சூழலியச் சிந்தனை! சூழலியத் தமிழ்!

இந்நூலின் முதன்மை ஆசிரியரான ச.முகமது அலி மேட்டுப் பாளையம் காட்டுயிர் அன்பர்கள் கழகம் நிறுவியவர். மூன்று நூல்களின் ஆசிரியர்.

காட்டு வாழ்க்கையைத் தகவல்களாகவும் அற்புத சுவராஸ்யச் சம்பவங்களாகவும் கட்டுரைத் தமிழில் பதிவு செய்யப்பட்ட நிலையைத் தாண்டி, வாசிக்கிறவனின் மனதோடு அறிவுப்பூர்வமான உரை யாடல் நிகழ்த்துகிற சூழலியல் தமிழை உருவாக்கியவர்.

ஓயாத தேடல்...

க. யோகானந்த். இந்நூலின் இணையாசிரியர். இந்தியக் கரடிகள் பாதுகாப்புத் திட்ட இயக்குனராகவும் வாஷிங்டனில் உள்ள ஸ்மித் சானியன் ஆய்வு நிறுவனத்தில் உயிரியல் பூங்கா திட்ட ஆலோசகராகவும் இவர செயலாற்றி வருகிறார்.

தற்போது முது முனைவர் பட்டத்திற்காக இந்தியக் கரடிகள் பற்றி ஆராய்ச்சியின் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.
நூலின் தனித்துவங்களாக நிறையச் சொல்லலாம். அவற்றுள் சில அழகிய புகைப்படங்களைக் கொண்ட நூல்.

சூழலியல், அறிவியல், பண்பாடு எனப் பல தளங்களிலும் நவீன முற்போக்குப் பார்வை பிறழாமல் பயணம் செய்கிற நூல்.
எளிமை, அறிவு, உணர்வு - இவை மூன்றும் இணங்கிக் கலந்த இந்நூலின் மொழிநடையை ஒரு படைப்பிலக்கியத்தில் கூடப் பார்க்க முடியாது.

நூலின் சாராம்சமாய் அமைந்த முன்னுரையே கனம் நிறைந்து மூச்சு வாங்க வைக்கிறது.

வருடல்களையும் நெருடல்களையும் மட்டுமே படைப்பிலக்கியங்களில் அனுபவித்துப் பழகிய தமிழ் நெஞ்சங்களுக்கு இது புதிய சுமை; புதிய அனுபவம். இன்னும் நாம் கண் கொண்டு பார்க்காத உலகம் எவ்வளவு பெரியதோ என்ற திகைப்பு தோன்றி அழுத்துவதும் தவிர்க்க முடியாதது.

நூலை வாசிக்க, வாசிக்கக் கிடைக்கும் தகவல்கள் விலங்கியல் கல்வியையும், சூழலியச் சிந்தனைகளையும் அதட்டித் திணிக் காமல், ஜனநாயகமான ஒரு வகுப்பறையை உருவாக்கிப் பகிர்ந்து கொள்கின்றன.

உணர்ச்சிவசப்பட்டு நூலின் பயணம் ஒரு கட்டத்திலும் வறட்டு வாதத்துக்கோ, மூடநம்பிக்கைகளின் பக்கமோ, எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணும் உள்ளீடற்ற நேசவார்த்தைகளுக்கோ சரியவில்லை.

பண்பாட்டில் யானைகள் என்ற கட்டுரையில் மட்டும் மெல்லிதாய்ப் பாடப் புத்தகத் தன்மை தட்டுப்பட்டது.

யானை ஆய்வாளர்கள், யானை பற்றிய நூல்கள் தொடர்பாக, அக்கறையுடன் வைக்கப்பட்ட குறிப்புகள் நூலில் இருக்கின்றன.

நூலின் இறுதியில் எழுப்பப்பட்டுள்ள கேள்வி, அட்டைகளில் எழுதி வீதிவீதியாய்க் கொண்டு செல்ல வேண்டிய கேள்வி.

முடிவாக ஒன்றைக் குறித்... டுமீல்! அதோ கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றியடைந்த, இப்புவியில் வாழும் உரிமையை நமக்கு முன்பே பெற்றுவிட்ட, தந்தம் தாங்கிய மேலும் ஒரு கம்பீரமான ஆண்யானை சுடப்பட்டு, காடே எதிரொலிக்கும் கதறலுடன் பிணமாகக் கீழே சாய்கிறது. இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?...

பொழுதுபோக்கு அல்ல

இயற்கை நேயம் என்பது மேட்டுக்குடிகளின் பொழுது போக்கு அல்ல: பொதுமக்களின் புறச் சூழலறிவு என்பதைப் புரியவைக்க வேண்டும் அதற்கேற்றவாறு புழங்க கலைச் சொற்களை மீட்க வேண்டும். உயிரினங்களின்றி நாமில்லை என்ற கணக்கீட்டை மக்களுக்கு உணர்த்த வேண்டும். முறையாக அவை நுகரப் படவேண்டும்.

யானைக் கொலை

யானைக் கொலை விதங்கள் பல. துப்பாக்கி சூடு, விஷ அம்பு, மின்னதிர்ச்சி, விஷமிட்ட உணவு, கண்ணிவெடி, ரயில் மோதல் அவற்றுள் சில. கொலைக்கான முதன்மைக் காரணங்கள் தந்தம், இறைச்சி மற்றும் பயிர்ப்பாதுகாப்பு சோனிப்பூர மாவட்டத்தில் மட்டும் யானைகளின் மீது ஒரு இரகசியப் போர் 2003ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன்போது 70 நாட்களில் 31 யானைகள் விஷம் வைத்துக் கொலை செய்யப் பட்டன. இச்செய்தி உலகையே குலுக்கியது.
Pin It