ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் "ஈழத் தோழமை நாள்' கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேச ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும்,நாட்டின் இறையான்மையை குலைக்கும் வகையிலும் பேசியதாக மதுரை வழக் கறிஞர் சங்கச் செயலாளர் ராமசாமி மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அமைப்பின் பொதுச் செயலாளர் மீ.தா.பாண்டியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

“ஈழத் தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்தியா தொடர்ந்து உதவுகின்ற துரோகத்தை செய்து வருகிறது. ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்தியா செயல்படக் கூடாது; தமிழ் இனத் துக்கு தொடர்ந்து இந்தியா துரோகம் செய்யுமானால் இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறி யாகும்...''என்று வழக்கறிஞர் ராமசாமியும்,

“இந்திய அரசின் துரோகம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடருமானால் எதிர்காலத்தில் இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு நீடிக்குமா என்பது கேள்விக் குறியாகும்...''என்று மீ.தா. பாண்டியனும் மதுரை ஆர்ப்பாட்டத்தில் பேசியது தான் தேச ஒற்றுமைக்கு எதிரான பேச்சு என்று தமிழக காவல்துறை இ.பி.கோ. 153பி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது.

இலங்கைத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு உதவி செய்ய வில்லையா? இது இந்திய அரசின் தமிழர் விரோ தச் செயல் இல்லையா? உலகம் அறிந்த இந்த உண்மையைத்தானே இருவரும் பேசியிருக்கிறார்கள்.உண்மையைச் சொன்னால் தேசத்திற்கு குந்தகம் விளைந்துவிடுமா?தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைக்கவில்லையென்றால் அதை ஆதாரப்பூர்வமாக மறுக்கட்டும்.

இலங்கை அரசுக்கு எப்போதுமே பக்க பலமாக இருந்து கொண்டு தமிழர்களை வஞ்சித்து வரும் இந்திய அரசின் செயலைப் பொறுக்காமல்,இந்த நிலை தொடருமானால் இந்தியாவின் ஒருமைப் பாடு கேள்விக்குறியாகும் - எதிர்காலத்தில் இந் திய வரைபடத்தில் தமிழ்நாடு நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகும் என்று மனதில் தோன்றும் சந்தேகத்தை வெளிப்படுத்துவது எப்படி தேச ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவித்ததாக ஆகும்?

வழக்கறிஞர் ராமசாமி மற்றும் மீ.தா.பாண்டியனின் பேச்சு இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிரான விமர்சனம் என்ற வகையில் தான் அமைந்திருக்கிறதே தவிர தேசத்தின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக இல்லை. ஒட்டுமொத்த தமிழினத்தின் ஆதங்கத்தை அவர் கள் இருவரும் வெளிப் படுத்தியுள்ளனர்.

தனது இனம் அழிக்கப்படுகிறது என்ற நிலை யில் அதற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை, தனது இனத்தை ஆதரிப்பவர்களை தண்டனைச் சட்டத்திற்கு உள்ளாக்குவோம் என்பது ஜனநாயகக் குரல் வளையை நெறிக்கும் செயல்.கருத்துரிமையை நசுக்கும் பாசிசப் போக்கு என்பதாகவே கருதப்படும்.

இன்ன செயலினால் இந்த விளைவு ஏற்படலாம் என்று கருத்துரைப்பது எந்த நாட்டிற்கும் எதிரான கருத்தல்ல.இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் எழுச்சி,அதற்கு ஆதரவாக எழுந்திருக்கும் மாணவர்களின் புரட்சி இவையணைத்தும் இந்திய அரசின் செயலுக்கு எதிரான கோபத்தைத்தானே வெளிப்படுத்துகிறது?

இதனால் தமிழகத்தின் இளம் தலைமுறையினரின் நெஞ்சங்களில் இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விட்டது என்று ஒருவர் சொன் னால் இ.பி.கோ.153பி பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு தொடுக்க முடியுமா?

இந்தியாவின் அல்லது மத்திய அரசின் செயலை விமர்சிக்க இந்திய குடிமகனுக்கு உள்ள உரிமையைத்தான் இருவரும் பயன்படுத்தியிருக் கின்றனர்.இதை தவறு என்று வழக்குப் பதிவு செய்யும் காவல்துறையின் செயல் கண்டிக்கத் தக்கது.

தமிழ் இனத்துக்கும், தமிழக உரிமைகளுக்கும் இந்திய அரசு வஞ்சகமும், துரோகமும் செய்து வருவது தொடருமானால் இந்தியாவின் ஒருமைப் பாடு நொறுங்கும் என எச்சரிக்கை பாணியில் பல முறை மேடைகளில் மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ. முழங்கியிருக்கிறார்.

அவர் மேடைகளில் முழங்கியது மட்டுமல்ல பாரதப் பிரதமரிடம் முகத்திற்கு நேரே சொல்லியும் இருக்கிறார்.அப்போதெல்லாம் வைகோ மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்று பிரதமர் உத்தர விடவில்லை என்பது தமிழக காவல்துறை அறியாத ஒன்றல்ல.

வைகோவின் கருத்தைத்தான் வழக்கறிஞர் ராமசாமியும், மீ.தா. பாண்டியனும் பிரதிபலித்தி ருக்கின்றனர்.வைகோவின் பேச்சு தேசிய ஒரு மைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கவில்லை என்றால் இந்த இருவரின் பேச்சு மட்டும் எப்படி குந்தகம் விளைவிக்கும்?

அதனால் இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு களை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால்,மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கிற்கும்,தமிழக அரசின் செயலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.

Pin It