வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர்ப் பகுதியில் கள்ளச் சாராய சாம்ராஜ்ஜியமே நடந்து வருகிறது. இந்த சாம் ராஜ்ஜியத்திற்கு மகாராணியாக இருப்பவர் மகி என்கிற மகேஸ்வரி.

வாணியம்பாடியையும் தாண்டி சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மகேஸ்வரியின் சாராயத்துக்கு ஏக மவுசு. இதனால் மகேஸ்வரி பிரபலமடையத் தொடங்கினார். அப்புறமென்ன? அரசியல்வாதிகளின் வரவும், லோக்கல் தாதாக்களின் தொடர்பும் மகிக்கு தெம்பூட்டின. இதன் விளைவு ஏரியாவில் தாதாயிசம் பண்ணவும் தொடங்கினார்.

மகேஸ்வரியின் கள்ளச் சாராயத் தொழில் பற்றியும் வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. "காவல்துறை மகேஸ்வரி தரும் வைட்டமின் "ப'வுக்கு அடங்கிப் போகிறது. அதனால் போலீஸ் கண்டு கொள்வதில்லை. கள்ளச் சாராயம் பெருமளவு இங்கு விற்கப்படுகிறதென்றால் போலீசுக்குத் தெரியாமல் இது சாத்தியமா?'' என்கின்றனர் ஏரியாவாசிகள்.

இப்பகுதி மக்களின் கோபம் முழுவதும் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தின் மீதே இருக்கிறது. இந்நிலையில், சமூகப் பணிகளில் சளைக்காது சுழன்று வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் வாணியம்பாடி கிளையினர் மாவட்டத் தலைமையின் ஆலோசனைப்படி காவல்துறையின் கவனத்திற்கு கள்ளச் சாராய விஷயத்தை கொண்டு சென்றனர்.

இந்தத் தகவல் மகேஸ்வரிக்குத் தெரிந்ததும் ரவுடிகளை ஏவி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் அத் தீக்கை மிரட்டத் தொடங்கினார். கொலை வெறியோடு அத்திக்கைத் தேடி அலைந்தார் மகி.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று முடிவெடுத்த வேலூர் மாவட்டம் மற்றும் வாணியம்பாடி ஐஎன்டிஜேவினர் கடந்த மே 4ம் தேதி காவல்துறையினரும் பொது மக்களும் பங்கு கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளும், பொது மக்கள் தரப்பு பிரதிநிதிகளாக திமுகவைச் சேர்ந்த ராஜா, அதிமுக தரப்பு ஜான்பாஷா, பாமக கோவிந்த ராஜ், நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர் வேலு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரிய முருகன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அத்தீக், ஊர் நாட்டாண்மை பழனி மற்றும் மகளிர் குழுவினரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல்லாஹ், "நேதாஜி நகர் பகுதியில் பெருமளவு கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக பல புகார்கள் வரு கின்றன. இதனை முற்றாக ஒழிக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. கள்ளச் சாராயத்திற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பகுதியில் கள்ளச்சாரயத்தை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்...'' என்றார்.

அவரையடுத்துப் பேசிய வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சக்தி வேல், ""தாலுகா காவல் நிலையப் பகுதியில் கள்ளச் சாராயத்தை முழுமையாக ஒழிக்க பாடுபட்டு வருகிறோம். இங்கே பொது மக்களில் பலர் போலீஸ் ஒத்துழைப்புடன்தான் கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக புகார் கூறுகின்றனர். அப்படி கள்ளச் சாராய பேர்வழிகளிடம் பணம் (மாமூல்) வாங்க போலீசார் வந்தால் அவர்களைப் பிடித்து கட்டிப் போட்டு விட்டு உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தாருங்கள்...'' என அதிரடியாய்ப் பேசினார்.

இப்படி அதிரடிப் பேச்சோடு அந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது.

நாம் தொடர்ந்து ஒரு வாரம் கவனித்தோம். காவல்துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. தாலுகா காவல் நிலையப் பகுதிகளில் இன்றும் கள்ளச் சாராயம் ஜரூராக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பொது மக்களோ, "இதுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க மாட்டாங்க. அவங்களோட வருமானத்தை எப்படி அவங்க இழப்பாங்க...'' என போலீசாரைச் சுட்டிக் காட்டி பேசுகிறார்கள். ஆனால் அப்பகுதியின் துடிப்பான இளைஞர்கள் சிலரோ கள்ளச் சாராய வியாபாரிகளிடம் பணம் வாங்க வரும் போலீசாரை பிடித்து கட்டிப்போட திட்டம் தீட்டி வரு கின்றனர்.

- வாணியம்பாடி நூருத்தீன்

Pin It