sinthanaiyalan logo 100

தொடர்பு முகவரி: 19, முருகப்பா தெரு, சேப்பாக்கம், சென்னை - 05.
தொலைபேசி: 044-28522862, 94448 04980
ஆண்டுக் கட்டணம்: ரூ.120, வாழ்நாள் கட்டணம்: ரூ.1000

இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் காலிகள் கலாட்டா

“திருச்சியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் சுமார் 10,000 பேர்கள் கொடிகளுடன், வாத்தியங் களுடனும், ஊர்கோலம் போகும் போது காங்கிரசாரும், அவர்களுடைய அடியாட்களும் ஆத்திரத்தை மூட்டக்கூடிய வார்த்தைகள் கொண்ட நோட்டீசுகளைக் கூட்டத்தில் வீசியதல்லாமல், தலைவர்கள் கையில் கொண்டு போய்க் கொடுப்பதும், கோபமுண்டாகும் வண்ணம் ‘ஜே’ போடுவதுமான காரியங்களைச் செய்துகொண்டு வந்ததுமல்லாமல், கூட்டத்தில் கற்களையும் வீசினால் யார்தான் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள்? போலீசார் இந்தக் காலிகளை விரட்டிவிட்டார்களே ஒழிய, அவர்களைக் கைது செய்யவோ, பிடித்து வைக்கவோ சிறிதும் முயற்சி செய்யவில்லை.

ஊர்கோலம் மாநாட்டு மண்டபத்துக்கு வந்தபிறகும், மாநாட்டுக் கொட்டகை மீதும் கற்கள் எறியப்பட்டன. பொது ஜனங்களுக்கு எவ்வளவு பொறுமை இருந்திருந்தால் இந்தக் காலிகள் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” (‘குடிஅரசு’ தலையங்கம், 2.1.1938).

தினமணி’யின் குறும்புத்தனம்

“சென்ற மாதம் சேலத்தில் தோழர்கள் ஈ.வெ.ரா., அ. பொன்னம்பலனார் பேசும்போதும் காங்கிர° காலிகள், கூட்டத்தில் கல் போட்டு கலவரம் செய்தனர். அவர்களைத் தூண்டிவிடும் நோக்கில் ‘தினமணி’ தலையங்கங்களைத் தீட்டி வந்துள்ளது. ‘தினமணி’ யின் ஒரு தலையங்கத்தில் “இந்தி எதிர்ப்புத் தீர் மானம் நிறைவேறாமல் பொது ஜனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று பச்சையாகத் தூண்டி விட்டிருக்கிறது. மற்றொரு சமயம் “பொது ஜனங் களுக்குக் கோபம் வந்தால் என்ன ஆகும் தெரியுமா?” என்று எழுதி இருக்கிறது. மற்றும் சில சமயம் “பொது ஜனங்களும் சும்மா இருப்பார்களா?” என்றெல்லாம் எழுதி, பொது மக்களை இந்தி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக உசுப்பிவிடுவதை “குடிஅரசு” ஏடு 2.1.1938 தலையங்கத்தில் கண்டித்துள்ளது.

வ.ஆ.மா. 2வது சுயமரியாதை மாநாடு ஆம்பூரில் நீதிக்கட்சியின் துணைத் தலைவர் கான்பகதூர் கலி புல்லா தலைமையில் 28.11.1937இல் நடைபெற்றது. கான்பகதூர் கலிபுல்லா தமது தலைமையுரையில் இராசாசி ஆட்சிக்கு வந்ததும் கடவுள் வாழ்த்து என்ற பெயரில் வந்தே மாதரம் பாடலைப் பாட வைத்ததைக் கண்டித்தார்.

மேலும் அவர் பேசுகையில் “வந்தே மாதர கீதப் பிரச்சனை ஒரு புறம் இருக்க, இந்தியைக் கட் டாயப் பாடமாக்கப் போகிறோம்” என்று வீண் சபதம் போட்டுக் கொண்டு அலைகின்றார்கள். அதற்கு அவசியம் என்னவென்று கேட்டால் “இந்தியைப் படித்துக் கொண்ட மாத்திரத்தில் வடஇந்தியாவுக்குச் சென்று சம்பாதிக்கலாம். துளசிதா° ராமாயணம் படிக்கலாம்” என்கிறார், கனம் ராஜகோபாலாச்சாரியர். “10,000க்கு ஒருவர் கூட வடஇந்தியா போகிறவர்கள் இல்லையே, அப்படியிருக்க ஒருவருக்காக வேண்டி 10,000 பேர் கல்வி கற்பதைக் கொலை செய்ய லாமா?” என்று கேட்டால், “இந்தியா முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். அதற்காகத்தான் நான் இந்தி மொழியை வலுக்கட்டாயப்படுத்துகிறேன்” என்கிறார்.

உண்மையை விளக்க வேண்டுமானால் கனம் ராஜகோபாலாச்சாரியாரை நம்பி, பிழைப்பில்லாத ஏழை பிராமணர்கள் இந்தியைப் படித்துவிட்டுத் தெருத் தெருவாய் அலைந்து கொண்டிருப்பதாயும், அப்படி ஆயிரக்கணக்கான பிராமணர்கள் திண்டாடிக் கொண்டி ருப்பதைப் பார்த்துக் கொண்டு, சென்னை மாகாணப் பிரதம மந்திரி °தானத்தை வகிக்கும், கனம் ராஜ கோபாலாச்சாரியார் வாளாயிருக்க முடியாமல் அவர் களுக்கு எப்படியாவது பிழைப்புக்கு வழிகாட்ட வேண்டி யது அவரது கடமையாகையால், அவர் இந்தியைக் கட்டாயமாக்குவது என்று கங்கணங்கட்டிக் கொண்டு அலைகிறார் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்” என்று பேசினார்.

இந்தக் கருத்திலும் உண்மை இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. இராசாசி இந்தியைக் கட்டாய மாக்கி, 21.4.1938இல் ஆணையிட்டவுடன், 125 உயர்நிலைப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுமுதல், முதல் மூன்று வாரங்களில் இந்தி கட்டாயப்பாடம் என்று ஆணைப் பிறப்பித்தார். அரசாணை எண். M.R.C. Miscellaneous, Public Education, G.O.No.911, Date 21 April, 1938 இந்தத் திட்டம் நிறைவேற, இராசாசி அரசு கூடுத லாக ரூ.20,000 நிதி ஒதுக்கி, அப்பணத்தை இந்தி ஆசிரியர்களுக்குச் சம்பளமாகக் கொடுக்க வேண்டும் என ஆணையிட்டது (Mail 30 April, 1938).

இராசாசி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவேன் என்று அறிவித்த நாள் முதல், தந்தை பெரியாரின் “குடிஅரசு” ஏடும் “விடுதலை”யும் தமிழர்களுக்குத் தன்மான உணர் வூட்ட வாளும் கேடயமும் போல் பயன்பட்டு வந்துள்ள தை வரலாறு நமக்குக் காட்டுகிறது.

குடிஅரசு 1937, திசம்பர் 19 இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை. தமிழகம் கடந்தும் அயல்நாடு களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மலேயா, சிங்கப்பூரிலும் பல கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. 9.1.1938இல் சிங்கையில் சுயமரியா தை இயக்கத் தலைவர் கோ. சாரங்கபாணி அவர்கள் தலைமையில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. “இந்தி தமிழ்நாட்டில் அழிந்தேதீரும்” என்ற தலைப் பில் அவர் நெடிய சொற்பொழிவாற்றினார். (‘குடிஅரசு’, 28 சனவரி 1938).

திருச்சியில் கூடிய தமிழர் மாநாட்டின் தீர்மானத் தின்படி, ஒரு குழுவை அமைத்து கவர்னரிடம் சென்று முறையிடுவது என்று முயற்சி செய்தனர். அந்தக் குழுவினரைப் பார்க்கவும், அவர்களின் கோரிக்கை யை ஏற்கவும் கவர்னர் மறுத்துவிட்டார். இந்த நிகழ் வைக் கண்டித்துத் தந்தை பெரியாரின் “குடிஅரசு” இதழ் சீறிப் பாய்ந்தது.

“தமிழர்கள் இனி என்ன செய்யப் போகிறார் கள்?” என்று துணைத் தலையங்கத்தைத் தீட்டியது குடிஅரசு இதழ்.

“சரணாகதி மந்திரிசபை, தமிழ்நாட்டிலே, இந்தியைக் கட்டாயப் பாடமாக்கத் துணிந்து திட்டம் போட்டனர். சூழ்ச்சி, சுயநலம், விஷமம் வர்ணாச்சிரமமாகிய, விஷங்கலந்த இத்திட்டத்தை, தமிழர் உண்டு மாள்வ ரோ என நாம் பயந்தோம். அக்கிரகார மந்திரி சபை யின் அக்கிரமப் போக்கால், தமிழர் சமூகம் நசிக்கா திருக்க வேண்டுமே எனக் கவலை கொண்டோம். இத்திட்டம் அர்த்தமற்ற, அவசியமற்ற, மோசமான மனு ஆட்சித் திட்டம் என்றோம். நம்மை போன்றே தமிழ் உலகும் கருதிற்று.

தமிழர்கள் சீறி எழுந்தனர். எங்கும் ஒரு கொதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு கொந் தளித்தது. பலமான கிளர்ச்சி ஆரம்பித்தது. ஆயிரக் கணக்கான மக்கள் அடங்கிய கூட்டங்கள் கூடி, பிரதிதினம் இந்தி கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. “தமிழ்மொழி அழிக்கப்படுவதைக் கண்டும் நாங்கள் உயிரோடு இரோம்” என்ற முழக்கங்கள் மூலை முடுக்குகளிலும் எழும்பின.

தமிழர் கழகங்களென்ன, பாதுகாப்புச் சங்கங்களென்ன, இந்தி எதிர்ப்புச் சபைகள் எத்துணை, இவ்வளவும் தமிழ்நாட்டிலே தோன்றின. பண்டிதர்கள் பதறினார்கள். மாஜி கவர்னர்களும், மாஜி மந்திரிகளும், காங்கிரஸ் மீது காதல் கொண் டோரும், பிரபலஸ்தர்களும் வாலிபர்களும் பொது மக்களிடையே நிரந்தரமான தொடர்பைக் கொண்டுள்ள சு.ம. இயக்கத்தலைவரும், தோழர்களும் இத்திட்டத் தைக் கண்டித்துப் பலத்த பிரச்சாரத்தை இடைவிடாது தென்னாடு முழுவதும் நடத்தினார்கள். இக்கிளர்ச்சி யின் பயனாகவே பல பிரத்தியேக மாநாடுகள் நடை பெற்றன.

கிளர்ச்சி, கண்டனம் ஆகியவற்றைக் கண்ட மந்திரி கனம் சுப்பராயனே கோவையில் செய்தியாளர் களிடம், “இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மிக மும்முரமாக இருப்பதாக ஒப்புக்கொண்டார். அதிகார அகம்பாவத்தில் அமிழ்ந்து கிடக்கும் ஆச்சாரியார் இந்த பலத்த கிளர்ச்சிக்கு விடுத்த பதில் “தமிழர்கள் அறிவிலிகள் - குரங்குகள்” என்பதேயாகும்.

1937-1938 இராசாசி ஆட்சிக் காலத்தில் டாக்டர் சுப்பராயன் தான் கல்வி அமைச்சராக இருந்தார்.

“தமிழர்கள் தமது கிளர்ச்சியைக் கூடுமான வரை யில் நல்ல முறையிலே நடத்திக் காட்டினார்கள். தமிழர் கள் தமது அதிருப்தியையும் தெரிவித்துவிட்டனர். இவ்வளவுக்குப் பிறகும் தமிழர்களுக்குக் கவர்னர் தந்த பதில் “தூது “கோஷ்டியைப் பார்க்க முடியாது” என்பதுதான். தமிழர்களே! இதுதான் உங்கள் நிலைமை; தமிழர்களைப் பற்றி கவர்னர் கொண்டுள்ள எண் ணமும் தமிழர்களிடம் நடந்துகொள்ளும் போக்கும் இதுதான்; இனி தமிழர்களே என்ன செய்யப் போகி றீர்கள் என்று கேட்கிறோம்” (‘குடிஅரசு’ துணைத் தலையங்கம், 23.1.1938)

(குறிப்பு : சென்னை மாகாண கவர்னர் இந்தி மொழிக்கு ஆதரவுதான். அவரைச் சந்தித்துப் பயன் இல்லை என்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிலே பெரியார் கூறியிருந்தது உண்மையாகிவிட்டது.)

பெரியார் 16.01.1938இல் நீடாமங்கலத்தில் ஆற்றிய சொற்பொழிவில் “இப்போது உள்ள மந்திரிகள் காலேஜ் களை ஒழிக்க வேண்டும்; உயர்தரப் பாடசாலைகளை மூடவேண்டும்; 60 பிள்ளைகளுக்குக் குறைவாக உள்ள பள்ளிக்கூடங்களை எடுத்துவிட வேண்டும்; கட்டாய இலவசப் படிப்பு வேண்டியதில்லை; கல்வி மானியம் குறைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள்...

இந்த லட்சணத்தில் இந்தித் திட்டம் எதற்காக? சுத்தத் தமிழ் - நல்ல அழகிய தமிழ் - பிறவித் தமிழ் - தினமும் பேசும் பாஷை நமக்கு சௌகரியமாக இருக்கும் போது, அதிலும் படித்த மக்கள் 100க்கு 8 பேரே தான் இருக்கிற நிலையில், இந்தி வந்தால் என்னவாகும்? ல, ழ, ள எழுத்து களுக்கு வித்தியாசமே நம்ம ஆட்களுக்கு இன்னமும் சரியாகத் தெரியவில்லை. பள்ளிக்குப் படிக்கவரும் நம் பிள்ளைகளைப் பார்த்து “உனக்குப் படிப்பு வராது வீட்டுக்குப்போய் வண்டியோட்டுகிறவன் மகனாயிருந் தால் வண்டியோட்டு; உழுகிறவன் மகனாயிருந்தால் உழு” என்றெல்லாம் சொல்லி விரட்டிவிட்டு, இப்போது மாத்திரம் இந்த இந்திக் கல்வியைக் கொண்டுவந்து அதையும் சேர்த்துக் கட்டாயமாகப் படிக்கும்படி சொன்னால் எப்படி நம் பிள்ளைகளால் படிக்க முடியும்?

‘ஏழையைக் கெடுக்க ஒரு யானையைக் கொடு’ என்று சொல்லுவார்கள். அதுபோல் படிப்பில் மிக ஏழையாய் இருக்கும் நம் மக்களுக்கு யானை போன்ற இந்தி உயர்வாயிருந்தாலும், அது இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வருமா? அவர்கள் வாயில் நுழையுமா? ஒரு எழுத்துக்கு 4 சப்தமிருக்கிற உச்சரிப்பு கடினம்; எழுத்துகள் அதிகம். 12 வயதிலிருந்து 14 வயதுக்குள் நம் பிள்ளைகள் இரண்டு அந்நிய பாஷைகளைப் படிக்க முடியுமா? அதில் போதுமான மதிப்பெண் வாங்க முடியுமா? இந்த இந்தி படித்து நன்றாய்த் தேர்ச்சி பெறுகிற அந்தக் காலத்திற்குள்ளே ஒருவன் பி.ஏ. பட்டதாரியாக வந்துவிடலாம்” (குடிஅரசு, 6.2.1938) என்று பேசினார். தந்தை பெரியாரின் தமிழர் நல நோக்கத்தை நாம் அறிந்துகொள்ள முடியும்.

- தொடரும்

Pin It

2013, நவம்பர் 8, வெள்ளிக்கிழமை அன்று ஒரு நிறுவன முதலாளியும், நானும்-தெரிந்த ஒரு வருமானவரி அலுவலரை வழியில் சந்தித்தோம். அப்பொழுது வருமானவரி அதிகாரி அவர்கள் கூறிய ஒரு சில உடல்நலப் பயிற்சிகள்.

“ஒரு மனிதரைப் பார்த்து இந்தப் பயிற்சியைச் செய் என்றால் ஒருமுறை அல்லது இருமுறை செய்துவிட்டு விட்டு விடுவார்கள். ஆனால் இந்தக் கோயிலுக்கு ஒரு மண்டலம் விரதம் இருந்து காலையில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு 108 முறை கோயிலைச் சுற்றிவிட்டு ஒன்பதுமுறை காதைக் கையால் பிடித்துக் கொண்டு ஒன்பது தோப்புக் கரணம் செய்துவிட்டு வா என்றால் செய்வார்கள்.

இப்படி விரதம் இருப்பதால் உணவுப் பாதை சீர்படு கிறது. காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் நுரையீரல் மற்றும் தோல்கள் நல்ல முறையில் பாதுகாக்கப்படுகின்றன. கோயிலைச் சுற்றியதில் நல்ல நடைப்பயிற்சி பெற்று சுறு சுறுப்பு அடைகின்றனர். காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடுவதால் கண் பார்வை நரம்புகள் நலம் பெற்று நீண்ட நாள் நல்ல பார்வை கிடைக்கின்றது. மூட்டுகளும் சீர்படுகின்றன. மேற்கண்ட நலன்கள் அனைத்தும் மனிதர்கள் மனம் வைத்தால் கோயிலுக்குப் போகாமலே, பூங்கா வுக்கு அல்லது மற்ற நல்ல இடங்களில் செய்யலாம். மனக் கட்டுப்பாடு இல்லாதவனுக்கு ஏற்படுத்தப்பட்டதுதான் கோயில்.

மனக்காட்டுப்பாடு உள்ளவனுக்கு எந்தக் கோயிலும் தேவை யில்லை. மேற்கண்ட பயிற்சிகளை அறிவியல் முறைப்படி நாமே செய்து நலம்பெற முடியும். இந்த மாதிரி நலன்களைக் கடவுள் கொடுத்தார் என்பது முட்டாள்தனம்” என்று கூறினார்.பதிலுக்கு என்னுடன் வந்த நிறுவன முதலாளி கூறியது. “அய்யா இப்பொழுது எல்லாம் அரசியல் கொள்ளையர்கள் திட்டமிட்டுத் திட்டங்களைத் தீட்டிக் கொள்ளையடிக்கின்றனர். மக்கள் நலம் பேணப்படுவது இல்லை. இனாம் கொடுத்தால் கூடும் கும்பலைப் பராமரித்தாலே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று உள்ளனர்.

நல்ல கல்வி, நல்ல மருத்துவம், நல்ல குடிநீர், சுங்கவரிகள் இல்லாச் சாலைகள், வேலை வாய்ப்புகள் இவற்றை அரசே இலவசமாகச் செய்ய வேண்டும். செய்ய வில்லையே அய்யா. மேலும் நம்ம சனங்களும் நாம்தான் அரசியல்வாதி களால் பாதிக்கப்படுகின்றோம். நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும்; நம் கிராமப்புற ஏரிகள், குளங்கள், குட்டைகள், நீர்வாய்க்கால்கள் அனைத்தையும் தூர் எடுத்துப் பாதுகாக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவற்றை எல்லாம் செய்யாத அரசியல் வாதிகளை ஒழித்தாலே நாடு நலம் பெறும். வீடு கட்டாத விவசாய நிலத்து மனைகளைக் காலக்கெடு வைத்து மீண்டும் விவசாய நிலமாக்கினால் நமக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கும்” என்று கூறினார்.

Pin It

மக்களுக்கு எதிரான திட்டங்களை 1975இல் மடமட வென அமல்படுத்திய இந்திராகாந்தி - வெகுமக்களின் தலைவர்களாக விளங்கிய ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜெ.பி.கிருபாளனி, மற்றும் லோகியா சோசலிஸ்டுத் தலைவர் களால் 1977 தேர்தலில் அடியோடு தோற்கடிக்கப்பட்டார்.

1977 தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவிக்கு வந்த மொரார்ஜி தேசாய் - சரண்சிங் கூட்டணி ஆட்சி, 1979இல் உடைந்தது; 1980இல் கலைந்தது.

1980 தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாபிலும் அக்கிரமமான முறையைப் பின்பற்றித் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமராக வந்த இந்திராகாந்தி ஆட்சி பஞ்சாபில் அகாலிதளத்தை ஒழிப்பதற்காகச் செய்த ஏற்பாடு தனக்கு எதிராகப் போனவுடன், காலிஸ்தான் போராட்டத்தை ஒழிப்பது என்கிற பேரால் அமிர்தசரசில் பொற்கோயி லுக்குள் படைகளை ஏவி ஆயிரக்கணக்கான சீக்கியர்களைச் சுட்டுக்கொன்றது. பழி தீர்ப்பதில் வீரம் மிக்கவர்கள் சீக்கியர்கள். இலண்டனில் வெள்ளையனான டயரைச் சுட்டுக்கொன்ற உத்தம்சிங்கின் வழி வந்த சீக்கியர்களான இந்திராகாந்தியின் மெய்க்காப் பாளர்கள் இருவரே பட்டப் பகலில் இந்திராகாந்தியைச் சுட்டுக் கொன்றனர்.

இந்திராகாந்தியின் மறைவையடுத்து, பிரதமராக வர நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்த வங்கப் பார்ப்பனர் பிராணப் முகர்ஜி, இந்திராகாந்தியின் மகனான இராஜிவ் காந்திக்கு இடம் கொடுத்துப் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. “தூய்மையான திருவாளர்” (Mr.Clean) என்கிற பெயரோடு 31.10.1984இல் இராஜிவ் காந்தி பிரதமராக ஆனார். அவருடைய ஒப்புதலோடு காங்கிரசுக்காலிகள் 3 ஆயிரம் சீக்கியர்களைப் பகலிலும் இரவிலும் சுட்டுக்கொன்றனர். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு இன்று வரை கூட ஈடுசெய்யப்படவில்லை.

ஜெயவர்த்தனாவின் பேரன் வயதுள்ள இராஜிவ் காந்தி, அவர் விரித்த வலையில் எளிதாகவே கண்ணை மூடிக்கொண்டு விழுந்து, 20 ஆயிரம் பேர் கொண்ட இந்தியப் படையையும், ஆயுதங்களையும் விமானங்களையும் 1987இல் இலங்கைக்கு அனுப்பி, தமிழீழ விடுதலைப்புலிகளைத் தேடித் தேடிக் கொல்லச் செய்தார்; தமிழ்ப் பெண்களை நாசப்படுத்தச் செய்தார். இலங்கைக்கு விருந்தினராகச் சென்ற இந்தியப் பிரதமர் இராஜிவ்காந்தி ஒரு சிங்களப் படைவீரனின் துப்பாக்கிக் கட்டையால் அடிக்கப்பட்டதையும் மறந்து, தமிழீழத் தமிழர்களுக்கு இரண்டாண்டு காலம் இன்னலை விளைவித்தார். இந்திய அமைதிப்படை வீரர்களால் பாதிப்புக்குள்ளான வீராங்கனை தாணு தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சிக்காரர்களுடன் கூடவே வந்து தங்கி, இராஜிவ்காந்தி மீது குண்டு போட்டு இலாவகமாகவே அழித்தார். தேர்தல் பரப்புரை மேடையில் ஏறாமலேயே இராஜிவ்காந்தி நொறுங்கிப் போனார்.

தூய்மையானவர் என்று சொல்லப்பட்ட இராஜிவ்காந்தி போபர்ஸ் பீரங்கிக் கொள் முதலில் தன் அன்பு மனைவியின் உறவினரான இத்தாலியக் குட்ரோசியின் தரகுக் கூலியில் தானும் பங்கு பெற்றார். தூய்மையானவர் என்பது போய் ஊழல் பேர்வழி இராஜிவ்காந்தி என்பது அப்போதே நிலைத்துவிட்டது. அது இன்றளவும் மூடி மறைக்கப் படுகிறது.

போபாலில் நச்சுவாயு வெளியாகி 5 ஆயிரம் பேர் மாண்டனர்; 20 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாயினர். அந்தக் குழுமத்தின் தலைவன் ஆண்டர்சனை அர்ஜூன் சிங்குடன் சேர்ந்து இராஜிவ் காந்தி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். போபால் விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இன்றளவும் எந்த நிவாரணமும் கிடைக்க வில்லை. ஆனால் இராஜிவ் காந்தியின் அன்பு மனைவியான சோனியா காந்தி, அவருடைய மனைவி என்கிற ஒரே தகுதியின் காரணமாக இந்தியாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரசுக்குத் தன்னேரில்லாத தலைவியாக விளங்குகிறார்.

இராஜிவ் மறைவை அடுத்து 1991 தேர்தலில் பிரத மராக வந்த நரசிம்மராவ் ஊறுகாய்த் தரகு ஊழல், அர்செத்மேத்தா பங்குச் சந்தை ஊழல்களுக்குப் பெயர் போனவராக விளங்கினார். அத்துடன் உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்கிற வெகுமக்களுக்கு எதிரான முதலாளித்துவப் பொருளாதாரத்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கு ஏற்ற ஆள் என்று அடை யாளம் கண்டுதான் காலம் முழுதும் அயல்நாடுகளிலேயே சம்பள ஆளாக இருந்த மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக அமர்த்திக் கொண்டார். இளமைக் காலந் தொட்டே வணிகக் குழுமங்களுக்கு வழக்குரைஞராக இருந்த ப. சிதம்பரத்தைத் துணை நிதி அமைச்சராக அமர்த்திக் கொண்டார்.

இந்தக் கொள்கைகளுக்கு முதலாவதாகப் பலி யானவை : மக்களுக்குக் கல்வி கொடுப்பதிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்; மக்களுக்கு இலவச மருத்துவம் கொடுப்பதிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். மக்களுக்குக் குடிநீர் கொடுக்கும் பொறுப்பிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடுகூட, வணிகத்திலும் தொழிலி லும் வங்கிகள் அமைப்பிலும் உள்நாட்டு முதலாளி களையும் அந்நிய நாட்டு முதலாளிகளையும் உலகப் பெருங் குழும அந்நிய முதலாளிகளையும் கும்பிட்டு வரவேற்று ஒப்படைக்க வேண்டும் என்கிற ஏகாதி பத்தியப் பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப் படுத்தப்பட்டன. இவற்றால் இன்று இந்தியா சீரழிகிறது. இந்தியாவின் இயற்கை வளம் பாழடிக்கப்படுகிறது. மனிதனால் உற்பத்தி செய்யப்படாத தண்ணீர் விற் பனைப் பண்டமாக மாற்றப்படுகிறது. எந்தப் பெரிய அறிவியல் வளர்ச்சியாலும் உண்டாக்கப்படாத காற்று மாசுபடுத்தப்படுகிறது. இப்படி இந்தியா அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இப்படி நாம் கூறுவது புரியாத்தனத்தினாலோ காழ்ப்புணர்ச்சியினாலோ கூறப்படுவது அல்ல.

முதலாளித்துவப் பொருளாதாரம் கொடிகட்டிப் பறக்கிற பல வளர்ந்த நாடுகளிலும் - வளரும் நாடுகளிலும் 12ஆம் வகுப்பு வரையிலான கல்வி எல்லோருக்கும் இலவசமாகத் தரப்படுகிறது; அவரவர் தாய்மொழியில் கல்வி தரப்படுகிறது. அந்தந்த நாட்டில் உள்ள அகதி களுக்கும் இலவசமாகத் தரப்படுகிறது. அதேபோல் ஏழை, பணக்காரர், அந்நிய நாட்டிலிருந்து குடியேறியவர் என்கிற எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாக் குடிமக் களுக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்படுகிறது. இப்படிப் பட்ட மக்கள் நலத் திட்டங்கள் மூன்றாவது அய்ந் தாவது திட்டத்திற்குப் பிறகு படிப்படியாக இந்தியாவில் குறைக்கப்பட்டே வந்தன.

காட்டாக, 12ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் மக்களின் உடல்நலக் காப்புக்கென மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இந்தியா 1.2 விழுக்காடு மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளது. இதற்காக அமர்த்தப்பட்ட டாக்டர் ஸ்ரீ நாத் ரெட்டி தலைமையில் அமைந்த குழு 2.5 விழுக்காடு ஒதுக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தது. 12ஆவது திட்டக் குழுவின் 2012 சூலை முடிவுப்படி, 1.58 விழுக்காடு பொதுச் சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று திட்டம் தந்தது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத் தில், கூட்டணியின் பொதுக் குறைந்தபட்ச வேலைத் திட்டப்படி 2.3 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும்-இதில் 60 விழுக்காட்டுப் பங்கை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்றும் திட்டமிட்டது. ஆனால் உலக சுகாதார நிறு வனமோ ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 5 விழுக்காடு பொதுச் சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. இன்றைய திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருக்கிற மான்டெக் அலுவாலியா மக்கள் நலம் கருதிய திட்டங்கள் எல்லாவற்றையும் அடியோடு கைவிட வேண்டும் என்று அடித்துச் சொல்லிக் கொண்டு அவருடைய அயல்நாட்டுப் பயணத்துக்கும் அவருடைய கழிவறையைச் சீர்படுத்துவதற்கும் பல கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்.

பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு எப்போதும் அமைச்சர் ஆனவர் அல்ல. அவருடைய இருப்பிட முகவரி எங்கோ அசாமில் இருக்கிறது. அவர் எந்த மக்களமைப்பிலும் எப்போதும் செயல்பட்டவர் அல்ல. அவருடைய கேம்பிரிட்ஜ் கல்வி யும், தனிமனித நாணயமும் முதலாளித்துவப் பண்பாட் டில் தோய்ந்து அழுகிப் போனவை; முதலாளித்து வத்துக்குப் பண்ணை அடிக்க ஏற்றவை. அழுகிப் போன நெஞ்சம் உள்ள அவர் ஓர் ஊழல் அரசுக்கு - 2-ஜி ஊழல் - நிலக்கரி ஊழல் - போன்ற இயற்கை வளங் களைக் கொள்ளையடிக்கும் ஓர் அரசுக்குத் தலைமை தாங்கும் அவர் கெட்டிக்காரர் என்று எவரும் சொல்ல மாட்டார்; உலகம் சொல்லாது.

பொருளாதார மேதை என்று கூறப்படுகின்ற அவர் நேரடி வேளாண்மைத் தொழிலையும் வேளாண்மை சார்ந்த தொழிலையும் நம்பி 65 விழுக்காடு மக்கள் உள்ள இந்தியாவில் - சிறு கடைகள் - சிறு தொழிற் சாலைகள் - சிறு வணிகங்கள் - சிறு நிறுவனங்கள் நடத்துகின்றவர்கள் சுமார் 20 கோடிப் பேர் உள்ள இந்தியாவில், உலக உணவுப் பண்டங்களின், நுகர்வுப் பொருள்களின், மருந்துப் பொருள்களின் பகாசுரக் கொள்முதல் காரணமாகவும் கார்ப்பரேட் முறையில் வணிகனாகவும் விளங்குகிற வால்மார்ட் (றுயடட ஆயசவ) நிறுவனத்துக்கு இந்தியச் சில்லறைச் சந்தையைத் திறந்துவிடுவது மாபெரும் மக்கள் நலனுக்கு எதிரான செயலாகும். 18.9.2012க்குப் பிறகு உறுதிப்பட அறி விக்கப்பட்ட பின்வரும், வணிக - தொழில் - மின்துறை -தகவல் துறை ஆகியவற்றில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

அந்நிய முதலீடு : (1) சில்லறை வணிகத்தில் 51 விழுக்காடு; (2) உள்நாட்டுப் போக்குவரத்தில் 49 விழுக்காடு; (3) மின்துறையில் 49 விழுக்காடு; (4) தகவல் ஒலிபரப்புத் துறையில் 74 விழுக்காடு எனவும்; இன்னும் வங்கித் துறையிலும் மற்ற துறைகளிலும் இப்படி அந்நிய முதலீடு தாராளமாக அனுமதிக்கப்பட் டிருப்பது பெரும் கொடுமையாகும்.

அத்துடன் தென்னாட்டில் கோதாவரி ஆற்றில் தொடங்கி தாமிரபரணி ஆறு வரையில் ஆற்றுப் படுகைகளில் உள்ள நீர் வளத்தையும், கரைகளில் உள்ள நீர் வளத் தையும் உறிஞ்சி எடுக்க அந்நிய நாட்டு முதலாளிகளுக் கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் உரிமம் கொடுத்திருப் பதும்; கரும்பொன் எனப்படும் நிலக்கரியையும் உலோகங்களின் மூலாதாரமாக விளங்கும் இரும்புத் தாதுவையும், பல கோடி ஆண்டுகளுக்குமுன் நிலத்தடியில் உருவான பளிங்குக் கற்களையும் உள்நாட்டுப் பெரு முதலாளிகளும் அயல்நாட்டுப் பெருங்குழும முதலாளி களும் அடியோடு வெட்டி எடுக்க உரிமம் வழங்கி, அவர்களிடமும் விஜயபாஸ்கர மல்லையா போன்ற இந்திய சாராய முதலாளிகளிடமும், மோட்டர் உற்பத்தி நிறுவன முதலாளிகளிடமும், கட்சிக்கும் சொந்தத்துக்கும் பெரு நிதிகளை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டு, திரும்பத் திரும்பத் தேர்தலில் வெற்றி பெற்று இந்திரா காந்திக் குடும்ப ஆதிக்கத்தின் கீழ் உள்ள ஆட்சி இனியும் இந்தியாவில் தொடரக் கூடாது என்கிற மான உணர்ச் சியும் மனிதாபிமான உணர்ச்சியும் எல்லாப் பொது மக்களுக்கும் இளைஞர்களுக்கும், குறிப்பாக - தில்லியில் இப்படிப்பட்ட பெரிய திருடர்களின் ஆட்சி நீடிக்க அவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் மாநில ஆட்சிகளைப் பிடித்துக் கொண்டு கொள்ளையடிக்கும் சின்னத் திருடர் களுக்கும் கட்டாயம் வரவேண்டும்.

இன்று இந்தியாவில் நடப்பது மக்கள்நல ஆட்சி அல்ல; மக்கள் நலத்துக்கு எதிரான ஆட்சி. இதே தன்மையில் எவராண்டாலும் - எக்கட்சி ஆண்டாலும் அவர்களுக்கு முட்டுக் கொடுக்கிற எல்லாரும், எல்லாக் கட்சிகளும் மக்களின் எதிரிகளே!

Pin It

சுற்றம் சூழ வாழ்தலே செல்வம்

     பெற்றதன் பயனாம்!

உற்ற நட்பே வாழ்வினில் எவர்க்கும்

     உயிர்காக்கும் துணையாம்!

நல்லோர் நட்பு வளர்பிறை போல

     நாளும் வளர்ந்திடுமாம்!

பொல்லார் நட்பு தேய்பிறை போலத்

     தேய்ந்து மறைந்திடுமாம்!

உடுக்கை நெகிழ்ந்தவன் கைபோல் நட்பு

     இடுக்கண் களைந்திடுமாம்!

இடித்துத் திருத்தித் தோழமை காக்க

     நட்பே விரைந்திடுமாம்!

அழிவைத் தடுத்து நன்னெறி காட்டி

     ஆக்கம் தரல்நட்பு!

விழியால் பார்த்தும் உதட்டால் சிரித்தும்

     மறைவது அல்லநட்பு!

நற்குடிப் பிறந்தார் பழிச்செயல் விரும்பார்

     நட்புக் கொளல்வேண்டும்!

உப்பாய் உலகிற்கு அமைந்தார் உறவை

     உவந்து போற்றவேண்டும்! 

- இரணியன், ‘தமிழ் அகம், கோவை

Pin It

இந்திய அரசமைப்புச் சட்டம் புனிதமானது. அதை மாற்றக் கூடாது என்று கூறிக்கொண்டே நடுவண் அரசில் மாறி மாறி ஆட்சி செய்கின்ற காங்கிரசு, பா.ச.க. கட்சிகள் அரசமைப்புச் சட்ட விதிகள்படி இயங்குகிற அமைப்புகளையும் அதன் உயர் அலுவலர்களையும் மிரட்டி ஆட்சி புரிகின்றன. பிரதமர் சாஸ்திரி மறை விற்குப் பிறகு இவ்வித தேசியத் திருவிளையாடல் மெல்ல மெல்ல வளர்ந்து மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் உச்சத்திற்குச் சென்றுள்ளது. நாட்டின் வளங் களைச் சுரண்டிக் கொள்ளை அடித்த பணத்தில் இந்திய முதலாளிகள் இந்தத் தேசியக் கட்சிகளுக்கு வெள்ளை யாக வெளிப்படையாக வழங்கிய நன்கொடைகள் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் என்று நாடாளுமன்றத்தில் அளித்த புள்ளிவிவரங்கள் பறைசாற்றுகின்றன. நிலக் கரி ஒதுக்கீட்டில் ‘முதலாளிகளுக்கு’ விதிகளுக்குப் புறம்பாகச் சலுகை வழங்கியதால் ஏற்பட்ட இழப்பு ஒரு இலட்சத்து 86 ஆயிரம் கோடியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு, சலுகை பெற்ற நிறுவனங்களின் பெயர் களையும் அட்டவணையில் குறிப்பிட்டுத் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் தனது அறிக்கையை அளித்துள்ளார். தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் இவ்வாறு குறிப்பிடலாமா? இவருக்கு அதி காரங்கள் உள்ளதா? என்று பல கேள்விகள் ஆளும் கட்சியினரால் எழுப்பப்படுகின்றன.

இங்கிலாந்து நாடு பின்பற்றிய நாடாளுமன்ற முறை யையும், நிர்வாக அமைப்புகளையும் விடுதலைக்குப் பின் இந்தியா முழுக்க முழுக்க ஏற்றுக்கொண்டது. வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியில், இந்தியத் துணைக் கண்டத்தில் இயங்கிய நடுவண் அரசு சல்லிக்காசைக் கூட வீணாக்காமல் அரசு அமைப்புகளை மேலாண்மை செய்தது என்பதை வரலாறு நமக்குச் சுட்டுகிறது. இதற்கு முதன்மையான காரணங்களும் உள்ளன. பல கிழக்கிந்தியக் குழுமங்கள் 18ஆம் நூற்றாண்டில் இந்திய மண்ணில் வணிகத்தைத் தொடங்கிய போதே ஊழல்களும் பிறந்தன; பெருகின. சான்றாக, சாதாரண எழுத்தர்களாக இங்கிலாந்து கிழக்கிந்தியக் குழுமத்தில் பணிபுரிந்த இராபர்ட் கிளைவும், வாரன்ஹேஸ்டிங்சும் இந்தியாவில் அடித்த கொள்ளைப் பணத்தில் இங்கிலாந்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததையும், அதற்காக அவர்கள் மீது இங்கிலாந்து அரசு குற்ற விசாரணை யை மேற்கொண்டதையும் மறந்து விடலாகாது.

தொடக்கக் காலத்திலிருந்தே நாடாளுமன்ற முறை எப்போதுமே உறுப்பினர்களின் தன்நலத்திற்காகச் செயல்பட்டுள்ளது என்பதை வாரன்ஹேஸ்டிங்சு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி 1789, மே 5ஆம் நாள் எட்மண்ட் பர்க் ஆற்றிய உரையைத் தனது ‘நீதியின் தோற்றம்’ என்ற நூலில் அறிஞர் அமர்த்தியா சென் குறித்துள்ளார். “வாரன் ஹேஸ்டிங்சு செய்த பெருந் தவறுகளுக்காகவும், பெரும் குற்றங்களுக்காகவும் பதவி யிலிருந்து அவரை நீக்க வேண்டும்; இங்கிலாந்து நாட்டு மக்களையும், நாடாளுமன்றத்தையும் கேவலப்படுத்தி இருக்கிறார்; இந்திய மக்களின் சட்டங்கள், உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றை வளைத்துத் திரித்து மக்களின் சொத்துக்களைச் சூறையாடியிருக்கிறார்; மக்களைத் தனிமைப்படுத்தி, அனாதைகளாக்கிய ஹேஸ்டிங்சைப் பணியிலிருந்து தூக்கி எறிய வேண்டும்; சமூகத்தில் உள்ள இயற்கை நீதியின் விதிகளை மீறியதற்காகவும் மானுடத்தன்மையை அடக்கி, ஒடுக்கி, காயப்படுத்தி, வயது, தகுதி, வாழ்நிலை, ஆண்-பெண் என்ற வேறு பாடின்றி அனைவரையும் கொடுமைப்படுத்தியதற் காகவும் வாரன் ஹேஸ்டிங்சு மீது பதவி நீக்கம் தீர் மானத்தை முன்மொழிகிறேன்” என்று வீரமுழக்க மிட்டார் எட்மண்ட் பர்க். ஆனால், ஹேஸ்டிங்சைவிட மோசமாகக் கொள்ளையை இந்தியாவில் மேற்கொண்ட இராபர்ட் கிளைவைப் பர்க் பாதுகாத்தார். வளைந்து கொடுக்கிற, தன்நலம் சார்ந்த அணுகுமுறையை எட்மண்ட் பர்க் கையாண்டார் என்று அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளார்.

சல்லிக்காசை யாரும் திருடாமல் இங்கிலாந்து நாட்டிற்கு இந்தியாவின் செல்வங்களைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து அரசு தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகளைக் கொண்டு வந்தது. இங்கிலாந்து நாட்டின் நன்மைக்காகப் பல புதிய நிர் வாகச் சட்டங்களை வெள்ளை அரசு நிறைவேற்றியது. இந்த நிர்வாக மரபுரிமைக் கூறுகளைத்தான் விடு தலைக்குப்பிறகு இந்தியா ஏற்றுக்கொண்டது. எதிர்க் கட்சிகளை மதிப்பதில், நேரு, சாஸ்திரி காலம் வரை நல்ல மரபுகள் பின்பற்றப்பட்டன. மக்களாட்சி முறையில் நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகிய மூன்று அமைப்புகள் சிறப்பாகச் செயல்படுவதற்கு நேரு தனி அக்கறை செலுத்தினார்.

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் 1919, 1935ஆம் ஆண்டுகளில் பின்பற்றிய அரசமைப்புச் சட்டவிதிகள், மரபுகள் முதலானவற்றை 1950ஆம் ஆண்டு நடை முறைக்கு வந்த அரசமைப்புச் சட்டப் பிரிவுகளில் அப் படியே இணைத்தனர். இந்திய அரசமைப்புச் சட்டத் தின் பகுதி 5இல் உள்ள 148, 149, 150, 151 பிரிவுகள் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலரின் அமைப்பு முறை பற்றியும், அதிகார எல்லை பற்றியும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. அரசமைப்புச் சட்ட அட்டவணை மூன்றாம் பிரிவில் அமைச்சர்கள், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி கள் உள்ளிட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையர், அரசுத் தலைமை வழக்கறிஞர், தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் ஆகியோர் பதவி ஏற்பு உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. இதன் முதன்மையான நோக்கமே இந்த அலுவல் அமைப்புகள் தன்னுரிமைகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு மக்களாட்சிக் கூறுகளை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகதான் என்பதைப் பல அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

1950-60ஆம் ஆண்டுகளில் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலரின் அறிக்கைகளைப் பற்றிப் பெரும் அளவில் கருத்து வேறுபாடுகள் உருவாக வில்லை. உச்சநீதிமன்றம் போன்றே சுயாட்சி பெற்ற அமைப்பாகக் கணக்குத் தணிக்கைக் குழு செயல்பட்டு வந்தது. அரசமைப்புச் சட்ட அவையில் அண்ணல் அம்பேத்கர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி முதன் மையான அலுவலராகச் செயல்படக்கூடியவர் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் என்று குறிப்பிட்டார். அவருடைய கடமைகள், பணிகள் நீதிமன்றப் பணி களைவிட மிகவும் முதன்மையானவையாகும் என்றும் குறிப்பிட்டார்.

1949 அக்டோபர் 10ஆம் நாளில் அரசமைப்புச் சட்ட அவையில் அமைச்சர்களுக்கு அடிபணியாமல் நேர்மையாகச் செயல்படுகின்ற உயர் அலுவலர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் துணைத் தiலைமை அமைச்சராகவும், உள்துறை அமைச்ச ராகவும் பணியாற்றிய பட்டேல் பதிவு செய்துள்ளார். “நீங்கள் பணிபுரியும் அரசின் நிர்வாகக் இயந்திரங் களுடன் சண்டை போடாதீர்கள் என்பதைப் பட்டறிவைப் பெற்ற மனிதன் என்ற முறையில் குறிப்பிடுகிறேன். அரசு அலுவலர்களிடம் வேலையை வாங்குங்கள். ஒவ்வொரு மனிதனும் ஒருவிதமான பாராட்டுதலைப் பெற விரும்புவான். தினமும் அவர்கள் விமர்சனம் செய்யப்படும் போதும், அவர்களைப் பற்றி மக்கள் மத்தியில் குறைகளைச் சுட்டும் போதும் அவர்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்யமாட்டார்கள்” என்று கோபத்துடன் குறிப்பிட்டார் பட்டேல். “இவ்வகை அணுகுமுறையைப் பின்பற்றாமல் இருந்தால், நீங்கள் இந்த அரசமைப்புச் சட்டத்தைக் கடைப்பிடிக்காதீர்கள். இதற்குப் பதிலாக வேறு ஒரு சட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம். காங்கிரசுச் சட்டத்தை அல்லது ஏதாவது ஒரு சட்டத்தை, அல்லது ஆர்.எஸ்.எஸ். சட்டத்தைக் கொண்டு வாருங்கள். நீங்கள் விரும்புவது போன்று இந்த அரசமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்பட முடியாது. நாட்டை நல்ல நிலையில் நடத்திச் செல்ல ஒரு பணி வளையத்திற்குள் இணைந்து செயல்படுவதுதான் அரசமைப்புச் சட்ட நெறியாகும்” என்று பட்டேல் விளக்கினார். ஆனால், இன்றோ பட்டேல் கருத்திற்கு எதிராகக் காங்கிரசு செயல்படுகிறது. காரணம் இந்தியா விடுதலை பெற்ற வுடன், தன்னலமற்ற தலைவர்கள் நடுவண் அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்கள். நேர்மையான அதிகாரிகள் மதிக்கப்பட்டார்கள். இன்றோ தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர், தலைமை அமைச் சரின் அலுவலகத்தில் பணிபுரிவோர்களாலும், அவர் களின் எடுபிடிகளாலும், அமைச்சர்களாலும் மிரட்டப் படுகிறார்கள்.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத், அரசின் நிதியைப் பொறுத்த வரை எந்த உயர் பதவியில் இருப்பவரையும் ஆய்வு செய்வதற்கு அதிகாரம் பெற்றவர் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் என்று குறிப்பிட்டார். இத்தகைய அரசமைப்புச் சட்ட அதிகாரம் பெற்ற, சுயாட்சியுடன் இயங்கக்கூடிய தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் நடுவண், மற்றும் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகள், செலவுகளைப் பற்றியும் ஆய்வு செய் கிறார். விதி மீறல்கள் இருப்பின் அறிக்கையில் குறிப் பிடுகிறார். குறிப்பிட்ட இனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, உரிய முறையில் செலவு செய்யப்பட்டுள்ளதா? நிதித் துறையின் விதிகளின்படி, சரியாக உள்ளதா? மேற் கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் முறையாக மற்ற துறை களுக்குச் சென்றுள்ளதா? என்பன போன்ற அனைத்து நிதி ஒதுக்கீடு, செலவு இனங்களைப் பற்றிய முழு ஆய்வு அறிக்கைதான் தலைமைக் கணக்குத் தணிக் கை அலுவலரால் ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. இவ்வறிக்கைகள், நாடாளுமன்ற, சட்டமன்றப் பொதுக் கணக்குக் குழுக்களில் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்தக் குழுவிற்கு எதிர்க்கட்சித் தலைவரே தலைமை தாங்குகிறார். அவ்வறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பார்வைக் கும், ஆய்விற்கும், விவாதத்திற்கும் விடப்படுகின்றன.

அண்மைக்காலமாக உலக அளவில் பல வளர்ந்த நாடுகளில் இந்தக் கணக்குத் தணிக்கை அறிக்கைகளை நல்ல முறையில் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு அந்தந்த அரசுகள் தவறுகள், ஊழல்கள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 1990க்கு பிறகுதான் இந்தியாவில் இந்தக் கணக்குத் தணிக்கை அறிக்கைகளில் சுட்டப்பட்டுள்ள குறைகளை, தவறுகளை எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் சுட்டிக் காட்டினால் ஆளும்கட்சிகளுக்குக் கோபம் கொப்பளிக் கிறது. போபர்சு பீரங்கி வாங்கிய போது தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர், செலவினங்களில் காணப்பட்ட முரண்பாடுகளையும், முறைகேடுகளை யும் போபர்சு நிறுவனத்திற்கு விதிகளை மீறிக் காட்டிய சலுகைகளையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி னார். தலைமை அமைச்சராக இருந்த ராஜீவ் காந்தி யும், அவரது அரசியல் தரகர்களும் எவ்வித முறை கேடுகளும் நடைபெறவில்லை என்று வாதிட்டனர். பிறகு எதிர்க்கட்சிகள் எழுப்பிய கண்டனங்களுக்குப் பிறகு நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை அமைக் கப்பட்டது. அந்த விசாரணையும் ஒருவிதக் கண் துடைப்பாக அமைந்துவிட்டது.

திருமதி. சித்ரா சுப்ரமணியன் என்ற ஊடகச் செய்தியாளர் இந்து நாளேட்டில் போபர்சு ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட்டார். போபர்சு ஊழல் விவா கரத்தை ஒட்டி ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் நான் 350க்கும் மேற்பட்ட ஆதாரங் களைக் கைப்பற்றி இருக்கிறேன் என்றார் சித்ரா சுப்ரமணியம். ‘ராஜிவ் கூசாமல் பொய் சொன்னார்’ என்ற தலைப்பில் பொக்கிஷம் பகுதியில் சித்ரா சுப்ரமணி யத்தின் பேட்டியை ஆனந்தவிகடன் 12.9.2012 நாளிட்ட இதழில் மீண்டும் வெளியிட்டுள்ளது. சோனியா காந்தியின் குடும்ப நண்பரான குவத்ரோச்சி இந்த ஊழல் பணத்தைச் சுவிசு வங்கியில் வைத்துள்ளார் என்று நடுவண் அரசின் சி.பி.ஐ. புலன்விசாரணை யைத் தொடங்கியது. காங்கிரசு இயக்கத்தின் பெரும் ‘தியாகத்தால்’ இந்த குவத்ரோச்சியைக் கைது செய்ய முடியவில்லை. புலனாய்வு அமைப்பும் வழக்கை முடித்துவிட்டது.

ராஜீவ்காந்தி தலைமை அமைச்சராக இருந்த காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கியதில் நடந்த முறைகேடுகள், வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருந்தபோது கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக் குரிய சவப்பெட்டிகள் வாங்கிய போது நடந்த ஊழல்கள் எல்லாம் தலைமைக் கணக்குத் தணிக்கை அலு வலரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அலைக்கற்றை முறைகேடுகள், நிலக்கரி உரிமை கள் வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகள், புதுதில்லி விமான நிலையத்தில் அரசின் நிலத்தைக் குத்தகை விட்டதில் ஏற்பட்ட முறைகேடுகள் எல்லாம் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலரின் அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகளில் காணப்படுகிற கருத்துகளைத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும், அவரின் எடுபிடி அமைச்சர்களும் ஆக்கப்பூர்வ மாக எடுத்துகொள்ளாமல், அரசிற்கு இழப்பு ஏதும் இல்லை என்று பொது மக்களிடம் பொய்களை அள்ளி வீசுகின்றனர். சுழி நட்டம் கூட இல்லை என்று கூறித் தங்களின் சுழி மூளையை வெளிப்படுத்தினர். ஆனால் நடுவண் அரசின் அமைச்சர்களுக்கானக் குழு இது வரை 6 பெரிய நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரண்டு வதற்காகக் கொடுக்கப்பட்ட உரிமங்களை நீக்கியுள்ளது. மேலும், நடுவண் அரசின் புலனாய்வுத் துறை (CBI) நிலக்கரி ஒதுக்கீடு பெற்ற தனியார் நிறுவனங்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து கண்துடைப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடுகளில், தோண்டத் தோண்ட புதுப்புது ஊழல் பரிமாணங்கள் வெடித்துக் கிளம்புகின்றன. நாட்டில் மின்பற்றாக்குறை பெருகி வருகிறது. பல அனல் மின் உற்பத்தி நிலை யங்கள் நிலக்கரிப் பற்றாக்குறையால் மின் உற்பத்தி யைப் பெருக்க முடியவில்லை. அனல் மின் உற்பத் திக்கு 65 கோடி டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 56 கோடி டன் நிலக்கரியைத் தோண்டி எடுக்கும் நிலையில் தான் இந்தியா உள்ளது. இதன் காரணமாக 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

இந்தச் சூழலில் நிலக்கரி உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் ஊக வணிகத்தில் ஈடுபட்டது கொடுமை யிலும் கொடுமையாகும். நிலக்கரிப் பற்றாக்குறை ஏற்படட்டும்; விலை ஏறட்டும் என்று பெற்ற உரிமங் களைத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தவில்லை என்பது நாட்டிற்குச் செய்யும் பெரும் துரோகமாகும். மற்றொரு கோணத்தில் இந்த நிலக்கரி முறைகேடு களை ஆய்வு செய்து-பார்கஜ் சேக்சாரியா, செப்டம்பர் 18, இந்து நாளிதழில் கட்டுரை தீட்டியுள்ளார். பசுமை அமைப்புகளின் ஆய்வின்படி, அடர்த்தியான காடுகளில் இந்த நிலக்கரி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதால் 10 லட்சம் ஹெக்டேர் காட்டுப் பகுதி பாழடிக்கப்பட்டு வரு கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 13 நிலக்கரிச் சுரங் கங்களின் எல்லைப் பகுதியில் இவை அடங்கும். மேலும் 40 நிலக்கரிச் சுரங்கங்களின் பரப்பளவை ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது என்ற அதிர்ச்சியான கருத்தை இந்தக் கட்டுரையில் குறிப் பிட்டுள்ளார்.

காட்டு வளங்கள், இயற்கை வளங்களை உயிரியல் தாவர வள ஆதாரங்களைக் கண்மூடித்தனமாகக் கொள்ளை அடிக்கும் போக்குத்தான் தாராளமயக் கொள்கையா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. எனவே தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலர் நேர்மையுடன், நெஞ்சுரத்துடன் அளித்த அறிக்கை. அரசு இயற்கை வளங்களை எவ்வித நெறியும் இன்றிக் கொள்ளை அடிப்பதற்குத் தனியார் துறைக்குத் துணை போகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

இச்சூழலில் போபர்சு ஊழலை மக்கள் மறந்தது போன்று நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவார்கள் என்று இன்றைய உள்துறை அமைச்சர் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார். 1960ஆம் ஆண்டுகளில் அறிஞர் அண்ணா அடிக்கடிக் குறிப்பிட்டதைப் போல, பக்கா காங்கிரசுக்காரர்களுக்கும், சொக்கா காங்கிரசுக்காரர் களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பக்கா காங்கிரசுக்காரர்கள் மனசாட்சியோடு நேர்மையாகச் செயல்படுவார்கள். சொக்கா காங்கிரசுக்காரர்கள் இருப் பதை எடுத்துக் கொள்வார்கள்.

நேரு, பட்டேல் போன்ற தலைவர்கள் கடைபிடித்த நேர்மை நெறிகளைக் குழிதோண்டிப் புதைக்கிறது தற்காலச் சொக்கா காங்கிரசுத் தலைமை. ‘சொக்கத் தங்கம்’ சோனியாவும், சொக்கா காங்கிரசு மன்மோகன் சிங்கும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவையே குத்தகைக்கு விட்டாலும் விட்டுவிடு வார்கள் என்பதை மேற்குவங்க முதல்வர் மம்தா நன்றாகவே உணர்ந்துள்ளார். நடுவண் அரசின் தவ றான பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக நடுவண் அரசிற்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளார். விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு ஆகிய வற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரசுக் கட்சிக் குத் தகுந்த பாடத்தைக் கற்பிப்பார்கள் என்பது உறுதி.

Pin It

உட்பிரிவுகள்