1998ல் கோவையில் 19 முஸ்லிம்கள் காவல்துறை யினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக போலீசார் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் கொஞ்சநஞ்சமல்ல...

தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டனர்; துன்புறுத்தலுக்கு ஆளாயினர். பள்ளி, கல்லூரிகளுக்கு பர்தா அணிந்து செல்லும் மாணவிகள் கூட பர்தாவைக் களைந்து சோத னைக்குள்ளாயினர். இரட்டை அர்த்தப் பேச்சுகளுக்கும் ஆளாயி னர். வீடுகளில் இரவு நேரங்களில் அத்துமீறி படுக்கையறைவரை நுழைந்த போலீசார் அநாகரீக மாக நடந்து கொண்டனர்.

தமிழக முஸ்லிம்கள் அப்போது அனுபவித்த அதே துன்புறுத்தல்களுக்கு இன்று ஹைதராபாத் முஸ்லிம்களும் முகம் கொடுக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஹைதராபாத் தில்சுக் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து முஸ்லிம்களைக் குறி வைத்து இயங்கி வரும் காவல்துறை அவர்களின் நிம்மதியை தினந்தோறும் குலைத்துக் கொண்டிருக்கிறது.

சாலைகளில் பார்க்கும் முஸ்லிம்களையெல்லாம் பாதுகாப்பு என்ற பெயரில் தடுத்து நிறுத்தி அவர்களின் உடமைகளை கண் மூடித்தனமாக சோதனை செய்வதில் ஈடுபட்டுள்ளது ஹைதரா பாத் காவல்துறை. முஸ்லிம் பெண்களின் கைப்பையை ஏறக்குறைய வலுக்கட்டாயமாக பிடுங்கி, சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே தில்சுக் நகர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பீதியடைந்திருக்கும் ஹைதராபாத்வாசிகளுக்கு மத்தியில் பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துறை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் இன்னும் அச்சத்தையும், வேதனையையும் கூட்டியுள்ளது.

அப்பாவி மக்கள் காவல்துறையின் தொந்தரவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது தவிர, இங்குள்ள மார்க்கெட் பகுதி வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரத்தில் ஈடுபடவும் காவல்துறை அனுமதிப்பதில்லை. காவல்துறையின் பாதுகாப்பு கெடுபிடிகள் குறித்து கவலை தெரிவிக்கின்றனர் ஹைதராபாத்வாசிகள்.

“நாங்கள் காஷ்மீரில் வசிக்கிறோமா?...'' என கேள்வியெழுப்புகிறார் ஹைதராபாத் வியாபாரி ஒருவர். இன்னும் சிலரோ 3 இடங்களில் போலீசாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறுகிறார்கள்.

குண்டு வெடிப்பு சூழ்நிலையை பயன்படுத்தி, கண்களில் தென்படுபவர்களையெல்லாம் பயங்கரவாதிகளாக சந்தேகப்படத் துவங்கியுள்ளது காவல்துறை என்றே புரிந்து கொள்ள முடிகிறது. பெண்கள் தங்கள் கைப்பையிலா குண்டுகளை எடுத்து வரப் போகிறார்கள்.

அநாகரீகமான முறையில், பெண்களின் தனி உடமைகளை சோதிக்கிறது காவல்துறை. இதற்கு எதிராக எந்தப் பெண்ணிய இயக்கங்களும் குரல் எழுப்பவில்லை. பெண்ணுரிமை பேசு வோருக்கு, பயங்கரவாதிகள் தேடுதல் என்ற பெயரில் போலீஸ் நடத்தி வருகின்ற பெண்களுக்கெதிரான கொடுமைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. மகளிர் தினமான மார்ச் 8 அன்றுகூட முஸ்லிம் பெண்களின் கைப்பைகளை சோதனையிட்டு அவமானப்படுத்தியுள்ளது ஹைதராபாத் காவல்துறை. இவர்கள் முஸ்லிம் பெண்கள் என்பதால் பெண்ணிய இயக்கங்கள் மௌனம் காக்கின் றனவா என்று கேட்கத் தோன்றுகிறது.

ஹைதராபாத்திலுள்ள நம் பள்ளி, கோதி போன்ற பகுதிகளில் கடந்த 7ம் தேதி காலையிலிருந்து பரப்பப்பட்ட ஒரு செய்தி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கியது. தேடுதல் வேட்டை என்ற சாக்கில் மாலை 4 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்திருக்கக் கூடாது என கடைக்காரர்களை போலீசார் மிரட்டியதாக கூறியது இந்த செய்தி. இது மிகப் பெரும் அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது.

இவையெல்லாம் காவல்துறையின் அத்துமீறலை வெளிப்ப டுத்தும் அதேவேளை, காவல்துறைக்கு பயங்கரவாதத் தாக்குதலை எப்படி சமாளிப்பது என்றோ குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளின் தேடுதல் வேட்டையை எப்படி மேற்கொள்வது என்பதற்கான பயிற்சியோ இல்லை என்பதையும் வெளிப்படுத்துவதாய் உள்ளது.

மெட்டல் டிடெக்டர் கருவி இல்லையென்றால் எந்த ஒரு பொருளையும் தொடக் கூடாது. ஆனால் காவல்துறையினரோ, எவ்வித பயமுமில்லாமல் அப்படியே கைப்பைகளில் கையை விட்டு துழாவுகிறார்கள். கைப்பையில் வெடிகுண்டு இருப் பதை கண்டுபிடித்ததால் அதை அப்புறப்படுத்தி விடுவதைப் போன்று! இதுவே, இவர்கள் பாதுகாப்பு சோதனைகளுக்கும் தகுதியில்லாதவர்கள் என்பதைத் தான் காட்டுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக, காவல்துறையின் இதுபோன்ற கெடுபிடிகளால் நகரத்தின் மார்க்கெட் பகுதிகளில் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சில இடங்களில் எல்லை மீறியும் போகிறது. வரம்பு மீறி கடைகளுக்குள் நுழையும் போலீஸ் வாடிக்கையாளர் மற்றும் கடைக்காரரின் பைகளையும் சோதிக்கத் தொடங்கியுள்ளது.

முஸ்லிம் மக்களை குறி வைத்து காவல்துறையினர் இயங்கி வந்த போதிலும், இவர்களின் நடவடிக் களால் பொது மக்கள் அனைவ ரும் பாதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் தொல்லை எல்லை மீறுவதால் அவர்களைப் பார்த்து ஹைதராபாத் மக்கள் இப்படி கேட்கிறார்கள்...

“வெடிகுண்டு தயாரிப்பதற் கான மூலப் பொருட்கள் எங்கி ருந்து கொண்டு வரப்பட்டன? அவை ஹைதராபாத் நகரத்திற்கு வெளியே இருந்து கொண்டு வரப்பட்டிருந்தால் இந்த விஷயத் தில் பஸ் டிப்போக்கள், ரயில் நிலையங்கள் மற்றும் நகரின் நுழைவிடங்கள், தேசிய நெடுஞ் சாலைகள் போன்ற இடங்களில் தான் அவர்கள் சோதனை மேற் கொள்ள வேண்டும்!''

பொது மக்களுக்கு உள்ள அறி வுகூட காவல்துறை அதிகாரிக ளுக்கு இல்லையே!

- ஹைதராபாத்திலிருந்து ஃபெரோஸ்

Pin It