ஒவ்வொரு மதத்தவருக்கும் ஒவ்வொரு வகையான கொள்கை கோட்பாடுகள், சடங்குகள் - சம்பிரதாயங்கள் இருக்கலாம் அது தவறென்று கூற முடியாது. ஆனால் ஒரு மதத்தின் கோட்பாட்டை அனைத்து மக்கள் மீதும் திணிக்கும் செயல் ஆரோக்கியமானது அல்ல.

அதிலும் குறிப்பாக வெகுஜன மக்களின் பிரதிநிதியாக இருந்து மதச் சார்பற்ற கொள்கையை நிலை நிறுத்த வேண்டிய அரசே அத்தகைய செயலை முன்னின்று செய்வது புரியாத புதிராக உள்ளது.

மகாவீர் புலால் உண்ணாமை கொள்கையை கொண்டவராக இருந்திருக்கலாம். அவரை ஏற்றுக் கொண்ட மக்களும் மகாவீர் தினத்தன்று புலால் உண்ணாமல் இருந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். அதை யாரும் தடுக்க முடியாது.

அதே நேரத்தில் மகாவீர் தினத்தன்று ஒட்டுமொத்தமாக இறைச்சிகள் வெட்டவும். விற்பனை செய்யவும் அரசு தடை விதிப்பது ஒருவரின் கோட்பாட்டை மற்றவர் மீது திணிப்பதற்கு ஒப்பாகும்.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் 16ம் தேதி மூடப்படும். இதேபோல் ஆடு, மாடு மற்றும் இதர இறைச்சி விற்பவர்களும் அவர்களது கடைகளை கண்டிப்பாக மூட வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது.

ஒவ்வொரு மதத்தையும் திருப்திபடுத்துவது அரசின் நோக்கமாக இருக்குமானால், ஒவ்வொரு மதத்த வரும் தமது குருவின் கொள்கையை ஒரு குறிப்பிட்ட நாளில் அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் என்னவாகும் என்பதை அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.

எனவே அரசு இது விஷயத்தில் நல்ல முடிவை எட்ட வேண்டும். தமிழகத்தில் ஒரு சதவிகிதம் அளவு வாழும் ஒரு சமுதாயத்திற்காக 99 சதவிகித மக்களையும் அம்மதத்தின் கோட்பாட்டை ஏற்க வேண்டும் என்று சட்டம் போடுவது அரசின் அறியாமையாகும்.

இப்படி சட்டம் போடும் அரசு, ரமலான் மாதம் முழுவதும் பகலில் பட்டினி கிடக்கும் முஸ்லிம்களைப் போல் மற்றவர்களும் பட்டினி கிடக்க வேண்டும் என்று கூறுமா? எனவே இதுபோன்ற திணிப்புகளை அரசு கைவிட வேண்டும்.

அதே நேரத்தில் காந்தி ஜெயந்தியன்று மதுக்கடைகள் மூடப்படுவது வரவேற்கத்தக்கதே! ஏனெனில் மது மனித குலத்தை நாசமாக்கும் விஷமாகும்.

எனவே காந்தி ஜெயந்தியன்று மட்டும் என்றில்லாமல் பூரண மது விலக்கை கொண்டுவர அரசு முயற்சிப்பதுதான் காந்திக்கு அரசு செலுத்தும் மரியாதையாகும்.