Venkatachalamஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையான வங்கித்துறை. இன்று உலகமயம் என்னும் பேராபத்தை எதிர்கொண்டு இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் உலகமயத்தைப் பல்வேறு வழிகளில் வங்கித்துறையில் புகுத்துவதற்கு எல்லா ஆட்சியாளர்களும் தொடர்ந்து முயற்சித்து சிறிது வெற்றியும் பெற்று விட்டனர். தொடர்ந்து துறை முழுவதையும் உலக மயமாக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர். அவர்களின் முயற்சி வெற்றி பெறாமல் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது வங்கி ஊழியர்களின் போர்க்குணமிக்க போராட்டம்தான். அத்தகைய போர்க்குணமிக்க ஊழியர்களின் முக்கியமான அமைப்பான அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் (AIBEA)பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அவர்களை அவரது தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை, லிங்கிச் செட்டித் தெருவில் உள்ள சிங்கப்பூர் பிளாசாவில் சந்தித்தோம். அவரது நேர்காணலில் இருந்து ஒரு பகுதி...


ஏறத்தாழ 38 ஆண்டுகளுக்கு முன்பாக நாட்டு முன்னேற்றத்திற்கு என்று கூறி மிகப் பெரிய தனியார் வங்கிகள் பல அரசு வங்கிகளாக மாற்றம் செய்யப்பட்டன. இன்று அரசுத் துறை வங்கிகள் அனைத்தையும் தலைகீழ் மாற்றமாக மீண்டும் தனியார் மயப்படுத்த அரசு கடுமையாகத் திட்டம் தீட்டி வருகிறது. ஏன் இந்தத் தலைகீழ் மாற்றம்! நாடு உண்மையிலேயே முன்னேறி விட்டதா?

மிகவும் சிறப்பான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். வெள்ளையர்கள் இந்தியாவை விட்டுச் சென்ற பொழுது இந்தியா பல்வேறு துறைகளில் மிகவும் பின்தங்கி இருந்தது. அதை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு அரசுகளிடம் இருந்தது. ஆனால் செயல்படுத்த வேண்டிய நிதி ஆதாரம் உள்ள வங்கித் துறை தனியார் வசம் இருந்தது. அவர்கள் இலாப நோக்கத்திற்காகவும், தங்கள் சுயநலனுக்காகவும் வங்கிகளைப் பயன்படுத்தினர். ஆகவே வங்கிகளை அரசுடமையாக்க வேண்டும் என்று எங்களைப் போன்ற தொழிற்சங்கங்கள் போராடினோம். 12 மாநிலங்களில் வறுமையின் காரணமாக, காங்கிரஸ் ஆட்சி தோல்வி அடைந்த பின்பு அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக வங்கிகள் 1969 இல் இந்திரா காந்தியால் அரசுடமை ஆக்கப்பட்டன. இந்த 38 ஆண்டுகளில் அரசு வங்கிகள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளன. அவைகளைப் பார்ப்போம்.


1969 ஆம்ஆண்டு 2007ஆம் ஆண்டு
கிளைகள் 8,200 70,000
வைப்புத்தொகை 5000 கோடி 26 லட்சம் கோடி
கடன் 3,000 கோடி 18 லட்சம்



ஆகவே மக்களுக்குச் சேவை செய்வதாக இருந்தாலும் சரி. மக்களின் பணத்திற்குப் பாதுகாப்பாக இருந்தாலும் சரி. பொதுத்துறை வங்கிகள் மிகச் சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாட்டின் முன்னேற்றம் என்ற இலட்சியத்தை நாம் அடையவில்லை. தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆகவே தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளை இன்னும் பலப்படுத்தி நாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர தனியார் மயம் என்று கூறி நாட்டை பின்னோக்கித் தள்ளக் கூடாது.

வங்கித் துறையில் தனியார் மயம் என்ன பாதிப்பு ஏற்படுத்தும்?

இன்று இந்தியாவில் 27 பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றன. அதன் மொத்த மூலதனம் 12500 கோடி ரூபாய். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்றால் 12500 கோடி ரூபாய் மூலதனம் செலுத்தி வங்கிகள் கையாளும், பொது மக்கள் பணம் 18 லட்சம் கோடி டெபாசிட் ஆகும். ஆகவே சிறிய தொகையை வைத்து தொழில் தொடங்கி மிகப்பெரிய அளவிலான தொகையைப் பொது மக்களிடம் இருந்து பெற்று வங்கிகள் வணிகம் செய்யலாம். இந்தத் தொகையைத் தனியார்மயப்படுத்தினால் மிகப் பெரிய அளவு தொகையை த் தனியார்க்குத் தாரை வார்ப்பது போல் ஆகிவிடும்.

மேலும் இத்துறையைத் தனியார் மயமாக்கினால் வரும் ஆபத்து குறித்துப் பார்ப்போம்.

பொது மக்களின் பணத்திற்குப் பாதுகாப்பு எங்கிருக்கிறது என்று பார்த்தீர்களேயானால் அது பொதுத்துறை வங்கிகளிடம் தான் இருக்கிறது. ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளில் 36 தனியார் வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் தனியார் வங்கிகளில் பொது மக்களின் பணத்திற்குப் பாதுகாப்பு இல்லை என்பது தெரிய வரும்.

பொதுத்துறை வங்கிகள் முன்னுரிமையாக 40 சதவிகிதம் அளவிற்கு வறுமை ஒழிப்பு, விவசாயம், சிறு தொழில், பொதுவிநியோகம், சுய தொழில் போன்றவற்றிற்கு கடன் வழங்குகின்றன. ஆனால் வங்கிகளைத் தனியார் மயமாக்கி விட்டால் மேற்கண்டவற்றிற்கு நிதி உதவி கிடைக்கும் வாய்ப்பு இருக்காது.

ஆக பொது மக்கள் கஷ்டப்பட்டு சேமிக்கும் பணத்திற்கு பாதுகாப்பு, நாட்டு முன்னேற்றத்திற்கு உறுதுணை போன்றவற்றிற்கு பொதுத்துறை வங்கிகளே என்றும் துணை நிற்க முடியும்.

ஆனால் நமது அரசுகள் உலகவங்கி, ஐ.எம்.எப் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாக பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கத் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. தொடர்ந்து உலக வங்கியின் கைப்பாவையாக இந்திய வங்கித்துறையை மாற்ற முயற்சிக்கின்றன. இது இந்திய வங்கித்துறையை உலக வங்கியிடம் அடகுப் பொருளாக வைப்பதற்கு சமமாகும்.

20 ஆண்டுகளில் 36 தனியார் வங்கிகள் மூடப்பட்டு விட்டதாகக் கூறினீர்கள்? என்ன காரணம் கூறி அவை ரிசர்வ் வங்கியால் மூடப்பட்டன?

ரிசர்வ் வங்கி மேற்கண்ட வங்கிகளை மூடும்போது தனியார் வங்கிகளில் தவறான நிர்வாகம் நடைபெறுகிறது. பொது மக்களின் பணத்திற்கு பாதுகாப்பு கிடையாது என்ற காரணம் காட்டி அந்த வங்கிகளை மூடியது.

இவ்வாறு தனியார் வங்கிகளில் பொது மக்களின் பணத்திற்குப் பாதுகாப்பு இல்லை என்று ரிசர்வ் வங்கி பலமுறை கூறிய பின்னும் இன்று அரசின் கொள்கை அரசுத்துறை வங்கிகளைத் தனியார்மயப்படுத்தும் போக்கு நிலவுகிறது. இது தான் விந்தை! வெட்கக் கேடும் ஆகும்.

1990களில் தற்பொழுதைய பிரதமரால் கொண்டு வரப்பட்ட ‘பொருளாதாரச் சீர்திருத்தம்' எனப்படுவதானது, வங்கித் துறையை முழுமையாக ஆக்கிரமிக்க முடியாவிட்டாலும் சற்றே ஊடுருவி உள்ளது. அதன் பாதிப்புகள் குறித்து?

தற்போதைய தாராளமயம், தனியார் மயம், உலகமயம் போன்றவை ஏற்படுத்திய பாதிப்புகள் ஒன்றிரண்டை கூறினாலே, அதன் தொடர்ச்சி எவ்வளவு உக்கிரமாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். இந்தியாவின் அடிப்படை கிராமங்கள். கிராம முன்னேற்றம் இருந்தாலே நம் நாடு முன்னேற முடியும். ஆகவே கிராம வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முன்பு வங்கிகளில் விதிமுறைகள் இருந்தன.

எடுத்துக்காட்டாக கிராமங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வங்கிக் கிளைகள் திறந்தால் மட்டுமே நகர்ப்புறங்களில் வங்கிக்கிளை குறிப்பிட்ட அளவு திறக்க முடியும் என்று விதிமுறையை முன்பு ரிசர்வ் வங்கி வைத்திருந்தது. இதன் மூலம் கிராமப்புற முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று ஏற்படுத்தப்பட்ட நெறிமுறை அது.

ஆனால் தாராளமயம் உள்ளே நுழைந்த பின்பு லாபம் சம்பாதிப்பதே வங்கிகளின் குறிக்கோளாக மாறிப்போனது. இதனால் மேற்கண்ட விதிமுறை தளர்த்தப்பட்டது. வங்கிகள் எங்கு வேண்டுமானாலும் கிளைகள் தொடங்கிக் கொள்ளலாம் என்பது நடைமுறையாகிப் போனது. அதன் விளைவு என்ன தெரியுமா?

சென்ற ஆண்டு இந்தியா முழுவதும் புதிதாக 933 கிளைகள் திறக்கப்பட்டன. (அரசு மற்றும் தனியார் இரண்டும் இணைந்து) கொடுமை என்னவென்றால் 2 கிளைகள் மட்டுமே இதுவரை வங்கியே பார்த்திராத கிராமங்களில் தொடங்கப்பட்டன. மீதமுள்ள 931 கிளைகளும் மிகப் பெரிய நகரங்களான சென்னை, கல்கத்தா மற்றும் நடுத்தர நகரங்களில் துவங்கப்பட்டன. இதன் மூலம் இனி கிராமங்கள் முன்னேற்றம் என்பது கானல் நீர் தான். இந்தியாவில் 6 லட்சம் கிராமங்கள் உள்ளன. ஆனால் 50000 கிராமங்களில் மட்டுமே வங்கி வசதி உள்ளது. 51/2 லட்சம் கிராமங்களில் வங்கி சேவை இன்னும் எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் அண்ணா சாலையிலும், கல்கத்தா, மும்பை போன்ற நகரங்களின் மிக முக்கிய வீதிகளிலும் புதிது புதிதாகக் கிளைகள் திறக்கப்படுகின்றன.

இதன் மூலம் வங்கித் துறை தற்பொழுது யாருக்கு சேவை செய்ய பயிற்றுவிக்கப்படுகிறது என்று எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

மேலும் தற்பொழுது சேவைக் கட்டணம் ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற தனியார் வங்கிகளில் அதிக அளவு வசூல் செய்யப்படுகிறது. இது அனைத்து தனியார் வங்கிகளிலும் பரவும் நாள் அதிகம் இல்லை. இது தாராளமயமாக்கத்தினால் ஏற்படும் விளைவிற்கு மிகச் சிறிய எடுத்துக்காட்டு.

74 சதவிகித அந்நிய முதலீட்டை வங்கித் துறைகளில் தனியார் வங்கிகளில் ஈடுபடுத்தலாம் என்ற அரசின் நிலை தற்பொழுது என்னவாக இருக்கிறது. அதன் பாதிப்புகள் என்ன?

இந்தியாவில் 27 அரசுத் துறை வங்கிகள் இருக்கின்றன. 28 தனியார் வங்கிகள் இருக்கின்றன. தற்பொழுது 74 சதவிகித நேரடி அந்நிய முதலீட்டை தனியார் வங்கிகளில் மட்டும் அனுமதிக்கக் கோரும் மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் இந்திய தனியார் வங்கிகளில் 74 சதவிகித அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும்.

தற்பொழுது இந்தியாவில் உள்ள 28 தனியார் வங்கிகளின் மொத்த மூலதனம் 4000 கோடி ஆகும். ஆனால் அவர்கள் இந்திய மக்களிடம் இருந்து பெற்ற மொத்த வைப்புத் தொகை 45000 கோடி ரூபாய் ஆகும். இந்த நிலையில் வெளிநாட்டு மூலதனத்தை 74 சதவிகித அளவிற்கு இந்தியத் தனியார் வங்கிகளில் மூலதனம் செய்ய அனுமதித்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏறக்குறைய 3000 கோடி ரூபாயை மூலதனம் செய்து விட்டு 45000 கோடி இந்திய பொது மக்களின் பணத்தை நிர்வாகம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.

இது இந்திய மக்களின் சேமிப்பிற்கு ஆபத்து. இது பன்னாட்டு நிறுவவனங்களின் ஊக வணிகத்திற்கு உதவும். ஆனால் எங்களைப் போன்ற தொழிற்சங்கங்களின் கடும் நிர்ப்பந்தம் மற்றும் போராட்டம் காரணமாக அரசால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தற்பொழுது இந்தியாவில் உள்ள அரசுத் துறை அனைத்தையும் இணைத்து நான்கு அல்லது ஐந்து வங்கிகளாக மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்றும், இதன் மூலம் நிர்வாகம் செய்யவும், உலக வங்கிகளுடன் போட்டி போடவும் உதவும் என்ற கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. இதன் பின்னாளில் உள்ள ஆபத்துகள் குறித்து...?

இன்று இந்தியாவில் 27 அரசுத் துறை வங்கிகள் இருக்கின்றன. உலகமயம் மற்றும் அதன் காரணமாக போட்டி என்ற அடிப்படையில் இவை அனைத்தையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலாவதாக இந்திய வங்கிகள் அனைத்தும் நம் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டவை. உலகத்தின் மற்ற நாடுகளின் வங்கிகளுடன் போட்டி போடுவதற்காக அல்ல. ஆகவே போட்டி என்பதே தவறான ஒன்று. மேலும் ஏனைய உலக வங்கிகளுடன் போட்டி போடும் அளவுக்கு நமது வங்கிகளுக்கு பலமும் கிடையாது.

இந்தியாவில் உள்ள 27 அரசுத் துறை வங்கிகளின் அனைத்து மூலதனத்தைக் கூட்டினாலும் வரும் மொத்த மூலதனம் 12500 கோடி. அதாவது 3 பில்லியன் டாலர்.

ஆனால் அமெரிக்காவின் ஒரே ஒரு தனியார் வங்கி, சிட்டி பேங்க். அதன் மூலதனம் எவ்வளவு தெரியுமா? 62 பில்லியன் டாலர். அடுத்து ஜப்பானின் ஹாங்காங் சாங்காய் பேங்க்கின், மூலதனம் 54 பில்லியன் டாலர். நம்மை விட 20 மடங்கு அதிகம்.

நாம் இருக்கும் இந்த லட்சணத்தில் அவர்களுடன் போட்டி என்பது பகல் கனவு தான். ஒரு வாதத்திற்குப் பார்ப்போம். போட்டி என்று சொன்னால் "உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கை அதிகப்படுத்தும்' என்று கூறினாலாவது போட்டியை ஏற்றுக் கொள்ளவாவது செய்யலாம்.

ஆனால், உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு என்பது ஒரு சதவீதத்திற்கும் கீழே! அதாவது 0.78% மட்டுமே. ஆகவே போட்டியில் ஈடுபட்டால் நமது பணம் பன்னாட்டு நிறுவனங்களின் ஊடக வணிகத்திற்கே உதவும். நமது நாட்டு முன்னேற்றத்திற்குப் பயன்படாது.

இந்தியா அடிப்படையில் விவசாய நாடு. 70 % மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாக அரசு சொல்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் விவசாய வளர்ச்சி 21% லிருந்து 17%மாக குறைந்துள்ளது. ஆகவே தற்பொழுது நாம் ஊக்கம் செலுத்தவேண்டியது விவசாயத் துறை. ஆனால் ஊக்கம் செலுத்த வேண்டிய விவசாயத் துறையை விட்டுவிட்டு 0.78% பங்கு உள்ள உலக வர்த்தகத்தில் போட்டி போடுவதற்கு வங்கித்துறையை அரசு அழைத்துச் செல்கிறது.

இதை என்னவென்று சொல்ல?

தற்பொழுது அரசுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதைத் தனியார் வசம் அளிப்பது குறித்து?

கிராமப்புற வங்கிகளின் சேவையை அதிக அளவில் தனியார் மயமாக மாற்றி கொண்டு செல்கிறார்கள். தற்பொழுது பாராளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Micro finance Bill சிறு கடன்களை தனியார் ஏஜென்சி மூலம் அளிக்கும் திட்டம். கடன் வேண்டும் நபர்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் அளிக்கும் திட்டம். வங்கிகளில் இருந்து 12% கடன் பெறும் தனியார் நிறுவனங்கள், தங்கள் விருப்பம் போல 24%, 36% என்று மக்களிடம் இதன் மூலம் வசூலிக்க முடியும். இதன் மூலம் அரசு தனது சேவை செய்யும் பொறுப்பை தட்டிக் கழித்து தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கு வழி வகுக்கிறது.

தற்பொழுது இந்திய வங்கிகளில் வராக்கடன் எவ்வளவு உள்ளது?

இந்திய வங்கிகளில் வராக்கடன் ஒரு லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. வராக்கடனை வசூல் செய்ய அரசு எந்த நடவடிக்கையும் தீவிரமாக எடுக்கவில்லை. அரசும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக write off. concession என்ற பெயரில் தள்ளுபடி செய்வதில் ஆர்வம் காட்டுகிறது. இந்த வராக்கடன் செலுத்தாத பட்டியலில் அமைச்சர்கள், தொழில் அதிபர்கள் என்று பலரும் உள்ளனர். வராக்கடன் வைத்திருப்பவர்கள் கோவிலுக்கு வைரவேல், வைரத்தேர் என்று வாங்கி அளிக்கின்றனர். திருப்பதி உண்டியலில் பணம் கோடிக்கணக்கில் போடுகின்றனர். அதெல்லாம் "பெருமையாக' பத்திரிக்கைகளில் வருகிறது. ஆனால் வங்கிகளில் இருந்து கடனாய்ப் பெற்றவற்றைத் திரும்பச் செலுத்துவது இல்லை.

இது குறித்து எங்களைப் போன்றவர்களுடன் நீங்களும் போராட வேண்டும். உங்கள் பத்திரிக்கையின் பெயரே "சமூக விழிப்புணர்வு' தான். ஆகவே நீங்கள் இதைச் செய்ய வேண்டும்.

வங்கிகள் பொது மக்களிடம் இருந்து அதிக அளவில் பணத்தை வைப்பாகப் பெறுகின்றன. ஆனால் இதற்கு வட்டி அளிப்பதில் பாரபட்சம் காட்டுகிறதே ஏன்?

உண்மை தான். வங்கிகளின் வைப்புத் தொகையில் பெருமளவு பணம் சாதாரண, நடுத்தர மக்களின் பணம். ஒரு வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கிற்கு அரசு தரும் வட்டி3. 5% நிரந்தர வைப்பிற்கு7%.

ஆனால் இன்று வங்கி நிர்வாகம் டெபாசிட்டுகளை அதிகப்படுத்துகிறோம் என்ற பெயரில் மிகப் பெரிய பணக்காரர்களிடம் இருந்து மிக அதிக அளவிலான வைப்புத் திட்டத்தை ஊக்கு விக்கிறது. இதற்கு 12% வட்டி அளிக்கின்றனர். ரிலையன்ஸ் அம்பானி இத்திட்டத்தின் கீழ் 1500 கோடி டெபாசிட் செய்துள்ளார். சிறுகச் சிறுக அளவில் மிக அதிக அளவில் டெபாசிட் செய்துள்ள பொது மக்களுக்கு 3.5% வட்டி வங்கிகள் அளிக்கின்றன.

மிகப்பெரிய பண முதலைகளுக்கு 12% வட்டி அளிக்கின்றன. இந்திய வங்கிகளின் மொத்த வைப்புத் தொகை 26 லட்சம் கோடி. இதில் சாதாரண பொது மக்களின் வைப்புத் தொகை 25 லட்சம் கோடி. அவர்களுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதம் 3.5% அல்லது 7%. மிகப்பெரும் பண முதலைகளின் மொத்த டெபாசிட் 1 லட்சம் கோடி. அவர்களுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதம் 12%. மேலும் கடன் வழங்கும் கொள்கையிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. வங்கிகளின் கடன் யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்றால் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு அளிக்கப்படுவது இல்லை மிகப் பெரிய பணக்காரர்களுக்கே அளிக்கப்படுகிறது.

மேலும் வட்டி விகிதத்திலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்திய விவசாயத்திற்கு 9% வட்டி அளிக்கப்படுகிறது. கல்விக் கடன் மற்றும் சிறு சிறு கடன்களுக்கு 14% வட்டி விதிக்கப்படுகிறது. அதுவும் குறைந்த தொகையே வழங்கப்படுகிறது.

ஆனால் தொழிலதிபர்களுக்கு மிகப் பெரும் தொகை தொழில் கடன் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. அவர்கட்கு வட்டி விகிதம் 7%. இது என்ன நியாயம்? இதற்கு காரணம் என்னவென்றால் தாராளமயம் தான். மேலும் வராக்கடன் தள்ளுபடி அதிக அளவில் செய்வதால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட சேவை கட்டணம் அதிக அளவில் வசூல் செய்யப்படுகிறது. யாரோ ஏமாற்றிய கடனுக்கு மறைமுகமாக சேவைக் கட்டணம் என்ற பெயரில் பொது மக்களிடம் வசூல் செய்யப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்வதனால், வங்கித் துறை சாதாரண மக்களிடம் இருந்து அதிக அளவில் டெபாசிட்டுகளைப் பெறுகிறது. குறைந்த அளவு வட்டி மட்டுமே அவர்களுக்கு அளிக்கிறது.

பெரும் பண முதலைகளிடம் குறைந்த அளவு டெபாசிட்டுகளைப் பெறுகிறது. அதிக அளவு வட்டி அளிக்கிறது. அதே போல சாதாரண மக்களுக்கு குறைந்த கடன் அளிக்கிறது. அதிக வட்டி வசூல் செய்கிறது. பெரும் பண முதலைகளுக்கு அதிக கடன் அளிக்கிறது. குறைந்த வட்டி வசூல் செய்கிறது.

தாராளமயம், சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வராவிட்டாலும் மறைமுகமாக வங்கித் துறையில் அமல் செய்யப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இதில் என்ன பங்கு வகிக்கிறார்?

(கோபமாகிறார்) நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தான் தனியார் மயத்தை மிக முனைப்புடன் செயல்படுத்துகிறார். அவர் எங்களது வங்கித் துறையை அழிக்க நினைக்கிறார். அரசுத் துறை வங்கிகளை அழித்து தனியாரிடம் அடகு வைக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்.

தனியார் வங்கிகள் புதிய வாடிக்கையாளர்களைக் கவரவும், இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவும் புதுப்புது திட்டங்கள் அறிமுகம் செய்கின்றன? ஆனால் அரசு வங்கிகள் இது போன்ற திட்டத்தில் ஆர்வமாகச் செயல்படுவது இல்லை என்பது குறித்து?

முழுவதும் உண்மை என்று கூற முடியாது. எங்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதன்படித்தான் செயல்பட முடியும். நகர்ப்புறங்களில் உள்ள சில தனியார் வங்கிகள் பகட்டாகச் செயல்படுவதால் தான் இவ்வகையான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. மேலும் ஒருவரின் பணத்திற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டி இருப்பதாலேயே நாங்கள் கணக்கு தொடங்குவது போன்ற விஷயங்களில் சற்றுக் கெடுபிடி செய்கிறோம். அவ்வளவுதான்.

இத்துறையைத் தனியார் மயப்படுத்த அந்நிய முதலீட்டை அனுமதிக்க அரசு தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது. அதனை எதிர்கொண்டு வருகிறீர்கள்?

1992ஆம் வருடத்திலிருந்து வங்கித் துறையை அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும், தாராளமயத்தை ஊக்குவிக்கவும் தொடர்ச்சியாக அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். 12 முறை இது வரை வேலை நிறுத்தம் செய்துள்ளோம். எங்களின் போராட்ட உணர்வு சற்றும் குறையவில்லை. அது இருக்கும் வரை அரசு வெற்றி பெற முடியாது. எந்த தியாகம் செய்தும் வங்கித்துறையைக் காப்பாற்றத் தயாராக இருக்கிறோம். இந்தியா முழுவதும் தவறான பொருளாதார பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஏழ்மையான நபர்கள் மேலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர். வெறும் 36 தனி நபர்கள் இந்தியாவில் 8 லட்சம் கோடி ரூபாயை தங்கள் கையில் வைத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் வங்கித் துறையை அரசு தாராளமயப்படுத்துவதை எதிர்த்து அகில இந்திய அளவில் வங்கி ஊழியர் சம்மேளனமும் வங்கி அதிகாரிகள் சம்மேளனமும் இணைந்து பொது மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து அவர்களிடம் இருந்து 3 கோடிக் கையொப்பங்கள் பெற்று ஆகஸ்டு மாதம் டெல்லியில் மிகப் பெரிய பேரணி நடத்தி பிரதம அமைச்சரிடம் அளிக்க உள்ளோம்.

தனியார் மயம், தாராளமயம், உலகமயத்தை எதிர்க்க எங்களைப் போன்ற ஒரு தொழிற்சங்கம் மட்டும் போராடினால் முடியாது. அனைவரும் வீதிக்கு வந்து போராட வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற முடியும். இதுவே நான் சமூக விழிப்புணர்வு இதழ் மூலமாக அதன் வாசகர்களுக்கு தெரிவிப்பது.

 

நேர்காணல்: கு.காமராஜ்

Pin It