.

1988 நவம்பர் 21ஆம் நாள் தென் மாவட்ட மக்களின் உயிருக்கு உத்திரவாதம் என்ன? கூடங்குளமும் செர்னோபில் ஆகாதா? என்று பிரதமர் இராஜீவ்காந்தியிடம் டெல்லி மேல்சபையில் வினா எழுப்பினார் அப்போது தி.மு.க. நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த வை.கோபால்சாமி.

பற்றிப் படர்ந்த போராட்டங்களின் விளைவாக, நவம்பர் 28, 1988இல் பிரதமர் இராஜீவ்காந்தியின் தமிழக வருகையின்போது திட்டமிடப்பட்டிருந்த கூடங்குளம் அணுமின் நிலைய அடிக்கல் நாட்டுவிழா கைவிடப்பட்டது. அதன் பின்னரும் குமரியில் 90களின் தொடக்கத்தில் பல்லாயிரம்பேர் பங்கேற்ற எல்லைக்கல் அகற்றும் போராட்டம், குமரி முழு அடைப்பு போன்றவை டாக்டர்.குமாரதாஸ் தலைமையில் ஆக்ரோசமாக நடத்தப்பட்டன. இதனால் 1990களின் மத்தியில் திட்டமே கைவிடப்பட்டது.

இந்நிலையில் 1997இல் இந்தியப் பிரதமராக இருந்த தேவகௌடா சிதறிய சோவியத் ஒன்றியத்தின் இரசியாவின் அதிபர் போரிஸ் எல்ஸ்டினுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டு திட்டத்திற்கு தூசு தட்டினார். முன்னர்போல தீவிர எதிர்ப்பு இல்லாவிட்டாலும் யாருமே திட்டத்தை ஆதரிக்க முன்வரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வேலை நடந்து வந்தது. 2000இல் வேகம் பிடித்தது.

1994இல் நிறைவேற்றப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தின்படி 50 கோடி ரூபாய்க்கும்மேல் முதலீட்டில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் போது அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை மக்களிடம் விளக்கி மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே செயல்படுத்த வேண்டும்.

2000இல் கூடங்குளம் பணி தொடங்கப்பட்ட போதிலும் 1988இல் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கும் தற்போதைய திட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாதபோதும், சனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக 88லேயே ஒப்பந்தம் போட்டுவிட்டதால் இக்கருத்தாய்வை மேற்கொள்ள மாட்டோம் என்று அடம்பிடித்து இரு அணுஉலைகளை கட்டி வருகின்றனர். நமது மாண்புமிகு விஞ்ஞானிகள். (நடத்தினால் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதே காரணம்)

அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்து வருவதை மறைத்து, அவசிய தேவை என்று போர்வையில் கூடங்குளத்தை உலகத்திலேயே மிகப்பெரிய அணுவளாகமாக்கிடும் முனைப்பில் மேலும் 4 அல்லது 6 அணுஉலைகளைக் கூடங்குளத்தில் அமைத்திடும் கனவில், ஆனால் 1994 சுற்றுச்சூழல் சட்டத்தை மீற முடியாத நிலையில் இதற்கு மக்கள் கருத்தாய்வு நடத்த வேண்டியதாயிற்று.

இதற்காக தமிழகத்தில் வெளிவரும் ஒரே நாளிதழான? தினகரனிலும் ஒரே ஆங்கில நாளிதழான? எக்கனாமிக் டைம்சிலும் மட்டும் அறிவிப்பு கொடுத்து கடந்த செப்டம்பர் 6ஆம் நாள் மாலை 3 மணிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தினர்.

சுமார் இரண்டு மணிநேரம் ஏதோ நாடகம் நடத்தி மக்களிடம் ஒப்புதல் பெற்றுவிடலாம் என்பது அவர்களின் எண்ணம். நம் மக்களின் உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பு.

ஆனால், அரசல்புரசலாக செய்தியை கேள்விப்பட்ட சுற்றுச் சூழல்வாதிகள் செய்தியை மின்னல் வேகத்தில் பரப்ப, அரசியல்வாதிகள், சுற்றுச் சூழல்வாதிகள், அறிஞர்கள், முற்போக்காளர்கள், தொண்டமைப்பினர், மாணவர்கள், மீனவர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், உழவர்கள் என சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் அன்று அங்கு அணி திரண்டனர்.

முதலில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி எழுந்து, அணுஉலையின் நன்மைகள் பற்றி சிலைடு ஷோ காட்டுவார் என சொல்ல, அணுமின்நிலைய அதிகாரி ஒருவர் எழுந்து பேசத் தொடங்கினார்.

குமுறி வெடித்தனர் மக்கள்

கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நாங்கள் அணுசக்தி பற்றி உங்களிடம் பாடம் கேட்க வரவில்லை என்று கொந்தளிக்க, மொத்த மக்களும் ஆவேசத்துடன் எழுந்தனர். பெரும் கூச்சல் குழப்பமானது. நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்களும், மீனவர்களும், குமரி விவசாயிகளும் கொந்தளித்தனர்.

தான் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்ற ரீதியில் ராதாபுரம் எம்.எல்.ஏ.அப்பாவு பேசத் தொடங்க, உட்காரு! துரோகியே வெளியே போ! என்றும் எதிர்த்தனர் மக்கள். மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டுவதுபோல அணுசக்தி துறையிடமும் மக்களிடமும் இரட்டை வேடம் போட்டுவந்த அப்பாவு முகம் வெளிறிப்போனார்.

உடனே அவர், உங்கள் கருத்தைத்தான் நானும் பேச வந்தேன் என தடம் மாறிப் பேச, எங்கள் கருத்தை நாங்கள் பேசிக்கொள்கிறோம் நீ உட்கார் என அவரை மக்கள் அமர வைத்தனர். தூத்துக்குடி அன்டன் கோமஸ், பேராசிரியர் பாத்திமாபாபு, நாகர்கோவில் முனைவர் எஸ்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் ஆவேசமாக குரல் எழுப்பினர். சட்டக்கல்லூரி மாணவர்களும் மீனவர்களும் காட்டாறு போல வேகமெடுத்தனர்.

இந்நிலையில் குமரி மாவடட உழவர்கள் பேச்சிப்பாறை அணையிலிருந்து ஒரு சொட்டு நீரையும் தரமாட்டோம் என ஆவேசமாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் அணுமின் நிலைய அதிகாரிகளிடம் கேட்க, அவர்களோ நாங்கள் பேச்சிப்பாறை நீரை எடுக்கவில்லை இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு காலாவதி ஆகிவிட்டது. என்று சொல்ல, கடுப்பான மாவட்ட ஆட்சியர் காலாவதியான அறிக்கையின் அடிப்படையில் எப்படி கருத்தாய்வு நடத்துகிறீர்கள்? என கேட்க அந்த மேதாவிகள் வாயடைத்துப் போயினர்.

இவ்வளவு நடந்தாலும் காஞ்சிபுரம் கருத்தாய்வில் 100% எதிர்ப்பை சந்தித்த போதிலும் வேக அணுஉலை தற்போது கட்டப்பட்டு வருவதைப்போல இங்கும் நடக்குமோ என்ற அச்சம் சிலருக்கு இருந்தது. அதற்கு முடிவுகட்டுவதுபோல, தொடர்ந்து கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், தொடர்ந்து நடத்த இயலாசூழலில் கூட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்.

இதனூடே தமிழில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வை தரவேண்டும் என்று மக்கள் கேட்டதற்கு மாவட்ட ஆட்சியர் சரிதான் என சொல்ல, அணுசக்தி துறை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.

அதுபோல, இனி அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் கொடுத்து நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி என 3 இடங்களிலும் கருத்தாய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் ஒப்புக் கொண்டார். அதுபோல, மாசு கட்டுப்பாட்டு வாரியமும் மக்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இப்படியாக அணுசக்தித்துறை நடத்த திட்டமிட்டிருந்த நாடகம் மக்களால் கிழித்தெறியப்பட்டது.

மக்கள் எதிர்ப்பாலோ என்னவோ தெரியவில்லை, 2007 மார்ச்சில் இயங்கும் என அறிவிக்கப்பட்ட கூடங்குளம் அணுஉலை இனி 2008ல்தான் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.