சென்ற இதழில், தமிழக பதிப்பகத் துறையில் கார்ப்பரேட் தாதாவாக வளர்ந்து வரும் கிழக்கு பதிப்பகத்தின் நூல் தயாரிப்பு முறைகேடுகள் பற்றியும், தறிகெட்டு அலையும், அதன் மோசடி விதம் குறித்தும் எழுதி, அதன் ஒரு நூல் திருட்டை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் இருந்தோம்.

‘முல்லைப் பெரியாறு சில உண்மைகள்' என் நூல் திருட்டை நாம் அம்பலப்படுத்தியது தமிழக பதிப்புத் துறையினரிடமும் அறிவார்ந்த வாசகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பலரும் நமக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் இவ்வளவு கேவலப்பட்ட பின்னரும் ‘கிழக்குப் பதிப்பகம்' சற்றும் கவலைப்படவில்லை. எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. குறைந்தபட்சம் தனது வருத்தத்தைக் கூட தெரிவிக்கவில்லை.

கூச்ச நாச்சமின்றி அடுத்தவர் நூலை எடுத்து தனது பெயரை மாற்றி வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் திருந்தும் என்ற நம்பிக்கை இனியும் இல்லை.

ஆகவே முல்லைப் பெரியாறு நதிநீர், பிரச்சினைகள்' நூலில் இருமாநில அரசுகளின் ஒப்பந்தத்தைத் தமிழாக்கம் செய்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் எஸ்.நாகராஜன், தனது நூலைக் களவாடி நூல் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர்கள் மீதும் நூல் ஆசிரியர் மீதும் விரைவில் வழக்குத் தொடர இருக்கிறார்.

இது குறித்து வழக்கறிஞர் எஸ்.நாக ராஜன் கூறுகையில், ‘ஒரு வழக்கறிஞரின் அறிவையே திருடும் கிழக்குப் பதிப்பகம் பணம் சம்பாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்று தெரிகிறது. ஆகவே அதன் மீது இன்னும் இரண்டொரு நாளில் வழக்குத் தொடர உள்ளேன் என்று கூறினார்.

கிழக்குப் பதிப்பகம் இனியாவது திருந்துமா? தனது திருட்டை நிறுத்துமா?