சென்ற இதழ்த் தொடர்ச்சி...

இணைப்புக்கு பின்

இந்தியாவுடன் காசுமீரத்தை இணைக்கும் ஒப்பந்தத்தில் மன்னர் அரிசிங் ஒப்பமிட்டவுடனேயே, இந்த இணைப்பு இறுதியானதல்ல என்றும், பொது வக்கெடுப்பு நடத்தி காசுமீர் மக்களின் விருப்பமறிந்தே இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் இந்திய அரசு அம்மக்களுக்கு உறுதியளித்தது மட்டுமல்ல, 1948 ஜனவரி முதல் நாள் காசுமீரம் தொடர்பான இந்தியா-பாகிஸ்தான் பூசலை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு இந்தியாவே எடுத்துச் சென்றது.

“காசுமீரம் இந்தியாவின் உள்நாட்டுச் சிக்கல் என்றும் இதில் மற்ற நாடுகள் தலையிட முடியாது என்றும் இப்போதெல்லாம் இந்திய அரசு அடிக்கடி அறிவிக்கக் காண்கிறோம். ஆனால் இந்தச் சிக்கலை முதன்முதலாக இந்தியாதான் ஐநாவுக்கு எடுத்துச் சென்று பன்னாட்டுலகில் அரங்கேற்றியது. ஐநாவில் நேருவின் சார்பாக இந்தியத் தூதுக் குழுவின் தலைவராகச் சென்று காசுமீர் சிக்கலை விளக்கியவர் திவான் பகதூர் கோபால்சாமி ஐயங்கார். அதே கோபால்சாமி ஐயங்கார்தான் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்தவர். இப்போது சர்ச்சைக்குரிய தாகியுள்ள 370ஆம் உறுப்பை எழுதியவரும் அவரே. இன்னொரு கருத்துக்குரிய தகவல்: இதே கோபல்சாமி ஐயங்கார் 1937-43 காலத்தில் மன்னர் அரிசிங்கின் தலை மையமைச்சராகப் பணியாற்றியவர்.

ஐநாவில் காசுமீர் சிக்கலை இந்தியாவின் சார்பில் தொடர்ந்து கையாண்டவர் திருவாட்டி விஜயலட்சுமி பண்டிட். ஜவகர்லால் நேருவின் மூத்த உடன் பிறப்பாகிய இவர்தான் 1946 முதல் 1968 வரை ஐநாவில் இந்தியத் தூதுக் குழுவின் தலைவராக இருந்தார்.

ஐநா பாதுகாப்பு மன்றம் காசுமீர் தொடர்பாக 1948 ஜனவரி 20ஆம் நாள் இயற்றிய தீர்மானம் (எண் 39) உடனடி யாகப் போர்நிறுத்தம் செய்யவும், துருப்புகளை விலக்கிக் கொள்ளவும், காசுமீரத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் கட்டளையிட்டது. பொதுவாக் கெடுப்பு நடத்த மூன்று உறுப்பினர் ஆணையம் ஒன்றையும் அறிவித்தது. இந்த ஆனையத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் இந்த இருவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் மூன்றாமவரும் இடம்பெற வேண்டும்.

ஐநா தீர்மானப்படி போர்நிறுத்தம் மட்டும் ஏற்பட்டது. கட்டுப்பாட்டுக் கோடு என்னும் போர்நிறுத்தக் கோடு காசுமீரத் தேசத்தை இரண்டாகப் பிரித்து விட்டது. இந்தக் கோட்டினை இந்தியா-பாகிஸ்தான் எல்லை என்று அழைப்பது தவறு. ஐநா தீர்மானப்படி படை விலக்கம் நடைபெறவில்லை. இரு நாடு களும் காசுமீரத்திலிருந்து தங்கள் படைகளை விலக்கிக் கொள்ள வில்லை. பொதுவாக்கெடுப்பும் இதுவரை நடைபெறவில்லை.

ஆனால் இதற்கிடையில் வாக்கெடுப்பு இல்லாமலே ஜம்மு-காசுமீரத்தை இந்தியாவுடன் நிரந்தரமாக இணைத்துக் கொள்ளும் முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டது. இந்த நோக்கத்துடனேயே இந்திய அரசமைப்புப் பேரவையில் ஜம்மு-காஷ்மீர் பேராளர்கள் (பிரதிநிதிகள்) சேர்க்கப்பட்டனர். ஜம்மு-காசுமீரத்துக்கென்று உறுப்பு 370 சேர்க்கப்பட்டது.

ஆனால் இந்தியக் குடியரசில் நீடிப்பதா இல்லையா என்பதைத் தீர்வு செய்யும் வாய்ப்பு காசுமீர் மக்களுக்கு வழங்கப்படும் என்று இந்திய அரசு தொடர்ந்து உறுதியளித்துக் கொண்டிருந்தது. பொதுவாக்கெடுப்பு நடக்காமல் தவிர்ப்பதே இந்திய அரசின் நோக்கமாய் இருந்தது. ஆனால் ஷேக் அப்துல்லா வாக்கெடுப்பு நடத்துமாறு கேட்கவில்லை. ஏனென் றால் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேர்வதற்குத்தான் வாக்கெடுப்பு வாய்ப்பளிக்குமே தவிர, சுதந்திர காசுமீரம் என்ற வாய்ப்பே அதில் இடம்பெறவில்லை.

காசுமீரம் இந்தியாவுக்கா? பாகிஸ்தானுக்கா? என்ற விவாதம் நடந்து கொண்டிருந்த போதே 1949 ஏப்ரல் 14ஆம் நாள் வெளிவந்த ஒரு பேட்டியில் ஷேக் சொன்னார்:

காசுமீரத்தின் சுதந்திரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமின்றி, வல்லரசுகளும் ஏற்று உறுதியளிக்க வேண்டும் என்பதே என் முன்மொழிவு.““ஷேக் அப்துல்லாவைப் பொறுத்த வரை பாகிஸ்தானுடன் இணைப்பு என்ற எண்ணத்துக்கே இடமில்லை. சுதந்திர காசுமீரம் இல்லையென்றால் இந்தியா விலேயே தன்னாட்சியுரிமையுடன் இருந்து விட்டுப் போவோம் எனக் கருதினார்.

ஜவகர்லால் நேரு ஷேக் அப்துல்லாவிடமே சொன்னார்: ஐநா ஆணையத்தின் வாக்கெடுப்பு முன்மொழிவுகளை நான் ஏற்றுக் கொண்டிருந்தாலும் அது ஒன்றும் நெருக்கத்தில் நடைபெறப் போவதில்லை என்பதை அறிவீர்கள். அது ஒரு போதும் நடைபெறாமலே போகிற வாய்ப்பும் உண்டு இதை நாம் வெளிப்படையாகச் சொல்லக் கூடாதுதான்.

ஜம்மு-காசுமீர் அரசமைப்புப் பேரவை 1951 அக்டோபர் 31ஆம் நாள் கூடியது. நவம்பர் 15ஆம் நாள் அது ஜம்மு-காசு மீரத்துக்கான அரசமைப்பை எழுதி முடித்தது. ஜம்மு-காசுமீரத்துக்கான தனி அரசமைப்பு, இந்திய அரசமைப்பின் உறுப்பு 370 எல்லாமே காசுமீர மக்களைப் பையப் பைய ஆற்றுப்படுத்தி, காசுமீரத்தின் பிரிக்கவொண்ணாப் பகுதியாக் கும் திட்டத்தின் பாற்பட்டவையே. ஆனால் இந்த மென்மையான அணுகுமுறை இந்துதுவ ஆற்றல்களுக்குப் பிடிக்க வில்லை.

இந்தியாவில் பாரதிய ஜனசங்கம் என்ற புதிய அரசியல் கட்சி 1951 அக்டோபர் 21ஆம் நாள் பிறந்தது. இதன் முதல் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி. இவர் இந்து மகாசபையின் முன்னாள் தலைவர். வி.டி. சாவர்க்கரின் கூட்டாளி. ஜவகர் லால் நேரு அமைச்சரவையில் அமைச்சராக இருந்து, 1950இல் பதவி விலகியவர். பாரதிய ஜனசங்கத்தின் முதல் மாநாடு 1952 திசம்பர் 31ஆம் நாள் கான்பூரில் கூடி, ஜம்மு-காசுமீரத்தை இந்தியாவுடன் இரண்டற இணைக்கக் கோரிக் கிளர்ச்சி தொடங்கத் தீர்மானித்தது.

காசுமீரப் பண்டிதராகிய நேரு மற்றவர்களைக் காட்டிலும் காசுமீரத்தை நன்கறிந்தவர். காசுமீர மக்களின் விருப்பங் களை மதிப்பது போல் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை அவருக்கிருந்தது. 1952 புத்தாண்டு நாளில் கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேரு பேசினார்:

காசுமீரத்து மக்களை நம் பால் ஈர்த்துள்ளோம் என்பது நம் மதச் சார்பின்மைக் கொள்கைகளும் நம் அரசமைப்பும் சரியானவை என்பதற்கு ஆகப் பெரும் சான்றாகும். ஜன சங்கமோ வேறு ஏதேனும் வகுப்புவாதக் கட்சியோ ஆட்சியில் இருந்திருந்தால் காசுமீரத்தில் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். காசுமீர மக்கள் இந்த வகுப்பு வாதம் தங்களைச் சலிப்புறச் செய்வதாகச் சொல்கிறார்கள். ஜனசங்கமும் ஆர்எஸ்எஸ்-உம் எங்களைச் சுற்றி வளைத்துத் தாக்கும் நாட்டில் நாங்கள் ஏன் வாழ வேண்டும்? என்று கேட்கிறார்கள். அவர்கள் வேறிடம் சென்று விடுவார்கள். நம்மோடு இருக்க மாட்டார்கள்.

காசுமீரத்து மக்கள் இந்தியாவுடன் இருக்க விரும்ப வில்லை என்றால் என்ன செய்வது? நேரு சொன்னார்:

“காசுமீர மக்கள் நம்மை வெளியேறச் சொன்னால் வெளியேறி விடுவோம்.

வெளியில் இப்படிப் பேசிக்கொண்டே வெளியேறச் சொல்லும் வாய்ப்பையே இல்லாமலடிக்க எல்லா வழிகளிலும் காய்நகர்த்திக் கொண்டிருந்தார் பண்டித நேரு. கொல்கத்தா உரையில் ஷேக் அப்துல்லா பற்றியும் பேசினார்:

இப்போது ஜனசங்கம், ஆர்எஸ்எஸ் போன்ற வகுப்பு வாதக் கட்சிகளும் ஜம்முவில் பிரஜா பரிசத் கட்சியும் ஷேக் அப்துல்லாவின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கியுள்ளன. இவர்கள் அவரைத் திட்டுகிறார்கள். பழைய மகாராஜாவே திரும்பி வர வேண்டும் என்கிறார்கள். இதன் பொருள் என்னவென்று எண்ணிப் பாருங்கள். இத்தருணத்தில் பாகிஸ்தானை அறவே எதிர்ப்பவர் ஷேக் அப்துல்லாதான். அவரே காசுமீர மக்களின் மாபெரும் தலைவர். நாளையே ஷேக் அப்துல்லா காசுமீரம் பாகித்தானில் இணைய வேண்டும் என விரும்பினால் அதைத் தடுத்து நிறுத்த என்னாலும் முடியாது. இந்தியாவின் ஆற்றல்கள் அனைத்தும் சேர்ந்தாலும் முடியாது.

காசுமீரத்தை எப்படி விழுங்கலாம் என்று இந்திய அரசு யோசித்துக் கொண்டிருந்த போதே காசுமீரத்தின் குரலை ஷேக் அப்துல்லா ஒலித்துக் கொண்டிருந்தார். 1952 ஏப்ரல் 10ஆம் நாள் ரன்பீர்சிங்புரத்தில் அவர் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ்மிக்கது:

காசுமீரத்தைப் பொறுத்த வரை சமயச் சார்பற்ற ஜனநாயகம் என்ற குறிக்கோளை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் கற்றுத்தர விரும்புகிறது.

காசுமீரம் குறித்து நேருவின் நிலைப்பாடு பையப்பைய ஐயத்துக்குரியதாயிற்று. 1952 ஆகஸ்டு 25 நாளிட்ட நேருவின் கொள்கைக் குறிப்பு அவரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியது:

1948 இறுதிவாக்கில் எனக்கு ஒன்று தெளிவாகத் தெரிந்து விட்டது. பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்குத் தேவையான நிலைமைகள் ஒருநாளும் ஏற்படப் போவதில்லை. ஆகவே வாக்கெடுப்பு நடத்துவதில்லை என்று செயலளவில் முடி வெடுத்து விட்டேன்.

நேரு குறிப்பிடும் அதே 1948 இறுதியில் ஐநா ஆணையம் அளித்த வாக்கெடுப்பு முன்மொழிவுகளை நேரு ஏற்றது ஏன்? என்பதற்கு என்ன விளக்கம் தர முடியும்? அரசதந்திரம் என்றா?

1952 ஜூலை 24ஆம் நாள் ஜவகர்லால் நேருவும் ஷேக் அப்துல்லாவும் தில்லி உடன்பாட்டில் ஒப்பமிட்டனர். மைய அரசு நிறுவனங்களை ஜம்மு-காசுமீருக்கு விரிவாக்குவது பற்றிய உடன்பாடு இது. இதன் வழி காசுமீர இணைப்பை இறுதியாக்க நேரு நினைத்தார். ஷேக் அப்துல்லாவோ இதை ஓர் இடைக்கால ஏற்பாடாகக் கருதினார்.

உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தையின் போது இரு தலைவர்களுக்குமிடையே இடம்பெற்ற உரையாடலை ஷேக் தம் நினைவுக்குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்:

நேரு: ஷேக் சாகப்! எங்களுடன் நீங்கள் தோளோடு தோள் நிற்கவில்லை என்றால், உங்கள் கழுத்தில் தங்கச் சங்கிலி மாட்டி விடுவோம்.

ஷேக் சிரித்துக் கொண்டே விடையளித்தார்: ஆனால் ஒருபோதும் அப்படிச் செய்து விடாதீர்கள். மீறிச் செய்தால் காசுமீரத்தைக் கைகழுவி விட வேண்டியதுதான்.

நேரு விளையாட்டாகச் சொல்லவில்லை என்பது அடுத்த ஆண்டே தெரிந்து விட்டது. 1953 ஆகஸ்டு 9ஆம் நாள் காசுமீர் அரிமா கூண்டிலடைக்கப்பட்டது. காசுமீர மக்களை இந்தியாவிடமிருந்து ஒரேயடியாக அயன்மைப்படுத்தி விட்ட நிகழ்ச்சி இஃதென்பது வரலாற்றாசியர் தம் கணிப்பு. அன்று தொடங்கி இன்று வரை இந்திய அரசின் அடுத்தடுத்த முடிவுகள் காசுமீர மக்களின் அயன்மைப்பாட்டை வளர்க்கவே உதவி யுள்ளன.

தீர்வு நோக்கி

காசுமீர் மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு நாள் 1953 ஆகஸ்டு 9. அன்றுதான் அவர்களின் தனிப் பெருந் தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். அந்நாள் குல்மார்க்கில் கைது செய்யப்பட்டவர் 1958ஆம் ஆண்டு ஒரு சிறு இடைவெளி தவிர 11 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். தமிழ்நாட்டில் கொடைக் கானலில் சிறைவைக்கப்பட்டிருந்தார். இந்தியக் குடியரசின் வரலாற்றில் வழக்கு விசாரணையே இல்லாமல் இவ்வளவு நீண்ட காலம் ஓர் ஆயுள் சிறைக் கைதியைப் போல சிறைவைக்கப்பட்ட அரசியல் தலைவர் வேறு யாருமில்லை. அவர் செய்த குற்றம் என்ன?

ஜம்மு-காஷ்மீரின் அப்போதைய ஆளுநர் கரன்சிங் ஷேக் அப்துல்லாவைப் பதவிநீக்கம் செய்வதற்குச் சொன்ன காரணம் அமைச்சரவையில் பிணக்குள்ளது என்பதே. கைது செய்து சிறையில் அடைப்பதற்குச் சொன்ன காரணம் ஜம்மு-காஷ்மீரைப் பாகிஸ்தானில் இணைக்கத் திட்டமிட்டார் என்பதே. அவர் துணைத் தலைமையமைச்சர் பக்சி குலாம் முகமது, அமைச்சர் டி.பி. தார் ஆகியோரைக் கைது செய்யவும், காசுமீரத்தை சுதந்திர நாடாக அறிவிக்கவும் திட்டமிட்டார் என்றொரு செய்தியும் பரப்பப் பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் ஒருநாளும் மெய்ப்பிக்கப்பட்டதில்லை.

ஷேக் அப்துல்லாவைப் பதவிநீக்கம் செய்து சிறையில டைத்து விட்டு அவரிடத்தில் பக்சி குலாம் முகமதுவைத் தலைமையமைச்சராக்கிய நடவடிக்கை காஷ்மீர் அதிரடி  1953 எனப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கையில் தனக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்பது போல் பண்டித நேரு காட்டிக் கொண்ட போதிலும் காஷ்மீர் மக்கள் இந்த நாடகத்தை நம்பினார்களில்லை.

உளவுப் பிரிவின் தலைவராக இருந்த பி.என். மல்லிக், தன் நினைவுக் குறிப்புகளில் (நேருவுடன் என் ஆண்டுகள்: காஷ்மீர்) ஷேக் அப்துல்லா மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். 1962 இந்திய-சீன எல்லைப் போர் குறித்து சொல்லப்படாத கதை என்ற நூலை எழுதிய லெப்டினண்ட்-ஜெனரல் பி.என். கவுல், நேருவின் சொந்தப் பிரதிநிதியாகக் காஷ்மீருக்கு அனுப்பப்பட்ட அஜித் பிரசாத் ஜெயின் ஆகியோரும் கூட தாம் எழுதிய நூல்களில் தில்லியின் கட்டளைப்படியே யாவும் நடைபெற்றன என்பதை உறுதி செய்கின்றார்கள்.

இந்தக் காசுமீர் அதிரடி-1953 நிகழ்ந்த போது இந்திரா காந்தி சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் இருந்தார். ஷேக்கைச் சிறைப்படுத்தியதில் அவருக்கு உடன்பாடில்லை. பிற்காலத்தில் இந்திரா காந்திதான் அவரோடு 1974ஆம் ஆண்டு உடன்பாடு கண்டு அவரை ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக்கினார். கைம்மாறாக ஷேக் பொதுவாக்கெடுப்புக் கோரிக்கையைக் கைவிட்டார் என்பது வரலாறு.

காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லதாக், பூஞ்ச், கில்ஜித் ஆகிய ஐந்து அலகுகளைக் கொண்ட கூட்டாட்சி அரசமைப்பதும், இதனை இந்தியக் குடியரசின் தன்னாட்சி அலகாக வைத்துக் கொள்வதுமே ஷேக்கின் அப்போதைய விருப்பம். ஆனால் காசுமீரை இந்தியாவுடன் நிரந்தரமாக இணைத்துக் கொள்ள நேரு காட்டிய அவசரம்தான் ஷேக்கைச் சிறைப்படுத்தியதன் மூலம் காசுமீர் மக்களை நிரந்தரமாக அயன்மைப்படுத்தி விட்டது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் செயற்குழு 1953 மே 18ஆம் நாள் தீர்வுக்கான வழிகளை ஆராய எண்மர் குழுவை அமைத்தது. ஷேக் அப்துல்லா, ஜி.எம். சாதிக், மவுலானா முகமது சயீத் மசூதி, சர்தார் புத் சிங், மிர்சா முகமது அப்சல் பெக், பண்டித கிர்தாரிலால் டோக்ரா, பக்சி குலாம் முகமது, பண்டித சாம்லால் சரஃப்  இந்த எண்மரில் இருவர் பண்டிதர்கள், ஒருவர் சீக்கியர்! இந்த எண்மர் குழு முக்கியமாக அனைத்து வாய்ப்புத் தேர்வு களும் உள்ளடக்கிய பொதுவாக்கெடுப்பு என்று முன்மொழிந்தது. அதாவது இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணையலாம், அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம் என்பதற்கான பொது வாக்கெடுப்பு! நேருவுக்கு இது எரிச்சலூட்டியது. அவர் உடனே மவுலானா அபுல்கலாம் ஆசாதை சிறிநகருக்கு அனுப்பி இணைப்பை வலியுறுத்தச் செய்தார்.

காசுமீருக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 என்ற வடிவில் சிறப்புத் தகுநிலை வழங்குவது தவிர, பொதுவாக்கெடுப்புக்கோ தன்னாட்சி வழங்குவதற்கோ நேரு முன்வரவில்லை. ஷேக் அப்துல்லாவும் நேரு இழுத்த இழுப்புக்கு வர இயலாது என்று தெளிவாக்கி விட்டார். மக்களின் விருப்பம் கேட்காமலே காசுமீரை இந்தியாவுடன் இறுதியாக இணைப்பதற்கு ஷேக்கைத் தன் கையாளாக மாற்ற முடியாத நிலையில்தான் நேரு அதிரடியாக அவரைப் பதவிநீக்கம் செய்து சிறையில் தள்ளினார்.

இத்தனைக்குப் பிறகும், 1953 ஆகஸ்டு 20ஆம் நாள், அதாவது ஷேக்கை சிறைப்படுத்திய பதினோராம் நாள் பாகிஸ்தான் தலைமையமைச்சர் முகமது அலியுடன் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் நேரு மீண்டும் உறுதியளித்தார்: காசுமீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று!

பலருக்கும் கசக்கக் கூடிய உண்மை என்னவென்றால், பண்டித ஜவகர்லால் நேரு காசுமீர் மக்களை ஏமாற்றினார்! ஷேக் அப்துல்லாவை ஏமாற்றினார்! பாகிஸ்தானை ஏமாற்றினார்! ஐநா அமைப்பையும் ஏமாற்றினார்! சிக்கலைத் தீர்ப்பதில் தோல்வி கண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டார்!

நேருவுக்கும் இந்துத்துவ ஆற்றல்களுக்கும் நோக்கம் ஒன்றுதான்! காசுமீரை எப்போது எப்படி விழுங்கலாம் என்ற அணுகுமுறையில் மட்டுமே வேறுபாடு! நேருவின் காசுமீர் அதிரடி 1953க்கு ஷேக் அப்துல்லா பிற்காலத்தில் விளக்க மளித்தார்:

1953இல் பண்டித ஜவகர்லால் என்னிடம் இந்திய இணைப்புக்கு காசுமீர அரசமைப்புப் பேரவையின் இசைவைப் பெறுமாறு சொன்ன போது எங்கள் உறவில் இறுதி முறிவு வந்துற்றது. அவரது போக்கில் ஏற்பட்ட இந்த மாற்றம் கண்டு நான் திகைத்தேன். ஏனென்றால் கடந்த காலத்தில் இப்படி எதுவும் செய்ய வேண்டாம் என்று எனக்கு அழுத்தமான அறிவுரை வழங்கியவர் அவரே. இதுதான் நான் காசுமீரத் தலைமையமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கும், வழக்கு விசாரணை இல்லாமல் நீண்ட காலம் சிறையிலடைக்கப் படுவதற்கும் இட்டுச் சென்றது. (1970 ஜூன் 8ஆம் நாள் ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் பேரவையின் இரண்டாம் அமர்வில் ஆற்றிய உரை.)

அன்று காஷ்மீர மக்களின் நம்பிக்கையை இழந்த இந்தியாவால் இன்று வரை அதை மீட்க முடியவில்லை. சற்றொப்ப எழுபதாண்டுக் காலமாக ஜவகர்லால் நேரு முதல் நரேந்திர மோதி வரை காசுமீர் சிக்கலுக்குத் தீர்வு காண முடியவில்லை என்பதே உண்மை. பாகிஸ்தான் தரப்பிலும் ஜின்னா இம்ரான் கான் வரை யாராலும் காசுமீர் சிக்கலுக்குத் தீர்வு காண முடியவில்லை. ஏன்? ஏனென்றால் இந்தச் சிக்கலை இரு நாடுகளுக்கிடையிலான எல்லைச் சிக்கலாகப் பார்ப்பதே.

வங்கதேசம் 1971ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பின் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் முரண்பாட்டுக்கு ஒரே அடிப்படை காசுமீரம்தான். ஆனால் காசுமீர் சிக்கல் என்பது ஒரு தேசிய இனச் சிக்கலே தவிர எல்லைச் சிக்கல் அன்று.

சிக்கலை தேசிய இனச் சிக்கலாக இனங்கண்டு அதன் தீர்வில் காசுமீரத்துக்கு உரிய பங்கினை அறிந்தேற்பதுதான் முதல் நடைபடியாக இருக்க வேண்டும். ஆனால் வங்க தேச விடுதலைக்குப் பின் 1972ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் பாகிஸ்தான் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோவும் சிம்லாவில் சந்தித்துச் செய்து கொண்ட உடன்படிக்கை என்ன தெரியுமா? காசுமீர் சிக்கலை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே. பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது தான். ஆனால் யாரும் யாரும்? காசுமீரை மூன்றாம் தரப்பாகக் கூட ஏற்றுக் கொள்ளாமல் காசுமீர் சிக்கலைத் தீர்ப்பது எப்படி?

காசுமீர் இந்தியாவின் உள்நாட்டுச் சிக்கல் என்று இப்போதைய ஆட்சியாளர்கள் தரப்பில் உரத்துச் சொல்கின்றனர். அதாவது காசுமீர் சிக்கலில் பாகிஸ்தானையும் கூட ஒரு தரப்பாகக் கருத மறுக்கின்றனர். இது எப்படித் தீர்வுக்கு உதவும்? இது வரை உதவ வில்லை, இனி ஒருபோதும் உதவப் போவதும் இல்லை. இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான் அதிபர் முசாரஃபும் ஆக்ராவில் சந்தித்துப் பேசியது காஷ்மீர் சிக்கல் தொடர்பாகவே என்பதை மறந்துவிடக் கூடாது.

இரண்டாவதாக காசுமீர் சிக்கலுக்கு ஜனநாயக முறையில் தான் தீர்வு காண முடியும். அதாவது காசுமீர் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அந்த உரிமை யின் அடிப்படையில் அம்மக்கள் தாமே தம் எதிர்காலத்தைத் தீர்வு செய்து கொள்ளும் வகையில் காசுமீர் முழுவதிலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

வாக்கெடுப்புக்கு முன்னதாக, இப்போதே உடனடியாக இராணு வத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானும் இந்தியாவும் அந்தந்த அரசுகளின் பிடியிலுள்ள பகுதிகளிலிருந்து படைவிலக்கம் செய்ய வேண்டும். இது போன்ற சூழல்களில் நமீபியா, கிழக்கு திமோர், தெற்கு சூடான், கொசோவோ ஆகிய உலகின் வேறு பல பகுதிகளில் ஐநா வகித்த பங்கினை இங்கேயும் வகிக்க வேண்டும்.

இது காசுமீர் மக்களின் நலத்துக்காகவும் அமைதிக்காகவும் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டம், தெற்காசியா ஆகிய வற்றின் அமைதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் அவசர அவசியமாகத் தேவைப்படும் தீர்வாகும். இந்திய-பாகிஸ்தான் போர் என்பது பன்னாட்டுப் படைக்கல வணிகர்களைத் தவிர வேறு யாருக்கும் நன்மை பயக்காது. கணக்கிலடங்காத உயிர்ச் சேதம், பொருட்சேதம் ஏற்படும்.

இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் அணு வல்லமை யோடு இருப்பது கருதினால், அவற்றுக்கிடையே போர் என்பது எண்ணியும் பார்க்க முடியாத பேரழிவைத் தோற்றுவித்து விடும் படியான ஆபத்து உள்ளது. ஹிரோசிமா, நாகசாகி போல் பல நூறு மடங்கு அழிவு நேரிடும்.

காசுமீர் தேசத்தின் துயரம் இந்தியாவின், ஆசியக் கண்டத்தின், மாந்தக் குலத்தின் துயரமாகி விடாமல் தடுக்க வேண்டும். இராணுவ வலிமை கொண்டு தீர்வு தேடுவதில்லை என்று எல்லாத் தரப்பினரும் உறுதி கொள்ள வேண்டும்.

காசுமீர் மக்களுக்கு நாம் சொல்ல விரும்புவது: நாங்கள் உங்கள் துயரத்தை உணர்ந்து உங்களோடு தோழமை கொண்டுள்ளோம். காசுமீருக்காக கன்னியாகுமரியும் கண்ணீர் வடிக்கிறது. உங்களுக்குள்ள அற வலிமை மகத்தானது. மக்கள் போராட்டத்துக்கு பயங்கரவாதத்தால் தீங்கு நேரிட இடமளிக் காதீர்கள். உறுதியாக அறவழி நின்று போராடுங்கள். புதிய காசுமீரம் அழகிய ரோஜா போல் பூத்துச் சிரிக்கும் நாள் விரைவில் வரும்!

(முகநூல் பதிவு)