திரு.ச. பாலமுருகனின் வீரப்பன் தேடுதல் வேட்டை: அவலம் கட்டுரையைப் படித்தேன். மார்பு வலித்தது. அது தொடர்பாக சில பரிமாற்றங்களை இங்கு கவனத்திற்கு வைக்கிறேன். நல்ல வரவேற்பைப் பெற்ற எங்கள் யானைகள் : அழியும் பேருயிர் நூலில் இடம்பெறாத வீரப்பனின் யானை வேட்டை குறித்தும், ஒரு படைப்பிலக்கியத்தில் கற்பனைச் செய்திகள் கலப்பது பற்றிய சொல்லாடல் மரபுகள் குறித்தும் பெரிய மனிதர்களில் பலரும் பாமரத்தனமான கேள்விகளைக் கேட்டு, குழந்தைத்தனமான முடிவுகளைக் கொண்டுள்ளனர். ஏனெனில் குறிப்பாக வீரப்பனைப் பற்றி மட்டுமல்ல, கடவுளாக்கப்பட்ட யானைகள் பற்றியும் ஏதுமறியாதவர்கள் நமது இலக்கிய ஜீவிகள் என்பதற்கு நிறைய பேர்வழிகளை சுட்டிக்காட்ட இயலும். அது இப்போது தேவையில்லை. பொத்தாம் பொதுவான வீரப்பன் கொன்று குவித்த ஆயிரக்கணக்கான யானைகளுக்கு கணக்கு வழக்கேயில்லை என்ற கூற்றுகளில், எடுத்துக்காட்டுகளில் என்ன உண்மையிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இலக்கியம் என்பதை நாம் பல தேசக் கிளைகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. நமது தமிழ் இலக்கிய மரபு இயற்கையின் எதார்த்தத்தையே இலக்கணமாகக் கொண்டது. ஆனால் தற்காலப் படைப்பிலக்கியம், ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கற்பனை இலக்கியப் போக்கின் மொழிபெயர்ப்பேயாகும். எனவே நமது இலக்கியவாணர்களின் நவீன மரபே முறைகேடானது. எனவேதான் இயற்கையிடமிருந்து நாம் வெகுவாக அன்னியப்பட்டு நிற்கிறோம். இயற்கை பற்றி புரியாத மனிதரின் கற்பனைகளுக்கென்று சமூகம் சார்ந்த ஒரு நியாயமான வரைமுறையை அல்லது பாதிப்பை இலக்கியவாணர்கள் அலட்சியப்படுத்தியதால் அது கலாச்சாரப் பிரிவினை அல்லது முரண்பாடுகளுக்கே வழியானது என்பதற்கு (பொது வடிவமைப்பு இல்லாத) நமது நாடே சரியானதொரு எடுத்துக்காட்டாகும்.

Animals
நடைமுறை எதார்த்தத்தில் பழைய சங்கப் பாடல்கள் பெரும்பாலும் இன்றைய அறிவியல் உண்மைகளுக்கு, அதனளவில் பொருந்தியிருக்கின்றன. எனவேதான் எங்கள் நூலிலும் அவை எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஆக எந்த உயிரினங்கள் பற்றி எழுதும்போதும் பண்பாட்டுச் சூழலை ஒப்பிடுவதற்கு பழந்தமிழ் இலக்கியமே பொருத்தமானது எனக் கொள்ளலாம். ஆனால் தற்போது மக்கள் இலக்கியக் கற்பனைகளையே இயற்கை நடைமுறை உண்மையென நம்பிக் கொண்டிருப்பது ஏன்? எதிர்காலத்தில் நமது பண்பாட்டை ஆய்வு செய்யும் எவருக்கும் அறிவியல் (எதார்த்த) ஆதாரம் இல்லாது போகக் கூடிய நிலைமையிது.

உதாரணம் தேவையா? குயிலோசை எல்லோர்க்கும் பரிச்சயம், ஆனால் அவ்வோசையை ஆண் செய்கிறதா? பெண் செய்கிறதா? நரித்தனம் என்பார்களே, அத்தனம் குறித்த விளக்கமென்ன? வானம்பாடி இவர்கள் வாயில் வெகு புகழ் பெற்றது. அதன் குரல் குறித்த விவரம் சொல்ல முடியுமா? யானை, பிள்ளையார் ஆனதெப்படி? அன்னத்தையும், அன்றிலையும் இவர்கள் பார்த்திருக்கிறார்களா? கூகையையும், கோட்டானையும் காட்டுவார்களா? வேங்கை மார்பன் என்பதன் பொருள் என்ன? இப்படி ஆயிரக்கணக்கில் அடுக்கிக் கொண்டே போக முடியும்.

உயிரினம் குறித்த இன்றைய இலக்கிய மதிப்பீடுகளுக்கு எடுத்துக்காட்டாக அண்மையில் வந்த ஒரு சின்னத்திரை வசத்தை கவனியுங்கள்: .... “இப்படி பல பெண்களின் கற்பைச் சூறையாடி, படுகொலை செய்த மோகன்குமாரை வெறிபிடித்தலையும் பசுத்தோல் போர்த்திய மிருகம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்?” இதன் உள்ளீடு என்ன? இதுதான் இலக்கிய கற்பனை மரபா? அறிவியல் ஒருபுறம் வளர, வளர மறுபுறம் பொய்யும், மூடக் கற்பனையும் வளர்வதை சுட்டிக் காட்டாமலிருப்பது சமூகக் குற்றமல்லவா? ஆகவே நமது ஆரோக்கியமற்ற சுற்றுச்சூழலுக்கும் தற்போதைய எழுத்தாளர்களே மூலாதாரம் என்பதை சார்பின்றி சிந்திக்கும் எவரும் உணர முடியும்

அறிவியல் மரபு வேறு, இலக்கிய மரபு வேறு என நாங்கள் பிரித்துப் பார்க்க வருந்துகிறோம். ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மிருகம் என்பதைவிட, இன்ன மரம், இன்ன பறவை, இன்ன விலங்கு என்கின்ற படியான அறிவியல் எதார்த்தமே இலக்கியமாக வேண்டும். காரணம் நமது மக்களின் தற்போதைய நிலையே. சமூக மாற்றங்களுக்கோ அல்லது வேறு ஒன்றுக்கோ நெம்புகோலாக இருக்க வேண்டிய இந்திய இலக்கியத்தின் தற்போதைய இலக்குதான் எது? யாருக்கும் தெரியாது.

எங்கள் யானைகள் நூலில் உள்ள ஒரு செய்தியாக அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரே மாதத்தில் 31 யானைகள் கொலையுண்ட கொடுமைகள் நிழற்பட ஆதாரப்பூர்வமானவை, அரசியல் அல்ல. ஆனால் நூலில் இடம்பெறாத வீரப்பனின் வேட்டைக் கதைகள் ஆதாரம் அற்றவை, அரசியல் உள்நோக்கமுள்ளவை. அது குறித்து நமது மிகையூடகங்கள் அளித்த செய்திகள் யாவும் ஒரு காட்டுயிரியலாளருக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கும். ஒரு டி.வி. சானல் வீரப்பன் கொன்றவை நூற்றுக்கணக்கான யானைகள் என்றது. மற்றொரு சேனல் 1000 யானைகள் என்றும், இன்னொரு பத்திரிகை 2000 யானைகள் என்றும் விதவிதமாகப் பேசின. இதையே நமது பெரிய மனிதர்களும் வரலாறு காணாத அழிப்பு என்கின்றனர். என்ன ஆதாரம்?

1972 - 85 ஆண்டுகளுக்கிடையில் இந்திய யானைகளின் மொத்தத் தொகையே சுமார் 10000 தான். அவற்றில் தமிழ்நாட்டில் சுமார் 1500 மட்டுமே இருந்திருக்கலாம். முதிர்ந்த பெண் யானைகள் 4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இடைவெளிக்கு ஒருமுறைதான் ஒரு குட்டியீனும். எல்லாப் பெண்களும் ஒரே நேரத்தில் குட்டிபோடாது. இப்போது கணக்கீடுகள் தானே வருகின்றதா? இருந்த அந்த யானைகளில் ஆண் யானைகள் எவ்வளவு? இனப்பெருக்கத்திற்கு தகுதி, பருவமுள்ள பெண்கள் எத்தனை இருந்திருக்கும்? அவற்றில் எத்தனை குட்டி ஈன்றிருக்க முடியும்? இவற்றில் எத்தனை விழுக்காடு உயிரோடு வளரும் வாய்ப்பைப் பெற்றிருக்க முடியும்? அங்கே எத்தனை தந்தம் கொண்ட யானைகள் இருந்திருக்கும்? இத்தனைக்கும் மேலே தந்தம் திருடும் கொலைகாரர் கும்பல் ஒன்று மட்டும்தான் இருந்திருக்குமா? இவ்வளவுக்கும் வீரப்பனின் இருப்பிடம், மொத்த தமிழ்நாடோ, இந்தியாவோ அல்ல. குறிப்பிட்ட சுமார் 600 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட அடர்த்தியற்ற ஒரு குறுமரக் காட்டுப்பகுதிதான். ஏனெனில் ஒரு யானைக் கூட்டத்திற்கு சராசரியாக 100 ச.கி.மீ. காடுகள் தேவை எனும் போது இதற்குள் எவ்வளவு யானைகள் வாழ்ந்திருக்க முடியும்?

இப்படிப் பல கேள்விகள் எழ எவருக்கும் வாய்ப்பு இல்லையா? ஏன்? வெறுமனே கோவில் யானைகள், வீரப்பனின் தோற்றம், ஊடகங்களின் மிகைச் செய்திகள், அரசியல் போன்றவற்றால் கற்பிதமாக்கப்பட்ட ஒரு பாமரரின் கருத்தியல் மன நிலையே இலக்கிய மேல்மட்டத்தினருக்கும் இருக்கிறது. எனவே மக்கள் மனம் மாற வேண்டுமென்றால் அரசும், ஊடகங்களும், இலக்கியவாதிகளும் முதலில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
Pin It