சாராய வியாபாரத்தில் காட்டும் அக்கறையை கல்வி வளர்ச்சியில் காட்டுவதில்லை அரசாங்கம். சமூக நீதியின் அடிப்படையில் மாணவர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனைகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே எட்டிப் பார்க்கின்றன. அப்படி எட்டிப்பார்க்கின்ற சிந்தனைகளையும் கேள்விக்குறியாக்கிவிடுகின்றன நீதிமன்றங்கள். சமூக நீதி என்றாலே ஆட்சியாளர்களிடம் போராடுவதைவிட நீதிமன்றத்தில்தான் அதிகளவில் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

Finger Print
மண்டல் குழுவின் பரிந்துரைகளை வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்த முனைந்தபோது உச்சநீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. பிறகு, நெடிய சட்டப்போராட்டம் நடைபெற்று நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மண்டல் குழு பரிந்துரைகள் அமலுக்கு வந்தன. இப்போது, தொழிற்படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டமும் செல்லாது என உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

22 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் 1984ல் நுழைவுத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப் பட்டபோதே சமூக நீதியில் அக்கறையுள்ளவர்கள் அதனை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தினர். குறிப்பாக, திராவிடர் கழகம் தீவிரமாக அதனை எதிர்த்தது. நுழைவுத் தேர்வு என்பது மேல்ஜாதி மாணவர்களுக்கே சாதகமாக அமையும் என்பதையும் அதனால் கிராமப்புற - ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் சமூக நீதி ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

+1, +2 என இரண்டாண்டுகள் முழுமையாகப் படித்து பொதுத் தேர்வும் எழுதி மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு எதற்காகத் தனியாக நுழைவுத் தேர்வு என்பதே சமூக நீதி ஆர்வலர்களின் நியாயமான கேள்வியாகும். +1, +2 வகுப்புகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதே எதிர்காலத்தில் அது தொடர்பான தொழிற்கல்வியைப் பயில்வதற்காகத்தான். ஆனால், இரண்டாண்டுகள் படித்து தேர்வெழுதி பெற்ற மதிப்பெண்ணுக்கு மதிப்பளிக்காமல், இரண்டு மாதகால அளவில் பயிற்சி பெற்று எழுதும் நுழைவுத் தேர்வுக்கே முக்கியத்துவம் கொடுப்பது சமூக அநீதியாகும் என்பதை கல்வியறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

தமிழகத்தில் கல்வியறிஞர்கள், சமூக நீதி ஆர்வலர்கள், பெற்றோர், மாணவர் இவர்களின் விருப்பத்தைவிட கல்வி வியாபாரிகளின் விருப்பத்தை நிறைவேற்றவே அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தும். நுழைவுத் தேர்வுக்காகவே சிறப்பு பள்ளிகள் தமிழகத்தில் முளைக்கத் தொடங்கின. அதாவது, +1 வகுப்பில் சேரும்போதே +2 பாடத்தை நடத்தி முடித்துவிடுவது, +2 வகுப்புக்கு வரும்போது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை 1 வருட காலத்திற்கு அளிப்பது இதுதான் அந்த சிறப்பு பள்ளிகளின் நடைமுறை. பள்ளி வளாகத்திலேயே விடுதி இருக்கும். பக்கத்தில் வீடு இருந்தாலும் எல்லா மாணவர்களும் விடுதியில் தங்கித்தான் படிக்கவேண்டும். அதிகாலையிலிருந்து நள்ளிரவு நெருங்கும் நேரம் வரை நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி, எக்கச்சக்கமான கட்டணம் என இத்தகைய சிறப்பு பள்ளிகள் நுழைவுத் தேர்வை கொள்ளை லாப வணிகமாக மாற்றின.

வசதி படைத்த பெற்றோரும், தங்கள் பிள்ளை இன்ஜினியராக வேண்டும் என்ற கனவுடன் கடன் வாங்கும் நடுத்தர வர்க்கத்து பெற்றோரும் இப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முடியும். வசதி குறைந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இங்கே இடமில்லை. இத்தகைய முழுநேர ‘நுழைவுத்தேர்வு' பள்ளிகள் மட்டுமின்றி, தேர்வு நேரம் நெருங்கும்போது மட்டும் பயிற்சி நடத்தும் நிறுவனங்களும் நிறைய முளைத்துள்ளன. இங்கும் அதிக கட்டணம்தான். இத்தகைய நிறுவனங்கள் பெரும்பாலும் நகரப்பகுதிகளிலேயே இருப்பதால் கிராமப்புற மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியைப் பெற அதிக சிரமப்படவேண்டும். கிராமப்புறங்களில்தான் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அதிகளவில் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இத்தகைய காரணங்களால்தான் நுழைவுத் தேர்வு என்பது பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் பின்தங்கிய சமுதாயத்தினருக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் எதிரானது என்ற குரல் தொடக்கக்கட்டத்திலிருந்தே ஒலித்தது.

அந்தக் குரல், அரசாங்கத்தின் காதுகளில் எட்ட 22 ஆண்டுகள் தேவைப்பட்டன. 2005-2006 கல்வியாண்டில், +2 பொதுத் தேர்வில் மாணவர்கள் வாங்குகின்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்வி படிப்புகளில் இடமளிப்பது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து, சில மாணவர்களும் பெற்றோரும் நீதிமன்றம் சென்றனர். "அரசாணை செல்லாது'' என உத்தரவிட்டது நீதிமன்றம். அரசாணையாக இருப்பதால்தான் அதில் குறைபாடுகளைக் கண்டறிந்து செல்லாது என நீதிமன்றம் அறிவிக்கிறது. அதனால், இதனை சட்டமாகவே இயற்றிவிடலாம் என ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, தனது கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான சட்டத்தைக் கொண்டுவந்தது.

"வரும் கல்வியாண்டிலிருந்து நுழைவுத் தேர்வு இல்லை. +2 பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் தொழிற்கல்லூரிகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்'' என்ற அரசின் சட்டம், "மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வருபவர்களுக்குத்தான் பொதுத்தேர்வு கிடையாது, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிற கல்வித் திட்டங்களில் படித்தவர்கள் தனித்தேர்வு எழுதித்தான் தொழிற்கல்லூரிகளில் சேரவேண்டும்'' எனத் தெரிவித்தது.

இதனை எதிர்த்து, சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சமூக நீதிக்கு எதிரான இந்த வழக்கில், மனுதாரர்கள் சார்பில் ஆஜரானவர்கள் வழக்கறிஞர்கள் விஜயனும், நளினி சிதம்பரமும்! தமிழகத்தில் நிலவிவந்த 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவரும் இந்த விஜயன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "அனைவரும் சமம் எனும் இந்திய அரசியல் சட்டத்தின் 14வது பிரிவுக்கு எதிராக மாநில அரசின் சட்டம் உள்ளது. தொழிற்கல்விக்கான வரையறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளன. இதில் மாநில அரசு சட்டம் பிறப்பிக்க முடியாது'' என்ற வகையில் தீர்ப்பளித்து தமிழக அரசின் சட்டத்தை தள்ளுபடி செய்தது.

மாநில அரசின் கல்வித்திட்டத்திற்கு நுழைவுத்தேர்வு இல்லை, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ திட்டத்தில் பயின்றவர்களுக்கு தனித் தேர்வு உண்டு என்பதைத்தான், அனைவரும் சமம் என்கிற அரசியல் சட்டத்திற்கு எதிரானதாக இருக்கிறது என உயர்நீதிமன்றம் தீர்ப்புரைத்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏறத்தாழ 98 விழுக்காடு மாணவர்கள் மாநில கல்வித்திட்டத்தின் கீழ்தான் படிக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட ஒருசில பெருநகரங்களில் உள்ள மாணவர்கள் சிலரே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயில்கிறார்கள். பொருளாதார அளவுகோலில் மேல்மட்ட - உயர்நடுத்தர வகுப்பினராகவும், சமூக அந்தஸ்தில் உயர்வகுப்பினராகவும் உள்ள இந்த 2 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களுக்காக 98% மாணவர்களின் எதிர்காலம் அச்சம் நிறைந்ததாக உருவாகியுள்ளது.

கல்வியில் சமூக நீதி என்றாலே ஒவ்வொரு முறையும் சட்டப் போராட்டம் என்பது நியதியாகிவிட்டது. அதிலும் தமிழகத்திலிருந்தே இத்தகைய சமூக நீதிக்கான குரல்கள் அடிக்கடி எழுவதும், அது நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டு, சட்டத்திருத்தத்தற்கு உள்ளாவதும் தொடர்ச்சியான வரலாறாக உள்ளது. வகுப்புவாரி உரிமைக்கெதிரான தீர்ப்பினைத் தொடர்ந்துதான் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 69% இடஒதுக்கீடு விவகாரத்திலும் நீதிமன்றம், சட்டத்திருத்தம், குடியரசுத்தலைவரின் ஒப்புதல் என பல படிகளைத் தாண்டவேண்டியிருந்தது. தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்றபோதும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டியிருந்தது. (ஒவ்வொரு பேராட்டத்தையும் விளக்கவே பல பக்கங்கள் தேவைப்படும்) தற்போது, நுழைவுத் தேர்வு ரத்து சட்டமும் சட்டப் போராட்டத்தைக் கண்டு வருகிறது.

தனியார் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை ஆதரித்தும், உள்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இடஒதுக்கீடு உரிமை மறுக்கப்பட்டும் தீர்ப்பு வந்தபோது சமூக நீதி ஆர்வலர்கள் அதிர்ந்துதான் போனார்கள். மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தவேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் மத்திய அரசின் மூலமாக சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்யப்பட்டாலும், தனியார் கல்லூரிகளை நிர்வகிக்கும் கல்வி வியாபாரிகள் இதனை எந்தளவில் நடைமுறைப்படுத்துவார்கள் என்ற தயக்கமும் உள்ளது. சட்டத்தின் சந்துபொந்துகளை மட்டுமே கவனித்து நடக்கும் வணிகமாக கல்வி வியாபாரம் மாறியிருக்கிறது.

இந்த நிலையில், நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் முக்கியமான சட்டத்தைக் கொண்டுவரும்போது அதில் அரசின் மனப்பூர்வமான அக்கறை எந்த அளவில் இருந்தது என்பதும் விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது. முக்கியமான இந்தச் சட்டம் பற்றி ஆலோசிக்க கல்வியாளர்கள், சட்டவல்லுநர்கள் அடங்கிய குழுவை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஆனால், மாநில அரசு ஆதனை அலட்சியப்படுத்தி விட்டது. வழக்கமான அதிகார மட்டமே புதிய சட்டம் பற்றி ஆலோசித்து வரையறுத்ததே தவிர, உண்மையான அக்கறை கொண்டு செயல்படவில்லை என்பதை கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் கிராமப்புற மாணவர்களின் நலனை மனதில் வைத்து ஒரு சட்டம் போட்டது போலவும் காட்டிக் கொள்ளலாம், அதே நேரத்தில் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்கின்ற உயர்வகுப்பினருக்கும் சாதகம் கிடைப்பதுபோல நடந்து கொள்ளலாம் என்றே இப்படியொரு சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்ததோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கல்வியில் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக இன்னும் அதிகமாக போராடவேண்டிய சூழலில்தான் சமூக நீதி ஆர்வலர்கள் இருக்கிறார்கள்.
Pin It