என்னுடைய டூ வீலர் காணாமல் போய் விட்டது. டூ வீலர் கிடைக்க நான் எத்தகைய சட்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டும்?

உங்களது டூ வீலர் எந்த இடத்தில் வைத்து காணாமல் போனதோ அந்த இடத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ இரு சக்கர வாகனங்கள் தொடர்பான ஆர்.சி. புக் மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய ஆவணங்களுடன் நீங்கள் உடனடியாக புகார் செய்ய வேண்டும்.

மேற்படி அளித்த புகாரின் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வலியுறுத்த, எப்.ஐ.ஆர். நகலை நீங்கள் இலவசமாக பெற்றிட குற்றவியல் நடைமுறை சட்டத்தில் வழிவகை உள்ளது.

எஃப்.ஐ.ஆர். நகலைப் பெற்றவுடன் நீங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியை அணுகி மேற்படி இரு சக்கர வாகனத்திற்குண்டான இன்சூரன்ஸ் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்டதைப் போல காவல் நிலையத்தில் புகாரை வாங்க மறுத் தாலோ அல்லது எஃப்.ஐ.ஆர். போட தாமதித்தாலோ நீங்கள் காவல் நிலையத்தின் உயர் அலுவலர்களிடம் அதாவது நகர் பகுதியாக இருக்குமாயின் உதவி ஆணையர், துணை ஆணையர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யலாம். மாவட்ட பகுதியாக இருப்பின் துணை கண்காணிப்பாளர், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் செய்யலாம்.

பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் எஃப்.ஐ.ஆர். நகலை எவ்வாறு பெறுவது?

எஃப்.ஐ.ஆரின் விரிவாக்கம் First Information Report என்பதாகும். அதாவது முதல் தகவல் அறிக்கை என தமிழில் அர்த்தமாகும். காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் எந்த ஒரு குற்றமுறையீடும் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட வேண்டும் என குற்றவியல் நடைமுறைசட்டப் பிரிவு 154 கூறுகிறது.

அது எழுத்து மூலமாகவோ அல்லது வாய் மொழியாகவோ இருக்கலாம். அவ்வாறு பதிவு செய்யப்படும் எஃப்.ஐ.ஆரின் இலவச நகலை குற்றவியல் நடைமுறைசட்டப் பிரிவு 154(2)ன் கீழ் குற்றமுறையீட்டாளர் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்படி சட்டப்பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகி எஃப்.ஐ.ஆர். நகலை வலியுறுத்தி பெற வேண்டும்.