பிப்ரவரி 27, 2002 அன்று கோத்ரா ரயில் நிலையத்தில் வந்து நின்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 6 பெட்டியை கொளுத்தி அதிலிருந்த கரசேவகர்களின் உயிர்களைப் பறித்தனர். ஆனால் இந்தப் பழியைத் தூக்கி முஸ்லிம்கள் மீது போட்டு - அடுத்தடுத்த நாட்களில் ஒட்டு மொத்த குஜராத்தையும் கலவரத் தீயினால் பற்ற வைத்தனர் இந்துத்துவாவினர்.

இந்தக் கலவரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். குஜராத்தில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கர வாதத் தாக்குதல்கள் வரலாறு காணாதது.

இக்கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த வழக்குகளில் நரோடா பாட்டியா முஸ்லிம் படுகொலை வழக்கு மிக முக்கியமான ஒன்று.

கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின் பிப்ரவரி 28ம் தேதி நாடு தழுவிய பந்த்தை அறிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத், இந்த பந்த்தை பயன்படுத்தி கலவரத்தை தூண்டி விட்டது. நரோடா பாட்டியா பகுதியில் முஸ்லிம்களின் குடியிருப்புப் பகுதியில் திரண்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் குண்டர்களால் (அரசாங்கப் பதிவுகளின்படி) 97 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள் உயிருடன் எரிக்கப் பட்டனர் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் கடந்த 31ம் தேதி 32 பேருக்குத் தண்டனை வழங்கியிருக்கிறது அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றம். இது குஜராத் கலவர வழக்கை அவதானித்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் தீர்ப்பாக அமைந்திருக்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் மாயா கோத்னானியும், பாபு பஜ்ரங்கியும்தான். இதில் மாயா கோத்னானி நரோடா பாட்டியா முஸ்லிம் படுகொலை நிகழ்ந்தபோது அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். பாபு பஜ்ரங்கி பஜ்ரங் தள் என்ற இந்துத்துவா அமைப்பின் தலைவர். இவர்கள் இருவரும் முஸ்லிம் படுகொலையில் ஈடுபட்டதை உறுதி செய்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோத் சனா யாக்னிக், கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டார் என்று மாயாவையும், வன்முறை கும்பலுக்கு தலைமை தாங்கியவர் என்று பாபு பஜ்ரங்கியையும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கலவரத்தில் மூளையாக செயல்பட்டதால்தான் மாயா கோத்னானிக்கு 2002ல் மாநில அமைச்சராக்கி அழகு பார்த்தார் நரேந்திர மோடி.

நரோடா பாட்டியா வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, மாயா கோத்னானி அமைச்சராக இருந்த நிலையில் தான் (2009ல்) அவரைக் கைது செய்தது.

இந்த இருவர் உள்பட 62 பேரை குற்றவாளிகளாக கண்டறிந்த புலனாய்வுக் குழு அவர்கள் மீது தொடர்ந்த வழக்கில் 32 பேருக்கு தண்டனையும், 29 பேர் விடுதலையும் கிடைத்துள்ளது.

மாயா கோத்னானி மற்றும் பாபு பஜ்ரங்கி ஆகியோர் மீது ஈ.பி.கோ 120 பி (குற்றச் சதித் திட்டம்), ஈ.பி.கோ 302 (படுகொலை செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானதை ஏற்றுக் கொண்டிருக்கும் நீதிமன்றம், பாபு பஜ்ரங்கிக்கு சாகும்வரை சிறைத் தண்டனையும், மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்திருக்கிறது.

ஆகஸ்டு 2009ம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தொடங்கிய நரோடா பாட்டியா விசாரணையில் 327 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த சாட்சிகளில் நேரடியாக சம்பவத்தைப் பார்த்தவர்கள், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், ஆஷிஷ் கேதான் உள்ளிட்ட பத்திரிகையாளர்களும் அடங்குவர்.

இதில் தெஹல்கா பத்திரிகையின் நிரூபரான ஆஷிஷ் கேதான் மிக முக்கியமான சாட்சியாவார். இவர்தான் பாபு பஜ்ரங்கி உட்பட வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் ரகசிய கேமிரா உதவியுடன் வாக்குமூலங்களைப் பெற்றவர்.

முஸ்லிம்கள் எப்படியெல்லாம் இந்துத்துவா குண்டர்களால் கொல்லப்பட்டனர், முஸ்லிம் பெண்களை எப்படியெல்லாம் அவர்கள் கற்பழித்தனர், முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை எவ்வாறு கொன்றனர் என்பன போன்ற வன்முறை அரங்கேற்றத்தை எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாமல் பாபு பஜ்ரங்கி சொன்னதை ஆஷிஷ் கேதானின் ரகசிய கேமிரா இன்ச் பை இன்ச்சாக பதிவு செய்தது.

உயிரைப் பணயம் வைத்து இந்த உண்மைகளை வெளிப்படுத்திய ஆஷிஷ் கேதானிடம் நீதிபதி நேரடியாக விசாரணை நடத்தியுள்ளார்.

துவக்கத்தில் நரோடா பாட்டியா சம்பவத்தில் தொடர்புடைய 46 பேரை மட்டும் குஜராத் மாநில போலீஸ் கைது செய்து பல முக்கிய செல்வாக்கு படைத்த குற்றவாளிகளை தப்ப விட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்த பின் குஜராத் மாநில போலீஸார் தப்ப விட்ட 24 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு 2008ல் கைது செய்தது.

மொத்தம் 70 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டு விசாரணை துவங்குவதற்கு முன் மரணமடைந்து விட்ட மோகன் நேபாளி, தேஜஸ் பதக் என்கிற இருவர் அப்போது பெயிலில் வெளிவந்து இன்றுவரை தலைமறைவாக உள்ளனர்.

97 முஸ்லிம்கள் கொல்லப் பட்ட நரோடா பாட்டியா சம்பவம் மிக முக்கியமான வழக்கு என்பதால் கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு புலனாய்வு அதிகாரிகள் இதனை விசாரித்துள்ளனர். இறுதியாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் சார்பாக விசாரணை நடத்தியவர் ஹிமான்ஷு ஷுக்லா என்கிற அதிகாரி. 

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு உள்பட குஜராத் கலவரம் தொட ர்பாக 9 வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்திருக்கிறது. இதில் ஒன்றுதான் நரோடா பாட்டியா வழக்கு.

இந்த 9 வழக்குகளில் சிலவற்றில் ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் மாவட்டத்திலுள்ள ஓடே என்கிற கிராமத்தில் மார்ச் 1, 2002ல் 23 முஸ்லிம்களை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஐந்து பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி கடந்த மாதம் தீர்ப்பளித்திருந்தது நீதிமன்றம்.

இதே போல கோத்ரா ரயில் எரிப்பு வழக்கிலும் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது குஜராத் நீதிமன்றம்.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் அப் பகுதி அப்பாவி முஸ்லிம்கள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர். ஆனால் மத்திய அரசு நியமித்த யூ.சி. பாணர்ஜி கமிஷன் சபர்மதி ரயில் வெளியிலிருந்து எரிக்கப்படவில்லை, ரயிலுக்குட்புறமிருந்து தான் எரிக்கப்பட்டிருக்கிறது என்று அறிக்கை தந்த பின்னும், இது கவனத்தில் கொள்ளப்படாமல் முஸ்லிம்கள்தான் ரயிலை எரித்தார்கள் என்று பொய் வழக்கை ஜோடித்து நீதிமன்றத்தில் சாதித்திருக்கிறது காவல்துறை.

இந்தத் தீர்ப்புகளை உற்று நோக்கினால் நீதிமன்றத் தீர்ப்புகள் முஸ்லிம்கள் விஷயத்தில் பாரபட்சமாக வெளிப்பட்டிருப்பதை அறிய முடியும்.

59 பேர் மரணமடைந்ததாகச் சொல்லப்படும் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் சம்பந்தப் பட்ட முஸ்லிம்களில் 11 பேருக்கு மரண தண்டனையாம். ஆனால் 97 முஸ்லிம்களைப் படுகொலை செய் ததில் மூளையாக செயல்பட்டார் என்றும், வன்முறையை தலைமை யேற்று நடத்தினார் என்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோத் சனா யாக்னிக்கால் உறுதி செய் யப்பட்ட மாயா கோத்னானிக்கும், பாபு பஜ்ரங்கிக்கும் ஆயுள் தண்டனையாம்.

இந்த ஆயுள் தண்டனைகள் சில ஆண்டுகளில் குறைக்கப்பட்டு அல்லது 7 ஆண்டுகளுக்குப் பின் கருணை அடிப்படையில் இவர்கள் இருவரும் மாநில அரசால் விடுவிக்கப்படலாம். அல்லது மேல் முறையீடு மூலம் இவர்கள் ஜாமீன் பெற்று வெளியே வரலாம். இதில் எதுவுமே சாத்தியம் தான்.

97 பேரை கொன்றவர்களுக்குரிய சரியான தண்டனைதானா இந்தத் தீர்ப்பு என்று தீர்ப்பளித்த நீதிபதியே கூட ஒப்புக் கொள்ள மாட்டார்.

இதேபோல, ஆனந்த் மாவட்ட ஒரே கிராமத்தில் 23 முஸ்லிம்களைக் கொன்றவர்களுக்கும் ஆயுள் தண்டனையும், சிறைத் தண்டனையும்தான். ஆனால் கோத்ரா சமபவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுவோருக்கு மட்டும் மரண தண்டனை. ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? அதனால் நியாயமற்ற தீர்ப்பு என்றுதான் கூற வேண்டியுள்ளது.

நீதி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்படுவது என்பது இந்தியாவில்தான் நடக்கும்!

- அபு 

சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த வழக்குகளும் - சிறப்பு நீதிமன்றத் தீர்ப்புகளும்!

* குஜராத் ஆனந்த் மாவட்டம் ஓடே கிராமத்தில் 23 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 18 பேருக்கு ஆயுள் தண்டனை 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை.

* கோத்ரா சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கொளுத்தப்பட்ட வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனை 20 பேருக்கு ஆயுள் தண்டனை

* 33 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட மெஹ்சானா மாவட்டம் சர்தார்புரா கலவரம் மற்றும் படுகொலை வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை.

* மெஹன்சாவிலுள்ள தீப்தா தர்வாஜா என்ற இடத்தில் 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை

* நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், 7 பேருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 22 பேருக்கு 14 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளன.

இப்படி குஜராத் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டாலும், இவர்களுக்கு ஆக்கமும் - ஊக்கமும் அளித்த நரேந்திர மோடிக்கு தண்டனை கிடைக்காதவரை குஜராத் கலவரத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்றுதான் கருத முடியும்.

தீர்ப்பு குறித்து...

நரோடா பாட்டியா வழக்கின் தீர்ப்பு மனித உரிமை சக்திகள், சமூக ஆர்வலர்கள், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பல தரப்பிலிருந்தும் வரவேற்கப்பட்டுள்ளது. ஆந்திர முஸ்லிம் தலைவர்களும் இத் தீர்ப்பை வர வேற்றுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, எஸ்.டி. பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளன.

ஆந்திர மாநில ஜமியத்தே உலமாவின் எம்.எல்.சி.யான மௌலானா பீர் சபீர் அஹ்மது தீர்ப்பு குறித்து கூறுகையில், “வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இது. இந்தத் தீர்ப்பு இந்திய நீதித்துறையின் மீதான கண்ணியத்தை உயர்த்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கலவரக்காரர்களுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தும். குஜராத்தின் பல்வேறு நீதிமன்றங்கள் வேறு வழக்குகளிலும் தீர்ப்புகளை வழங்க வேண்டும். வகுப்புக் கலவரங்கள் நிகழும்போது நாட்டில் அமைதியும் சமூக நல்லிணக்கமும் நிலவ, சமூக விரோதிகளுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது...” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆந்திராவின் மூத்த காங்கிரஸ் தலைவரான முஹம்மது ஆரிப்தீன், “சமூக விரோதிகள் எந்தப் பதவியில் இருந்தாலும், எந்த அந்தஸ்தில் இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். குஜராத் பெண் அமைச்சர் மாயா கோத்னானிக்கும், பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கும் நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு ஒரு முன்னோடித் தீர்ப்பு...” என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவரான முஹம்மது விக்ஹார் ஹுசைன், “ஜனநாயக இந்தியாவின் சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளில் இதுவும் ஒன்று. அரசியல் தலைவர்களின் செல்வாக்கு மற்றும் கடும் முயற்சிகள் நடந்தும் அவற்றால் குற்றவாளிகளைக் காப்பாற்ற முடிய வில்லை...” என தெரிவித்திருக்கிறார். 

நரேந்திர மோடியை மன்னிக்க மாட்டோம்!

நரோடா பாட்டியா படுகொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஓடி விட்டன. இந்துத்துவாவினரின் கொலை வெறியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களும் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அதே சமயம் நாங்கள் முதல்வர் நரேந்திர மோடியை மன்னிக்கத் தயாரில்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“நீதிமன்றமும், விசாரணை அமைப்புகளும் இந்தக் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்களிப்பு என்ன என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். மோடிக்கு எதிராக எங்களிடம் வெறுப்பு இல்லை. ஆனால் இன்னும் பத்தாண்டுகள் கழிந்தாலும் நாங்கள் மோடியை மன்னிக்க மாட்டோம். பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவர் ஒருமுறைகூட வந்து எங்களைப் பார்க்கவில்லை...” என்கிறார் ஷகிலா பானு.

நரோடா பாட்டியாவைச் சேர்ந்த ஷகிலா பானு தனது குடும்பத்தினர் பத்து பேரை கலவரத்தில் இழந்தவர். இவர் இந்த வழக்கின் முக்கியச் சாட்சியும் கூட!

“நாங்கள் செய்த குற்றம் என்ன? கோத்ராவில் எது வேண்டுமானாலும் நடந்திருக்கட்டும். நாங்கள் ரயிலை எரிக்கப் போகவில்லை. ஆனால் எதற்காக நாங்கள் தண்டனைக்குள்ளாக்கப்பட் டோம்? உதவி கேட்டு பல இடங்களுக்கு நாங்கள் ஓடினோம். நீங்கள் சாக வேண்டியதுதான். இது மேலிடத்து உத்தரவு என்றார்கள் அவர்கள்!

அவர்கள் பெட்ரோல் ஊற்றினார்கள்; அவர்களை எரித்தார்கள். ஆனால் பிறந்து இரண்டே மாதம் ஆன எனது சகோதரனின் குழந்தை உயிரோடு எரிக்கப்பட்டதே... அந்தக் குழந்தை செய்த தவறுதான் என்ன?” என பதில் சொல்ல முடியாத கேள்வியை எழுப்புகிறார் ஷகிலா பானு.

வன்முறைக்கு இன்னொரு நேரடி சாட்சியான ஜன்னத் பீவி கல்லுபாய், “கலவரச் சூழலின் போது எங்களுக்கு என்னென்ன நேர்ந்தது என நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவித்திருக்கிறோம். ஆனால் தற்போது நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். சூழ்நிலை அப்படித்தான் உள்ளது. எங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை...” என்கிறார் நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்னர் அச்சத்தை உணர்ந்தவராக!

“நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல் நாள் இரவுவரை எனக்கு டென்ஷன் இருந்தது. அதனை நான் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை...” என்கிறார் இவ்வழக்கின் இன்னொரு சாட்சியான உமர் சையத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவராய்!

இவ்வழக்கின் மற்றொரு சாட்சியான நஸ்ரீன் ஷேக் என்ற பெண்மணி தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோதும், “மாநில முதல்வர் என்கிற முறையில் நரேந்திர மோடி குறைந்த பட்சம் எங்கள் நிலைமையை வந்து பார்க்கவோ அல்லது எங்கள் காயங்களுக்கு களிம்பு தடவும் வகையிலான ஓரிரு வார்த்தைகள் பேசவோ முன்வரவில்லை...” என்று துக்கத்தை மறைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, முதல்வருக்குரிய கடமையுணர்வு - பொறுப்புகளிலிருந்து தவறியதை நாகரீகமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின் இவ்வழக்கில் சாட்சிகளாக இருந்தவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. ஜன்னத் பீவி சொல்வதுபோல அவர்களுக்கு என்ன எதிர்விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில்தான் அவர்கள் நாட்களை ஓட்டிக் கொண்டுள்ளனர்.

“நாங்கள் பெண்களாக இருப்பதால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. ஆனால் 2002 கலவரத்திற்குப் பின் நாங்கள் சாட்சி சொல்ல நீதிமன்றங்களுக்குச் சென்றோம். இதனையடுத்து நாங்கள் பல நாட்கள்வரை அச்சுறுத்தப்பட்டோம். கலவரத்தின் போது எங்கள் குடும்பத்தினருக்கு நேர்ந்த கதியை விட மோசமான விளைவுகளை நாங்கள் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் அச்சுறுத்தினார்கள்...” என்கிறார் ஷகிலா பானு.

இந்நிலையில், நீதி மற்றும் அமைதிக்கான அமைப்பின் செயலாளரும், குஜராத் கலவர வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்கிற முனைப்போடு இன்றுவரை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் களமாடி வரும் மனித உரிமை போராளியுமான தீஸ்தா செட்டில் வாட், “இந்த சாட்சியங்களுக்கு போதிய பாதுகாப்பு கேட்டு விண்ணப்பித்திருக்கிறோம்...” என்கிறார்.

மேலும், “அடுத்த ஒரு வாரத்திற்கு அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலையாக உள்ளது. நரோடா பாட்டியாவில் 30-08-2012 அன்று பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கோரியுள்ளோம். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்...” என்று தெரிவித்துள்ளார் தீஸ்தா.

அமைதி மற்றும் நீதிக்கான குடிமக்கள் அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அளிக்கை ஒன்றில், (முஸ்லிம்களை) படுகொலை செய்யுங்கள் என்று கலவரக் கும்பலை மாயா கோத்னானி தூண்டி விட்டதை கண்ணால் பார்த்த 11 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஊர்ஜிதப்படுத்தினர்.

பாபு பஜ்ரங்கிக்கு எதிராக 15 சாட்சிகள் ஊர்ஜிதப்படுத்தினர். இன்னொரு குற்றவாளியான சுரேஷ் லங்டா சாரா என்பவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என 48 பேர் சாட்சியம் அளித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஃபைஸ்