தொழிலாளர்களின் போராட்டம், பஸ் மறியல், ரயில் மறியல் என்று எப்போது பார்த்தாலும் பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடைஞ்லாக இருக்கிற இவைகளைத் தடை செய்து விட்டு, ஊர்வலங்களை மட்டும் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமான பகுதியில் வைத்துக் கொண்டால் என்ன?
-என்.டி.ராமன், சென்னை.

ஒதுக்குப் புறமாக என்றால் எங்கே? முதுமலை காட்டுக்குள்ளேயா? அப்புறம் அங்கேயும் வனவிலங்குகளுக்குத் தொல்லையா இருக்குதுன்ணு மேனகா காந்திக்குச் சொந்தக்காரங்க வந்து குறுக்கே நிப்பாங்க.

மக்கள் தங்கள் உரிமைகளைக் கோரி நடத்துகிற போராட்டங்களை மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடத்தும் போதே, அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இன்னும் ஒதுக்குப் புறம் என்றால், ‘நக்சலைட்டு’ன்னு முத்திரை குத்தி உள்ளே வைச்சிருவாங்க.

உண்மையில் பொது இடங்களில் பெரும் இடைஞ்சலாக இருப்பது - கோயில் திருவிழாக்கள், சாமி புறப்பாடுகள், கோயில் கும்பாபிஷேகங்கள்தான். ஆடி மாசம் வந்தா “அம்மனோட அலறல்’ சத்தம் தாங்க முடியலை.

அறுபத்தி மூவர் திருவிழான்னு பத்து நாளைக்கு ரோட்டை மடக்கி பாடாய்ப் படுத்துறாங்க, அதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதா?

‘கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் இணைகிற மையப்புள்ளி ஒன்று இருக்கிறது’’ என்கிறார்களே, அது என்ன மையப்புள்ளி?
-க.தமிழ்க்கனல், காட்டுமன்னார்கோயில்.

Kamal ஜாதி. முற்போக்கு அம்சங்கள் எதுவும் இல்லாதவர்கள் தங்களை நேரடியாக ஜாதி உணர்வாளர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ‘பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ்’ ன்னு பேசுற இந்த ‘நம்மாளு’ ங்கதான் ஜாதிக்கு நிறைய ரகசியப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள். அதுல ஒண்ணுதான் இந்த மையப்புள்ளி. இந்த உணர்வு பார்ப்பன அல்லாத ‘முற்போக்கனவர்கள்’ மத்தியிலும் அதிகமாக இருக்கு. பார்ப்பனர்களை குறை சொல்ல இவர்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்பதே நமது கருத்து. இந்த விசயத்துல இவுங்கள விடவும் ரஜினி ரசிகர்கள் முற்போக்கானவர்கள்தான். இந்த மையப்புள்ளியைப் பத்தி ஒரு உதாரணத்தின் மூலமாகவே பார்க்கலாம்.

சுஜாதா, மதன், ஞாநி இந்த மூம்மூர்த்திகளில் ஞாநிதான் ‘முற்போக்கானவர்’ என்கிற தோற்றம் இருக்கிறதல்லவா, அது மாயத் தோற்றம். உண்மையில் இந்த மூவரையும் இணைக்கிற மையப்புள்ளி ஒன்றல்ல, இரண்டு இருக்கிறது. 1. ஆனந்த விகடன் 2. கமல்ஹாசன் உலகத்தின் எந்த முற்போக்கு சக்திகளையும் கடுமையாக விமர்சிக்கிற இந்த மாமேதைகள் இந்த இரு புள்ளிகளிடம் மட்டும் சமரசம் அல்ல, சரணாகதியாய் இருக்கிறார்கள்.

ரஜினியும் கமலும் இணைந்து நடித்த காலத்தில் ஒரு வாரப் பத்திரிகையில், ‘எழுத்தாளர்’ சுஜாதா ‘கமலஹாசனை போன்ற அழகான நடிகர்கள் பக்கத்தில் இப்படி அசிங்கமான நடிகர்’ என்று ரஜினியைக் குறிப்பிட்டு எழுதியதாக நண்பர் தீஸ்மாஸ் ஞாபகப்படுத்தினார்.

அதே போல் ஞாநியின் - ‘ரஜினி, டாக்டர். கிருஷ்ணசாமி, திருமாவளவன் எதிர்ப்பை’க் கமல்ஹாசனோடு தொடர்புபடுத்தித்தான் புரிந்து கொள்ள வேண்டும். ‘சண்டியர்’ படத்தின் தலைப்பை மாற்ற டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்த்த போதுதான் அவரைக் கண்டித்திருக்கிறார் ஞாநி. ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தின் பெயரை தமிழில் வைக்க சொன்னபோதுதான் அவர் திருமாவளவனைக் கண்டித்திருக்கிறார். ஞாநிக்கு டாக்டர் அம்பேத்கர் என்று ஒரு தலைவர் இந்தியாவில் இருந்தது தெரியுமா என்பது கூட சந்தேகமாகத்தான் இருக்கிறது. காந்தியவாதியின் தொனியில் காந்தியைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். டாக்டர் அம்பேத்கரைப் பற்றி ஏதவாது குறிப்பிட்டு இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.

ஞாநியின் ‘குமுதம் எதிர்ப்பை’ ஆனந்த விகடனோடு தொடர்புபடுத்தித்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனந்த விடகன் வேறு, இந்த மூவரும் வேறு வேறு வேறு அல்ல. ஆனந்த விகடனைக் கழித்து விட்டு இந்த மூவரையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், இந்த மூவரின் உருவம் நம் கண்களுக்குப் புலப்படாமலே போகும்.

‘’அகம் வேறு, பிரமம் வேறு அல்ல. அகம்தான் பிரமம், பிரமம்தான் அகம்.’ ’கமல்-ஆனந்த விகடன்-சுஜாதா-மதன்-ஞானி ’ இந்த அய்ந்து புள்ளிகளையும் இணைத்தால் ............................................

பொதுவாகப் புள்ளிகளை இணைத்தால் கோலம் வரும். ஆனால் இந்தப் புள்ளிகளை இணைத்தால் ‘நூல்’ வரும். இந்த நூல் பலபேருக்கு உடலில் இருக்கும். சில பேருக்கு மனத்தில் இருக்கும். இதுதான் ஆதிசங்கரர் தனது அத்துவைதைதத்தில் சொல்லியிருக்கிறாரோ?

‘நீங்கள் பாம்பாகப் பார்க்கும் போது கயிறு. கயிறு என்று நினைத்துப் பார்த்தால் பாம்பு’ என்று.

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரில் உங்களை அதிகம் கவர்ந்தது யார்?
-எம்.டேவிட், திருச்சி.

யார் இவர்கள். இவுங்க எதுக்கு என்னைய கவர்ராங்க?

சிவாஜி நடித்த பாசமலர் தமிழில் ஒரு குறிப்பிடத்தக்கப் படம்தானே?
Sivaji and Savithri -டி.சிவராமன், நன்னிலம்.

பாசமலர் படத்தைத் தமிழ் தெரியாத ஒரு நபர் பார்த்தால், ‘அந்தக் காதலனும் காதலியும் கடைசி வரைக்கும் ஒன்னு சேராம போயிட்டாங்களேன்னு’ ரொம்ப வருத்தப்படுவார்னு, எப்பவோ என் நண்பருக்கு நண்பர் ஒருவர் சொன்னதா ஞாபகம். தமிழ் சினிமாவில் ரொம்ப அருவருக்கத்தக்க முறையில் ஒரு உறவு கொச்சைப்படுத்தப்பட்டது என்றால், அது அண்ணன்-தங்கை உறவுதான். எம்.ஜி.ஆர். தன் படங்களில் கதாநாயகியை விட தங்கச்சியைத்தான் அதிக அளவுக்குக் கட்டிப் பிடித்துப் ‘பாசத்தை’ வெளிக்காட்டுவார்.

இப்படித் தமிழ் சினிமா கதாநாயகர்கள் தங்கச்சிகளைக் கட்டிபிடிச்சி நடிக்கிறதைப் பார்க்கிற பார்வையாளர்கள் தப்பா நினைக்க போறங்க அப்படிங்கறதுக்காகத்தான், ‘தங்கச்சி, தங்கச்சி’ என்று வசனம் பேச வைச்சாங்க போலிருக்கு. நடைமுறையில் எந்த அண்ணனும் தன் தங்கைகளை, தம்பிகளை ‘தங்கச்சி’ ‘தம்பி’ என்று அழைக்க மாட்டார்கள். பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். முன் பின் தெரியாத வயது குறைந்த நபர்களைத்தான் ‘தம்பி’ என்று அழைப்பார்கள். ‘தங்கச்சி’ என்கிற வார்த்தை அதற்குக் கூடப் பயன்படுவதில்லை. ‘இது என் தங்கச்சி’ என்று சுட்டிக் காட்டுவதற்குத்தான் பயன்படுகிறதே ஒழிய, விளித்தலுக்கு அல்ல.

இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல்தான் இன்றுவரைக்கும் படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். படம் எடுத்தவங்க, நடிச்சவங்க எல்லாம் நிஜ வாழ்க்கையில் அக்கா-அண்ணன்-தங்கை-தம்பியா இருக்கிறவங்கதானே. அப்புறம் சினிமா அப்படின்னா மட்டும் எங்கிருந்துதான் இப்படி பொத்துக்கிட்டு வருதோ பாசம்?

எல்லா டி.வி. நிகழ்ச்சிகளிலும் பாட்டுப் போட்டி என்கிற பெயரில் குழந்தைகளை, சிறுவர்களை சினிமாவின் ஆபாச பாடல்களைப் பாட வைப்பதும் ஆட வைப்பதுமாக இருக்கிறார்களே?
-செண்பகா, வாலாசாபாத்.

ஒரு பழையபடத்துல, ஒரு எட்டு வயது சிறுமி காதல் பற்றியும் அதன் மனவேதனை பற்றியும் பாட்டுப் பாடி நாட்டியம் பழகுவது போல் காட்சி. அதைப் பார்த்த என்.எஸ். கிருஷ்ணன் ‘’எட்டு வயசு குழந்தை பாடற பாட்டாட இது?’’ ன்னு குழந்தையின் தந்தையை ஓங்கி ஒரு அறை விடுவாரு. அடி வாங்குனவரு, ‘’ஏன்ணே என்னை அடிக்கிறீங்க? காதல்ங்கறது தப்பு இல்லன்ணே. அன்புதான் காதல்’’ன்னு சொல்லுவாரு. அதற்கு என்.எஸ்.கே., ‘’அப்போ அதை அன்புன்னே சொல்ல வேண்டியதுதானடா. ஏன்டா காதல்ன்னு சொல்றே’’ன்னு இன்னொரு அறை விடுவாரு. என்.எஸ்.கே. மாதிரி யாராவது நாலு அப்பு அப்புனாதான் எல்லாம் சரிப்பட்டு வருமோ என்னவோ?

‘முற்போக்காளர்கள்’ சில பேர் திடீர் என்று உடலுறவு, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பதைப் பற்றி எல்லாம் எழுதுகிறார்களே?
-சுப. சீனிவாசன், காரைக்குடி.

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பதைப் பற்றி எழுதுவதெல்லாம் இருக்கட்டும். முதலில் வாயை சுத்தமா வைச்சிக்கிட்டு அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்லட்டும். மனுசனா பொறந்தா பல்லு வெளக்க வேண்டாமங்க. சமூகத்தில் கூட நல்லா பல்லு விளக்குகிறவர்கள் ‘சுத்தமற்ற’ தாழ்ந்த ஜாதியாம். சரியா பல்லு விளக்காதவங்கதான் ‘சுத்தமான’ உயர்ந்த ஜாதியாம்.

சில பேரு பேசுற வசனம் மட்டும், ரொம்ப சுத்த பத்தமா இருக்கு. வாயப் பாத்தா ஜெயேந்திரனுக்குச் சொந்தக்காரர் மாதிரி இருக்கு.

உங்களுக்கு யாருடைய கேள்வி பதில் ரொம்ப பிடிக்கும்?
-வி.சுசிலா, சென்னை.
Periyar
பெரியாருடைய பதில்கள். பத்திரிகைகளில் பதில் சொல்வது பெரிய விஷயமல்ல. பொதுக்கூட்டங்களில் பார்வையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்வது சாதாரணமானதல்ல. அதில் ஈடுஇணையற்றவர் தந்தை பெரியார். அப்படித்தான் ஒரு முறை பெரியார் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவர், ‘’அடிக்கடி சுயநலம், பொதுநலம் என்கிறீர்களே, சுயநலம் என்றால் என்ன? பொதுநலம் என்றால் என்ன?’’ கேட்டிருக்கிறார். கேட்ட அடுத்த வினாடியே, ‘’மழை பொழிவது பொதுநலம். குடை பிடிப்பது சுயநலம்’’ என்று கவிதையாய் பதில் தந்திருக்கிறார் பெரியார். பின்னாட்களில் இதைதான் இயக்குநர் வஸந்த், கிளம்பிக் கொண்டுபோய்த் தனது நேருக்கு நேர் படத்தில் வசனமாக வைத்துக் கொண்டார்.

தனிப்பட்ட முறையில் நேரடியாகக் கடுமையாகத் தாக்கிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கூட பொறுமையாக பதில் தந்திருக்கிறார் பெரியார்.

நினைத்துப் பாருங்கள், பெரியாரைத் தவிர வேறு தலைவர்கள் பேசிய கூட்டத்தின் நடுவே முதலில் எழுந்து நிற்கமுடியுமா? அப்படி நின்று விட்டால் வீட்டிற்குப் போய்ச் சேரத்தான் முடியுமா?

தேவாரம், திருவாசகத்திற்குச் சைவ மட ஆதினமே தடையாக இருக்கிறதே?
-பாண்டியன், திருமங்கலம்.

தேவாரம், திருவாசகம் சமஸ்கிருதத்தை எதிர்த்து ஆலய வழிபாட்டைத் தமிழில் நடத்துவதற்கும் தமிழை வளர்ப்பதற்காகவும் உருவானதில்லை. சமண சமயத்தை ஒழிப்பதற்காக உருவானது. சமணர்களோடு அனல் வாதம் புனல் வாதம் செய்து சைவசமயத்தை மீட்டதாகக் கதை சொல்கிறார்களே, அது கதைதான். சமணர்களை வாதத்தில் வெல்ல முடியாத ஞான சம்பந்தம், மாணிக்கவாசகன், திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி போன்ற கோழைகள் மன்னர்களைத் தூண்டி விட்டு சமணர்களை நெருப்பில் வாட்டியதைத்தான், ‘அனல்’ வாதம் என்று கதைவிடுகிறார்கள்.

பார்ப்பன-பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களின் கூட்டுக் களவானித்தனம்தான் தேவாரம்-திருவாசகம்-பெரியபுராணம். பொண்டாட்டியக் கூட்டிக் கொடுத்தவன்-பொண்டாட்டியத் தொடமாட்டேன்னு சொன்னவன்-இவனுங்களுக்கெல்லாம் காட்சிக் கொடுத்த சிவன், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உண்மையான பக்தர் நந்தனுக்குக் காட்சி கொடுக்காமல், தில்லைவாழ் அந்தணர்களை விட்டு கொளுத்தச் சொன்னவன்தானே. (‘’அம்பலவர் அருளால் இங்கு அணைந்தோம் வெய்யஅழல் அமைத்து உமக்குத் தரவேண்டி’’-பெரியபுராணம்)

தேவாரம், திருவாசகத்தின் செயல் சமணத்தை வீழ்த்துவது-பார்ப்பனியத்தை தூக்கி நிறுத்துவது. அவ்வளவுதான். மற்றபடி அதைத் தமிழ் என்கிற கட்-அவுட் வைத்து எவ்வளவு தூக்கி நிறுத்தினாலும், ஒரு போதும் பார்ப்பனியத்திற்கு எதிராக அது நிற்காது. அதனால்தான் அதன் பின்னால் போன முற்போக்காளர்களையும் அது முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்திவிட்டது.

தேவாரம் புகழ் பெற்றிருந்த காலத்தில் ஒரு சித்தன், அவைகளின் மீது இப்படித் துப்பினான், ‘’தாவாரம் இல்லை - தனக்கொரு வீடில்லை - தேவாரம் ஏதுக்குடி?’’

திருமணம் பெண்களுக்கு எதிரானது என்கிறார்கள். திருமணத்தை முற்றிலுமாக நிராகித்துவிட்டால் குடும்பம் என்கிற அமைப்பே நிற்கதியாகிவிடாதா?
-காமட்சி சுந்தரம், சென்னை.

குடும்பம் என்ன கதியாகுமோ அது எனக்குத் தெரியாது. எப்படிப் பார்த்தாலும் நிச்சயம் திருமணம் பெண்களுக்கு எதிரானதுதான். செக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் பணம் கேட்டா அது விபச்சாரம். ஆம்பளை பணம் கேட்டா அது கல்யாணமா?

நடிகர் விஜயகாந்தை தொடர்ந்து நடிகர் சரத்குமாரும் தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரே?
-டி.கணேசன், சிவகாசி.
Sarathkumar
இவர்கள் இருவரும் நடிகர்களாகக் கொடுமைப் படுத்தியதையே பொறுத்துக் கொண்டார்கள் தமிழர்கள். அதனால் இவர்களின் மேடை நடிப்பையும் புரிந்து கொள்வார்கள். இவர்களின் நோக்கம் நாட்டைப் பிடிப்பதல்ல. அது முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். தேர்தலின்போது திமுகவிடமோ அல்லது அதிமுகவிடமோ கூட்டணி பேரம் பேசி ஒரு பத்து எம்.எல்.ஏ சீட்டு, நாலு எம்.பி சீட்டு வாங்கி வைச்சிக்கிட்டா பின்னால மத்த பேரம் எல்லாம் பேச வசதியா இருக்கும், அதுக்குதான் தனிக்கட்சி. ஏன்னா சில கட்சிகள் அப்படித்தானே வண்டிய ஒட்டிக்கிட்டு இருக்கு. (அந்தக் கட்சிகளின் ஓட்டைதான் விஜயகாந்த் காலி பண்ணிக்கிட்டு இருக்கிறாரு.)

விஜயகாந்த்-சரத்குமார் இந்த இருவரில் விஜயகாந்தாவது தனது கட்சியை,த் தன் ஜாதிக்கு அப்பாற்பட்டு உருவாக்க முயற்சிக்கிறார். சரத்குமார் கட்சி சுத்தமான ஜாதி சங்கம்.