ஆளும் கூட்டணியில் இருந்தாலும், எதிர்க் கட்சி கூட்டணியில் இருந்தாலும் கோரிக்கை வைத்தும், போராட்டங்களை நடத்தியும் ஆளுங்கட்சியில் இருப்பவர்களை சங்கப்படுத்துவதில் டாக்டர் ராமதாஸ் சமர்த்தர். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றியும், அதிக ஓட்டுக்களை வாங்கியும் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் ராமதாஸ்.

ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிர் கட்சிகளிடம் கூட்டணி பேசுவதும், அரசியல் சாணக்கியத் தனத்தில் ஒன்று என்று பேசி புதிய அரசியல் அகராதியை உருவாக்கியவர். ஆனால், சமீபகாலமாக ராமதாஸின் அரசியல் சாமர்த்தியங்களை எளிதாக முறியடித்து அரசியலில் தான் சீனியர் என்பதை கருணாநிதி நிரூபித்து வருகிறார். ஜெயலலிதா கூட்டணியில் இருந்து விலகி வந்தவுடன், ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைக்கும் என்ற மிதப்பில் இருந்தவரை 2016 வரை காத்திருப்பு பட்டியலில் வைத்து விட்டார் கலைஞர்.

மறுபடியும் ஜெயலலிதா கூட்டணிக்கும் போக முடியாமல், கருணாநிதி கூட்டணியில் உடனடி பலனும் கிடைக்காமல், மனதில் உள்ளவற்றை வெளியே சொல்ல முடியாமல் வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டார் ராமதாஸ்.

மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் ராமதாஸ் வலியுறுத்தி வந்தார். கல்வியும், சுகாதாரமும் மக்களின் அத்தியாவசியத் தேவைகள். இவைகளை தனியாரிடம் விட்டு விட்டு மதுக்கடைகளை அரசே நடத்தி வருகிறது. அரசாங்கம் சாராயக் கடைகளை நடத்த ஆரம்பித்ததால் ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரிகள் அதன் வியாபார நுணுக்கங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.

பட்டதாரிகள் மதுவை கிளாசில் ஊற்றிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். வருமானத்தை பெருக்குவதற்காக ஊழியர்கள் கசக்கிப் பிழியப்பட்டனர். தொழிலாளர் நல சட்டங்கள் அரசாங்கத்தினாலேயே உதாசீனம் செய்யப்பட்டன. வார விடு முறை மறுக்கப்பட்டது. தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் விடுமுறைகள் அரசாங்கம் நடத்தும் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

தமிழக அரசு விடுமுறை நாட்களில் வார விடுப்பு, தற்செயல் விடுப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு டாஸ்மாக் ஊழியர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

ராமதாஸ் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தை கையில் எடுத்தார். திருமாவளவனும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். இதைப் பார்த்துக் கொண்டு கருணாநிதி சும்மா இருப்பாரா? தன்னுடைய பத்திரிகையில் தானே கேள்வியை எழுதி பதிலும் கொடுத்து விட்டார். டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை மாத்திரமல்ல, மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் கோரி வருகிறார். அந்த கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அது பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கலைஞர் பதிலெழுதினா

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்று சொல்வார்கள் - ஆனால் ஒரே பதிலில் கலைஞர் பல மாங்காய்களை அடித்திருக்கிறார். டாஸ்மாக் கடைகளை மூடி விடுவேன் என்று மிரட்டுவதன் மூலம் ஊழியர்களின் போராட்டத்தை தடுக்க முயற்சித்துள்ளார். அது மட்டுமல்லாது மூடுவதற்கு காரணமே ராமதாஸின் கோரிக்கைதான் என்று எடுத்துக்காட்டி ராமதாசுக்கும், ஊழியர்களுக்கும் பிளவை உண்டு பண்ணி விட்டார். அது மட்டுமல்லாது, தேர்தல் செலவுக்கு பணம் வேண்டுமல்லவா? இப்படி அறிக்கை விட்டால் உடனடியாக மதுபான உற்பத்தியாளர்கள் வந்து வரிசை கட்டி நின்று விட மாட்டார்களா? என்று ஒரு சிலர் நமுட்டுச் சிரிப்புடன் கிசுகிசுப்பது காதில் விழத்தான் செய்கிறது.

இது தெரியாமல் பத்திரிகைகள் முதல்வர் மது விலக்கை அமுல்படுத்தப் போகிறார் என்று வரிந்து கட்டி செய்திகள் வெளியிட்டு விட்டன. எது எப்படி இருந்தாலும் நாட்டில் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கட்டாயக் கடமையாகும். மதுவுக்கு அடிமையாகிறவர்களின் சதவீதம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இளைஞர் கூட்டம் மதுப் பழக்கத்துக்கு ஆட்பட்டு வருவது நாட்டில் உள்ள நல்லெண்ணம் கொண்டோரை வேதனைப்படுத்தி வருகிறது. தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டம் நடத்துவது செய்தித் தாள்களில் அவ்வப்போது வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் மதுவிலக்கை அமுல்படுத்த பரிசீலித்து வருகிறது என்று அறிவித்துள்ள அறிக்கை வரவேற்கக் கூடியதுதான்.

சொன்னால் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னதோடு நில்லாமல், கலைஞர் சொல்லாததையும் சேர்த்து நிறைவேற்றி வருகிறார் என்று திமுக தொண்டர்கள் சொல்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பு எல்லாம் கலைஞர் மதுவிலக்கை கட்டாயம் அமுல்படுத்த வேண்டும் என்பதுதான்.

- இப்னு மக்பூல்

Pin It