டெல்லியில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற பாஜகவின் 33வது ஆண்டு விழாவில் பேசிய அத்வானி, “சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் என்னைப் புகழ்ந்து பேசிய போது மக்கள் அதனை வரவேற்றனர் (?!) சரியான ஒன்றை யார் சொன்னாலும் உலகம் அதை வரவேற்கும். நல்லதை வரவேற்க நாம் தயங்கக் கூடாது. அயோத்தி விவகாரத்தில் பாஜக முன்னர் எடுத்த நிலைக்காக நான் வருத்தப்படவில்லை. மாறாக பெருமிதம் கொள்கிறேன்...” எனத் தெரிவித்திருக்கிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று பாஜக முன்னர் எடுத்த நிலை குறித்து நான் பெருமிதம் அடைகிறேன் என்கிறார் அத்வானி.

அயோத்தியில் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளி நான் என்ற நிலைக்காக பெருமிதம் கொள்கிறேன் என்று அவர் சொல்வதாகத்தான் அர்த்தம் கொள்ள முடிகிறது. எப்படியிருந்தாலும் இது திமிர்வாதம்தான்!

பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு அத்வானியின் வெறுப்புப் பேச்சுதான் காரணம் என்று அத்வானிக்கு அப்போதைய பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஐ.பி. எஸ். அதிகாரியான அஞ்சு குப்தா நேரடியாக நீதி மன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

பாபரி மஸ்ஜித் இடிப்பை விசாரிக்க முன்னாள் நீதிபதி லிபரான் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி இந்த வழக்கை 17 ஆண்டுகளாக விசாரித்தது. 48 முறை இக்கமிட்டியின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டது.

நாட்டில் போடப்பட்ட கமிட்டிகளிலேயே அதிக வருடங்கள், அதிக செலவு பிடித்த கமிட்டி இந்த லிபரான் கமிட்டி மட்டும்தான். 2009 ஜூன் மாதம் இந்த அறிக்கையை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் முன்னிலையில் பிரதமரிடம் சமர்ப்பித்தார் நீதிபதிலிபரான்.

அப்போதுவரை இந்த வழக்கிற்காக சுமார் 8 கோடி ரூபாய் அரசுப் பணம் செலவாகியிருக்கிறது இந்த விசாரணைக்காக! இத்தனை விலை கொடுத்தும் நீதிபதி லிபரான் சுட்டிக் காட்டிய பாபரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் மீது இது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த அறிக்கையில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் உ.பி. முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், உமா பாரதி, அசோக் சிங் கால், அப்போதைய ஆர். எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது என கூறப்பட்டது.

லிபரான் கமிட்டி அறிக்கையை பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதன் மீது மத்திய அரசு என்ன நடவ டிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா.

இவரைப் போலவே பல கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்தினர். ஆனாலும், மத்திய அரசு அந்த அறிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையெல்லாம் தாண்டி, அத்வானியுடன் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரியான அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் நேரடியாக சாட்சியம் சொல்லி யும், அத்வானி உள்ளிட்டோர் மீது நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

வெறும் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்த சதி செய்தார் என்று பொய்க் குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கில் போட்ட மத்திய அரசு, ஒரு சமுதாயத்தினரின் வழிபாட்டுத் தலத்தை முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கி, அந்த வழிபாட்டுத்தலம் இருந்த சுவடே தெரியாமல் அழித்த குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான ஆதாரம் இருந்தும் அவர்களை விட்டு வைத்திருக்கிறது என்றால் இந்த நாட்டின் நீதித்துறைக்கு இதைவிட வேறு என்ன கேவலம் வேண்டும்?

நீதித்துறையும், சட்டத்தின் ஆட்சியும் கேவலப்பட்டு நிற்பதால்தான் தேசத்தின் குற்றவாளிகள் பெருமிதம் கொள்கிறார்கள்.

பாஜகவிலிருந்து அமைதியான முறையில் ஓரங்கட்டப்பட்டு விட்டார் அத்வானி. பாஜகவில் அவரது மதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. அத்வானியை வீட்டுக்கு அனுப்பி விட்டு மோடியை முன்னிறுத்த சங்பரிவாரங்கள் சங்கல்பம் எடுத் திருக்கின்றன.

தனது அரசியல் வாழ்வு வாஜ்பாயைப்போல் அஸ்தமனம் ஆகி விடுமோ என்ற பீதியில் - அயோத்தி விவகாரத்தில் பாஜகவின் முந்தைய நிலைக்காக நான் பெருமிதம் அடைகிறேன் என்று சொன்னதன் மூலம், பாஜக மற்றும் சங்பரிவாரத் தொண்டர்கள் மத்தியில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ள தலைவர் நான்தான் என்று மறைமுகமாக உணர்த்தி, தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த அத்வானி முயற்சி செய்வதாக அரசியல் பார்வையாளர்கள் கருது கின்றனர்.

ஆனால், முஸ்லிம்களைப் பொறுத்தவரை, பாஜகவின் அப்போதைய, இப்போதைய, எப்போ தைய நிலையும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதுதான். அந்த திட்டத்தை அது ஒருக்காலும் கைவிடப் போவதில்லை. ராமர் கோவிலையும் கட்டப் போவதில்லை. பாஜகவின் அரசியல் இருப்பே அயோத்தியை வைத்துத்தான்.

ஆனால், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதற்கான நியாயம் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை. மத்தியில் ஆட்சிக்கு வந்த அத்தனை அரசுகளும் சங்பரிவாரத்தின் மீது கை வைக்க அஞ்சும் நிலை இருப்ப தால்தான் அத்வானிகள் தாங்கள் செய்த குற்றத்திற்காக பெருமிதம் அடைகின்றனர்.

அத்வானியை முலாயம் சிங் புகழ்ந்தாலும், சோனியா காந்தி புகழ்ந்தாலும் நாட்டு மக்கள் மத்தியில் அத்வானி குற்றவாளிதான்.

Pin It