வென்றெடுக்க வா தோழா! ஓடும் கால

       வெளி ஓடையில் துளிதான். ஆயின் எந்தக்

குன்றுடைத்தும் சிலை வடிக்கும் உளியே நீதான்.

       குமுறி நிற்கும் எரிமலை வாய்கக்கும் தீதான்.

சென்றுகிழியும் இறுதி நாளுக்குள்ளே

       திசை நடுக்கும் வரலாற்றில் திருப்பம் ஏற்று

பொன்றொடுக்கும் பொய்யறிவுச் சிறையிருப்பில்

       பகுத்தறிவால் விடுதலைகொள் பெரியார் போற்றி!

மானுடத்தின் வீதிகளில் நஞ்சு பாயும்

       மடத்தனத்தின் முடைநாற்றம் திசைகள் மேவும்

ஊனுடம்பாம் உயிர்க்கூடு சாம்பலாகும்

       உன்வாழ்வின் மூச்சறுந்து போகும் நாளில்

வானிடறும் ஆற்றலுற்று இருந்தும் வாழாப்

       பதர்நாளாய்க் கழித்தோமே என்றுநீயே

கூனுடம்பு துடித்தழுது புலம்புவாயோ?

       கூரறிவுப் பெரியாரின் கொள்கை சேர்ப்பாய்.

கால்பந்து விளையாட்டுத் திடல்தான் வாழ்க்கை

       கால்களினால் உதைபடும் பந்தேதான் இன்னல்

நூல்பந்து பிரிவதுபோல் தேயும் நாட்கள்

       நூறுநூறு தலைமுறைகள் கடந்து வந்தோம்.

சால்புற்றுக் குமுகாய முன்னேற்றத்தில்

       சான்றுபட ஒருசெயலேனும் நாம் செய்தால்

நாள்பற்று வைத்துப்பின் பேரைச் சொல்லும்

       நம் பெரியார் குமுகத்தின் விடியல் வேந்தன்.

மலிந்துவிட்ட குமுகத்தின் பழம்பிழைகள்

       பார்ப்பனியம் புகுத்திவிட்ட பெரும்பிழைகள்

மெலிந்துவிட்ட மனிதத்தின் மேல்கீழ் என்னும்

       வேர்விட்ட வேறுபாட்டை வளர்த்துவிட்டு

வலிந்துபற்றித் தமிழியத்தைக் கெடுத்துவிட்ட

       வஞ்சகத்தை இவ் அளவும் பொறுத்தல் தீதே!

பொலிந்து வந்து புதுத்திருத்தப் பாடம் சொன்ன

       ‘பகுத்தறிவுப் பேராசான்’ மாணாக்கர் நாம்.

அடடாஓர் பகுத்தறிவின் மின்னல் வீச்சு!

       அரும்மக்கள் செல்வனான நடிக நல்லோன் 

  (விசயசேதுபதி)

“விடடாநீ சாமிகட்கு நடுவே சண்டை

       விண்ணிருந்து சாமிவந்து உதவிடாது.

இடடாநீ நெஞ்சிலிதை; மனிதனுக்கு

       இன்னொருநல் மனிதன்தான் உதவிசெய்வான்.

கொடடாநீ மனிதநேயம்; வையத்தின் தேவை.

       கொண்டாடு மனிதத்தை” என்றான் அம்மா!

பேராசிரியர் இரா. சோதிவாணன்