தெலுங்கானாவில் நடைபெற்ற இடைத் தேர்தல் மத்திய காங்கிரஸ் அரசையும், ஆந்திர மாநில பிரதான அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இங்கு போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 12 சட்டப்பேரவை தொகுதிகள் 11ல் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு இடத்தில் ராஷ்ட்ரிய சமிதி கட்சியோடு கூட்டணி அமைத்த பிஜேபி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றி என்பது சமிதி கட்சியைப் பொறுத்தவரை இமாலய வெற்றியாகத்தான் அது கருகிறது. சமிதி கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசும், தெலுங்கு தேசமும் மோசமான முறையில் டெபாசிட் இழந்து தோல்வியைச் சந்தித்துள்ளன.

தனித் தெலுங்கானா கோரி போராட்டம் நடத்தி வருகின்ற ராஷ்ட்ரிய சமிதிக்கு ஏற்கனவே 12 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அண்மையில் ஆந்திராவை ரணகளப்படுத்திய தெலுங்கானா போராட்டத்தின் போது தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தியதோடு, அதற்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை என்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அக்கட்சியின் 12 எம்.எல்.ஏக்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்திருந்தனர். இது தெலுங்கானா பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

தங்களது பதவி சுகத்தை விட தெலுங்கானா மக்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும் தான் தங்களுக்கு முக்கியம் என்பதை இவர்களது ராஜினாமா உணர்த்துவதாகவே தெலுங்கானா மக்கள் நினைத்து சந்தோசம் அடைந்தனர். மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் கட்சியாக ராஷ்ட்ரீய சமிதியை தெலுங்கானா மக்கள் பார்க்கிறார்கள். அதனால்தான் மீண்டும் வெற்றிக் கனிகளைக் கொடுத்து அழகு பார்க்கின்றனர் தெலுங்கானா மக்கள்.

இந்த வகையில் பார்த்தால், ஒட்டு மொத்த தெலுங்கானா மக்களும் ராஷ்ட்ரிய சமிதி யின் பின்னால் அணிவகுக்கத் தயாராகி உள்ளனர். அதனால்தான் காங்கிரசுக்கும், தெலுங்கு தேசத்திற்கும் மரண அடி கொடுத்திருக்கிறார்கள். தனித் தெலுங்கானா போராட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகள் நடந்து கொண்ட விதத்திற்கு தெலுங்கானா மக்கள் தந்த பரிசுதான் அவற்றுக்கான தோல்விகள் என சொல்லப்படுகிறது.

இனி தனி தெலுங்கானாவிற்கு ஆதரவளிக்காத எந்தக் கட்சியையும் தெலுங்கானா மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை ஆந்திர மாநில இடைத் தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. அதேசமயம், ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு உறைமோரை ஊற்றியது போல் தெலுங்கானா ராஷ்ட்ரிய பிஜேபியை தனது கூட்டணிக் கட்சியாகச் சேர்த்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், பீகாரைப் போலவே தெலுங்கானா பகுதியிலும் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது பிஜேபி. 

சமிதி கட்சியை வைத்து கால் பதித்திருக்கும் பிஜேபியின் மதவெறி கொள்கைத் திட்டங்கள் அடுத் தடுத்து தெலுங்கானாவில் பிரதிபலிக்கும். அப்போது மத மோதல்கள் மீண்டும் தெலுங்கானாவை தகதகக்க வைக்கும். காரணம், தெலுங்கானா பகுதியின் பல மாவட்டங்களில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கிறார்கள். இது பிஜேபிக்கு பொறுக்குமா? அரசியல் அக்கவுண்டை அது மதவெறியிலிருந்துதானே துவங்குகிறது.

- ஃபர்ஹா