தடுக்கும் சக்திகள் இதை உணர வேண்டும்

கடந்த வார மக்கள் ரிப்போர்ட் இதழில், 'முஸ்லிம்கள் மீள் குடியேற இடைஞ்சல் கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்ற தலைப்பில் செய்திக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், வடக்கு பிரதேசமான மன்னார் பகுதியில் குடியேறும் முஸ்லிம்களுக்கு அப்பகுதியின் பேராயரான இராயப்பு ஜோசப்பும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான விநோதரலிங்கமும், மாவை சேனாதிராஜாவும் எதிர்ப்பு தெரிவித்து வருவதையும் - முஸ்லிம் மீள் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு மன்னார் ஆயர் புகார் மனு அளித்திருப்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில், நம்மைத் தொடர்பு கொண்ட நமது இலங்கைப் பத்திரிகை நண்பர், ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சேவிற்கு புகார் மனு அளித்திருப்பதாக சொல்லப்படும் விஷயத்தை மன்னார் ஆயர் மறுத்திருக்கிறார் என்ற தகவலைச் சொன்னார்.

மன்னார் ஆயரின் மறுப்பு உண்மையா என்கிற ரீதியில் இலங்கை பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்ததில் ஆயர், ஜனாதிபதிக்கு புகார் மனு அனுப்பியிருப்பது உண்மைதான் எனத் தெரிய வந்தது.

மன்னார் ஆயர், ஜனாதிபதிக்கு மனு அனுப்பியிருப்பது சம்பந்தமாக முதலில் பேசியவர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சருமான ரிசாத் பதியுத்தீன்தான். அதோடு, மன்னார் ஆயர் அனுப்பிய புகார் மனுவை ராஜபக்சே தன்னிடம் காட்டியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அதோடு, 20 வருடங்களுக்கு மேலாக அகதி வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஒளியேற்றப்படவில்லை. இதற்கு தடையாக இருக்கும் சக்திகள் எவை என்பதையும் கண்டறிய வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ரிசாத் பதியுத்தீன். ஆயரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பதியுத்தீனின் பேச்சு கண்டிக்கத்தக்கது...” என்றெல்லாம் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஆயர் இராயப்பு ஜோசப் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது உண்மை என்றும் ஒரு தமிழ் வார இதழில், “அரச காணியில் சட்ட நடைமுறையினைப் பின்பற்றியே குடியேற வேண்டும். எனவேதான் நான் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் முஸ்லிம்களின் குடியேற்றத்தை நான் எதிர்க்கவில்லை...” என ஆயர் சொன்னதாக செய்தி வெளியாகியுள்ளது என்றும் நமது இலங்கை பத்திரிகை நண்பர்கள் கூறுகிறார்கள்.

ஆயர் இப்படி தமிழ் பத்திரிகையில் சொல்லியிருப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க...

ஆயர் பத்திரிகையில் சொல்லியிருப்பதின் அடிப்படையில் பார்த்தால் ஆயரின் நோக்கம் என்ன என்பதை புரிந்த கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.

முஸ்லிம்களின் குடியேற்றத்தை எதிர்க்கவில்லை ஆயினும் அரச காணியில் சட்ட நடைமுறையினைப் பின்பற்றியே குடியேற வேண்டும் என்று நீதியில்லாத ஒரு நாட்டில் சட்ட நடவடிக்கையைப் பற்றி ரொம்பவே அக்கறைப்படுகிறார் ஆயர்.

இலங்கை அரசு வட கிழக்கில் புத்த விகாரைகளை நிறுவியபோதும், சிங்களக் குடியேற்றங்களை சட்ட விரோதமாக ஏற்படுத்தியபோதும், இராணுவ முகாம்களுக்காக தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை ஆக்கிரமித்தபோதும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதி காத்து வந்த ஆயர், இலங்கை நாட்டில் சட்ட நெறிமுறைகளுக்குட்பட்டு வாழ வேண்டும் என்று இப்போது தேசியப் பற்றை வெளிப்படுத்துவது வியப்பாகத்தான் உள்ளது.

சட்ட நெறிமுறைகள் பேணப் பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் முஸ்லிம்கள் குடியேறும்போது மட்டும் அந்த நடைமுறைப் பேணப்பட வேண் டும் என்று கூறுவது உள்ளபடியே உள்நோக்கம் கொண்ட ஒரு வாதம்தான் என்பதையும் எவரும் மறுக்கவியலாது.

மன்னார் மாவட்டத்திலுள்ள சன்னார், ஈச்சவளக்கை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் தான் புலிகளின் கிளிநொச்சி மாவட்ட மாவீரர் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.

இது சட்ட விரோதக் குடியேற்றங்கள்தான். இதற்கு அப்பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆயினும் இது சட்டநெறிமுறைகள் பின்பற்றப்படாத குடியிருப்புகள் என்று அப்போது ஆயருக்கு ஏனோ தெரியவில்லை. அப்போது ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் ஆயருக்குத் தோன்றவில்லை.

விடுதலைப் புலிகளின் அரசாங்கம் வட கிழக்கில் இருந்தபோது புலிகளால் கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகளில் தமிழ் மக்கள் குடியேற்றப்பட்டனர்.

வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளில் தமிழ் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையிலும் அங்கு தற்போது மீள் குடியேறும் முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்கு எவ்விதப் பிரச்சினையையும் ஏற்படுத்தாமல் அருகாமையிலுள்ள காணிகளில் குடியேறி வருகின்றனர். இதைத்தான், "சட்ட விரோதக் காணிகளில் முஸ்லிம்கள் குடியேறுகிறார்கள்' என்று ஆயரும், முஸ்லிம்கள் வடக்கைப் பிடிக்க வருகிறார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சொல்லி வருகிறார்கள்.

ஆண்டாண்டு காலமாக வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் சொத்து சுகங்களை இழந்து சொந்த ஊரை விட்டு புலிகளால் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த நாட்டில் அகதிகளாக அரசாங்கம் கொடுக்கும் உலர் உணவை உண்டு வாழ்ந்து - போருக்குப் பிந்திய அமைதி யான சூழலில் சொந்த பூமிக்கு திரும்ப அவர்கள் எத்தனிக்கின்ற போது, காலங்காலமாக அவர்கள் வாழ்ந்த நிலத்தில் தமிழ் மக்கள் குடியேறியுள்ளபோது - மாற்று இடத்திலாவது சொந்த பூமியில் குடியிருப்போம் என்று அவர்கள் போனால் அவர்களை கனிவோடு பார்ப்பதை விடுத்து அவர்கள் சட்டத்தைப் பேண வில்லை என்று ஜனாதிபதிக்கு மன்னார் ஆயர் புகார் மனு எழுதுகிறார் என்றால் முஸ்லிம்களை மீண்டும் அகதிகளாக ஆக்கவே ஆயர் துடிக்கிறார் என்றுதானே அர்த்தம்?

உலகத் தமிழர்கள் வெறுக்கும் அதிபர் ராஜபக்சேவிற்கு - நாட்டின் சட்டத்தைப் பேணவில்லை என்று முஸ்லிம்கள் குறித்து ஆயர் புகார் அனுப்புகிறார் என்றால் ராஜபக்சேவை விட முதன்மை எதிரிகளாக அவர் முஸ்லிம்களைக் கருதுகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் என இரண்டு சமூகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால்... தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாதத் தால் மட்டுமே பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். முஸ்லிம் மக்களை சிங்களப் பேரினவாதம் மற்றும் புலிகளின் அடக்குமுறைஎன இருவேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தனது சமூகத் திற்கு நீதி கேட்டு குரலெழுப்பும் ஒரு அமைப்பு. அதேபோன்று பாதிக்கப்பட்ட இன்னொரு சமூகம் நீதிகேட்டு முன்னேறும் போது அச்சமூகத்தின் தலைமை கள் அவர்களுக்காக பரிந்து பேசும்போது அவர்களின் மீது பாயத் தயாராவது ஏன்?

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் முஸ்லிம்களுக்கு ஆட்சேபனையோ எதிர்ப்புணர்வுகளோ இல்லை. மாறாக அதில் அக்கறை கொண்டிருக்கின்றனர் முஸ்லிம்கள். ஆனால் முஸ்லிம்கள் தங்களின் உரிமைகளைக் கேட்கின்றபொழுது அதற்கு எதிராக எந்தச் சக்திகள் திரண்டாலும் அதனை எதிர் கொள்ளத் தயங்காதவர்கள் முஸ்லிம்கள். இந்த உணர்வு மார்க்க ரீதியாக அவர்களுக்கு ஊட்டப் பட்டிருக்கிறது.

இன்றைய சூழலில் இலங்கை முஸ்லிம்களை ஒரு சமூகப் போராட்டத்தை நோக்கித் தள்ளி விட வேண்டாம் என்பதே மன் னார் ஆயருக்கு நாம் வைக்கும் வேண்டுகோள்.

வடக்கில் முஸ்லிம்கள் மீள் குடியேற அரசாங்கத்தையோ மற்றவரையோ கேட்க வேண்டிய தேவையில்லை. வடக்கு முஸ்லிம்கள் ஒன்றும் அயல்நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் இல்லை. அவர்கள் வடக்கின் பூர்வீகக் குடிகள். அந்த தமிழ் மண்ணின் மைந்தர்கள். அதனால் சொந்த நிலத்தில் குடியேறுவது அவர்களின் உரிமை. அதற்கு எவரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் அநாகரிகத்தின், ஆணவத்தின் அடையாளங்கள்தான்!

- ஃபைஸ்

Pin It