வினைஞர் இன்று துய்க்கும் நலந்தனில்
தினையள வேனும் பெற்றிலர் மன்னவர்
அளவீடு இதனினால் வினைஞர் வாழ்வு
உளமதில் மன்னர்க்கு உயர்ந்தது எனவோ?
மனநிறை வென்பது சமூகச் சூழலே
தன்னுடை உழைப்பைப் பறிகொடு உழவரும்
இன்றும் அதனைத் தொடரும் வினைஞரும்
என்றும் நிறைவாய் இருந்திட வில்லை
உண்டி கொடுப்பினும் உயிரே கொடுப்பினும்
வண்மைத் தொழில்கள் பலப்பல பெருக்கினும்
மிகைப்பொருள் பகையாய் மாறிய தென்றால்
தகைசால் வினைஞர் மனநிறை வெய்தார்
நீரும் நிலனும் சீருயர் தொழில்களும்
பாரினில் மக்கள் உடைமை யானால்
உழைப்பைப் பறிக்கும் கொடுமை இராது
குழையாது யாவரும் மனநிறை வெய்தலாம்.

(இக்காலத்தில் ஒரு தொழிலாளி நுகரும் பொருட்களை விட மிகக் குறைவான பொருட்களையே அக்கால மன்னர்களே கூட நுகர முடிந்தது. (இது போன்று) நுகர்பொருட்களின் அளவை வைத்துக் கொண்டு நம் தொழிலாளர்கள் மன்னர்களை விட அதிக மனநிறைவுடன் வாழ முடியும் என்று கூறிவிட முடியுமா? மனநிறைவு என்பது (நுகர்பொருட்களின் அளவைப் பொறுத்ததன்று) சமூகச் சூழலை ஒட்டியதே. (அன்றைய காலத்தில் சுரண்டலுக்கு) உழைப்பைப் பறிகொடுத்த உழவரும், இன்றும் அதனையே தொடரும் தொழிலாளர்களும் என்றைக்குமே மன நிறைவாய் வாழ்ந்திடவில்லை.

(உண்பதற்குத் தேவையான) உணவைக் கொடுத்தாலும், (மருத்துவம் மற்றும் பிற வசதிகள் செய்து கொடுத்து) உயிரையே காப்பாற்றினாலும், (வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக) வளமான பல தொழில்களை உருவாக்கினாலும், (தொழிலாளர்களின் உழைப்பால் உருவாகும்) மிகை உற்பத்தி (அதாவது இலாபம்) மீண்டும் தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் பகைச் சக்தியாக மாறினால் (அதாவது மூலதனக் குவிப்பிற்காகவும் வன்முறை அரசை நடத்துவதற்காகவும் பயன்பட்டால்) உழைக்கும் மக்களால் மனநிறைவை அடைய முடியாது. நீரும் நிலமும் உடைய இப்பூமியும், மிகை உற்பத்தியை உருவாக்கும் தொழில்களும் பொதுவுடைமையாக ஆக்கப்பட்டால் (சுரண்டலுக்கு) உழைப்பைப் பறிகொடுக்கும் கொடுமைகள் இராது. (அந்நிலையில்) அனைத்து மக்களும் (யாருக்கும் அச்சப்பட்டுக்) குழைந்து இருக்க வேண்டிய அவசியம் இன்றி மன நிறைவோடு வாழலாம்)

- இராமியா
Pin It