ஒரு ஊரில் ஒரு அம்மா அப்பா.

அவர்களுக்கு ஒரு மகன் அவனுக்கு வாலிப வயசு

ஆனால் ஆள் ஒரு சாண் உயரம்தான்.

அதனால் அவனை கட்டையன் என்று கூப்பிட்டார்கள்.

அவன் அம்மா அப்பா வயசாளிகள். நாள் ஆக ஆக அவர்களுக்கு தெம்பு இல்லை. வேலை செய்ய முடிய வில்லை. கட்டையன் பார்த்தான். மனசு தாங்கவில்லை. ‘இனி அம்மா அப்பாவை உக்கார வைச்சு கஞ்சி ஊத்தணும்’ என்று முடிவு எடுத்தான். வேலைக்கு கிளம்பினான்.

ஊரில் கட்டையன் என்றால் சிலருக்கு இளக்காரம். பண்ணையார் எப்போது பார்த்தாலும் விரட்டுவார். நக்கல் பண்ணுவார். கட்டையன் பண்ணையார் வயலுக்கு போனான். வயலில் கதிர் அறுப்பு நடந்துக்கிட்டு இருந்தது. பண்ணையார் முன்னாடி நின்னான். ‘அறுப்புக்கு ஆள் வந்து இருக்கிறேன்’ கட்டையன் சொன்னான்.

பண்ணையார் சிரித்தார். ‘கட்டையனுக்கு கொழுப்பை பாருங்கடா. நீ இருப்பதே ஒரு சாண். உன்னால் ஒரு வேலையும் செய்ய முடியாது, போடா.’ இப்படி பண்ணை எகத்தாளமாக பேசினார். கட்டையன் விடவில்லை.

‘நான் ஒத்த ஆள் போதும். கதிர் அறுப்பை முடித்து காட்டுகிறேன்’ என்றான்.

‘சரி பார்க்கலாம்’ என்றார் பண்ணை.

‘என் காது நிறைய நெல் குடுத்தா போதும். அதுதான் எனக்கு கூலி.’ கட்டையன் சொன்னான்.

‘ப்பூ’ இவ்வளவு தானா. சரி’ என்றார் பண்ணை.

கட்டையன் வயலில் குதித்தான்.

அரிவாளை குறுக்கே பிடித்தான். வயலின் குறுக்கே ஓடினான். இந்த வரப்பில் இருந்து அந்த வரப்புக்கு ஓடினான். அந்த வரப்பில் இருந்து இந்த வரப்புக்கு ஓடிவந்தான். அறுத்த நெல் கதிர்கள் குவிந்தன. பண்ணை மலைத்து நின்றார்.

பொழுது சாய்ந்தது. கட்டையன் ஒத்த ஆள். அறுப்பை முடித்துவிட்டான். கூலி வாங்க கூப்பிட்டார்கள். கட்டையன் ஒருக்களித்து படுத்தான். ஏழு எட்டு நெல்லை அவன் காதில் போட்டார்கள். காது நிறையவில்லை.

ஒரு கைப்பிடி நெல்லை போட்டார்கள். காது நிறையவில்லை. ஒரு படி. ஒரு மரக்கால். பின்பு ஒரு மூட்டை நெல் போட்டார்கள். நிறையவில்லை.

‘என்னடா இது வில்லங்கமா இருக்கு’ என்று பண்ணை மலைத்தார். ‘பேச்சு மாறக்கூடாது போடுங்கள்’ என்றான் கட்டையன். பின்பு மூட்டை மூட்டையாக கொட்டினார்கள். காது நிறையவில்லை.

‘ஒரு நெல் மிச்சம் இல்லை. எல்லாம் தீர்ந்து போச்சு’ என்றார் பண்ணை.

‘சரி சரி மீதியை அடுத்த அறுவடை குடுத்தால் சரி’ என்று கட்டையன் கிளம்பினான். பண்ணையார் மூச் காட்டவில்லை. தலையில் துண்டை போட்டுக்கிட்டார்.

கட்டையன் தன் கூரை வீட்டில் ஏறினான். உச்சிக்கு வந்தான். கூறை முகட்டை பிரித்தான். காதை சாய்த்தான். நெல் மணிகள் ‘பொல பொல’ என்று கொட்டியது. வீடு முழுசும் நிறைந்தது. கட்டையன் சமத்தை ஊர் மெச்சியது.
Pin It