இன்று தமிழ் நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இது மட்டுமன்றி சித்தா, ஒவ்வியல், ஆயுர்வேதம், யுனானி, யோகா என்று ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகள் ஆறு உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏறத்தாழ 50 உள்ளன.

2022 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்கள் 5050. எம்.டி மற்றும் எம்.எஸ் பட்ட மேற்படிப்பு இடங்கள் 2176. டி.எம், எம். சி.எச். உயர் சிறப்பு மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்கள் 396. எம்டிஎஸ் 62 இடங்கள். இவற்றில், ஒன்றியத் தொகுப்பிற்கு எம்.பி.பி.எஸ் இடங்களில் 15%, எம்.டி, எம்.எஸ் இடங்களில் 50%, டி.எம், எம்.சி.எச் இடங்களில் 50% 2016 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது. 2016 ஆம் ஆண்டு டி,எம், எம். சி.எச் உயர் சிறப்பு பட்ட மேற்படிப்பு இடங்கள் அனைத்தையும் 100 ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டது.

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு உள் ஒதுக்கீடு (சர்வீஸ் கோட்டா) 50 வழங்கப்பட்டு வந்தது. முன்னாள் முதல்வர் மறைந்த டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. சர்வீஸ் கோட்டா நடைமுறையில் இருந்த காரணத்தி னால், கிராமப் புற தொடக்க நலவாழ்வு நிலையங்கள், ஊரக அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றி வந்த அரசு மருத்துவர்கள் எம்.டி, எம்.எஸ், டி.எம், எம்.சி.எச் பட்ட மேற்படிப்புகளுக்குச் செல்வ தற்கு பெரு வாய்ப்பாக இருந்தது. இந்த வாய்ப்பானது 2016 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டது. அதாவது அரசு மருத்துவர்களுக்கான உள் ஒதுக்கீடு (சர்வீஸ் கோட்டா) நடைமுறை நீக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு கட்டாய நீட் தேர்வு சட்டம் இளநிலை எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு ஒன்றிய பாஜக அரசால் தமிழ் நாட்டின் மீது திணிக்கப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது. எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது. மக்கள் நல வாழ்வு என்பது முழுவதும் மாநில அரசின் பொறுப்பில் இருந்து வருகிறது.Madras Medical Collegeஇதைக் கடந்த கொரோனா பேரிடர் காலத்தில் நாம் நேரடியாகக் கண்டோம். உணர்ந்தோம். மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மாநில மக்களின் வரிப்பணத்தில் இருந்து மாநில அரசால் கட்டப்பட்டு, நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றிய அரசின் தலையீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் நீக்கப் பட்டு +2 மதிப்பெண்கள் அடிப்படையில் 10 ஆண்டுகளாக எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஐக்கிய முன்னணி அரசு ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டாலும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், பாசக 2014 இல் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, 2016 முதல் நீட் தேர்வு எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டது.

இதனால் ஏராளமான கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, பட்டியல் பிரிவு மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் பாதிக்கப் பட்டனர். இந்த நிலை இன்று வரை நீடிக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அதிமுக ஆட்சியில், இன்றைய திமுக ஆட்சியில் இரண்டு முறை நீட் தேர்வு விலக்கு சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டது. அதற்கு மாநில ஆளுநர் முட்டுக் கட்டை போடுகிறார். அதற்கு மேல் ஒன்றிய அரசு சட்ட ஏற்பிசைவு வழங்காமல் காலம் கடத்துகிறது.

4/5/2017 அன்று நடுவண் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒரு கடிதத்தை மாநில அரசுகளுக்கு அனுப்பியது. அதில் நீட் உயர் சிறப்பு டி.எம், எம்.சி.எச் படிப்புகளுக்கு 100 இடங்களுக்ககும் ஒன்றிய அரசே கலந் தாய்வு நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமன்றி பணியில் உள்ள மாநில அரசு மருத்துவர்களுக்கு இருந்த சர்வீஸ் கோட்டா எனப்படும் ஒதுக்கீட்டையும் நீக்கிவிட்டது. இது குறித்து மாநில அரசுகளிடம் சிறிதும் கலந்தாலோசிக் காமல், தானடித்த மூப்பாக, எதேச்சதிகாரமாக ஒன்றிய அரசின் நல வாழ்வுத்துறை இயக்குனர் 18-5-2017 இல் மாநில மருத்துவக் கல்வி இயக்குனர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், 26-7-2017க்குள் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இடங்களின் தரவுகளை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறார். இல்லையேல் உங்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை நடத்த இயலாமல் போகும் என்று தெரிவிக்கிறார். நடுவண் அமைச்சகம் மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் பொதுக் கலந்தாய்வுக்கு அனைத் திந்திய அளவில் உத்தரவிடுகிறது. இது கூட்டாட்சிக் கொள் கைக்கு எதிரானது. இது மாநில நல வாழ்வுக் கொள்கைக்கு எதிரானது. மட்டுமன்றி மாநில மாணவர்கள் மற்றும் நோயாளர் நலனுக்கும் எதிரானது ஆகும்.

மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கும் முரணானது ஆகும்.

மருத்துவ கவுன்சில் விதிகள் சொல்வது என்ன? விதி 9 ஏ உட்பிரிவு 2 :- மாநில அரசு தரும் 50 விழுக்காடு அனைத் திந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் ஒன்றிய அரசின் மருத்துவ கல்வி நிலையங்களில் உள்ள இடங்களுக்கும் ஒன்றிய அரசின் நல வாழ்வு இயக்குனரகம் கலந்தாய்வு நடத்தலாம்.

விதி 9ஏ உட்பிரிவு 3:-மாநிலங்களில் மீதம் உள்ள 50 இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தலாம். இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் தன்னிச்சையாக தானே எடுத்துக் கொள்கிறது.

மாடர்ன் பல் மருத்துவக் கல்லூரி எதிர் மத்திய பிரதேச அரசு வழக்கு. 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் தீர்ப்பில், மாநில மக்களின் நலன், வளர்ச்சிக்கு மாநில அரசுகளே பொறுப்பு. தனது மாநில மாணவர்களின் நலனுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. உயர்கல்வித் துறை மாநில வளர்ச்சிக்கு, நலனுக்கு மிகவும் அவசியமான துறை ஆகும். மேலும் மாநில அரசு தானே நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை, கட்டணம், நடை முறைகள் இவற்றின் மீது முழு உரிமை பெற்றுள்ளது. ஏனெனில் மாநிலத்தில் வாழும் மக்களின் நிலைமை, ஏற்றத்தாழ்வுகள், சமமின்மை, வாய்ப்பின்மை இவற்றைப் பற்றி அந்தந்த மாநில அரசுக்குத் தான் முழுமையாகத் தெரியும். மாநில சட்டமன்றமே பல்வேறு தரப்பு மாணவர்களுக்கு சம வாய்ப்பு ஏற்படுத்தி தர முடியும் என்று கூறுகிறது.

அரசு மருத்துவர்களுக்கான உள் ஒதுக்கீடு (சர்வீஸ் கோட்டா) நீக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் அனைவரும் களத்தில் இறங்கி போராடினர். தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கமானது உச்சநீதி மன்றத்தில் 2018 ஆம் ஆண்டு, வழக்கு தொடர்ந்தது. வழக்கு எண்.196/2018. இவர்களோடு கேரளா, மகாராட்டிரா, அரியானா மாநிலங்களும் சர்வீஸ் கோட்டா தேவை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு, 31.8.2020 அன்று சர்வீஸ் கோட்டா வழங்கப்பட வேண்டும். வழங்குவதற்கு மாநில அரசிற்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்று தீர்ப்புரைத்தது. அந்த தீர்ப்புரையில் மாடர்ன் பல் மருத்துவக் கல்லூரி வழக்கில் சொல்லப்பட்ட தீர்ப்புப்படி மாநில அரசின் அதிகாரம் மருத்துவக் கல்வியில் நிலை நிறுத்தப்பட்டது. 42 ஆவது திருத்தம் மூலம் சுகாதாரம் பொதுப் பட்டியலில் இருந்த போதும், மாநில அரசின் உரிமை எப்போதும் போலவே தொடர்கிறது. மாநில அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மாநிலத் தகுதிப் பட்டியல் மூலம் உள் ஒதுக்கீடு (சர்வீஸ் கோட்டா) தருவதற்கு மாநில அரசின் சட்டம் இயற்றும் அதிகாரம் மற்றும் திறனுக்குள் வரும் என்று தீர்ப்புரைத்தனர்.

2020 ஆம் ஆண்டு சர்வீஸ் கோட்டா செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்புரைத்த பிறகும், டி.எம், எம்.சி.எச் உயர் சிறப்பு மருத்துவ மேற் படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நாம் உச்ச நீதிமன்ற கதவைத் தட்ட வேண்டிய நிலை உள்ளது. டி.எம், எம்.சி.எச் பட்ட மேற்படிப்புகளில் சர்வீஸ் கோட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற் படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் அதன் மருத்துவர்கள் வழக்கு தொடுத்தனர். தமிழ்நாடு அரசும் இந்த வழக்கில் இணைந்து கொண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎம், எம் சி எச் படிப்புகளில் சர்வீஸ் கோட்டா வழங்குவதற்கு இடைக்கால தீர்ப்பு வழங்கி வருகிறது உச்ச நீதிமன்றம்.

இதில் தமிழ்நாடு அரசும் மனுதாரராக சேர்ந்து வாதிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாநிலத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி என்பது பெரு நகரங்கள் மட்டுமன்றி சிறு நகரங்கள் கிராமப்புறம் வரை சீரான வளர்ச்சி பெற்று உள்ளது. இதற்குக் காரணம் இங்கே நூறு ஆண்டுகளாக நடைமுறைப்படுத் தப்பட்டுள்ள சமூக நீதி, 69 இட ஒதுக்கீடு மற்றும் அடுத்தடுத்து வந்த அரசுகள் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று கொள்கை முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தியது. கல்வி மற்றும் மருத்துவத்திற்காக தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கியது போன்றவை முக்கிய காரணங்களாகும்.

2020 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மக்கள் நல வாழ்வுத் துறைக்கு 15,873 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவக் கல்விக்காக 5623 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு மிகப்பெரிய தொகையை தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் மருத்துவக் கல்விக்காக செலவிட்டு வருகிறது. ஆனால் இதில் ஒன்றிய அரசினுடைய பங்கு எதுவுமில்லை.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சர்வீஸ் கோட்டா மூலம் மருத்துவ பட்ட மேற்படிப்பு, உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு படிப்பதால், அவர்கள் தாங்கள் ஓய்வு பெறும் வயது வரை அரசு பணியில் தொடர்வதாக, தமிழ்நாடு அரசிற்கு ஒப்பந்தம், பிணை செய்து தருகிறார்கள். அதன்மூலம் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் போதுமான உயர் சிறப்பு மருத்து வர்கள் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். வட்ட, மாவட்ட மருத்துவமனைகளிலும் சிறப்பு மருத்துவர்கள் போதுமான அளவிற்கு பணிபுரிகின்றார்கள். ஆனால், அரசு பணியில் இல்லாத மாணவர்கள் பட்ட மேற்படிப்பு படித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அரசிற்கு பணி புரிய வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதிலும் பெரும்பான்மையோர் ஒப்பந்த காலத்தில் பணி புரிவதில்லை. இந்நிலையில் சர்வீஸ் கோட்டா மட்டும் இல்லை என்றால், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு துறைகளை நடத்துவதற்கு பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கிடைப்பது மிகவும் கடினமாகிவிடும். புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவது மிக மிக கடினமாகிவிடும். ஒரு பக்கம் மருத்துவக் கல்லூரிகளையே நடத்த முடியாத சூழல் ஏற்படும். இன்னொரு பக்கம், சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை ஏழை எளிய பொதுமக்களுக்கு தர இயலாமல் போய்விடும்.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கட்டமைப்பே ஒரு பத்தாண்டுகளில் சிதைந்து போகக்கூடும். இந்த நிலையைக் கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு அரசு சர்வீஸ் கோட்டா முறையை 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தது. இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக தமிழக மருத்துவக் கட்டமைப்பு விளங்கி வருகிறது. இதை சீர்தூக்கிப் பார்த்து தேசிய மருத்துவ ஆணையமும் ஒன்றிய அரசும் தம்மைத் திருத்தி கொள்ள வேண்டும். மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதில் முனைப்பு காட்டாமல் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை தர முன்வர வேண்டும்.

(சிந்தனையாளன் பொங்கல் மலர்-2023 கட்டுரை)

- மரு. சா.மா.அன்புமணி