டாக்டர்கள் தங்களுக்கென்று நிறைய அமைப்புகள் வைத்திருந்தும் பொழுது ‘சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்' வைத்திருப்பது என்ன நோக்கத்திற்காக?

Dr.Ravindranath சமூக பொருளாதார அரசியல் ரீதியாக அனைவருக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் இந்த சங்கத்தை ஆரம்பித்தோம். தற்பொழுது மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு இல்லாத போக்கு உருவாகி வருகிறது. இதனை எதிர்த்து டாக்டர்களை அணி திரட்ட வேண்டும் என்பதற்காகவும், இதனை ஆரம்பித்தோம். இதில் தமிழம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இன்று உலகமயமாக்கத்தின் விளைவாக, இந்திய அரசின் மருந்துக் கொள்கைகளில் பெருமளவு மாற்றம் நிகழ்ந்து கொண்டு வருகிறது. இதன் விளைவாக நோயாளிகள், இந்திய சிறு மருந்து நிறுவனங்கள், மருத்துவர்கள் போன்றோர் பெரும் பாதிப்புக்களை அடைந்து வருகின்றனர். இதனை எதிர்த்துப் போரிட வேண்டிய தேவை தற்பொழுது எங்களுக்கு இருக்கிறது. ஆகவே இந்த அமைப்பு தற்பொழுது மிக முக்கியமான தேவை என்று உணர்கிறோம்.

உலக மயமாக்கல் இத்துறையில் என்ன விதமான பாதிப்பை தற்போது ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது?

உலக மயமாக்கல் என்பது மூலதனத்தை சர்வதேச மயமாக்குவது, உழைப்புச் சுரண்டலை சர்வதேச மயமாக்குவது. லாபம் மட்டுமே குறிக்கோளாக வைத்து இங்கு உலகமயமாக்கல் அசுர வேகத்தில் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்றைய உலக மயமாக்கல், வளர்ச்சி அடைந்த நாடுகட்கு சாதகமாய் இருக்கிறது. தாம் விரும்பிய வண்ணம் பிற நாடுகளின் கொள்கையை ஏற்படுத்த உலக வங்கி அவர்களுக்கு நிதியுதவியையும் கூடவே தங்களுக்கு சாதகமான நிபந்தனைகளையும் விதிக்கிறது. உலக வங்கி தான் வழங்கும் கடனிலும் கூட பாரபட்சம் காட்டுகிறது. அதிக வட்டியில் கடன் வழங்கும் உலக வங்கி, இந்தியா போன்ற நாடுகளுக்கு 11% அளவில் கடன் வழங்குகிறது. ஆனால், அமெரிக்காவிற்கு ஆதரவான நாடுகளுக்கு 4% வட்டியில் கடன் வழங்குகிறது.

மேலும் உலகம் முழுவதும் உள்ள மருத்துவத் துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால் மருத்துவ தொழிற்துறை கூட்டமைப்பு என்ற ஆதிக்கம் செய்யும் நபர்களிடம் இருக்கிறது.

மருத்துவப் பொருட்கள் தயாரிப்போர், மருத்துவ காப்பீட்டு நிறுவனம் வைத்திருப்பவர்கள், மருத்துவ உபகரணங்கள் செய்வோர் ஆகிய மிகப் பெரிய அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்து மருத்துவ தொழில்துறை கூட்டமைப்பு வைத்துள்ளனர். இந்த கூட்டமைப்பு தங்கள் நலனுக்கு ஏற்ற வகையில் வளரும் நாடுகளின் மருத்துவக் கொள்கையை வகுப்பதற்கு ‘உலக வங்கி' மூலம் நிர்ப்பந்தம் செய்கின்றது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்யப்படும் மாற்றம் எல்லாம் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்கு ஏற்றது தான்.

இந்த மருத்துவத் தொழிற்துறை கூட்டமைப்பானது, அமெரிக்க இராணுவத் தொழிற்துறை கூட்டமைப்பைப் போன்றது. அமெரிக்க இராணுவத் தொழிற்துறை கூட்டமைப்பு எவ்வாறு தங்கள் உற்பத்தி செய்யும் ராணுவ தளவாடங்களை விற்பனை செய்வதற்காக ஈராக், ஆப்கான் என தொடர்ந்து வெளி நாடுகளில் போரை உருவாக்குகிறதோ, அதைப் போலவே, மருத்துவ தொழிற்துறை கூட்டமைப்பானது, தங்கள் வணிக நலன்களுக்காக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் வாழ்க்கையுடன் விளையாடுகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் வாழும் மக்களின் உயிர்களும், அவர்களின் உடல் நலமும் எங்கோ உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் அதிபர்களின் லாப வேட்டைக்கான களமாக இருப்பது கொடுமை அல்லவா?

அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் நான்கு துறைகளில் அதிக அளவில் ஈடுபடுகின்றன. அறிவியல் தொழில்நுட்பம், நிதி மூலதனம், மருந்துப் பொருட்கள் உற்பத்தி துறை, தகவல் தொழில்நுட்பம் என நான்கு துறைகளில் ஈடுபட்டு வருகின்றன. மருந்துத்துறை அமெரிக்க நிறுவனங்களின் முக்கிய லாபம் தரும் துறை ஆகும். ஆகவே இந்தியா போன்ற நாடுகளை மிகப் பெரிய மருத்துவ சந்தைகளாக அவை கருதுகின்றன. அதற்கு உலக வங்கி பயன்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் உட்பட அனைத்து இடங்களிலும் பன்னாட்டு நிறுவனங்களிடம் சம்பளம் வாங்கும் வேலைக்காரர்கள் பணியில் இருக்கின்றனர்.

இந்தியாவில் என்ன மாதிரியாக மருத்துவக் கொள்கைளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

இந்தியாவில் 1983இல் மருத்துவ நலக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதன் பின்பு 2002இல் அனைவர்க்கும் ஆரோக்கியம் என்ற நலக் கொள்கை ஏற்படுத்தப்பட்டது. இது என்ன மாதிரியான கொள்கை என்றால் அரசுதனியார் பங்களிப்புடன் அனைவர்க்கும் ஆரோக்கியம் என்பதாக அமைகிறது. அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. தனியாருடன் இணைந்து மருத்துவ சேவை செய்வதை அரசு ஊக்குவிக்கிறது.

பெரும்பாலான மேலை நாடுகளில் அந்த நாட்டு அரசுகள் தான் மக்கள் சுகாதாரத்திற்கு செலவு செய்கின்றன. இங்கிலாந்து நாட்டில் அந்நாட்டு மக்களுக்கு ஆகும் தொகையில் 96% அரசு மருத்துவ செலவில் செலவு செய்கிறது. ஆனால் இந்தியாவில் அரசு 16% மட்டுமே நம் நாட்டு மக்களுக்கு ஆகும் மருத்துவச் செலவில் பங்களிப்பு செய்கிறது (முன்பு 20%)

அதேபோல மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒவ்வொரு நாடும் குறிப்பிடத்தக்க அளவு சுகாதாரத்திற்காக செலவிடுகிறது. கியூபா தனது நாட்டின் செலவை 7.5% செலவிடுகிறது.

ஆனால் இந்தியா 0.9% மட்டுமே செலவிடுகிறது. அதேபோல 1980களில் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் 52% மட்டுமே தனியார் வசம் இருந்தது. ஆனால் இப்பொழுது 75% தனியார் மருத்துவமனைகள் கைப்பற்றி விட்டன. இவ்வாறு அரசின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தனியார் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

இன்னும் அரசின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருப்பது, அரசு மருத்துவமனைகள் மட்டும் தான். அதனை இப்பொழுது தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்தை அரசு செய்யத் தொடங்கி உள்ளது. அது தான் தனியார் பங்களிப்புடன் கூடிய அனைவர்க்கும் ஆரோக்கியம் என்பதாகும். இதன் முதல் கட்டமாக ‘நோயாளிகள் நலச் சங்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொடங்குவதற்கு அரசு ஊக்கு விக்கிறது.

அது பற்றி?

வெளியே பார்ப்பதற்கு மிகவும் நல்லது போல் தோன்றினாலும் நோயாளிகள் நலச்சங்கம் மருத்துவத்துறையை சூறையாட வந்திருக்கும் அமைப்பே இது. நோயாளிகள் நலனுக்காக ஆரம்பிக்கப்படுவதற்காக இந்த அமைப்பு என்று கூறப்படுகிறது. இது அரசிடம் இருந்து சுகாதாரத் துறையைத் தனியார் வசம் கொண்டு செல்வதற்காக உலக வங்கி உத்தரவுடன் நமது அரசினால் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகும். இதில் அந்தப்பகுதியில் உள்ளோர் உறுப்பினர் ஆகலாம். இந்தச் சங்கத்தை நிர்வாகம் செய்வோரே இனிமேல் அந்தந்த பகுதி அரசு மருத்துவமனையை நிர்வாகம் செய்ய முடியும்.

இந்த நோயாளிகள் நலச் சங்கம் நினைத்தால், டாக்டர்களை ஒப்பந்தம் அடிப்படையில் பணி அமர்த்த முடியும். டாக்டர்களை வேலை நீக்கம் செய்ய முடியும். தனியார்களிடம் நன்கொடை வசூல் செய்ய முடியும். மருந்துப் பொருட்ளை வாங்கலாம். தனது நிர்வாக வசதிக்காக என்று கூறி அரசு மருத்துவமனைக்குச் சொந்தமான இடத்தினையோ அதன் ஒரு பகுதியையோ, விற்பனை செய்ய முடியும்.

மகாராஷ்டிராவில் இவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்து விட்டன. தமிழகத்தில் இனி வரும் காலங்களில் நடைமுறைக்கு வர இருக்கிறது.

பொதுவாக அரசின் நோக்கம் என்னவென்றால் அரசு சுகாதார மருத்துமவனைகளுக்கு தான் செலவு செய்யும் பணத்தை ஒட்டு மொத்தமாக நிறுத்தி விட்டு இது போன்ற சுயேட்சையான அமைப்புகளிடம் கொடுக்கும் திட்டம் வைத்துள்ளது. இந்த அமைப்புகள் அடுத்த கட்டமாக சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூல் செய்யத் திட்டம் வைத்துள்ளன. பிறகு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை என்பது நடக்காது.

அரசு, மக்களின் சுகாதாரத்தில் தனக்கு இருக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.

அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா?

அரசு தனது மக்களின் நலனுக்காகச் செய்யும் செலவினை வெட்டிச் செலவாக கருதுகிறது. அரசு மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயம் செய்தால் மக்கள் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தி சிகிச்சை பெறுவதையே விரும்புவர். மேலும் நாளடைவில் தனியார் மருத்துவமனைகள் தங்கள் விருப்பம் போல கொள்ளையடிக்க முடியும்.

இவ்வாறு அதிக அளவு கட்டணம் செலுத்தி சிகிச்சை பார்க்க முடியாத பொது மக்கள் அப்பொழுது தங்கள் சிகிச்சைக்கு உதவியாக ‘மருத்துவ காப்பீடு' செய்து கொள்ள விரும்புவர். அந்த சந்தர்ப்பத்தையே பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தக் காத்திருக்கின்றன. இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்குக் காப்பீடு செய்வோர் 4% மட்டுமே. இதனை அதிக அளவில் அதிகரிக்கக் காப்பீட்டு நிறுவனங்கள் விரும்புகின்றன. தங்களது வணிகத்திற்கு மிகப் பெரிய சந்தையாக இந்தியாவை கருதுகின்றன.

மேலும் தற்பொழுது அப்பல்லோ மருத்துவமனை காப்பீட்டுத் துறையில் இறங்க இருக்கிறது. இந்தியா முழுவதும் 239 மிகப் பெரிய பார்மசிகள் அப்பல்லோ நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது. அப்பல்லோ குழுமத்தின் வருவாயில் 39% அதன் மருந்து விற்பனையில் இருந்து வருகிறது.

மேலும் பன்னாட்டு மருத்துவமனைகள் விரைவில் இந்தியா முழுவதும் மிகப் பெரிய மருத்துவமனைகளைக் கட்ட உள்ளன. அதேபோல இந்தியாவில் பார்டிஸ் பார்மா என்ற மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் நாடெங்கும் மருந்து பார்மசிகள் அமைக்க உள்ளன. டாக்டர்களை நியமிக்க உள்ளன. அதேபோல இதே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் அந்த நிறுவனத்தின் லாப் வசதியை இவர்கள் பயன்படுத்த முடியும்.

சமீபத்தில் என்னும் FICCI தொழிற் கூட்டமைப்பு அரசுக்கு சுகாதாரத்துறையில் சில பரிந்துரைகள் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன? தொழிற் கூட்டமைப்பு எதற்காக அரசுக்கு சுகாதாரத்துறை சீர்திருத்தம் குறித்து பரிந்துரை செய்ய வேண்டும்? அந்த பரிந்துரை என்ன அளவில் உள்ளது?

தொழிற்கூட்டமைப்பு இந்திய மக்களின் சுகாதாரத்தை மிகப் பெரிய வணிகச் சந்தையாக கருதுகிறது. ஆகவே அதனை ‘மேம்படுத்த' பரிந்துரைகளை அரசுக்கு செய்கிறது. அது தெரிவித்த பரிந்துரைகள் விரைவில் சட்டமாக அமலாகப் போகிறது. ‘மருத்துவமனைகளுக்கான தர நிர்ணயம்' என்ற பெயரில் விரைவில் குளிர்காலத் தொடரில் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

மருத்துவமனைகளுக்குத் தர நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் யாருக்காகச் செய்யப்படுகிறது என்பது தான் முக்கியம். இவர்கள் கொண்டு வரும் பரிந்துரைகள் மூலம் சிறு சிறு கிளினிக் வைத்து பிழைப்பு நடத்தும் டாக்டர்கள் தங்கள் கிளினிக்குகளை மூடும் அபாயம் ஏற்படும்.

எப்படி என்றால் இவர்கள் நிர்ணயிக்கும் தர நிர்ணயத்தின் படி மருத்துவமனை சிறிய இட அளவுகளில் நடத்த முடியாது. மேலும் ஒரே இடத்தில் ரத்த பரிசோதனை, பார்மசி, ஸ்கேன் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் இருந்தால் மட்டுமே அது தரமான மருத்துவமனையாக அங்கீகரிக்கப்படும். இதனைச் சிறிய அளவில் தெருவுக்குத் தெரு கிளினிக்குகள் வைத்து நடத்தும் டாக்டர்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியாது. இதன் மூலம் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் ஏக போக முதலாளிகள் மட்டுமே மருத்துவமனைகள் நடத்த முடியும். இதனால் சிறு சிறு மருத்துவமனைகள் இழுத்து மூடப்படும். இந்தச் சட்டத்தின் பின்னணியில் இன்னொரு காரணமும் இருக்கிறது.

என்னவென்றால் இந்தியா முழுவதும் அதிக அளவில் மருத்துவமனைகளைக் கட்டுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களும் இந்நாட்டு நிறுவனங்களும் திட்டம் தீட்டி வருகின்றன. அவர்கட்கு குறைந்த சம்பளத்தில் வேலைக்கு மருத்துவர்கள் தேவை. ஆகவே சிறு சிறு மருத்துவமனைகளைப் பூட்ட திட்டம் தீட்டுகின்றன. மேலும் மேலை நாடுகளில் மருத்துவமனை துவங்கியுள்ள நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்குவதன் மூலம் தங்கள் நாட்டு நோயாளிகளை சிகிச்சைக்கு இந்தியாவுக்கு அனுப்ப முடியும்.

ஆனால் தங்கள் நாட்டு கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் இந்தியாவில் கட்டமைப்பு வசதி அதிகம். கட்டணம் குறைவு. மருத்துவர்களின் சம்பளமும் மேலை நாட்டு மருத்துவர்களை ஒப்பிடும் பொழுது மிக குறைவு. ஆகவே இனி வர இருக்கும் தர நிர்ணயச் சட்டத்தின் மூலம் சிறு சிறு கிளினிக்குகள் மூடப்படும். பெரிய பெரிய மருத்துவமனை மட்டுமே இயங்கும் சூழ்நிலை ஏற்படும்.

ஒரு வரியில் சொல்வதனால் எப்படி தெருவுக்குத் தெரு உள்ள மளிகைக் கடைகளைச் சூறையாடி ரிலையன்ஸ், பிக் பஜார், திரிநேத்ரா போன்ற நிறுவனங்கள் செழிக்கின்றனவோ, அதைப் போல சிறு சிறு கிளினிக்குகளைச் சூறையாடி மிகப் பெரிய பொருளாதார வசதி உள்ள மருத்துவமனைகள் தான் இனிமேல் செழிக்கும். மக்களைக் கொள்ளையடிக்கும்.

வெளிநாடுகளில் இருந்து இங்கு சிகிச்சை பெற வருகின்றவர்களை அரசு அதிகமாக ஊக்குவிக்கிறது. ஆனால் அதே சமயம் இங்கு நமது மக்களுக்குச் செலவு செய்வதை விரும்பவில்லையே? என்ன காரணம்?

அந்நியச் செலாவணி தான் காரணம். வெளிநாடுகளில் உள்ள கட்டண விகிதத்தை ஒப்பிடும் பொழுது இங்குள்ள மருத்துவ சிகிச்சை கட்டணம் மிகக் குறைவு. மேலும் இங்கு மனித உறுப்புகளை மாற்றுவதற்கு முறையான, கடுமையான சட்டங்களும் கிடையாது. சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மனித உறுப்புகளின் வணிகம் அதிக அளவில் நடக்கிறது. தற்பொழுது கூட சுனாமி போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களின் கிட்னியை வசதி படைத்த வெளி நாட்டு மனிதர்களுக்கு திருட்டுத்தனமாக பொருத்தும் அவலம் நடைபெற்றது. ஆனால் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தற்பொழுது மத்திய அரசே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மூலம் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள இளம் பெண்களுக்கு அரிய வாய்ப்பு. ஒரு வருடத்தில் 2 லட்சம் சம்பாதிக்கலாம் என அரசு விளம்பரம் வெளியிடுகிறது. சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை இருந்தால் அவர்கள் தாய்மை அடைய முடியாது. அந்த சமயத்தில் அவர்களின் கருமுட்டையையும், கணவன்களின் விந்தணுக்களையும் இணைத்து குழந்தை உண்டாக்க முடியும். இதனை நிறைவேற்ற வாடகைத் தாய் தேவைப்படும். வெளிநாடுகளில் இதற்கு அதிக செலவு ஆகும். ஆனால் நம்நாட்டு அரசு அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு தம்பதியருக்கு இங்கு வருமாறு அழைப்பு விடுக்கிறது. இங்குள்ள பெண்களுக்கு நல்ல ‘வேலை வாய்ப்பு' என்று விளம்பரம் செய்து இழுக்கிறது. ஒரு பக்கம் ‘பாரத நாடு, பழம் பெரும் நாடு' என்று ஒரு கூட்டம் பேசித் திரிகிறது. இன்னொரு பக்கம் அரசு இங்குள்ள பெண்களின் கர்ப்பப் பையை அந்நியச் செலாவணிக்காக வெளிநாட்டினருக்கு ஏற்பாடு செய்து தருகிறது. பல நாடுகளில் இந்த வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு இங்கு ஊக்குவிக்கிறது. அமெரிக்காவில் இதற்கு ஒரு கோடி ரூபாய் செலவு ஆகும்.

மேலும் உகாண்டாவில் இருந்த ஒரு பையனுக்கு சமீபத்தில் தொப்புள் கொடி மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இங்கு அதற்கு 45 லட்சம் மட்டுமே ஆனது. அமெரிக்காவில் அதற்கு 4.5 கோடி ஆகும்.

தமிழகத்தில் உலக வங்கி மருத்துவத்திற்காகச் செலவு செய்துள்ளதா?

சென்ற ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் 1071 கோடி அளவுக்கு தமிழகத்தில் உலக வங்கி உதவியுடன் மருத்துவத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அதன் ஆலோசனையின் பேரிலேயே சிக்கன நடவடிக்கை என்று கூறி பல்வேறு விதிமுறைகள் புகுத்தப்பட்டன. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நுழைவுக் கட்டணம் என்பதெல்லாம் உலக வங்கியின் ஆலோசனைப்படி செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தாம். மேலும் தற்பொழுது சென்னையில் ராஜாஜி மருத்துவமனை கட்டப்பட்டு உள்ள இரட்டை சோழ மருத்துவமனையும் ‘சிகிச்சைக் கட்டணம்' என்ற திட்டத்தின் படி செய்யப்பட்டது தான்.

மேலும் உலக வங்கி ஆலோசனைப்படியே தான். அரசு மருத்துவமனைகளில் வேலைக்கு தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள், நிரந்தரமாக்கப்படாமல் தற்காலிகமாகப் பணி அமர்த்தும் அவலம் நடைபெற்றுள்ளது. (தற்பொழுது அவர்கள் நிரந்தரமாக்கப் பட்டுள்ளனர்) மேலும் நோயாளிகள் நலச் சங்கம் என்ற பெயரிலான அமைப்பு ஆரம்பிப்பதற்கு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எல்லாத் துறையும் உலக மயமாக்கத்தால் அழிவை நோக்கிச் சென்றுள்ளதைப் போல மருத்துவத் துறையும் சென்று கொண்டிருக்கிறது. இந்த பேராபத்தை நாம் அனைவரும் இணைந்து எதிர் கொண்டு போராட வேண்டும்.

தமிழகத்தில் டாக்டர்கள் சங்கம் எவ்வாறு செயல்படுகிறது?

மற்ற எல்லாச் சேவைத் துறைகளும் அழிந்து வருவதைப் போல மருத்துவத் துறையும் சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டைச் சொல்கிறேன். தமிழகத்தில் தற்பொழுது இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் தமிழ்நாட்டில் 66,000 டாக்டர்கள் உள்ளனர். அதில் தற்பொழுது நடைபெற்ற தேர்தலில் இரண்டு அணிகள் போடப்பட்டன. 15,000 ஓட்டுகள் பதிவானதாகக் கூறப்பட்டது. அதிர்ச்சி என்னவென்றால் அதில் 9,000 ஓட்டுகள் கள்ள ஓட்டுகள் ஆகும். அதனைத் தனியே பிரித்து விட்டார்கள் என்பது வேறு விஷயம். மருத்துவத் துறை எவ்வளவு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது என்பதற்கான உதாரணமாகவே இதைச் சொன்னேன்.

சந்திப்பு: வழக்குரைஞர் கு. காமராஜ்