மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை ஈடுபடுத்தி வருபவர். அறிவியல் தமிழுக்காகத் தன் வாழ்கையையே அர்ப்பணித்தவர். இதுவரை அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறார். தமிழால் முடியும் என்ற தலைப்பின் கீழ் தமிழகத்தின் அனைத்து சட்டக்கல்லூரி மாணவர்களையும் பங்குபெறச் செய்து கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய தமிழ் மாதிரி நீதிமன்றப் போட்டியின் துவக்க விழா கருத்தரங்கிற்கு சிறப்புரையாற்ற கோவை நகருக்கு வருகை தந்த மணவை முஸ்தபாவுடன் கோவை ஞானி அவர்கள் நடத்திய நேர்காணலிலிருந்து சில பகுதிகள்...

கல்லூரிக் காலத்தில் நச்சினார்க்கினியர் என்ற பெயரோடு இருந்த தாங்கள் மணவை முஸ்தபா என்ற பெயருக்கு மாறியது ஏன்? எப்போது?

Manavai Mustafa
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தலைமையில் விவாத அரங்கம் நடைபெற்றது. மாணவர்கள் ஒரு அணியாகவும் ஆசிரியர்கள் ஒரு அணியாகவும் விவாதிக்க ஏற்பாடு. மாணவர்கள் அணிக்கு நான் தலைமை தாங்குகிறேன். விவாதத் தலைப்பு இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் வளர்ந்திருக்கிறதா? என்பதாகும். ஆசிரிய அணியினர் வளர்ந்திருக்கிறது என்றும் மாணவ அணியினர் வளரவில்லை என்றும் வாதிட்டனர். இறுதி வாக்கெடுப்பில் வளரவில்லை என வாதிட்ட மாணவ அணியினர் பெறும் வெற்றி பெற்றனர். இது பேராசிரியர் தெ.பொ.மீ.அவர்கட்கு பெரும் வியப்பளித்தது.

“அதிலும் பெருக்கத்தை வளர்ச்சியாகக் கருத முடியாது. மாறும் இயல்பு கொண்ட மனித வாழ்க்கைக்கு மாறாத உண்மைகளை உள்ளடக்கமாகக் கொண்ட இலக்கியங்களே வாழும் வெற்றியினைப் பெற முடியும். அத்தகைய இலக்கியங்களே வளர்ச்சிக்கு அடிப்படையாகும். அத்தகு அறிவாற்றல் மிக்க இலக்கியங்கள் அதிகம் உருவாகாது. வெறும் உணர்ச்சிக்கு இரைபோடும் இலக்கியங்கள் வளர்ச்சியைக் குறிக்காது. வேண்டுமானானல் அவை பெருக்கத்தைக் குறிக்கலாம். அது வளர்ச்சியாகாது” என நான் எடுத்து வைத்த வாதம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தம் உரையில் எடுத்து வைக்கும் வாதத் திறன் மாணவ சமுதாய எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. எனவே இன்று முதல் முஸ்தபாவை நம்மிடையே வாழும் நச்சினார்க்கினியராகக் காண்போம் எனக் கூறி, எனக்குப் புதுப் பெயரைச் சூட்டினார். அன்று முதல் அப்பெயர் நிலை பெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகப் படிப்பு முடிந்து வெளியேறும் போது, பேராசிரியர் தெ.பொ.மீ என்னை அழைத்து, இனிமேல் நீ முஸ்தபா என்ற பெயரால் அழைக்கப் படுவதையே நான் விரும்புகிறேன். இனி, நீ உன் சொந்தப் பெயரையே பயன்படுத்த வேண்டும். ஏன் என்று கேட்கக் கூடாது. சமயம் வரும்போது, நானே அதற்கான காரணத்தைச் சொல்வேன் எனக்கூறி கட்டளையிட்டார். அவ்வாறே நானும் நடந்து கொண்டேன். பேராசிரியர் எதைச் சொன்னாலும், செய்தாலும் என் நன்மைக்காகவே என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு உண்டு.

நான் மணப்பாறையில் பிறக்காவிட்டாலும் ஐந்து வயது முதல் அவ்வூரில் வளர்ந்தவன். என் பள்ளி வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் எழுத்து, பேச்சு மற்றும் இலக்கியத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிப் பாசறையாக, குறிப்பிடத்தக்க நிலைக்களமாக மணவை இருந்ததால் நன்றியுணர்வோடு என் பெயரை மணவை முஸ்தபா என வைத்துக் கொண்டேன்.

என் பெயரை மாற்றச் சொன்னதன் இரகசியத்தை என் குருநாதர் தெ.பொ.மீ அவர்கள் தான் மறைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் (45 ஆண்டுகளுக்குப் பின்) என்னிடம் வெளிப்படுத்தினார்.

நான் ஆரம்பத்தில் உன் சிந்தனைச் செயல்பாடுகளின் அடிப்படையில் உன் எதிர்காலத் தமிழ்ப் பணிகளைப் பற்றி நிறைய கற்பனை செய்திருந்தேன். நான் எண்ணியதை விடச் சிறப்பாக உன் தமிழ்ப் பணி அமைந்துள்ளது. அதிலும் நீ முனைப்புடன் செய்து வரும் காலத்திற்கேற்ற அறிவியல் தமிழ்த் தொண்டின் பெருமை இஸ்லாமிய சமுதாயத்தின் பெருமையாக அமையவும், ஒரு முஸ்லீம் தமிழுக்காக இவ்வளவு பாடு படும்போது நாமென்ன தமிழுக்குச் செய்திருக்கிறோம் என ஒரு நிமிடம் மற்றவர்கள் எண்ணிப் பார்க்க வாய்ப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் நச்சினார்க்கினியன் என்ற பெயரிலிருந்து (மணவை) முஸ்தபா எனும் பெயருக்கு மாறச் சொன்னேன், என்று கூறிய போது தன் மாணவன் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் தொலை நோக்கும் என்னை நெஞ்சுருகச் செய்துவிட்டது. இதுதான் என் பெயர்மாற்ற வரலாறு.

தமிழில் கலைச் சொல்லாக்கத்திற்கே தங்கள் வாழ்வை ஒப்படைத்துக் கொண்டதற்கான காரணம் அல்லது காரணங்கள் என்ன?

பல்கலைக் கழகத் தேர்வு முடிவு வெளிவந்த கையோடு கல்லூரி ஆசிரியர் பணி வேண்டி விண்ணப் பிக்க, ஒருவார காலத்திற்குள் சேலம் அரசினர் கல்லூரியில் பணியாற்ற அரசு ஆணை கிடைத்தது. என் குருநாதர் பேரா. தெ.பொ.மீ.யிடம் ஆசி பெற சென்றேன். ஆசி வழங்கியதோடு அங்கு நடைபெறும் பயிற்சி மொழி பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு செல்லுமாறு பணித்தார். நானும் ஆர்வத்துடன் கலந்து கொண்டேன்.

கருத்தரங்கில் உரையாற்றி யவர்கள் பயிற்சி மொழியாக ஆங்கிலமே தொடர்வது நல்லது. ஏனெனில், தமிழில் போதிய அறிவியல் நூல்கள் இல்லை. இருப்பவையும் சரியானபடி எழுதவோ, மொழி பெயர்க்கவோ படவில்லை. தமிழில் கலைச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தாது பெரும்பாலும் ஆங்கிலக் கலைச் சொற்களின் ஒலிபெயர்ப்பாகவே பயன்படுத்தப் படுகிறது. ஏனெனில், தமிழில் அறிவியல் கலைச் சொற்களை உருவாக்க இயலாத நிலை. எனவே, தமிழ்நூல் கற்க மாணவர்கட்கும் பெற்றோருக்கும் ஆர்வமில்லை என்றெல்லாம் பேசினார்கள் பேராசிரியர் ஒருவர் பேசும்போது “தமிழில் அறிவியலைத் திட்ட நுட்பமுடன் கற்பிக்கவே முடியாது. அப்படியே கற்பித்தாலும் தமிழில் அறிவியல் கற்ற பட்டதாரிக்கு இங்கு மட்டுமல்ல, இந்தியாவில் - ஏன் உலகில் வேறு எங்குமே வேலைவாய்ப்பு இல்லாத போது அவன் ஏன் தமிழில் அறிவியலைக் கற்க வேண்டும்.” என்றெல்லாம் ஆவேசமாகப் பேசியபோது, அவர் வாதத்தை என்னால் ஏற்க மட்டுமல்ல, கேட்டுத் தாங்கவே முடியவில்லை.

மிகவும் உணர்ச்சி வயப்பட்டவனாக கோபம் கொப்பளிக்க, போதும் என உரக்கக் கூறியபடியே எழுந்தேன். நான் எழுந்த வேகத்தையும் கூறியதையும் கேட்ட பேசிக்கொண்டிருந்த பேராசிரியர் அச்சமடைந்தவராக பேச்சை இடையிலேயே நிறுத்தி அமர்ந்தார். விரைந்து சென்று ஒலி பெருக்கி முன்னால் சென்று தலைவரின் அனுமதியோடு பேசுகிறேன் என்று நானாகவே அறிவித்துக் கொண்டு தமிழில் முடியுமா? முடியாதா? என வாதிடும் உரிமையும் தகுதியும் இங்கு பேசியவர்கட்கு உண்டா என்பது அடிப்படையான கேள்வி. இவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் படித்து, ஆங்கிலத்தில் சிந்தித்துச் செயல்படும் இவர்களைவிட, தமிழில் கல்வி கற்று, தமிழில் சிந்தித்துச் செயல்படுபவர்கள் எங்களுக்கே இந்தத்தகுதியும் உரிமையும் உண்டு. தமிழில் எந்தத் துறைக் கல்வியையும் கற்பிக்க முடியும்.

இன்னும் சொல்லப் போனால் தமிழில் எப்படிப்பட்ட அறிவியல் நுட்பச் செய்தியாக இருந்த போதிலும் அதைத் தெளிவாக சொற்செட்டோடும் பொருட் செறிவோடும் இயன்றால் இலக்கிய மெருகோடும் சொல்ல முடியும் என்பதை வெறும் சொற்களால் விளக்கம் சொல்லாமல் செயல் வடிவில் நிறுவிக் காட்ட, இன்று முதல் என் வாழ்க்கையை நான் முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறேன். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் அரசுக் கல்லூரி ஆசிரியர் பணியை இப்போதே விட்டுவிடுகிறேன் என ஆவேசமாகக் கூறியவாறே சட்டைப்பையிலிருந்த கல்லூரி ஆசிரியர் பணிக்கான அரசு ஆணையை எடுத்து மேடையிலேயே கிழித்துப் போட்டேன். இதைக் கண்ட கூட்டத்தினர் உணர்ச்சி வயப்பட்டவர்களாக எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரித்தனர். இனி ஒருவரையும் பேசவிடக் கூடாது என்ற எண்ணத்தில் இத்துடன் இக்கூட்டம் முடிவடைகிறது என அறிவித்துவிட்டு திரும்பினேன். கூட்டம் அதை ஆமோதிக்கும் வகையில் கலைந்து சென்றது.

அதே சமயம் என் முதுகில் யாரோ வேகமாகத் தட்டுவது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தபோது மிகுந்த கோபத்துடன் என் குருநாதர் தெ.பொ.மீ. நின்று கொண்டிருந்தார். எல்லாவற்றையும் நீயாகவே முடிவு செய்து கொள்கிறாயா? உணர்ச்சிவசப்பட்டு என்ன காரியம் செய்தாய்? எப்படிப்பட்ட வேலை தெரியுமா? நாளை கல்லூரிக் கல்வி இயக்குநராகக் கூட வர முடியும். உணர்ச்சிவசப்பட்டு, அவசரமுடிவாக அரசுப் பணி ஆணையைக் கிழித்துப் போட்டு, உன் எதிர்கால வாழ்வுக்கு நீயே தடை போட்டுக் கொண்டாயே, ஏன்? என்று மிகுந்த கோபத்துடன் கேட்டார்.

நான் சற்று நிதானத்துடன் அவர் கோபத்தைக் குறைக்கும் வகையில் அவரிடம் ஐயா, தமிழ் வளர்ச்சிக்கு நிறைய செய்யவேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதே தவிர, அதற்காக எந்தப் பணியை முதலில் கையில் எடுப்பது, அதை எங்கிருந்து தொடங்குவது என்பதற்கான வழிமுறைகளோ திட்டமோ இல்லாதவனாக, ஏதும் தெரியாதவனாக இருந்தேன். இப்போது அதற்கான வழிமுறை எது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. அறிவியல் தமிழ்பணி தான் இனி என் வாழ்நாள் பணியாக இருக்கும். இதற்குக் காணிக்கையாக இப்போது கிடைத்திருக்கும் கல்லூரி ஆசிரியர் பணியை விட்டுவிட்டதாகத் தாங்கள் கருதி, என் எதிர்கால அறிவியல் தமிழ்ப் பணிக்கு உறுதுணையாயிருந்து வழி காட்ட வேண்டும் என வேண்டி நின்றேன். என் மனத்திட்டம் அவருக்கு மகிழ்ச்சியளித்திருக்க வேண்டும். கடுமை குறைந்தவராக உன் விருப்பப்படியே செய். என் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு எனக்கூறி என் தோளைத் தட்டினார். அந்த நிமிடம் முதல் அறிவியல் தமிழ் பற்றி சிந்திக்கலானேன். எதிர்காலத்தில் ஆற்றவிருக்கும் அறிவியல் தமிழ்ப்பணி பற்றி மிக ஆழமாக ஒருவாரகாலம் இரவுபகலாக சிந்தித்தேன்.

தமிழில் அறிவியல் நூல்கள் பெருமளவில் வெளிவராமைக்கான அடிப்படைக் காரணங்களைப் பற்றி ஆராய்ந்தேன். அறிவியல் பொருளறிவுடன் தமிழறிவும் எழுத்தாற்றலும் மிக்கவர்கள் பலபேர் இருந்தபோதிலும், அத்துணை பேருக்கும் மிகப் பெரும் இடையூறாக அமைவது அறிவியல் கலைச் சொல். அதற்கு வேர்ச் சொல் அறிந்து சொல்லாக்கம் செய்யும் அளவுக்கு இலக்கியப் புலமையும் இளங்கலை அறிவும் ஒருங்கே பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அப்பணியைச் செவ்வனே செய்ய இயலும். அத்தகையவர்கள் மிக அரிதாகவே உள்ளனர். அறிவியல் கலைச் சொற்களை உருவாக்கித் தந்தால், அறிவியல் நூல்களை எழுதுபவர்கள் அல்லது மொழி பெயர்ப்பவர்கள் ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாகத் தமிழ்க் கலைச் சொற்களை உரிய இடத்தில் பயன்படுத்தித் தங்கள் பணியை செவ்வனே செய்து முடிக்க முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து தெளிந்தேன். எவ்வாறேனும் முயன்று செங்கற்களைச் சேகரித்து வைத்துவிட்டால் கட்டிடம் கட்டுவது மிக எளிதாக அமையும் என்பதால் அறிவியல் கலைச் சொல்லாக்கப் பணியை தலையாய பணியாக மேற்கொள்ளலானேன்.

art
அறிவியல் தமிழ்ப் பணியின் தொடக்கமாக கலைச் சொல்லாக்கத்துக்கேற்ற பணி வாய்ப்பு உங்களுக்கு வாய்த்தது எப்படி?

சென்னை வானொலி நிலையத்துணை இயக்குநர் திரு. ஹக்கீம் அவர்களை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் என் அறிவியல் தொடர்பான தமிழ்பணியாற்ற விழையும் ஆர்வத்தையும் நோக்கத்தையும் விவரித்தேன். அவர் என் விருப்பத்தைப் புரிந்து கொண்டவராக சாகித்திய அகாடமி தென்னகச் செயலாளர் டாக்டர். கே.எம். ஜார்ஜ் அவர்களைச் சந்திக்கப் பணித்தார்.

டாக்டர் ஜார்ஜ் அவர்களை நேரில் கண்டு பேசிய போது அவர் என் நோக்கத்தைப் புரிந்து கொண்டவராக, என் அறிவியல் தமிழ்ப் பணிக்கேற்ற இடம் தென்மொழிகள் புத்தக நிறுவனமாகத்தான் இருக்க முடியும். அங்குதான் புதிதாக அறிவியல் நூல்கள் பலவற்றை தமிழ் உட்பட தென்னக மொழியில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது, என்று கூறி அங்கு செல்லப்பணித்தார். அந்நிறுவனம் அப்போதுதான் ஆறு அறிவியல் நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட திட்ட மிட்டிருந்தது. நான் அந்நிறுவனத்தை அணுகினேன், அதன் தலைவர் டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் எனக்குப் பகுதி நேரப் பதிப்பாசிரியர் பணியளித்தார். பின், என் பணியின் வீச்சை அறிந்து மூன்றே மாதங்களில் முழுநேரப் பதிப்பாசிரியராக நியமித்தார். அதன் பின், “புத்தக நண்பன்” மாத இதழ் பணியும், அதனைத் தொடர்ந்து “யுனெஸ்கோ கூரியர்” பன்னாட்டுத் திங்களிதழ் பணியும் கிடைத்தது. இதனால் என் சொல்லாக்கப் பணி எல்லா வகையிலும் விரைவு பெற்றது.

பன்னாட்டு இதழான “யுனெஸ்கோ கூரியர்” மாத ஏட்டின் தமிழாக்கப் பணி களில் தங்கள் அனுபவங்கள் என்ன?

யுனெஸ்கோ நிறுவனம் ஐ.நா.வின் பேரங்கமாகும். உலகளாவிய முறையில் கல்வி, அறிவியல், பண்பாட்டுச் செய்திகளை உலக மொழிகள் பலவற்றில் வெளிவரும் திங்களிதழாகும். அவ்விதழில் அதிக அளவில் இடம்பெறுவது அறிவியல் செய்திகளாகும். இதழ் முழுமையும் மொழி பெயர்ப்புக் கட்டுரைகளைக் கொண்டதாகும். அனைத்துக் கட்டுரைகளும் உலக வல்லுநர்களால் எழுதப்படுபவையாகும்.

என் மொழிபெயர்ப்புப் பணி சிறப்பாக அமையும் வகையில் பெரும் முயற்சி செய்து பன்னிரண்டு மொழி பெயர்ப்பு உத்திகளை வகுத்து, அதற்கேற்றாற்போல் கட்டுரைகளை மொழி பெயர்த்து வெளியிடலானேன். சென்னைப் பல்கலைக்கழகம் முதுநிலைப் பட்டதாரிகளுக்கான மொழி பெயர்ப்புப் பாடத் திட்டத்திற்கான பார்வை நூலாக, யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பு பரிந்துரை செய்யப்பட்டது.

ஒவ்வொரு இதழுக்கும் குறைந்தது இருபது புதிய கலைச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை. இத்தகைய கால நெருக்கடி என்னை மிகத் துரிதமாகச் செயல்பட வழி வகுத்தது. கடந்த 35 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான கலைச் சொற்கள் உருவாக, டிரஸ்ட் நிறுவனம் வெளியிட்ட நூல்களும், யுனெஸ்கோ கூரியர் திங்களிதழும் பெரும் தூண்டுதலாகவும் துணையாகவும் எனக்கு அமைந்தது எனலாம்.

யுனெஸ்கோ கூரியர் 30 உலக மொழி இதழ்களில் தமிழ்ப் பதிப்பு நான்காவது இடத்தைப் பெற்றது. இதற்கு அடிப்படைக் காரணம், அனைத்து மொழி இதழ்களும் மொழி பெயர்ப்பு இதழ்களேயாயினும் தமிழ்ப் பதிப்புக் கூரியர் நான்காம் இடத்தைப் பெற்றதற்கான காரணத்தை அதன் தலைமையாசிரியர் அனைத்துக் கூரியர் இதழ்களம் மொழி பெயர்ப்பு இதழ்களேயாகும். இருப்பினும், மற்ற இதழ்களைக் காட்டிலும் தமிழ் இதழ்களில் வெளியிடப்படும் மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் அனைத்தும் மொழி பெயர்ப்பு எனும் வாடையே இல்லாமல் மூலமாகத் தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளாகவே வெளி வருகின்றன என்பது தமிழறிந்த உலக மொழியியலாளர்களின் ஒருமித்த கருத்தாகும்.

மேலும், கட்டுரைகளில் இடம் பெறும் கலைச் சொற்கள் மற்ற மொழி இதழ்களில் பெரும்பாலும் ஒலிபெயர்ப்பாக வெளியிடப்படும் போது தமிழ் கூரியர் இதழில் மட்டும் அனைத்துக் கலைச் சொற்களும் தமிழில் வடிவம் பெற்ற, தமிழுக்கென்றே உருவாக்கப்பட்ட தமிழ்க் கலைச் சொற்களாகவே வெளியிடப்படுகின்றன என்பது உலகத் தமிழியல் வல்லுநர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது என்று புகழ்ந்து பேசியது இங்கு எண்ணத்தக்கதாகும்.

சட்டத்தமிழ் ஆக்கத்தில் தங்கள் முயற்சிகள் எவை?

சட்டத்துறையும் ஒருவகையில் அறிவியலின் பாற்பட்டதுதான். அத்துறையில் இளமை முதலே எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.

நான் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வந்த தென்மொழிகள் புத்தக நிறுவனத்துக்காக “லாஃபார் லேமென்” என்ற புத்தகத்தைத் தமிழில் மொழி பெயர்க்க முனைந்தபோதுதான் சட்ட அறிவின் இன்றியமையாமையை என்னால் நன்கு உணர முடிந்தது. ஓரளவேனும் சட்ட அறிவு வாய்க்கப் பெற்றவர் களால் மட்டுமே சட்டத்தைச் சிறப்பாக மொழி பெயர்க்க இயலும். மொழி பெயர்ப்பின் போது அவ்வப்போது எனக்கேற்படும் ஐயப்பாடுகளை எங்கள் நிறுவனத் தலைவர் திரு கோவிந்தராஜுலு அவர்களிடம் கேட்பதுண்டு. அவர் முன்பு சட்டத்துறை இயக்குநராக இருந்தவரும் கூட.

ஒருமுறை சட்டச் சொல் ஒன்றுக்கு விளக்கம் கேட்டபோது முறையாக சட்டம் படித்தால்தான் சட்ட மொழிபெயர்ப்பு எளிதாக இருக்கும். நீங்கள் ஏன் சட்டம் பயிலக்கூடாது? இவ்வாண்டு முதல் மாலை நேரச் சட்டக் கல்லூரி தொடங்கப்படுகிறது. அதில் உடனடி யாகச் சேருவதற்கு முயற்சி மேற்கொள்ளுங்கள், என்று கூறி ஆர்வ மூட்டினார். அவரது யோசனைக் கிணங்க, மாலைநேர சட்டக் கல்லூரியில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் சட்டம் படித்தேன். அதன் விளைவு நான் ஜேபி என்று அழைக்கப்பட்ட ஜஸ்டிஸ் ஆஃப் பீஸ் எனும் பட்டத்தோடு கூடிய கௌரவ மாகாண மாஜிஸ் திரேட் எனும் பணி கிடைத்து, சில காலம் பணி ஆற்ற முடிந்தது.

இந்த சூழல்களெல்லாம் சட்டச் சொற்களுக்குத் தமிழ் வடிவம் காண்பதை பொழுது போக்காகக் கொண்டிருந்தேன். பின்னர், இந்நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டம் திரு. மா.சண்முக சுப்பிரமணியம் பொறுப்பில் அமைந்த சட்டக் குழுவால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, தி.மு.க. அரசால் வெளியிடப்பட்டது. திடீரென இந்திரா காந்தியால் அவசர நிலை அறிவிக்கப்படவே. தி.மு.க ஆட்சியைக் குறைகூறுவதற்கு இந்திய அரசமைப்புச் சட்ட மொழி பெயர்ப்பும் மேலும் ஒரு காரணமாக்கப்பட்டது. இம்மொழிபெயர்ப்பு முறையாகச் செய்யப்படவில்லை. நிறைய தவறுகள் உள்ளன. எனவே, இந்நூலை விற்பனைக்கு விடாமல் முடக்க வேண்டும் என ஜஸ்டிஸ் மகராஜன் தந்த கருத்தை ஏற்று, மூட்டைகட்டி மூலையில் போடப்பட்டது.

அவசர நிலை காலத்தில் ஜஸ்டிஸ் மகராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மீண்டும் எளிய நடையில் பெயர்ப்பதாகக் கூறி மொழி பெயர்த்து வெளியீட்டு விழா நடத்தி வெளியிட்டார்கள். மறுநாளே திரு.மா. சண்முகசுப்பிரமணியம் அதிலுள்ள தவறுகளை யெல்லாம் பட்டியலிட்டு ஆளுநர் வசம் தர, அவர் நூலை விற்பனைக்கு அனுப்பாமல் முடக்கி, முந்தைய கட்டுகளோடு மூலையில் போட்டார்.

இந்த இரு நிகழ்வுகளுமே எனக்குமிகுந்த மனவருத்தத்தை அளித்தன. அப்போது எனக்குள் எழுந்த கேள்வி சட்டத்தைக் கொள்ளுகிற தகுதி தமிழுக்கு இல்லையா? அல்லது தமிழனுக்கு இல்லையா? என்னுள் குடைந்து கொண்டிருந்த இக்கேள்விக்குத் தக்க விடை 1988ஆம் ஆண்டு மலேசிய மண்ணில் கிடைத்தது.

எனது மூன்றாவது உலகப் பயணத்தின் இறுதிக்கட்டமாக மலேசியா வந்தபோது தமிழர் அமைப்புகள் வரவேற்பளித்தன. அதில் டத்தோ. ச.சாமிவேலு உடபட மூன்று தமிழ் அமைச்சர்கள் மற்றும் தமிழர் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மலேசிய கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தில் மொழி சிறுபான்மையினருக்கென சில உரிமைகளும் சலுகைகளும் தரப்பட்டுள்ளன. அவை சட்டம் பயின்றவர்களைத் தவிர தமிழ் மொழி பேசும் சிறுபான்மைத் தமிழர்க்குத் தெரியவில்லை. அவற்றைத் தமிழர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் மலேசிய கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தை ஏன் தமிழில் தரக்கூடாது? இதை மலேசிய இந்தியக் காங்கிரஸ் சாதிக்கலாமே! எனக்கூறியபோது அமைச்சர் டத்தோ ச.சாமிவேலு அவர்கள் சட்டம் பயின்ற நீங்களே ஏன் அதைச் செய்து தரக் கூடாது? யுனெஸ்கோ கூரியர் ஆசிரியர் என்ற முறையில் எங்களுக்கும் நீங்கள் உரிமை உள்ளவர்தானே? எனவே, இப் பொறுப்பை நீங்களே மனமுவந்து ஏற்று, செவ்வனே நிறைவேற்றித் தர வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார். அதை நான் முழு மனதோடு ஏற்றுக் கொண்டேன்.

மறுநாள் காலையில் இண்டர்நேஷனல் வாடிக்கர் சர். வீசஸ் உரிமையாளர் திரு செய்யது இப்றாஹிம் என்னைச் சந்தித்து, மலேசியக் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தைத் தமிழில் தந்தால், தங்கள் நிறுவனம் வெளியிடும் என வாக்குறுதி தந்து ஊக்கமளித்தார். நான்கு மாதங்களில், உற்ற நண்பரும் என்னைப் போல் சட்டம் பயின்றவருமான திரு.இரா. நடராசன் அவர்களின் உறுதுணையோடு, மலேசிய கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தை தமிழில் மொழி பெயர்த்து, அச்சுப் படிவம் தயாரித்து அனுப்பினேன். அங்குள்ள சட்ட வல்லுநர் ஆய்ந்து, தவறேதும் இல்லை எனச் சான்றளித்த பின்னர் அச்சட்டம் மலேசியாவில் வெளியிடப்பட்டது. அவ்விழாவுக்கு நானும் அழைக்கப் பட்டேன். இவ்வாறு ஒரு நாட்டு அரசமைப்புச் சட்டம் முழுமையாக முதன் முதல் அனைவரும் ஏற்கும் வகையில் வெளியிடப்பட்ட தென்றால், அது மலேசியாக் கூட்டரசு அரசமைப்புச் சட்டம் மட்டுமே என்பது வரலாற்றுப் பதிவாகும். 

இந்திய அரசமைப்புச் சட்டத் தமிழாக்கத்திற்கு ஏன் இந்த நிலை?

எந்தவொரு மொழிபெயர்ப்பும் நூற்றுக்குநூறு துல்லியமாக இருக்கும் எனக் கூறுவது கடினம். ஆங்காங்கே பெயர்ப்பு முறையில் சிறு சிறு பிசிறுகள் இருக்கவே செய்யும். அந்த முறையில்தான் இந்திய அரசமைப்புச் சட்டத் தமிழக்காமும் அமைந்தது.

ஆனால், மொழி பெயர்ப்புப் பொறுப்பேற்ற இரு அறிஞர்கட்கிடையே ஏற்பட்டிருந்த தங்கள் தனிப்பட்ட விரோதத்தையும் குரோதத்தையும் இப்பணியின் மூலம் வெளிப்படுத்த விழைந்ததன் விளைவே, இந்திய அரசமைப்புச் சட்டத் தமிழாக்கத்திற்கு ஏற்பட்ட தடுமாற்றமும் தாமதமும்.

அறிவியல் போன்றே சட்டத்திற்கென தனித்துவ மொழியும் நடையும் உண்டு. அதைக் கருத்தில் கொண்டு திரு.மா.சண்முக சுப்பிரமணியன் குழு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முதலில் தமிழாக்கம் செய்தது. அவசரநிலை காலகட்டத்தில் தி.மு.க. அரசின் மீது குற்றம் சுமத்தியாக வேண்டும் என்ற கட்டாய அரசியல் சூழலில் அரசமைப்பு சட்ட மொழி பெயர்ப்பு முறையைக் கடுமையாகச் சாடினர். இதற்குப் பெருந்துணையாயமைந்தவர் ஜஸ்டிஸ் மகராஜன். மீண்டும் ஜஸ்டிஸ் மகாராஜன் தலைமையில் அமைக்கப் பட்ட குழு மொழிபெயர்த்து வெளியீடும் செய்தது. உடனே திரு.மா. சண்முக சுப்பிரமணியம் அதிலுள்ள தவறுகளையும் குறைகளையும் பட்டியலிட்டு விளக்கி, ஆளுநரிடம் புகார் மனு அளித்தார்.

அதையும் பரிசீலித்து ஆளுநர் அரசமைப்புச் சட்ட மொழிபெயர்ப்பு நூலை விநியோகிக்கத் தடை விதித்தார். இவ்வாறு, இருமுறை இருவேறு சட்ட அறிஞர்கள் தலைமையில் அமைந்த குழுக்கள் பெயர்த்த சட்டம் மக்கள் கைக்குப் போய்ச் சேர முடியா நிலை இருந்தது. தமிழ் நாடு அரசின் சட்ட அமைச்சராக திரு.கே.ஏ. கிருஷ்ணசாமி இருந்தபோது, என்னைச் சந்திக்கும் போதெல்லாம் நீங்கள்தான் அரச மைப்புச் சட்ட நூலை சீர்மை செய்ய உதவ வேண்டும் என்று கூறினாரே தவிர மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுத்தாரில்லை. தவறைச் சுட்டிக்காட்டி வாதிட்ட இரு சட்ட வல்லுநர்கள் இன்று இல்லாத நிலையில், தமிழ் பெயர்ப்பு அரசமைப்புச் சட்ட நூல் விற்பனைக்கு வந்துள்ளதாகக் கேள்வி.

தமிழில் கலைச் சொல்லாக்க நெறியில் பாவாணர் மற்றும் அருளி இருவர் நெறிக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? தங்கள் நெறிக்கான காரணங்கள் / ஆதாரங்கள் என்ன?

இதை விவரிக்க ஒரு சிறு நூலே எழுத வேண்டும். சுருங்கச் சொன்னால் மொழியும் நடையும் காலத்தின் போக்குக்கும் தேவைக்கேற்ப அமைய வேண்டும், எனும் கொள்கை உள்ளவன் நான். பழையனவிட்டு புதியன் புனையும் போக்கு வளர்ந்து வளம் பெற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். சுருங்கக் கூறுமிடத்து நாம் சங்க காலத்தை நோக்கி நகர்வதைவிட சங்க காலத்திலும் பன்மடங்கு மேம்பட்ட எதிர்காலத்தை நோக்கி விளைவு நடைபோடுவதே சாலச் சிறந்தது. அதுவே வளர்ச்சிக்கு வழி.

பழந்தமிழ்ப் பற்றாளர்களில் சிலர் சங்க காலச் சொல் அடிப்படையில் அல்லது சாய்வில் புதிய சொல்லுருவாக்கம் அமைதல் வேண்டும் என்பது அவர்தம் நிலைப்பாடு எனக் கருதுகிறேன். இக்கால மக்களின் புரிந்துணர்வுக் கேற்பக் கருத்துணர்த்தும் வகையில், பொருள் தெளிவுறுத்தும் நிலையில தமிழ் சொல்லுருவாக்கம் அமைய வேண்டும் என்பது என் போன்றவர்கள் நிலை. அவர்கள் நிலைப்பாடு இலக்கியத்துக்கு வேண்டுமானால் ஓரளவு இயைபுடைய தாக இருக்கலாம். ஆனால் அறிவிய லுக்குச் சரியாக அமையவியலாது. இதில் பொருளுணர் திறனுக்கே முதன்மை நிலை. மொழிச் சிறப்புக்கு இரண்டாம் நிலையே. அவர்கள் முயற்சி பழந்தமிழ் இலக்கியச் சொல்களை அடியொற்றி சொல்லுரு வாக்கம் அமைதல் வேண்டும் என்பது. அவர்கள் நிலைப்பாடு இதுவே. இன்றைய வழக்காற்றை ஒட்டி புதிய சொற்கள் உருவாக்கம் பெற வேண்டும் என்பது என் போன்றோர் நிலை எனச் சுருங்கச் சொல்லலாம். அதற்கேற்படித் திறங்களையும் உருவாக்கம் செய்ய வேண்டும் என்பது காலக் கட்டாயம். அவ்வகையில் தொல்காப்பிய இலக்கணத்துக்குப்பின் ஒரு நன்னூல் இருக்கனும், நன்னூலுக்குப் பின் கால, மொழி மாற்றங்களுக்கேற்ப புத்திலக் கணம் வேண்டாமா? சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இதுவரை எட்டு கலைச் சொல் அகராதிகளைத் தாங்கள் சிறப்பாகத் தொகுத்திருப்பதாகக் கேள்விப்படுகிறோம். அறிவியல், கலையியில் துறைகளில் இனியும் கலைச் சொல்லாக்கத்திற்கான வாய்ப்புகள் / தேவைகள் உள்ளனவா?

இதுவரை எட்டு அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம் சார்ந்த கலைச் சொல் களஞ்சிய அகராதிகளைத் தொகுத்தளித் துள்ளேன். ஏழாவது அகராதி 1,600 பக்கங்களில் கணினிக்கும் எட்டாவது அகராதி 1,200 பக்கங்களில் மருத்துவத்துக்கும் வெளியிட்டுள்ளேன். ஒன்பதாவது அகராதி 127 தொழில் நுட்பப் பிரிவிகளுக்குரியது. சுமார் 2,000 பக்கங்களில் அமையும். இது இவ்வாண்டு செப்டம்பரில் வெளிவரும்.

முன் எப்போதையும்விட இப்போதுதான் கலைச்சொல்லாக்கத் திற்கான அவசிய, அவசரத் தேவை மிக அதிகமாகியுள்ளது. காரணம் நாளும் விரைந்து விரிவு பெற்று வளமாக வளர்ந்துவரும் அறிவியல் துறைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சொல் லாக்கம் செய்வது கட்டாயத் தேவையாகும். சொல்லப்போனால் முன் எப்போதையும்விட இப்போதுதான் சொல்லாக்கப்பணி சூடு பிடித்துள்ள தெனலாம். தமிழ் இயல்பிலேயே அறிவியல் மொழியாக, அறிவியலைச் சொல்லுவதற்கென்றே உருவாக்கப்பட்ட மொழியாக நெகிழ்திறனோடு அமைந்திருப்பதால் புதுச் சொல்லாக்கம் உலகுள்ளவரை தமிழில் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். வளர்ச்சிக்கு எல்லை ஏது?

தமிழைச் செம்மொழி என்று மைய அரசு அறிவித்ததில் தங்களுக்குப் போதுமான மன நிறைவு இருக்கிறதா? இல்லையென்றால் தங்கள் மனநிறைவுக்கு ஏற்ற முறையில் செம்மொழியாக்கம் எப்பொழுது முழுமை பெறும்?

மைய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்ததில் எனக்கு மகிழ்ச்சியே. உலகிலேயே ஒரு மொழியைச் செம்மொழி என்ற சட்டபூர்வமாக அரசு அங்கீகாரம் பெற்ற மொழி தமிழ் மட்டுமே என்பதில் நமக்கெல்லாம் பெருமைதான்.

ஆனால் இந்த அறிவிப்பில் இடம் பெற்ற சில அம்சங்கள் செம்மொழித் தமிழுக்குப் பெரும் பாதகமாக அமைந்து. முழு வெற்றியாக அமையாமல் மூளியான வெற்றியாக்கி விட்டது.

செம்மொழிக்குரிய முதன்மைத் தகுதி அதன் தொன்மையாகும். செம்மொழி அறிவிப்பில் முதலில் ஆயிரம் ஆண்டு என்று அறிவித்தது. பின் எதிர்ப்பு கண்டு, ஆயிரத்து ஐந்நூறு என மாற்றப்பட்டது. அதாவது கம்பர் காலத்தமிழ். பக்தி இயக்க காலத் தமிழுக்கு உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு இருந்த காப்பிய காலம், சங்க காலம், திருவள்ளுவர் காலம், தொல்காப்பியர் காலம், எல்லாமே மறக்கப்பட வேண்டிய வரலாற்றுக் காலங்கள் என்றாகிறது. இதைவிட வேறு வரலாற்றுக் கொடுமை உண்டா? எப்படி ஏற்க முடியும்.

மொழி என்ற அளவில் செம்மொழி தமிழ் கல்வியுடன் தொடர்புடையது எனக் கூற வேண்டியதில்லை. மரபு முறையில் அரசால் ஏற்கப்பட்ட சமஸ்கிருதம் முதலான செம்மொழிகள் இருக்கும் கல்வித் துறையில் தமிழ் இடம் பெறுவது தானே முறை. அப்போதுதானே சம்ஸ்கிருதம் முதலான செம்மொழிகள் பெற்றுவரும் நிதியுதவிகள் செம் மொழித் தமிழுக்கும் கிடைக்க வாய்ப்பேற்படும். மாறாக, நிதி வசதியோ, துறை விரிவோ இல்லாத பண்பாட்டுத் துறையில் செம் மொழித் தமிழ் இணைக்கப் பட்டிருப்பது ஏன்?

இப்படியொரு கேள்வியை நான் எழுப்பியபோது மைய அமைச்சர் ஆ. இராசா அவர்கள் செம்மொழிப் பட்டியல் பண்பாட்டுத் துறையில் வைக்கப்பட்டுள்ளதால் தமிழ் அங்கே அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இனி, மைய அரசால் ஏற்கப்படும் செம்மொழிகள் அப்படியலில் தமிழுக்குக் கீழே இடம் பெறும். பட்டியல் முழுமை பெற்றவுடன் கல்வித் துறைக்கு மாற்றப்படும் எனப் பதிலளித்தார்.

சரி, சென்ற சில மாதங்களுக்கு முன்பு சம்ஸ்கிருதம் செம்மொழியாக மைய அரசால் சட்டபூர்வமாக ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. செம்மொழி சம்ஸ்கிருதம் செம்மொழிப் பட்டியலில் செம்மொழித் தமிழுக்குக் கீழே கொண்டு போய் சேர்க்கப்பட்டதா? இல்லையே. எப்போதும் போல் கல்வித் துறையில் தானே இன்றுவரை இருந்து வருகிறது.

செம்மொழித் தமிழ் கல்வித்துறையில் இடம் பெற்றால் பல்கலைக்கழக மானியக் குழுவால் செம்மொழியாக ஏற்கப்படும். இதனால், பாடமொழியிலுள்ள இந்தியப் பல்கலைக்கழகங்கள் தோறும் சம்ஸ்கிருதத்துக்கு இருப்பது போல் ஆய்வுத் துறைகள் தொடங்கப்படும். மானியக் குழு ஏற்பதால் உலகப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் ஏற்க, ஆங்காங்கே தமிழ்த்துறைகள் உருவாக வாய்ப்பேற்படுமே! பண்பாட்டுத் துறையில் செம்மொழித் தமிழ் சிறை வைக்கப்பட்டிருப்பதால் ஏதும் நடைபெற வாய்ப்பில்லாமல் போகிறதே?

பண்பாட்டுத் துறையில் இடமளிக்கப்பட்ட செம்மொழித் தமிழ் வளர்ச்சிக்கு கல்வித் துறை தமிழ் வளர்ச்சி வாரியம் அமைத்து, 3 கோடியே 31/2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இது பக்கத்து வீட்டுக்காரர் விருந்தளிப்பது போன்றது. எவ்வளவு காலத்துக்கு நிதி உதவி வழங்கப்படும் என்பதற்கு உத்திரவாதம் ஏதும் இல்லை. விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பது தமிழ்ப் பழமொழி. செம்மொழித் தமிழ் கல்வித் துறையில் இடம் பெற்றால் சம்ஸ்கிருதம் ஆண்டு தோறும் அனுபவித்துவரும் நூறு கோடிக்கு மேற்பட்ட நிதியுதவியை செம்மொழித் தமிழும் பெற்று வளரலாமே!

40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதுணையோடு, தமிழ்நாடு முதலமைச்சர் என்ற தகுதிப் பாட்டோடு தமிழக முதல்வர் கலைஞர் இதை விரைந்து சாதிக்க முடியும். இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மை, கல்வித்துறையில் இடம்பெறல் இரண்டும் வெகு விரைவில் டாக்டர் கலைஞரால் நிறைவேற்றப்படும் என நம்புவோமாக.

தமிழ் செம்மொழியாக்கக் குழுவில் தாங்களும் இடம் பெற்றிருக்கிறீர்கள். இக்குழுவில் தங்கள் பணி என்ன? தமிழைச் செம்மொழியாக மேம்படுத்துவதற்கு நீங்கள் எவற்றை முன்வைக்கிறீர்கள்?

தமிழ் செம்மொழியாக்கக் குழுவில் இடம் பெறச் செய்யப் பட்டுள்ளேன். தமிழ் வளர்ச்சிக்காகப் பல திட்டங்களைத் தந்துள்ளேன். தமிழக அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவில் காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ற திட்டங்கள். இவைகளை நிறைவேற்ற 150 கோடிக்குமேல் தேவைப்படும் என அதிகாரிகளால் கருத்துரைக்கப் பட்டது. 3.32 கோடியை வைத்துக் கொண்டு எதைச் செய்ய முடியுமோ அதைத்தானே செய்ய முடியும். நிர்வாக செலவுக்கே பெருந்தொகை தேவை. இதற்காகத்தான் நிதிவசதி நிறைந்த கல்வித் துறையில் செம்மொழித் தமிழ் இடம் பெற வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

மக்கள் மத்தியில் தமிழுணர்வு தொடர்ந்து தாழ்ந்து வருகிறது. காரணங்களென நீங்கள் எவற்றை வரிசைப்படுத்துவீர்கள்? மக்கள் தமிழுணர்வை மீண்டும் பெறுவதற்கு அரசு, தமிழ்க் கல்வித்துறை சார்ந்தவர்கள், இயக்கங்கள்? இதழ்கள், தகவல் ஊடகங்கள் செய்ய வேண்டிய பணிகள் எனத் தாங்கள் எவற்றை முன் வைப்பீர்கள்?

மிக நீண்ட கேள்வி. முதலில் ஒரு உண்மையை நாம் அழுத்தமாக மனதில் பதியவைக்க வேண்டும்.

நாம் தமிழ் பேசுவதால் தமிழர்கள். நாம் தமிழர்களாக இருப்பதால் தமிழ் இனத்தையும் சேர்ந்தவர்கள்.தமிழினம் வாழ்வதால் இம்மண் தமிழ்நாடு என அழைக்கப் படுகிறது. சுருங்கச் சொன்னால் தமிழனின் முகமும் முகவரியும் தமிழாகும். தமிழ் போய்விட்டால் அவன் முகமும், முகவரியும் இல்லாமற் போய்விடும். விளைவு, உலகில் தமிழ் இனம் அநாதைச் சமுதாயம் என்ற இழிநிலையைப் பெறும். இதைத் தவிர்க்க, ஒரே வழி தமிழை அழியாமல் பேணி வளர்ப்பதுதான்.

தமிழின் இன்றைய தாழ் நிலைக்கு எத்தனையோ காரணங்கள் உண்டெனினும் முக்கியமானது அரசியல் வாதிகளின் பொறுப்பற்ற, சுயநலப்போக்கு, கல்வித் துறையில் தமிழ்ப் புறக்கணிப்பு, செய்தி ஊடகங்களின் தமிழ் விரோதப் போக்கு, ஆங்கிலக் கல்வி வணிகர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஆங்கில மாயை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழ்நாட்டில் தமிழுணர் வைத் தட்டியெழுப்பி பொங்கச்செய்த பெருமை திராவிட இயக்கங்களைச் சாரும். அறுபதுகளில் தமிழார்வம் உச்ச நிலை பெற்ற போது இந்தி எதிர்ப்பு வெடித்தது. இந்தியைத் தடுக்கும் தடுப்புச் சுவராக ஆங்கிலத்தைக் கருதினர். அவ்வுணர்வை வலுவாக்க அளவுக் கதிகமான பற்றும் பாசமும் ஆங்கில மொழிமீது பொழியத் தொடங்கினர். தமிழ்ப் பெருமை பேசிய நாக்குகள், ஆங்கிலத் துதி பாடிகளாக மாறின. இந்தியிடமிருந்து தமிழைக் காக்க ஆங்கிலத் துணை தேடியவர்கள் ஆங்கிலத்தை வலுவாக அனைத்து மட்டங்களிலும் நிலைநிறுத்த முழுமுயற்சி மேற்கொண்டனர். ஆங்கிலம் படிப்பதையும் பேசுவதையும் பெருமையாக, அறிவார்ந்த செயலாகக் கருதி காட்ட ஆங்கில ஆதிக்கம் வலுப்பெற்றது. இவ்வுணர்வின் வலுவான வளர்ப்புப் பண்ணைகளாக ஆங்கில வழிப் பள்ளிகள் அமைந்தன. தமிழ் நாடெங்கும் புற்றீசல் போல நர்சரி பள்ளிகளும் மெட்ரிகுலேசன் பள்ளிகளும் உருவாகி நிலை பெற்றன. 1947இல் மூன்று மெட்ரிக்குலேசன் பள்ளிகள். அவை ஆங்கிலோ இந்தியக் குழந்தைகளுக்கானவை. 1967 இல் இவற்றின் தொகை அனைவருக்கும் இரண்டாயிரமாவது ஆண்டில் இவற்றின் தொகை 2000. இன்று 3000ஐ தொடும் நிலை. இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பது புரியும். படிப்படியாகத் தமிழ் வழிக் கல்வி என்பது கருகி, பின் இல்லாமலே போய்விட்ட நிலை.

ஆங்கில வழிக் கல்வி பெறுவோர் தொகை பெருகி வருவதால், ஆங்கிலம் கலந்த தமிழை ஊடகங்கள் அனைத்தும் கையாள முற்பட்டுள்ளன. ஆங்கிலத்தின் துணையின்றி தமிழால் இயங்க முடியாது எண்ணுமளவுக்கு ஆங்கில - தமிழ் கலப்பு மொழிக் கையாளல் போக்கு எங்கும் தலைவிரித்தாடுகிறது.

ஆங்கிலம் கற்றால் மட்டுமே வேலை வாய்ப்பு என்ற தவறான எண்ணம் வலுவாக ஆங்கிலக் கல்வி வணிகர்களால் ஊட்டி வளர்க்கப்பட்டு வருகிறது.

ஆங்கில மொழியைத் தாய்மொழியாக உடையவர்களின் ஒட்டுமொத்தத்தொகை உலகில் 48 கோடியே 67 இலட்சமாகும். இவர்கள் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஆங்கிலம் தானே கற்கிறார்கள். இங்கெல்லாம் வேலை இல்லா திண்டாட்டம் இல்லையா? இந்நாடுகளில் வேலை வாய்ப்பில்லாமல் அரசு உதவித்தொகை பெறுவோர் 7 முதல் 9 விழுக்காட்டினர் இருக்கின்றனர் என்பது எதைக் காட்டுகிறது?

உலக மயமாதல் கொள்கை உருவாகியுள்ளதால், அதற்கேற்ற மொழியாக ஆங்கிலம் அமையும் என்றால், அதை ஒரு பாடமாகக் கற்றால் போதுமே. தமிழ்நாட்டிலிருந்து வேலை தேடி பிற மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்வோர் 10 விழுக்காட்டினருக்குமேல் இல்லை. எஞ்சியுள்ள 90 விழுக்காட்டினர் தமிழ்நாட்டில் தானே வாழ்ந்தாக வேண்டும். அவர்கள் தமிழை விடுத்து ஆங்கிலம் கற்க வேண்டும் எனக் கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது. எண்ணிப்பார்க்க வேண்டாமா?

ஆங்கில மொழியைக் காட்டிலும் தமிழில் தான் சட்டங்களைத் திறம்பட விவாதிக்க முடியுமென்று தாங்கள் ஒருமுறை குறிப்பிட்டீர்கள். இதைச் சற்று விளக்கிச் சொல்லுங்கள்.

ஒரு காலகட்டத்தில் ஐரோப்பாவில் சிறந்த சட்டமொழியாக லத்தீன் கருதப்பட்டது. நவீன காலத் தொடக்கத்தில் ஃபிரெஞ்சு மொழி சிறந்த சட்ட மொழியாகப் போற்றப்பட்டது. இங்கிலாந்து நாடு வழக்குமன்ற மொழியாகவே ஃபிரெஞ்சு மொழியை ஏற்று நடைமுறைப்படுத்தி வந்தது. பிறகு, காலணி ஆதிக்கத்தின் விளைவாக ஆங்கிலமே சட்ட மொழியாக ஏற்கப்பட்டது. எனினும் லத்தீன் ஃபிரெஞ்சு சொற்கள் சட்ட நூல்களில் அதிக அளவில் இடம் பெற்றிருப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க முடியவில்லை. காரணம், சில சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாக விளக்க ஆங்கிலத்தால் இயலாததேயாகும். ஆங்கிலம் ஓர் நிறைவான மொழி அன்று - என்பது தான் முழு உண்மை.

சட்டம் படித்த என்னால் திடமாகச் சொல்லமுடியும். சான்றாக Damages என்ற சட்டச் சொல் Civil Law மற்றும் Criminal law இரண்டிலும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு சட்ட நூல்களிலும் வெவ்வேறு பொருளைக் கொண்டது இச்சொல். சான்றாக,

இரு நண்பர்கள் கூட்டு வணிகம் செய்கின்றனர். தவிர்க்கவியலா நிலையில் ஒருவர் மற்றவரை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக வணிகம் செய்கிறார். அதில் பெரும் இழப்பு ஏற்படுகிறது. தன்னைக் கலந்தாலோசிக்காமல செய்த வணிக இழப்பை மற்றொருவர் ஏற்காமல் இழப்புக்கு ஈடுகேட்டு வழக்கு மன்றம் செல்கிறார். இது ‘Damages’ கேட்பதாக அமைகிறது.

இன்னொரு நிகழ்வில், பலர் முன்னிலையில் ஒருவர் மற்றவரை கடிந்து ஏசிப் பேசிவிடுகிறார். ஏசப்பட்டவர் பலர் முன்னிலையில் தன்மானம் போய்விட்டதாக வழக்கு மன்றத்தில் மானநட்ட வழக்குத் தொடுக்கிறார். இதுவும் ‘Damages’ என்ற ஆங்கிலச் சொல்லாலேயே குறிக்கப்படுகிறது. இங்கே இரண்டு வழக்கும் ஒன்று, இரண்டு வெவ்வேறு தன்மை கொண்டவை. ஆனால் அவற்றைக் குறிக்க ஆங்கிலச் சட்டத்தில் ‘Damages’ என்ற ஒரு சொல் மட்டுமே உண்டு.

இதையே தமிழில் குறிப்பிட்ட, பொருள் இழப்புக்கு ஈடுகேட்பதால் இங்கே இழப்பீடு என்றும் திட்டியதன் மூலம் தன்மானத்துக்கு தீங்கிழைத்ததால் அதற்கான நட்ட ஈட்டை, தீங்கீடு என்றும் பிரித்துக் கூற முடியும். இதைப் போல நூற்றுக்கணக்கான ஆங்கிலச் சட்டச் சொற்களுக்கு பொருள் நுட்பமுடனும் பொருட் செறிவுடனும் தனிச் சொல் தமிழில் சொல்ல இயலும்.

பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான படையெடுப்புகளிலிருந்து பல நூற்றாண்டுகள் தமிழ் தன்னைக் காத்து வந்துள்ளது. இனிவரும் காலங்களில் தமிழின் நிலை என்னவாக இருக்கும். மெல்லத் தமிழ் இனி?....

காலமாறுதலுக்கேற்ப உருவாகும் போக்குகளும் தேவைகளும் மாறுபடுவது தவிர்க்க முடியாத ஒன்று. இன்று வரை காலப்போக்குக்கும் தேவைக்குமேற்ப தமிழ் தன்னை தகவமைத்துக் கொண்டு வளமாக வளர்ந்துள்ளது என்பது இதன் வளர்ச்சிக்கு வரலாற்றின் பெருஞ்சிறப்பு.

சங்கம் தொடங்கி, சமயங்களின் படையெடுப்பு, மொழிகளின் படையெடுப்பு, இவற்றிற்கெல்லாம் ஆதார சுருதியாக அரசியல் போக்குடைய ஆட்சியாளர்களின் பலதரப்பட்ட படையெடுப்புகள். இத்தனை இடையூறுகளையும் தன் வளர்ச்சிக்கு உரமாகத் தமிழ் பயன்படுத்திக் கொண்டது என்பதுதான் தமிழின் சுவையான வரலாறு.

சங்கத்துக்கு முந்தைய காலகட்டம் சமயச் சாயலோ பிறமொழி ஊடுருவலோ இல்லாத காலம். தமிழன் இயற்கையோடு இயைந்தும் இயற்கையை கட்டியாளவும், முயன்று வெற்றி பெற்று, வந்த காலம் எல்லாம் என்னால் முடியும் என இருமாந்து கப்பல் மூலம் வணிகர்களாக உலகை வலம் வந்த காலம். சுருங்கச் சொன்னால் அறிவியல் பூர்வமாக வாழ்ந்துவந்த காலம்.

பல்வேறு இன, மொழி ஊடுருவலால் சங்க கால வாழ்க்கை முறை சமுதாய வாழ்க்கை முறையாக அமைந்தது. அன்றும் வட சமயத்தாக்கம் ஏதும் அவன் வாழ்வை மாற்றி அமைக்க முடியவில்லை.அதனால்தான் சங்க இலக்கியங்களில் சமயக் கோட்பாடோ கடவுள் புகழ்ச்சிகளோ இல்லாத நிலை. ஒரு சில சொற்கள் கடவுள் பெயரோடு ஒத்துப் போவதால் அதற்கேற்ப வலியபொருள் விளக்கம் தந்து சங்கத் தமிழனுக்குச் சமயச் சாயம்பூச முற்படுகிறோம். அச்செயலும் கூட எண்ணெயும் தண்ணீரும் போலவே பட்டும் படாமலும் இருந்து வருகிறது.

சங்க கால இறுதிப் பகுதியில் வைதீக சமயம் ஆரியர்கள் மூலம் தமிழகத்தில் அழுந்தக் காலூன்றி வளரவாயின. அதையொட்டி தமிழ், சைவத் தமிழாகவும் வைணவத் தமிழகவும் முகிழ்க்கத் தொடங்கியது. சைவம் தென்னகச் சமயமாகக் கருதப்பட்டது. பின்னர் வட புலத்திலிருந்து வைதீக சமயத்தை எதிர்த்து சமண சமயம் தமிழகம் வந்தது. தமிழ், தன்னை சமணத் தமிழாக மாற்றிக் கொள்ளத் தவற வில்லை. சமணத்தை எதிர்த்து பௌத்தம் தமிழகம் வந்தது. தமிழும் பௌத்தத் தமிழாகத் தன்னை ஆக்கிக் கொண்டது.

சங்க காலத்திற்குப் பின் சமயச் சாயலுள்ள காப்பிய காலம் உருவாகியது. சிலப்பதிகாரம் கண்ணகி கோவலனின் கதையை மட்டும் விளக்கவில்லை. சமய சமரசத்தை உரத்த குரலில் கூறிய சமய நல்லிணக்க இலக்கியப் படைப்பு ஆகும்.

அதன்பின் வெளிநாட்டிலிருந்து கிருத்துவம் வர, தமிழ் கிருத்துவத் தமிழாகியது. இஸ்லாம் வந்த பிறகு இஸ்லாமியத் தமிழாக ஆகியது. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் புதினம், சிறுகதை, புதுக்கவிதை, திறனாய்வு, ஓரங்க நாடகம் என புது இலக்கிய வடிவம் பெறலாயின. இன்று அறிவியல் வளர்ச்சி தந்த பெரும் தாக்கத்தால் தமிழ் தன்னை அறிவியல் தமிழாக உருமாற்றி ஆற்றல் மிக்க அறிவியல் மொழியாக மறு வடிவோடு மலர்ந்து மணம் வீசி வருகிறது.

இவ்வாறு காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப தன்னை உருமாற்றிக் கொள்ளும் தகைமைமிகு தமிழை, யாரும் எந்தக் காலகட்டத்திலும் கழிக்க முடியாது. தன் தலைமேல் விழ வரும் சுத்தியல் மீது ஏறியமரும் ஆற்றலானது உலக மொழிகளில் தமிழுக்கு வாய்த்த தனித்தன்மையாகும்.

மெல்லத் தமிழ் இனி?... எனக் கேட்டுள்ளீர்கள் மெல்லத் தமிழ் இனி சாகும். என்றந்தப் பேதையுரைத்தான் என்பது பாரதி பாடல் வரி. அந்தப் பேதை யார்?

பாரதி காலத்தில் பச்சையப்பன் கல்லூரி முதல்வராக ஒரு ஆங்கிலேயர் இருந்தார். தமிழ் நாட்டுக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றுவதால் இங்குள்ளவர்களோடு சரளமாகத் தமிழ்ப் பேசிப் பழக வேண்டும் எனப் பேராவல் கொண்டார். எனவே, தமிழாசிரியர்களிடமும் சந்திக்க வரும் நபர்களிடமும் தனக்குத் தெரிந்த தமிழில் பேச முற்படுவார். இவர் ஆங்கிலேயர் என்பதால் தமிழர்கள் தமிழில் பேசாது ஆங்கிலத்தில் பதிலளித்துப் பேசினர். இவர்கள் பேச்சுத் தமிழை தான் கற்க முடியாமற் போவதைவிட, தமிழில் பேச வேண்டிய தமிழர்களே, தமிழை விடுத்து ஆங்கிலத்திலேயே பேச விரும்புகின்றனரே. இந்த நிலை நீடித்தால் தமிழ் பேச ஆளில்லாமல் போய்விடாதா? அப்படியொரு நிலை ஏற்பட்டால் தமிழ் அழிந்து போகுமே என்ற கருத்தை ஒரு கூட்டத்தில் வெளிப்படுத்திப் பேசினார். அச்செய்தி பத்திரிகையிலும் வந்தது. ஆங்கிலேயர் வெளிப்படுத்திய ஆதங்கத்தைத்தான் பாரதி பாடலாகப் பாடினான்.

அவ்வெள்ளைக்காரர் கொண்டிருந்த அச்சம் இன்று பன்மடங்காகப் பெருகியுள்ள தென்னவோ உண்மை. இந்நிலை வெகு விரைவில் மாறும். தமிழ் அறிவியல் தமிழாக மலர்ந்து மணம் வீசி வளரும்.

புதிதாகப் பதவி ஏற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழுக்கு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? தமிழ் வளர்ச்சிக்கு ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உண்டா?

தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை மட்டும் படித்து விட்டு இக்கேள்வியைக் கேட்கிறீர்கள் எனக் கருதுகிறேன். காங்கிரஸ் உட்பட மற்றகட்சிகளெல்லாம் தமிழ் வளர்ச்சி பற்றி, கட்டாயப் பயிற்சி மொழி பற்றி விரிவாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் போது முதன்மைக் கட்சிகளான தி.மு.கவோ அன்றி அ.தி.மு.க வோ ஏதும் கூறாததால் இப்படியொரு கேள்வி கேட்கத் தோன்றுவது இயல்புதான்.

இருப்பினும் முதல்வர் கலைஞர் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. அவர் பெற்றுள்ள தமிழாற்றல், இதுவரை தமிழ் வளர்ச்சி வரலாற்றில், அதுவும் கடந்த அரை நூற்றாண்டளவில் தமிழ் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மேடுபள்ளங்களை அறிந்து, உணர்ந்து, தெளிந்து செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சந்திப்பு: கோவை ஞானி
Pin It