இந்தியா பிரித்தானிய வல்லாதிக்கத்தில் அடிமை நாடாக இருந்தபோது அடக்குமுறைச் சட்டங்களின் அணிவகுப்பு தொடங்கிற்று. சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் அதிகாரக் கைமாற்றம் நிகழ்ந்த பிறகும் அடக்குமுறைச் சட்டங்களின் பயணம் முடிவடையவில்லை. அது இன்றளவும் தொடர்கிறது.

Kolathoor Maniஒரு சட்டம் நியாயமானதாகவும், முறையானதாகவும், இயற்கை நீதியின்பாற்பட்டதாகவும், அறிவுக்குப் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்பது சட்டத்திற்குரிய இலக்கணமாகும். இவ்வாறான சட்டங்கள் அவற்றால் பாதிக்கப்படுவோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உரிய வாய்ப்பை வழங்கும். ஆனால், அடக்குமுறைச் சட்டங்கள் இந்த இலக்கணத்திற்கு உட்படுவதில்லை. எனவேதான் அவற்றைக் கறுப்புச் சட்டங்கள், ஆள்தூக்கிச் சட்டங்கள் என்கிறோம். பிரித்தானிய ஆட்சிக் காலத்தின் முதல் கறுப்புச் சட்டமாகக் கருதப்படுவது ரௌலட் சட்டமாகும். முதல் உலகப் போரின் முடிவில் வளர்ந்த விடுதலை எழுச்சியை அடக்கி ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது இச்சட்டம்.

1919ஆம் ஆண்டில் இந்த ரௌலட் சட்டத்தை எதிர்த்து அமிர்தசரஸில் ஒரு பொதுக் கூட்டத்துக்காகத் திரண்டிருந்த மக்கள் மீது வெள்ளை ஆட்சியின் அதிகாரி ஜெனரல் டயர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்தார்கள். இதுவே ஜாலியன்வாலாபாக் படுகொலை. இந்தப் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயர் “சுட்டேன், சுட்டேன், சுட்டுக் கொண்டே இருந்தேன், துப்பாக்கியில் தோட்டாக்கள் தீரும் வரை சுட்டேன்” என்று திமிராய்க் கூறினான்.

ஜாலியன் வாலாபாக் தொடர்பாக லண்டனில் நடைபெற்ற நீதி விசாரணையில் “அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்?” என்று கேட்ட போது, ஜெனரல் டயர் பதிலளித்தான்:

“பாஞ்சால மக்களிடம் உளவியல் தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தினேன்”.

ஜெனரல் டயர் சொன்னதன் பொருள் மக்களிடம் அச்சமூட்ட வேண்டும் என்பதே. துப்பாகிச் சூட்டுக்கு மட்டுமல்ல, அதற்கு வழிகோலிய ரௌலட் சட்டத்திற்கும் இதே நோக்கம்தான். அடக்குமுறைச் சட்டங்கள் அனைத்தும் மக்களை அச்சுறுத்தி திகிலடையச் செய்வதற்காகவே!

‘சுதந்திர’ இந்தியாவில் அடக்குமுறைச் சட்டங்களான இந்தியப் பாதுகாப்பு விதிகள், இந்தியப் பாதுகாப்புச் சட்டம் (மிசா), கலவரப் பகுதிகள் சட்டம், ஆயுதப் படைகள் தனி அதிகாரச் சட்டம், பயங்கரவாதச் சட்டங்களான தடா, பொடா... இவை அனைத்தும் ரௌலட் சட்டத்தின் வழிவந்தவையே. பார்க்கப் போனால், இவை ரௌலட் சட்டத்தை விடவும் கொடுமையானவை.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அப்பொழுதைய இந்திய தேசிய காங்கிரசார் அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்தவர்கள் மட்டுமல்ல, அச்சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுமாவர். இதேபோலத்தான் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திரா காங்கிரஸ் ஆட்சிக்கால அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்தது மட்டுமல்ல, அச்சட்டங்களால் பாதிக்கப்படவும் செய்தது. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கலைஞர் மு. கருணாநிதியை இந்தியப் பாதுகாப்பு விதிகள் என்னும் அடக்குமுறைச் சட்டத்தின்படி சிறையிலடைத்தது. பாளையங்கோட்டை சிறையில் தாம் பட்ட இன்னல்களைக் கலைஞரே விரிவாக எழுதியிருக்கிறார்.

197677இல் நெருக்கடி நிலைக் காலத்தில் தி.மு.க முக்கியத் தலைவர்கள் பலரும் மிசா சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டார்கள். மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராச்சாமி, நீல நாராயணன், சிட்டிபாபு போன்றவர்கள் கொடிய முறையில் தாக்கப்பட்டதும், சிட்டிபாபு சிறையிலேயே உயிரிழந்ததும் யாவரும் அறிந்த செய்திகள்.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அடக்குமுறைச் சட்டங்களால் தாக்குண்ட இந்திய தேசிய காங்கிரசார் தங்கள் கையில் அதிகாரம் கிடைத்தவுடன் அதே அடக்குமுறைச சட்டங்களை அரசியல் எதிரிகள் மீது ஏவியது போலவே, திராவிட முன்னேற்றக் கழகமும் தன்னைத் தாக்கிய அதே அடக்குமுறைச் சட்டங்களை அதிகாரத்திற்கு வந்த பின் தன் அரசியல் எதிரிகள் மீது ஏவத் தயங்கவில்லை.

தி.மு.கழகத்தின் அரசியல் எதிரிகள் யார்? அண்ணா இருந்தவரை காங்கிரசாரே தி.மு.க.வின் முதல் எதிரிகளாய் இருந்தனர். பிறகு எல்லாம் மாறிப் போனது. தி.மு.க.வுக்கும் அதிலிருந்து பிரிந்த அ.தி.மு.க.வுக்கும் காங்கிரசார் மாறிமாறிக் கூட்டாளிகள் ஆகி விட்டனர். இப்போதைய தி.மு.க ஆட்சி அடக்குமுறைச் சட்டங்களை யார் மீது ஏவியுள்ளது, பாருங்கள்.

நெருக்கடி நிலைக் கால மிசாவுக்குப் பதிலாக 1980ல் இயற்றப்பட்டதுதான் தேசியப் பாதுகாப்புச் சட்டம் (ழிஷிகி). மிசா போய் ‘நிசா’ வந்தது எனலாம். இந்தச் சட்டத்தின் கீழ் தி.மு.க அரசு அண்மையில் மூவரைச் சிறைப்படுத்தியுள்ளது. இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கெர்ளகை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகிய இம்மூவரும் தமிழ் ஈழ மக்களுக்கும், அவர்களது விடுதலைப் போராடடத்திற்கும் ஆதரவாக ஓங்கிக் குரல் கொடுத்தார்கள் என்பதே இவர்கள் செய்த குற்றம்.

எந்த ஒருவரையும் மேடைப் பேச்சுக்காகச் சிறைப்படுத்துவது குறித்து ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். அதுவும் மேடைப் பேச்சுக்காக ஓர் அடக்குமுறைச் சட்டத்தையே பயன்படுத்துவது மானக்கேடானது. முத்தமிழுக்கு முற்றுரிமை கொண்டாடும் தமிழக முதல்வர் கருணாநிதி தமிழ் உணர்வாளர்களை தமிழீழ ஆதரவுச் சொற்பொழிவுகளுக்காகச் சிறைப்படுத்தி, அவர்கள் மீது அடக்குமுறைச் சட்டத்தை ஏவியிருப்பது கொடுமையிலும் கொடுமை!

ஒரு வேடிக்கை என்னவென்றால், சீமான், மணி, சம்பத் ஆகியோருக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும் என்ற அவசரத்தில் ஆட்சியாளர்கள் செயல்பட்டிருப்பதை அவர்கள் மீதான தடுப்புக் காவல் ஆணைகளே வெளிப்படுத்தும்.

***

சீமான் இந்திய இறையாண்மையை எதிர்த்துப் பேசினாராம். அதற்காகத் தளைப்படுத்தப்பட்டு பிணையில் வெளியே வந்தபின் மீண்டும் அதே போல் பேசினாராம். மீண்டும் கைது, மீண்டும் பிணை, மீண்டும் பேச்சு, மீண்டும் சிறை! பேசியதையே மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதால் அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளதாம்! இது வேடிக்கையாக இல்லையா?

ஓர் அரசியல்வாதி ஊழல் செய்கிறார், அதற்காகச் சிறைப்படுத்தப்படுகிறார், விடுதலையானபின் மீண்டும் ஊழல், மீண்டும் சிறை! இதுவே தொடர்கதையானால் அவரைத் தூக்கில் போட்டுவிடலாமா? அதற்குச் சட்டம் இடம் தருமா?

கருத்தைக் கருத்தால் சந்திக்கத் திராணியற்ற காங்கிரசார் கோரியபடியால் சீமானைச் சிறைப்படுத்தியுள்ளது அரசு என்பதே உண்மை. சீமானின் பேச்சுக்காக அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த இடம் உண்டா? என்ற சிறு ஆய்வுகூட செய்யப்படவில்லை என்பதை அவர் மீதான தடுப்புக் காவல் ஆணையிலிருந்தே அறியலாம்.

சீமான் பேசியது என்ன? “தமிழின விடுதலைக்காக எழுச்சிமிகு மறத்தமிழர் கூட்டம் பிரபாகரன் பின்னால் நிற்கிறது என்கிறார். தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசவே கூடாதா? என்று கேட்கிறார். இந்தியா கருத்துச் சுதந்திரமற்ற, பேச்சுச் சுதந்திரமற்ற மிகப்பெரிய சர்வாதிகார நாடு என வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டுகிறார். வாக்களித்த மக்களைச் சந்திக்க வரும் அரசியல்வாதிகளுக்கு எலிப்படை, பூனைப்படை, இசட் பிரிவு, ஒய் பிரிவு என்பதெல்லாம் உண்மையான பாதுகாப்பு அல்ல” என்று எச்சரிக்கிறார்.

“நான் என்ன கேட்டேன்? செத்து விடுகிற என் உறவுகள், கதறி அழுகிற ஓலமும், ஒப்பாரியுமாக கண்ணீர் விடுகிற அதே நாட்டுக்குள் விளையாட்டா என்று கேட்டேன். இந்தியா ஒரு கருத்து சுதந்திரம் அற்ற பேச்சு சுதந்திரம் அற்ற ஒரு மிகப்பெரிய சர்வாதிகார நாடு. நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். என் தலைவர் பிரபாகரனை சீமான் பேசினால் சிறைப்படுத்துகிறார்கள். இதுதான் ஜனநாயகமா? தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசவே கூடாதா? எதிர்த்து எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாமா?” இதுதான் என் கேள்வி.

மேலும் தொடர்கிறார்.

“இப்போது அழுகிற பெருமக்களே மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். என் தலைவரை கொன்று விட்டார்கள் என்று குமுறுகிற தோழர்களே அன்றைக்கு எங்கே போனீர்கள்? உங்கள் அருமைத் தலைவரை தனியாக விட்டுவிட்டு எங்கே போனீர்கள்?”

“நீங்கள் வாக்கு கேட்க வரும்போது எங்கள் ஆத்தாளும், அப்பனும் ஒரு வெங்கலத் தட்டிலே ஆரத்தி எடுக்கிறார்களே அதில் ஆசிட்டை வைத்து ஊற்றினால் என்ன பண்ணுவீர்கள். அப்ப உங்களுக்கு பயம் இல்லை. வாக்கு பொறுக்கிகளே உங்களை வீழ்த்தும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை”

“என் தலைவர் பிரபாகரன் பின்னால், என் அன்பான தம்பிகளே, எழுச்சியுடனும் புரட்சியுடனும் எழுந்து நில்லுங்கள். இந்த மண்ணிலே புரட்சி எழுந்தாக வேண்டும். புரட்சி எப்போதும் வெல்லும், அதை நாளை தமிழீழம் சொல்லும்.”

இதுதான் கடந்த பிப்ரவரி 17ஆம் நாள் திருநெல்வேலி வழக்குரைஞர் சங்கம் ஏற்பாடு செய்த பாளையங்கோட்டை சவகர் திடல் கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசிய பேச்சுக்களின் சில பகுதிகள்.

இந்த உணர்ச்சிமயமான உரையின் வாயிலாக அவர் பொதுமக்களிடையே வன்முறையைத் தூண்டினார் என்று தடுப்புக் காவல் ஆணை குற்றஞ் சாட்டுகிறது. அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது. உண்மையில் இந்த உரையில் சட்டப்படி எவ்வித குற்றமும் இல்லை என்பது நம் வாதம். அப்படியே குற்றம் இருந்தாலும் அதற்கு வேறு சட்டங்கள் உள்ளனவே தவிர, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை.

கொளத்தூர் மணி மீதான தடுப்புக் காவல் ஆணையிலும் அவர் இந்திய இறையாண்மையை எதிர்த்துப் பேசியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாஞ்சில் சம்பத் மீதான தடுப்புக் காவல் ஆணையில் அவர் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசினார் என்று குற்றஞ் சாட்டியுள்ளனர்.

சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் மூவரும் இந்திய இறையாண்மை அல்லது இந்திய ஒருமைப்பாட்டை எதிர்த்துப் பேசினார்களா இல்லையா? என்ற ஆய்வு ஒருபுறமிருக்கட்டும். அவர்கள் அப்படிப் பேசியதாகவே வைத்துக் கொள்வோம். பேசியிருந்தாலும் குற்றமில்லை. குற்றமென்றாலும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் குற்றமில்லை. இம்மூவருக்கெதிராகவும் தடுப்புக் காவல் ஆணை பிறப்பித்த அரசு அதிகாரிகள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை எடுத்து ஒருமுறை படித்திருந்தால், இந்த வழக்குகளுக்கு அந்தச் சட்டம் பொருந்தவே பொருந்தாது என்பதைக் கண்டிருப்பார்கள்.

இந்திய இறையாண்மையையும், இந்திய ஒருமைப்பாட்டையும் எதிர்த்துப் பேசுவதை தேசியப் பாதுகாப்புச் சட்டம் குற்றமாகக் கருதுகிறதா? இல்லவே இல்லை. சொல்லப் போனால் இந்திய இறையாண்மை, இந்திய ஒருமைப்பாடு என்ற சொற்றொடர்களே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் எந்த விதியிலும் இல்லை.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் ஒருவரைச் சிறைப்படுத்தித் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அடிப்படைகளை 1980ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3 வரையறுத்துச் சொல்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு, அயல்நாட்டு அரசுகளுடனான உறவுகள் ஆகியவற்றுக்குக் கேடு பயக்கும் விதத்தில் செயல்படாமல் தடுப்பதற்காக எவர் ஒருவரையும் தடுப்புக் காவலில் வைக்க நடுவணரசு அல்லது மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. இரண்டாவதாக அயல்நாட்டவர் ஒருவர் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருப்பதை ஒழுங்குபடுத்துவதற்காக அல்லது அவரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக தடுப்புக் காவலில் வைக்கலாம். இதுதான் மூன்றாம் விதியின் முதல் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் இந்திய இறையாண்மை அல்லது இந்திய ஒருமைப்பாடு என்ற பேச்சே இல்லை என்பதைக் கவனியுங்கள்.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் மூன்றாம் விதியின் இரண்டாம் பிரிவு நம்மைப் பொறுத்தவரை முக்கியமானது. இயக்குநர் சீமானுக்கு எதிராகவும் மற்றவர்களுக்கு எதிராகவும் இந்தப் பிரிவைப் பயன்படுத்தியுள்ளனர். இந்தப் பிரிவில் உள்ளபடி அரசுப் பாதுகாப்புக்கோ பொது ஒழுங்கிற்கோ, இன்றியமையாப் பொருள் வழங்கல் மற்றும் சேவைகளுக்கோ கேடு பயக்கும் விதத்தில் செயல்படவிடாமல் தடுப்பதற்காகத் தடுப்புக் காவலில் வைக்கலாம். நம்மவர்களுக்கு மூன்றாவது காரணம் பொருந்தாது. பொது ஒழுங்கும் அரசுப் பாதுகாப்பும்தான் மிச்சமிருப்பவை. இவற்றில் எதற்கும் இந்திய இறையாண்மை என்றோ, இந்திய ஒருமைப்பாடு என்றோ பொருள் கொள்ள வழியே இல்லை.

எனவே, இந்திய இறையாண்மை, இந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

அரசுப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு எதிராகப் பேசுவதை அல்ல, செயல்படுவதைத்தான் தேசியப் பாதுகாப்புச் சட்டம் குற்றமாகப் பார்க்கிறது. சீமானுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் ஆணை அவரது பேச்சை எடுத்துக் காட்டுகிறதே தவிர, பொது ஒழுங்கிற்கு எதிராக அவர் செய்த செயல் என்று எதையும் குறிப்பிடவில்லை. ஒரு செயலையும் குறிப்பிடாமலே “மேலும் செயல்பட்டார்” என்று ஒப்புக்குச் சேர்த்திருப்பதிலிருந்து ஆணையிட்டவர்களின் பொய்மை வெளிப்படுகிறது.

****

Nanchil Sambathகொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் மீதான தடுப்புக் காவல் ஆணைகளும் இதேபோன்ற ஓட்டை உடைசல்களே.

தோழர் கொளத்தூர் மணிக்கு எதிராக திண்டுக்கல் காவல்துறை ஆய்வாளர் கொடுத்துள்ள வாக்குமூலம் இப்படிச் சொல்கிறது.

“இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரான குற்றங்கள் புரியும் குற்றவாளிகளையும், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவாளர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குத் தொடரும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது.

“திரு தா.செ.மணி இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் தீங்கு பயக்கும் விதத்தில் செயல்படுவதன் மூலம் 1980ஆம் ஆண்டின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் வழிவகைகளை மீறுவதாகவும், இந்திய நாட்டவரின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவும், மேலும் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை வெளிப்படையாக ஆதரிப்பதாகவும் என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது”.

இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராகத் தோழர் கொளத்தூர் மணி செயல்பட்டதற்கு சான்றுகள் என்ன?

ஈரோட்டில் 14.12.2008இல் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் அவர் “புலிகளை ஆதரித்தும், பிரபாகரனை ஆதரித்தும் பேசினாராம். புலிகளும் பிரபாகரனும் இநதியாவின் ஒரு பகுதியைப் பிரிவினை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்களாம். இந்தியாவின் இறையாண்மைக்கும் ஆட்சிப்புல ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் நோக்கத்துடனும் பொது மக்களின் மனத்தில் அச்சம் உண்டாக்கும் நோக்கத்துடனும் மணி பேசினாராம். இதனால் பொதுமக்கள் எவரும் அரசுக்கு எதிராகக் குற்றம் புரிவதற்கோ பொது அமைதிக்கு எதிராகச் செயல்படுவதற்கோ தூண்டப்படாலாமாம்”. இதற்காகத் தொடரப்பட்ட வழக்கு புலன் விசாரணையில் உள்ளது என்கிறார் காவல்துறை ஆய்வாளர்.

இதேபோல், 26.2.2009இல் திண்டுக்கல்லில் “ஈழம் எரிகிறது” என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் இலங்கையில் இந்தியப் படைகள் ஈழத் தமிழருக்கு எதிராக இழைத்த குற்றங்களை எடுத்துக் காட்டிய தோழர் மணி, ராஜீவ் கொலையை இதற்கான மரண தண்டனையாக ஏன் கருதக் கூடாது? என்று கேட்டாராம். குமரப்பா, புலேந்திரன் ஆகிய இரு தலைவர்களின் இழப்பினால் ஈழத் தமிழர்கள் கோபமுற்றார்கள் என்பதால் ராஜீவ் கொலை ஒரு குற்றமாகாது என்று அவர் சொன்னாராம். இந்திய அரசு பிரபாகரனை பயங்கரவாதி என அறிவித்துவிட்டு எப்படி அரசியல் தீர்வு காணச் சொல்ல முடியும் என்று அவர் கேட்டாராம். தமிழ் மீட்சிப் படை, தமிழர் பாசறை போன்ற பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஆதரவளித்ததாகச் சொல்லி விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது என்றும், இந்த இரு அமைப்புகளுமே இந்த நாட்டில் இல்லாதபோது தடை எவ்வாறு பொருந்தும்” என்று மணி கேட்டாராம். இந்தப் பேச்சுக்காகவும் அவர் கைது செய்யப்பட்டு இந்த வழக்கும் புலன் விசாரணையில் உள்ளது.

காவல்துறை ஆய்வாளர் கொளத்தூர் மணிக்கு எதிராக எடுத்துக்காட்டி இருப்பவை எல்லாம் வெறும் பேச்சுக்களே, எந்தச் செயலும் இல்லை. அந்தப் பேச்சுக்களும் கூட இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரானவை என்றுதான் சொல்லப்படுகிறது. நாம் மேலே எடுத்துக்காட்டியிருப்பது போல் இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு என்பவற்றுக்கும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

காவல் துறை ஆய்வாளர் வழங்கிய இந்திய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் திண்டுக்கல் மாவட்டக் குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கொளத்தூர் மணிக்கு எதிரான தடுப்புக் காவல் ஆணையைப் பிறப்பித்துள்ளாராம். ஆணை பிறப்பித்த பிறகு, யார் என்ன சொன்னார்களோ, அவர் தனது ஆணையில் ஒரு திருத்தம் செய்துகொள்ளுமாறு புதிய ஆணை ஒன்றையும் பிறப்பித்துள்ளார். முதல் ஆணையில், “இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும்” என்று இருப்பதை “பொது ஒழுங்குப் பராமரிப்புக்கு” என்று திருத்தி வாசிக்குமாறு இரண்டாவது ஆணை குறிப்பிடுகிறது.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், மாவட்ட ஆட்சியரின் ஆணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதே தவிர ஆணைக்கு அடிப்படையாக இருந்த காவல்துறை ஆய்வாளரின் வாக்குமூலம் திருத்தப்படவில்லை. இதன்பொருள் என்னவென்றால், காவல்துறை ஆய்வாளர் இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து என்கிறார். அவரது வாக்குமூலத்தை நம்பித் தடுப்புக் காவல் ஆணை பிறப்பித்த மாவட்ட ஆட்சியரோ பொது ஒழுங்குப் பராமரிப்பிற்கு கேடு என்கிறார். இது மிகப்பெரிய கேலிக்கூத்து.

இந்தக் கேலிக் கூத்துக்கு மூலகாரணம் என்னவென்றால், இந்த ஆணையை பிறப்பிக்கும் எவரும் சிந்தனையைச் செலுத்தி பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தடுப்புக் காவல் ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் கொண்ட எவரும் சிந்தனை செலுத்தி ஆணை பிறப்பிப்பதில்லை என்பதே உண்மை. நடுவணரசு, மாநில அரசு அல்லது மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரம் தரப்பட்டுள்ளது. மாநில அரசை நடத்துகிற ஆளும் கட்சி தன் அரசியல் தேவைகளுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்பவே இச்சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். எனவேதான் சட்டத்தின்படியோ உண்மை விவரங்களின் அடிப்படையிலோ இல்லாமல் மேலிட உத்தரவுகளுக்கு ஏற்பத் தடுப்புக் காவல் ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

இயக்குநர் சீமானைக் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் கோரும் வரை அவரைக் கைது செய்யும் எண்ணமே அதிகாரத்திலிருக்கும் எவர்க்கும் வரவில்லை. சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சீமானைக் கைது செய்யும்படிக் கோரிக்கை வைக்கிறார்கள். இன்று மாலைக்குள் கைது செய்துவிடுவோம் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவிக்கிறார். சீமானை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் சிறைப்படுத்த ஆணையிட்ட அரசோ அதிகாரியே ‘சிந்தனை செலுத்தி’ (மூளை இருந்தால் அதனைப் பயன்படுத்தி) இந்த ஆணையை பிறப்பித்தார்கள் என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது.

அரசோ அதிகாரிகளோ சிற்தனை செலுத்தி தடுப்புக் காவல் ஆணை பிறப்பிப்பதில்லை என்பதற்கோர் அப்பட்டமான சான்று கொளத்தூர் மணி மீதான தடுப்புக் காவல் ஆணையும் மறு சிந்தனைக்குப் பின் பிறப்பிக்கப்பட்ட பிழைதிருத்த ஆணையுமாகும்.

சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் மூவரையும் தடுப்புக் காவல் சிறையில் அடைத்திருப்பது சனநாயகத்திற்கும், கருத்துரிமைக்கும் எதிரானது. இனப்படுகொலை செய்யப்பட்டுவரும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க தமிழகத்திற்குள்ள தேசிய உரிமைக்கும் எதிரானது. பார்க்கப் போனால் அவர்கள் மீது எந்தச் சட்டம் ஏவப்பட்டுள்ளதோ அந்தத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் உட்படாதது. எனவே சட்டப்புறம்பானது.

இறுதியாக ஒன்று. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம் தேசத்தைப் பாதுகாப்பதுதான் என்றால், ஒருவரின் உணர்ச்சிமயமான இனஉணர்வுச் சொற்பொழிவே தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தாகி விடுமென்றால், அப்படி ஒரு தேசத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை நமக்கில்லை.